Showing posts with label drama. Show all posts
Showing posts with label drama. Show all posts

Tuesday, February 21, 2012

அனுமதி இலவசம்!

வேலை வேலைன்னு அலையறோம். வேலையை முடிச்சுட்டு வந்தா டீவி முன்னாடி அடைக்கலம் ஆகறோம். கொஞ்சம் வித்தியாசமா எதாவது செய்ய நினைச்சா ஒரு சினிமாப் போகறோம். இதைத் தவிர வேற ஒண்ணுமே செய்யறது இல்லை. கொஞ்சம் வித்தியாசமா எதாவது செஞ்சா நல்லா இருக்குமேன்னு நினைக்கறீங்களா?

நான் சொல்லறதைக் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க. காலையில் மங்களகரமான நாகஸ்வர இசை. அதைத் தொடர்ந்து ஹரி கதாகாலட்சேபம். அது முடிஞ்ச பின்னாடி தெருக்கூத்து. இதை எல்லாம் முடிச்சுட்டு மதிய சாப்பாடு. அதை செரிக்க ஓரு சின்ன இடைவெளி. பின்னாடி குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொள்ளும்படியான ஒரு கச்சேரி. கடைசியா ஒரு தாளவாத்தியக் கச்சேரி. இது முதல் நாள்.

அடுத்த நாள் காலையிலேயே ஒரு பாட்டுக் கச்சேரி. அதைத் தொடர்ந்து கரகாட்டம். மதிய சாப்பாடுக்கு முன்னாடி ஓதுவார்கள் பாடும் தேவார நிகழ்ச்சி. மாலையில் ஒரு பரதநாட்டியம். அதுக்குப் பின்னாடி எல்லா வயதினரும் சிரிச்சு மகிழ ஒரு நாடகம்.

இப்படி ரெண்டு நாள் நமக்கு பரிச்சயம் இருக்கிற, அந்த அளவு பரிச்சயம் இல்லாத பல விதமான கலைகளை கண்டு கேட்டு ரசிக்க ஒரு சான்ஸ் கிடைச்சா எப்படி இருக்கும்? நல்லாதானே இருக்கும்ன்னு நினைக்கறவங்க உடனடியா திருச்சிக்கு ஒரு டிக்கெட் போடலாம்.

ஏன்னா, ஸ்வானுபவா என்ற இயக்கத்தினர் இப்படிப் பலதரப்பட்ட கலை நிகழ்ச்சிகளை மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்கணும், அதுவும் முக்கியமாக மாணவர் சமுதாயத்திற்கு இந்த மாதிரி அறிமுகம் அவசியம்ன்னு நாட்டின் பல பகுதிகளில் நான் மேல சொன்ன மாதிரி இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவா செய்யறாங்க. சென்னை, டெல்லி அப்படின்னு பல இடங்களில் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை நடத்திட்டு இந்த வாரம் திருச்சியில் இந்த விழா நடைபெற ஏற்பாடு பண்ணி இருக்காங்க.

திருமதி இந்திரா காந்தி கல்லூரி வளாகத்தில் பெப்ரவரி 24-25, அதாவது வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9:30 மணி முதல் இந்த விழா நடைபெற இருக்கிறது. திருச்சியில் இருப்பவர்கள் கலந்து கொள்ள இந்த சுட்டியில் பதிவு செய்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.

திருச்சியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அமெரிக்காவில் இருக்கும் நீ ஏண்டா போஸ்டர் ஒட்டறன்னு கேட்கறவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் அறிவிப்பு. இந்த நிகழ்ச்சியை இணையத்தில் நேரலையாக கண்டு ரசிக்கலாம். நேரலைக்கான சுட்டி இது. இதுக்கும் அனுமதி இலவசம்தான்!

விசாகா ஹரியின் கதாகாலட்சேபம், சஷாங்கின் புல்லாங்குழல், விஜய் சிவாவின் பாட்டு, ப்ரியதர்ஷனி கோவிந்தின் பரத நாட்டியம், க்ரேசி மோகன் நாடகம் எனப் பிரபலங்களின் அணிவகுப்பு நமக்காக காத்திருக்கிறது. முழு நிகழ்ச்சி நிரலையும் இங்கே பார்க்கலாம்.

வித்தியாசமான இந்த தொகுப்பினைக் கண்டு களிக்க அனைவரும் வருக ஆதரவு தருக என்ற அரசியல் கோஷத்தோட உங்களை வரவேற்கிறேன். நேரில் பார்க்க முடிந்த பாக்கியசாலிகள், இணையத்தில் ரசித்த இதர புண்ணியவான்கள் அனுபவத்தை பதிவாப் போட்டா நல்லா இருக்கும். செய்யுங்களேன்.