Showing posts with label மூப்பு. Show all posts
Showing posts with label மூப்பு. Show all posts

Wednesday, October 24, 2007

நீ எல்லாம் ஒரு பொம்பளையா?

மனித இனத்திலும் சரி, வேறு பல வகை மிருகங்களிலும் சரி ஆண்கள்தான் பெண்களை விட வேகமாய் மூப்படைந்து இறந்து போகிறார்கள். நடிகைகள் எல்லாம் சீக்கிரம் அம்மா வேஷம் போட இன்னும் காலேஜ் மாணவனாகவே நடிக்கும் நடிகர்கள் எல்லாம் இந்த லிஸ்டில் சேர்த்தி கிடையாது. ஆராய்ச்சியாளர்கள் இதை, அட அந்த மூப்பு சமாச்சாரத்தை நடிகரை இல்லை, ஆராய்ச்சி செஞ்சு அதுக்குக் காரணம் கண்டுபிடிச்சிருக்காங்க. அதற்குக் காரணம் இனவிருத்திக்கான போட்டிதானாம்!

பார்னகிள் வாத்து, குள்ள கீரிப்பிள்ளை என ஒரே துணையைக் கொண்டு வாழும் இனங்களையும் பல துணைகளுடன் வாழும் சவானா பபூன் குரங்கு, சிகப்பு சிறகுடைய கருப்புப் பறவை (இப்படித்தாங்க பேர் போட்டு இருக்கு) போன்ற இனங்களையும் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் கிம் க்ளட்டம் ப்ராக் மற்றும் கவிதா ஈஸ்வரன் இந்த உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்து பல்கலைக்கழம் சார்ப்பாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பலதார பழக்கமுடைய இனங்களில் ஆண்கள் விரைவில் வயதோகிகம் அடைந்து மடிந்துவிடுகிறார்கள் எனக் கண்டறியப் பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு முறை ஒரு ஆண் பெண்ணுடன் இணைய வரும் பொழுது அதற்கான போட்டி அதிகமாவதால் ஒரு ஆணிற்கு இனவிருத்திக்குக் கிடைக்கும் சராசரி நேரம் குறைகிறது. இதனால் அவற்றிக்கு நீண்ட ஆயுள் இல்லாமல் போகிறது. இன்று மனித இனத்திலும் பெண்களை விட ஆண்களே சீக்கிரம் மடிவது கற்காலத்தில் பலதார முறையில் மனித இனம் இருக்கும் பொழுது நம்மில் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம் என்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதையே சாக்காக வைத்து பலதார மணம் புரிவது அல்லது பலருடன் உறவு வைப்பதோ தவறானது. அதனை இந்த ஆராய்ச்சி எந்த விதத்திலும் அங்கீகரிக்கவோ ஆதரவளிக்கவோ இல்லை என்றும் தெளிவாக சொல்லி இருக்கின்றனர்.

பல பெண்களைக் துணையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தும் ஆண்களைப் பற்றிய இந்த ஆராய்ச்சி பல ஆண்களுடன் இருக்கும் பெண்கள் இனத்தைப் பற்றியும் ஆராய்ச்சி செய்ததாகத் தெரியவில்லை.

டிஸ்கி : இப்போ இப்படித் தலைப்பு வைப்பது ஒரு ஃபேஷனாக இருப்பதால்தான் இந்தத் தலைப்பு. இதுக்கும் பதிவுக்கும் சம்பந்தமே கிடையாது. நம்ம லக்ஷ்மி அக்கா, மோகந்தாஸ் அண்ணாச்சி எல்லாரும் இந்த தலைப்பில் பதிவு போட்டாங்களேன்னுதான் நானும் போட்டது. ஒரு தொடர்புக்கு வேண்டுமானால் அந்தக் கேள்விக்கு ஆமாம் என்றால் உங்களுக்கு ஆயுசு கெட்டி.

இது தொடர்புடைய சுட்டி.