Tuesday, June 25, 2013
Beyond The Summit - Book Review
Sunday, June 16, 2013
மீண்டு மீண்டும் வா!
முதலில் வெண்பாமைப் பார்த்துவிடலாம்.
திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப
திரும்பத் திரும்ப திரும்ப
படித்த உடன் அப்படியே மலைத்து நின்றுவிட்டேன். எவ்வளவு ஆழமான கருத்தை எத்துணை எளிமையாகச் சொல்லி இருக்கிறார். யார் வேண்டுமானாலும் ஒரு முறை படித்த உடனே நினைவில் வைத்துக் கொள்ளும்படியான அமைப்பு.
ஆனால் இதனுள் புதைந்து இருக்கும் சிறப்பான கருத்தினைப் பார்க்கலாம்.
திரும்பத் திரும்ப - தன்னை விட்டு விலகிச் செல்லும் உயிர்களைக் கூட ஆசையோடு அரவணைத்து அவருக்கு மோட்சம் தருவது இறைவன் குணம். இந்து மதமாகட்டும், கிறுத்துவமாகட்டும், இஸ்லாமாகட்டும் இது குறித்த கதைகள் ஏராளம் உண்டு. இப்படி மந்தையில் இருந்து விலகிய ஆடுகள் மீண்டும் இறைவனைச் சேர என்பதையே திரும்பத் திரும்ப எனச் சொல்லி வெண்பாமைத் தொடங்குகிறார் அண்ணன்.
திரும்பத் திரும்ப - அப்படி மந்தையை விட்டு விலகிய ஆடானது சட்டென மனம் மாறி உடனே திரும்பிவிடுமா? அது நடக்கக்கூடிய விஷயமா என்று பார்த்தோமானால் இல்லை. எதோ ஒரு பொறியில் திரும்ப வேண்டும் எனத் தோன்றினாலும் அதனை புறக்கணித்துத் தன் வழியே செல்லவே துணியும். ஆனால் அந்தப் பொறி தோன்றியதில் இருந்து தான் செய்வது தவறோ என எண்ணி தன் செயல்களைப் பற்றி மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கத் தோன்றும்.அப்படி நினைக்கும் பொழுதிலெல்லாம் தன் வழியில் இருந்து விலகி மீண்டும் இறைவனை நோக்கிச் செல்லத் தொடங்குவதை வர்ணிக்கவே அண்ணன் திரும்ப திரும்ப என்று அந்த மெதுவான திருப்பத்தினைக் குறிக்கிறார்.
திரும்பத் திரும்ப திரும்ப
இரண்டாம் அடியில் மிக அழகாக ஒரு திருப்பத்தினைத் தருகிறார். திருவின் கணவனாகிய திருமால் நம் மனத்தினுள் ரொம்பி இருக்க வேண்டுமானால் முதலடியில் சொன்னது போல் நம் வழியில் இருந்து திரும்ப வேண்டும் என்கிறார்.
மேற்கூறியவாறு திரும்ப, திரும்பதி ரொம்ப என்பதையே இரண்டாம் அடியாக திரும்பத் திரும்ப திரும்ப என்று எழுதி இருக்கிறார். மற்ற இடங்களில் திரும்பத் திரும்ப என வலி மிகுந்து எழுதியவர் கடைசி இரண்டு சொற்களை எழுதும் பொழுது வலி மிகாமல் எழுதியது அது திரும்பதி ரொம்ப என்று பிரிக்கப்பட வேண்டும் என்பதாலே. வெண்பாமின் ஓசை நயம் கருதி ரொம்ப என்பது ரும்ப என்று வருவது தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கும் ஒரு வகைப் போலியே.
அதே போல, நாள் மலர் காசு பிறப்பு என்ற அடிப்படையில் திரும்பு என்று முடிக்க வேண்டியது வெண்பாம் இலக்கணம் என்றாலும் இது திரும்புதல் பற்றிய வெண்பாம் என்பதால் அவ்விலக்கணத்தை மீறி திரும்ப என்றே முடித்திருப்பது அண்ணனின் அத்துமீறிய இலக்கிய வளத்தினையே பறை சாற்றுகிறது.
