Showing posts with label Creamy Layer. Show all posts
Showing posts with label Creamy Layer. Show all posts

Tuesday, April 10, 2007

க்ரீமி லேயரை ஏன் தூக்கணும்?

இன்னிக்கு வெட்டி போட்ட இந்தப் பதிவைப் படித்தேன். நமக்குத்தான் இந்த விஷயத்தில் பல தகவல்கள் தெரியுமே, அதைப் பத்தி சொல்லாம இருக்கலாமா அப்படின்னு நம்ம மனசாட்சி குத்தவேதான் இந்தப் பதிவு. என்னதான் ஆணி புடிங்கும் வேலை அதிகமா இருந்தாலும் தமிழ் வலைபதிவர்களுக்கான சேவையை சரியாச் செய்யணும் இல்லையா. அதனாலதான் இப்படி. இது பத்தின facts and figures எல்லாம் குடுத்து உங்க எல்லார் அறிவுக் கண்களை திறந்து விட்டுடலாம் என்ற கருத்துக்கு மதிப்பளித்து இதோ இந்தப் பதிவு.

இந்த க்ரீமீ லேயர் பத்தி பேசறதுக்கு முன்னாடி க்ரீம் அப்படின்னா என்னன்னு தெரிஞ்சுக்கணும் இல்லையா? அதனால முதலில் அது பத்திப் பேசலாம். பாலில் நிறைந்து இருக்கும் கொழுப்புசத்தானது பாலின் மேற்புறத்தில் வந்து சேர்கிறது. இப்படி திரண்டு வரும் கொழுப்பானதே க்ரீம் என அழைக்கப்படுகிறது. இந்த விளக்கத்தைப் படிக்கும்போதே உங்களுக்கு அந்த கொழுப்பினால் ஏற்படும் பாதிப்பு மனக்கண்ணில் தெரிகிறது அல்லவா.

இன்று அமெரிக்காவில் இந்த கொழுப்புச் சத்து நீக்கப்படாத பாலினை Whole Milk எனச் சொல்லுவார்கள். படிப்படியாக இந்த கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால் வகைகளை முறையே 2%, 1% மற்றும் ஸ்கிம் (Skim) பால் என அழைப்பார்கள். இவற்றில் உள்ள கலோரி மற்றும் கொழுப்பு சத்துக்களின் அளவுகளைப் பார்க்கலாமா? 8 அவுன்ஸ் (சுமார் 225மிலி) பாலில் உள்ள அள்வுகள் இது
வகை -------- கலோரி---கொழுப்புச்சத்து
முழுப்பால்--- 155----------8.5 கிராம்
2% பால்-------120----------4.5 கிராம்
1% பால்-------100----------2.5 கிராம்
ஸ்கிம் பால்---80----------0.0 கிராம்
இது கிட்டத்தட்ட ஒரு கிளாஸ் அளவு பாலில்! இது ரொம்ப அதிகமாகத் தெரியவில்லை என்றாலும் ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் பாலாவது அருந்துகிறோம் என்று எடுத்துக் கொண்டு, ஒரு பவுண்டு (சுமார் அரைக்கிலோ) எடையேற 3500 கலோரிகளே தேவையானது என்பதை நினைவில் கொண்டோமானால், கிட்டத்தட்ட மூன்று வாரங்களில் அரைக்கிலோ எடைக்கு உண்டான கலோரிகளை அதிகமாக அருந்துகிறோம்.

அது மட்டுமில்லாமல் இதில் உள்ள கொழுப்பானது நம் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. மூன்று கிளாஸ் பாலில் நமக்கு ஒரு நாளைக்கு வேண்டிய அளவு கொழுப்பு இருக்கிறதாம். நாம் சாப்பிடும் மற்ற உணவுகளில் இருக்கும் கொழுப்பை எங்க கொண்டு போய் வைப்பது? அது மட்டுமில்லாமல் இந்த கொழுப்பில் அதிக அளவு இருப்பது Saturated வகையைச் சேர்ந்த கொழுப்பாம். இதனால் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், கான்ஸர் எல்லாம் வரும் வாய்ப்பு அதிகமாம்.

அதனால் இன்று மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் சிறு குழந்தைகளைத் தவிர மற்றவர்கள் இப்படி கொழுப்பு நீக்கிய பாலை அருந்துவதே நல்லதாம். ஒரு படிமேலே சென்று சோயாப்பால், அரிசிப்பால் என அருந்தினால் இதைவிட நல்லதாம். இப்படி வகை வகையாய் பால் கிடைக்காத இடங்களில் பாலைக் காய்ச்சின பின் மேல் வரும் பாலாடையை , அதாங்க க்ரீமீ லேயரை, நீக்கிவிட்டு பின் பாலைக் குடித்தால் உடலுக்கும் நல்லது, கொழுப்பும் சேராது.

ஆகவே இன்று கொழுந்து விட்டு எரியும் இந்த பிரச்சனைக்கு விஞ்ஞானரீதியான எனது தீர்ப்பு க்ரீமி லேயரை நீக்குவது நல்லதே!!

டிஸ்கி: வெட்டி, ரொம்ப சீரியஸா நீர் எழுதி இருக்கும் பதிவின் பெயரை எடுத்து இந்த பதிவை போட்டதுக்கு மன்னிக்கவும்.