Showing posts with label Current Affairs. Show all posts
Showing posts with label Current Affairs. Show all posts

Saturday, December 22, 2007

வீணாவின் ஜாக்கெட்! (ந.ஒ.க.)

வீணா தணிகாசலம்! பெயரைக் கேட்டாலே பெண்கள் அனைவர் முகத்திலும் பெருமிதம் தாண்டவமாடும். அவர்கள் அனைவருக்கும் அவள் ஒரு ஆதர்ச பெண் அல்லவா? எழுத்திலாகட்டும், எடுக்கும் படங்களிலாகட்டும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் பெண்ணுரிமைக்கும் அவள் கொடுக்கும் குரல் உலகெங்கும் அல்லவா எதிரொலிக்கிறது. அவளது பெருமையை பெரிதாய் பாராட்டாத ஆணுலகம் கூட அவள் அழகிற்கு அடிமையாக அல்லவா கிடக்கிறது. இன்றைக்கும் பாருங்கள் மயிலின் கழுத்தின் நிறத்தை ஒத்த புடவையாகட்டும் அதற்கேற்ற ஒரு மேற்சட்டையாகட்டும், கழுத்திலும் காதிலும் ஜொலிக்கும் நகைகளாகட்டும் வானுலகில் இருந்து வந்த தேவதை போல் அல்லவா இருக்கிறாள். இப்பேர்பட்ட பெருமைகளுடைய வீணா தணிகாசலம், சர்வாலங்கார பூஷிதையாக எங்கே போகிறாள் என்று நாமும் பின்னாடியே போய் பார்க்கலாமா?

ஆஹா, இது நகரின் எல்லைகளைத் தாண்டி விளைநிலங்கள் நடுவே நம் நாட்டின் ஜாதிக்கட்சி தலைவர் ஒருவர் கட்டியிருக்கும் கல்லூரி வளாகம் அல்லவா இது. கண்டபடி சீரழியும் தமிழ்ப் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதற்காகவே கட்டப்பட்ட கலைக் கோயில் அல்லவா இது. அதிலும் இன்று எதோ ஒரு பெரிய விழா நடக்க இருக்கிறது போல் இருக்கிறதே. இதோ, இந்த சுவரொட்டியைப் பார்த்தால் விபரம் தெரிய வரும் போலிருக்கிறதே. விழி வழி தகவற் பரிமாற்ற துறையின் ஆண்டு விழாவாம். சிறப்பு விருந்தினர் நம்ம வீணாவின் குருநாதர், பிரபல திரைப்பட இயக்குநர் வேலு ராஜேந்திராவாம். கூட கூப்பிடப்பட்டிருப்பது விளம்பரப் பட இயக்குநர் விஜயன் பாலாவும் பிரபல எழுத்தாளர் அமரனுமாம். இவர்களுக்கு சமமாக தன்னையும் அழைத்து இருப்பதே வீணாவிற்கு ரொம்ப பெருமை போல. அத்தனை பெருமிதமும் தன் முகத்தில் தெரிய கல்லூரி வாசலில் வந்து சேர்கிறாள் நம் நாயகி வீணா.

ஆனால் என்ன இது? இத்தனை ஆர்வத்தோடு வந்த வீணாவை உள்ளே விட மறுக்கிறானே இந்த பாதுகாப்பு அதிகாரி. வீணாவோடு எதோ ஒரு சர்ச்சையில் வேறு ஈடுபட்டிருக்கிறான் போலத் தெரிகிறதே. நாம் கொஞ்சம் அருகில் சென்று விஷயம் என்னவென்று கவனிக்கலாம். அந்த அதிகாரி "மன்னிக்கவும். என்னால் உங்களை உள்ளே அனுப்ப இயலாது. இந்த கல்லூரியின் விதிகள் உங்களுக்குத் தெரியுமல்லவா. தமிழ்ப் பாரம்பரியத்தை மீண்டும் நிலைநாட்டுவதை தன் கடனாக நினைத்து தலைவர் தொடங்கிய கல்லூரி அல்லவா இது. தமிழர் பாரம்பரிய உடையில் இல்லாதவர்கள் யாரும் உள்ளே வர முடியாது என்பது தாங்களுக்கு தெரியாததல்ல. ஆண்களாய் இருந்தால் வெறும் வேட்டியும் பெண்களாய் இருந்தால் புடவையும் அணிவதல்லவா நம் தமிழ் பாரம்பரியம். மேற்சட்டை என்பது வெளிநாட்டு நாகரீகத்தின் மூலம் ஏற்பட்ட மாசல்லவா? அதனை அணிந்து இங்கு உள்ளே வர முடியுமா? இவ்விதியை நிலைநாட்ட, திரைப்படங்களில் தன் கதாபாத்திரங்களை மேற்சட்டை இன்றியே அலைய விட்டு கலாச்சாரத்துக்கு பெருமை சேர்த்த சாரதிரோசாவைத் துறைத் தலைவராகக் கொண்டிருக்கும் கல்லூரி அல்லவா இது. மற்ற இடங்களில் வேண்டுமானால் கலாச்சார சீரழிவு ஏற்பட்டு நீங்கள் உடுத்தி இருக்கும் உடையை அனுமதிக்கலாம். ஆனால் அது இங்கு ஒரு நாளும் ஒத்துக் கொள்ளப் படாது. இவ்விதியினை என்னால் மீற முடியாது. உங்களை என்னால் உள்ளே அனுமதிக்க முடியாது. தயவு கூர்ந்து என்னை மன்னிக்கவும்." என்று கூறி அல்லவா வீணாவை உள்ளே விடாமல் தடுக்கிறான்.