சமகாலத்தில், இறைவனின் கைத்தலத்தில் ஐக்கியமாகிவிட்டாயா என்பதை ஜனரஞ்சகமாகச் சொன்ன “கையப் புடிச்சு இழுத்தியா? என்ன கையப் புடிச்சு இழுத்தியா?” என்ற திரை இலக்கியத்திலேயும் “திரும்பத் திரும்பப் பேசறே நீ” என்று இந்த வெண்பாம் எடுத்தாளப்பட்டிருப்பது எதேச்சையான நிகழ்வல்ல.
இந்த அருமையான வெண்பாம் தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகமே இல்லை.
வெண்பாம்:
திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப
திரும்பத் திரும்ப திரும்ப
(https://twitter.com/mayavarathaan/status/346132235679834112)
கொத்தனார் உரை:
தன் வழி விட்டு மீண்டும் இறைவனிடம் திரும்ப வேண்டி மனத்தினை மெதுவாக திருப்பி நல்வழியே திரும்பினால் திருவின்பதியான திருமால் நம் மனத்தினுள் நிறைந்திருப்பார்.
இந்த வெண்பாம் குறித்து சில பிரபல இலக்கியவாதிகளின் கருத்துகள்
எழுத்தாளர் ஜெயமோகன்
அன்பின் ஜெ
கவிஞர் மனுஷ்யபுத்ரன்
Wednesday, April 24, 2013
Happy Birthday Sachin! - ஒரு விருத்த விளையாட்டு.
இன்னுமோர் நூற்றாண்டிரும்!
இன்றைய விருத்த விளையாட்டு - Happy Birthday Sachin!
இந்த ஈற்றடி வெச்சுத்தான் போன முறை நாம எல்லாம் வெண்பா எழுதினோம் - http://elavasam.blogspot.com/2012/04/blog-post.html
சொக்கனும் நானும் சேர்ந்து விருத்தம் எழுதப் பழகிக்கிட்டு இருக்கோம். இந்தத் தளத்தில் போனா இதுவரை எழுதிய விருத்தங்களைப் பார்க்கலாம் - http://6seer.wordpress.com
இன்னிக்கு விருத்தம் வழியே சச்சினுக்கு வாழ்த்து சொல்லிடலாம்ன்னு எழுதிட்டோம்.
எண்ண முடியா ஓட்டங்கள்
...எடுத்தாய் நீயே வல்லவனே
பண்ண ஏதும் பாக்கியுண்டா
...பாரினில் வேறு சாதனையே
மண்ணில் இருந்து மாறாகால்
...மனத்தில் இருத்து வேண்டுமதே
அண்ணன் சொல்லைக் கேட்டதினால்
...அமைதி தானுன் வாழ்வதிலே
உலகம் முழுதும் ரசித்திடுமே
...உந்தன் பேட்டிங் தானதையே
பலநாள் அதையே பார்த்தாலும்
...பழசே ஆகா கலையதுவே
சிலபேர் பலதும் சொல்வார்கள்
...சிந்தை தனிலே ஏற்றாதே
விளையா டிடுவாய் பலகாலம்
...விருந்தாய் ரசிப்போம் நாங்களுமே!
வரிகள் நூறு போதாது
...வார்த்தை வழியே சொல்லிடவே
அறிந்தோம் ஆட்டம் அதனழகை
...அற்பு தமாய்நீ ஆடிடவே
சிறந்த மனிதன் நீதானே
...சிரித்தே இருக்கும் வரம்பெறுவாய்
பிறந்த நாளாம் இன்றைக்கு
...பிரியம் தருவோம் பரிசாக!
சொக்கன் எழுதியது
பால்மணம் கமழ்கிற பாலகனாய்ப்இதைப் பார்த்த பெனாத்தலால சும்மா இருக்க முடியுமா?
....பாரதம் பார்த்தது அப்பயலை,
‘நூல்தரம் உணர்ந்திட அட்டையினை
....நோக்குதல் போதுமா?’ என்றவனும்
வேல்கரம் ஏந்திய முருகனைப்போல்
....வெறியுடன் ஆடினன் தாண்டவமே,
ஆல்மரம் போலவே தன்விதையை
....ஆடிய களம்தொறும் பதித்துவிட்டான்!
சுருள்கிற முடியினில் சூட்சுமமோ?
....சுழல்கிற பந்துகள் சிதறடிப்பான்,
வெருட்டிடும் விரைவுடன் வீசிடினும்
....வேகமாய் பவுண்டரி அவன்குவிப்பான்,
கருத்தினைக் குவித்தெவர் முனைந்திடினும்
....கட்டிடக் கூடுமோ காற்றினைத்தான்?
வருத்திய பவுலரென் றெவருமில்லை,
....வாமனன் இவன்புகழ் குறையவில்லை!
இவன்பொழி ரன்மழை தினங்களிலே,
....இந்திய தேசமே திளைத்திருக்கும்,
உவப்புடன் கண்ணிமை கொட்டாமல்
....ஊரெலாம் அவன்திறம் பார்த்திருக்கும்,
நவமணி ஒருஉரு எடுத்ததுபோல்
....நாயகன் ஆட்டமும் ஜொலிப்பதனால்,
தவம்புரி வோர்பலர் டீவிமுன்பு,
....தாமதம் தான்பிற வேலையெல்லாம்!
சோர்வினில் கிடக்கிற மனத்துக்கும்,
....சுமைகளில் களைக்கிற உடலுக்கும்,
ஓர்மருந் தாகிடும் இவன்ஆட்டம்,
....உடனடி வைட்டமின், கொண்டாட்டம்!
சீர்நிறை குணங்களின் உறைவிடமாய்ச்
....செந்நெறி உணர்த்திடும் சீராளன்!
பார்புகழ் குறைவறக் கிடைத்ததுவே,
....பண்புடன் உழைப்பினைக் கலந்ததனால்!
செஞ்சுரி செஞ்சிரு தொடங்கிஇவன்
....செய்தவை எழுதிடத் தாள்போதா,
எஞ்சிய சாதனை ஒன்றிரண்டே,
....இமயமும் இவனது இணையாமோ?
விஞ்சிட ஒருவரும் இலைஎனினும்
....வெற்றியில் கருவமும் கொள்ளாதோன்,
கொஞ்சிடத் துடித்திடும் இந்நாடே,
....கோமகன் சச்சினின் புகழ்பாடி!
அடித்துக் களைப்பான் என்றெதிரிHappy Birthday Sachin! May you live another 100 years!
... ஆவல் கொண்டே இருக்கையிலே
வெடித்துக் களத்தில் அதகளமாய்
... வேரை அறுத்து ஓட்டத்தை
முடித்துக் கொடுத்து வந்திடுவான்
...முழுமை தந்தே தான்சிரிப்பான்
படித்து மாளா சாதனையே
... பலநாள் சுகமாய் வாழ்ந்திடுநீ!
Sunday, April 21, 2013
இத்தாம்ப பெர்ய மன்சன்றது....
இவன் இப்படி போனில் பேசும் போது குழந்தை அழுவுது. இவன் இப்படித் திரும்பி பேசறான் அப்படித் திரும்பிப் பேசறான் ஆனா குழந்தை அழுதுக்கிட்டே இருக்கு. இவனுக்குப் போனையும் விட மனசில்லை. உடனே உள்ள பார்த்து, ஏ இவளே இந்த சனியன் கத்திக்கிட்டே இருக்கு கொஞ்சம் என்னான்னு பாருங்கறான். என்னாது, இந்த சனியன். இப்படித்தான் பொதுவா எல்லாருமே சொல்லறது.