எவ்வளவோ சொல்லிப் பார்த்த வீணாவின் முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராய் அல்லவா போகிறது. ஆனால் தன் பங்கிற்கு அவளும் போட்ட துணியிடனே உள்ளே செல்வேன் அல்லது உள்ளே செல்லேன் என்றல்லவா இருக்கிறாள். கடைசி வரை போராடிப் பார்த்துவிட்டு தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளாமல் நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு வீட்டை நோக்கி செல்கிறாள் வீணா.

கோபத்தில் எள்ளும் கொள்ளுமாய் வெடித்த அவள் முகம் வீட்டினுள் நுழையும் பொழுது மகிழ்ச்சியாகத் தெரிகிறதே. என்ன மாயம் இது? ஒன்றும் புரியவில்லையே. நமக்குத்தான் இந்த குழப்பம் என நினைத்தால் வீட்டில் இருந்த அவளின் உதவியாளரும் இந்த குழப்பத்தில் இருக்கிறாள் போல. வீட்டினுள் நுழைந்த வீணாவிடம் "அம்மா, இப்பொழுதுதான் விஷயத்தைக் கேள்விப்பட்டேன். என்ன அக்கிரமம் இது? கேட்கும் பொழுதே என் மனம் கொதிக்கிறதே. ஆனால் நீங்கள் என்னடாவென்றால் மகிழ்ச்சியுடன் வருகிறீர்களே. எனக்கு ஒன்றும் புரியவில்லையே அம்மா" என்கிறாள்.

அதற்கு வீணாவோ " போடி பயித்தியக்காரி. அங்கு இப்படி உடை அணிந்து சென்றால் என்னை விட மாட்டார்கள் எனத் தெரியாமலா இப்படிச் சென்றேன். அங்கு நான் சென்று விழாவில் கலந்து கொண்டிருந்தால், செய்தித்தாட்களில் மற்றவர்கள் பேசியதை எல்லாம் போட்டுவிட்டு, கடைசியாக இவ்விழாவில் வீணா தணிகாசலமும் கலந்து கொண்டார் என சின்னதாக போட்டு இருப்பார்கள். இப்பொழுது இந்த சர்ச்சையினால் பார், தினத்தந்தியில் கட்டுரை, சந்திரத் தொலைக்காட்சியில் பேட்டி, வலைப்பதிவில் என்னை வைத்து தொடர் பதிவுகள் என எல்லா ஊடகங்களிலும் என் பெயர் அடிபடும். இந்த விளம்பரத்திற்காகத்தானே நான் இப்படி உடையணிந்து சென்றேன்" என்கிறாளே. இது எல்லாம் இவளே முன்னின்று நடத்திய கபட நாடகமா? அய்யோ எனக்கு தலை சுற்றுகிறதே, மயக்கமாய் வருகிறதே. இந்தத்திட்டத்தை அறியாமல் நானும் ஒரு பதிவிட்டு இவளது கபட நாடகத்துக்குப் பலியாகிவிட்டேன் போல இருக்கிறதே!

டிஸ்கி: உண்மைச் செய்தியில் ஒரு விருந்தினரை நடத்திய விதம் என்னால் ஒத்துக்கொள்ள முடியாத, கண்டிக்கப் பட வேண்டிய ஒரு விஷயம். அதே சமயம் ஒரு கல்லூரியில் மாணவர்கள் எவ்விதமான உடையணியலாம் என சட்டம் போடுவது அப்படி ஒன்றும் தவறாகத் தெரியவில்லை. என் கல்லூரியில் காலரில்லா ரீ சட்டை போடுவது நான் படித்த வரையில் அனுமதிக்கப்பட்டதில்லை. அது ஒன்றும் பெரிய உரிமை மீறலாக எனக்குப் படவில்லை. பள்ளிகளில் இருக்கும் இந்த விதிகள் கல்லூரியிலும் வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனைகள்? இதனை வைத்து எழுப்பப்படும் ஈய பித்தளை சத்தங்கள் எல்லாம் வெறும் சத்தங்களாகவே இருக்கிறது. இது குறித்த செல்வனின் பதிவில் நாகை சிவா அவர்கள் தெரிவித்த கருத்துடன் நான்பெரும்பாலும் ஒத்துப் போகின்றேன். இக்கதை எழுதத் தூண்டிய வவ்வாலுக்கு நன்றி.

வழக்கம் போல
இக்கதையில் வரும் சம்பவங்களோ, பெயர்களோ முழுக்க கற்பனையே. நடந்த சம்பவத்தில் எனது கருத்தாக இதனை திரிக்க வேண்டாம். இது சர்வேசனின் நச் என்று ஒரு கதை போட்டிக்காக.