புலவர் கீரன் கானடாவுல பேசின ஒரு சொற்பொழிவோட ஒலிப்பதிவு கிடைச்சுது. தொடர்ந்து பல நாட்கள் ராமாயணம் பத்திப் பேசறார். கிஷ்கிந்தா காண்டம். அனுமன் ராமனைப் பார்க்கறான். அது பத்தி உணர்ச்சிகரமாப் பேசறார். அனுமன் மனத்தில் ஏற்பட்ட மரியாதை பத்திப்பேசும் பொழுது குரல் கம்முது. குரலை அப்படியே கீழ இறக்கி அது பத்திப் பேசறார்.
அப்போ ஒரு குழந்தை வீல்வீல்ன்னு கத்துது. அந்த குழந்தையோட அம்மா, குழந்தையை அடக்க முடியாம, அந்த மண்டபத்துக்கு வெளிய குழந்தையைக் கூட்டிக்கிட்டுப் போகப் பார்க்கறாங்க. அதனால கூட்டத்துல ஒரு சின்ன சலசலப்பு.
நார்மலா என்ன நடக்கும்? கூட இருக்கறவங்க எல்லாம் உஷ் உஷ்ம்பாங்க. பேசறவரு பேசறதை நிறுத்திட்டு மூஞ்சியில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அப்படியே பார்த்துக்கிட்டு இருப்பாரு. முன்ன சொன்ன மாதிரி சனியனேன்னு வாயால சொல்லலைன்னாலும் சொன்னா மாதிரியே இருக்கும்.
இவரு என்ன பண்ணறாரு.”குழந்தைன்னா அழத்தான் செய்யும் கத்தத்தான் செய்யும். அழுதாத்தான் குழந்தை கத்துனாத்தான் குழந்தை. அதுக்கு எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷன்?
நீங்க எல்லாம் தொலைவுலேர்ந்து வரீங்க. வர ஒரு மணி நேரம் போக ஒரு மணி நேரம். நான் பாட்டுக்கு ஒன்றரை மணி நேரம் கேப் விடாமப் பேசிக்கிட்டு இருக்கேன். மொத்தமா மூணு நாலு மணி நேரம் ஆயிடுது. சினிமாப் போனாலே ஒரு மணி நேரம் ஆச்சுதுன்னா இண்டர்வல் விடறான். நாம் அதை எல்லாம் செய்யறது இல்லை. பாஆஆவம் குழந்தைங்க. எவ்வளவு நேரம்தான் சும்மா இருக்கும்.
அதுக்காக குழந்தையை எடுத்துக்கிட்டு வெளிய எல்லாம் போகாதீங்க. அது ஒரு கட்டை குரலில் அழுதா நான் ஒன்றரைக் கட்டை குரலில் பேசிட்டுப் போறேன். இங்க சொல்லறது ராமனோட கதை. அது குழந்தை காதுல விழுந்தா நல்லது. குழந்தை இங்கவே இருக்கட்டும். குழந்தைகளோட வந்திருக்கிற தாய்மார்கள் பெரியோர்கள் இது பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம். அப்படியே உக்காந்து கதையைக் கேளுங்க.”
பெரிய மன்சன் பெரிய மன்சன்றாங்களே. இந்தோ இவருதான்யா பெரிய மன்சன்!
(நடந்த இந்த நிகழ்வைப் பத்தி புலவர் கீரன் அவர்களே பேசி இருந்தா எப்படிப் பேசி இருப்பாருன்னு அவரோட ஸ்டைலில் எழுதிப் பார்த்தேன். அவர் பேசிக் கேட்டவர்கள் அவர் குரலிலேயே படிச்சுக்குங்க!)
Saturday, April 13, 2013
ராம காதைக்குக் கொத்தனார் நோட்ஸ்
இதெல்லாம் போறாதுன்னு இன்னிக்கு நம்ம ஹரி அண்ணா தலைமையில் வாரம் 100 கம்பராமாயணப் பாடல்களைப் படிப்பதும் அதற்கு விளக்கம் சொல்வதும் என்று ஒரு புதிய முயற்சியை ஆரம்பித்து இருக்கிறார்.
இதை எல்லாம் வெளியூர்காரர்கள் தவற விடுகிறோமே எப்படிக் கலந்து கொள்வது எனப் பார்த்தால் பெங்களூர் வந்து சேர் என்கிறார். சரி கம்பன் தந்த ராமாயணம் கை வரவில்லை என்றால் என்ன கொத்தனாரே ராமாயணம் எழுதுவான் என களத்தில் இறங்கி விட்டேன்.
அறுசீர் விருத்த பா வகையில் சுருக்கமாக கதையின் முக்கிய இடங்களைச் சொல்ல ஒரு முயற்சி செய்தேன். படித்து கருத்தினைத் தெரிவித்தால் மகிழ்வேன்.
பக்தியோடு இக்காதையைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சம்பத்துகளும் வாய்க்கும், மோட்ச பலன் கிட்டும்! :)
...முன்னம் வந்தான் முதல்வனவன்
தத்தை போன்ற பெண்ணவளை
...தனுசை உடைத்துக் கைப்பிடித்தான்
சித்தி சொன்ன காரணத்தால்
...சிரித்தே சென்றான் காட்டுக்கு
தொத்திக் கொண்டான் தம்பியுமே
...தொண்டு செய்யத் துணையாக
பத்தில் பாதி ஐந்தாக
...பரமன் கண்டான் குகனைப்பின்
பத்தி முத்திப் பாட்டியவள்
...பழங்கள் கடித்துத் தந்தனளே
பத்து தலையன் ராவணனும்
...பற்று வைத்தான் பிறன்மனைமேல்
எத்தன் மாரீ சன்துணையால்
...எடுத்தே சென்றான் இலங்கைக்கு
பித்தம் பிடித்தப் பெருமானும்
...பிரிய அனுமன் தனைக்கண்டான்
சித்தம் மாறி வாலியினை
...சீறும் அம்பால் அவன்வென்றான்
பக்தன் அனுமன் இலங்கைக்கு
...பறந்து சென்று பார்த்தவுடன்
ரத்தம் கொதித்து அவ்விடத்தை
...ரணமும் செய்து வந்தானே
மொத்தக் குரங்குப் படைகொண்டு
...மோத ராமன் முடிவெடுத்தான்
சத்தக் கடல்மேல் கல்போட்டு
...சாதித் திடத்தென் திசைசென்றான்
வித்தை பலவும் செய்தாலும்
...வீணாய்ப் போனர் இலங்கையரும்
யுத்தம் தனிலே யுவராசர்
...யுதிரம் கொட்டி வீழ்ந்தனரே
செத்துத் தொலைந்தான் ராவணனும்
...சேர்ந்தாள் சீதை ராமனுடன்
அத்தி தாண்டி அவர்களெல்லாம்
...அயோத்தி சென்று அடைந்தனரே!
நோட்ஸ்!
பாடலைக் காண்பித்த பொழுது நண்பர்கள் சிலர் அது என்ன சத்தக்கடல் என்று கேட்டார்கள். அலையோசை மிகுந்த கடலே சத்தக்கடல்.
சரி, அது என்ன அத்தி? அத்தி என்றால் கடல். பாற்கடலில் படுத்துறங்கும் திருமாலுக்கு அத்திசயனன் என்று ஒரு பெயர் உண்டு.
Thursday, March 14, 2013
Voices Within - Bombay Jayashri & T M Krishna with Mythili Chandrasekar
யார் அந்த எழுவர்? எத்தனையோ பேர் இருக்கும் பொழுது ஏன் இவர்கள் மட்டும்? இக்கேள்விகளுக்கும் புத்தகத்திலேயே விடை இருக்கிறது.
- அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் - இன்றைய கச்சேரி முறையை அறிமுகப்படுத்தி கர்நாடக சங்கீதத்தை பெரும்பான்மையிடம் கொண்டு சேர்க்கும் அரிய காரியத்தைச் செய்தவர்.
- டி.என்.ராஜரத்தினம் பிள்ளை - நாகஸ்வர ராஜா. நாகஸ்வர வித்தையையும் தாண்டி நின்ற ஆளுமை. தனக்கான, தன் இசைக்கான இடத்தைப் பெற போராடத் தயங்காத போராளி.
- செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் - கர்நாடக சங்கீத உலகின் பீஷ்ம பிதாமகர். இசை தாண்டி பலவித ஒழுங்குமுறைகள் வரக் காரணமாக இருந்தவர்.
- ஜி.என்.பாலசுப்ரமணியம் - தேன் குரலோன். தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி அதுவரை இல்லாத ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்தவர்.
- பாலக்காடு மணி ஐயர் - மிருதங்கம் என்றால் மணி ஐயர். மணி ஐயர் என்றால் மிருதங்கம் என்ற அளவிற்கு திறமை கொண்டவர்.
- எம்.எஸ்.சுப்பலக்ஷ்மி - இசைக்குயில். கர்நாடக சங்கீதத்தை இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலகமே அறியச் செய்தவர். நம் பாரதத்தின் ரத்தினம்.
- டி.ஆர்.மஹாலிங்கம் - புல்லாங்குழலுக்கென்றே பிறந்தவர். ஜீனியஸ். எந்த விதமான சட்டதிட்டங்களும் தம்மை பாதிக்காமல் இருந்த புரட்சியாளர்.
மூத்த கலைஞர் முசிறி சுப்ரமணிய ஐயருக்கு பதிலாக களமிறங்கிய சின்ன வயது ஜிஎன்பியின் கச்சேரியை விவரிக்கும் விதமாகட்டும், அரியக்குடி காலை எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை அவருடைய நாள் ஒன்றை விவரிக்கும் விதமாகட்டும் நாமும் அவர்கள் கூடவே இருப்பது போன்ற விவரிப்பு. எனக்கு குழலை விட வயலின் நன்றாக வரும் எனச் சொல்லும் மாலி, என் கச்சேரிக்கு நேரம் நிர்ணயிக்க நீங்கள் யார் என்று ஆல் இந்திய ரேடியோவை கேள்வி கேட்ட பிள்ளைவாள், மற்றவர்களை விட தனக்கு ஒரு ரூபாயாவது அதிகம் சன்மானம் தர வேண்டும் எனச் சொன்ன அரியக்குடி என்பது போன்ற சுவாரசியத்திற்கு குறைவில்லா தகவல்கள் நிறைந்த புத்தகம். வெறும் பெருமைகளை மட்டும் சொல்லாமல் அரியக்குடியின் கருமித்தனம், மாலியின் சூதாட்டம் என்று அவர்களை சாதாரண மனிதர்களாகவே சொல்லி இருப்பது எனக்குப் பிடித்தது.
ஆனால் Coffee Table Book என்பதால் தேடித்தேடித் தேர்ந்தெடுத்த படங்கள்தான் புத்தகத்தின் ஹைலைட். ராஜாவைப் போன்ற ராஜரத்தினம் பிள்ளை, ராஜா வேஷத்தில் சினிமாவில் நடித்த ஜிஎன்பி, செம்மங்குடியின் இளமை முதுமை காலப் படங்கள் என்று அற்புதமான படங்களோடு, 78ஆர்பிஎம் ரெக்கார்டுகளின் படங்கள், 1943ஆம் ஆண்டு அரியக்குடி பாடிய கச்சேரியின் பாட்டு லிஸ்ட்(ஹமாம் விளம்பரத்துடன்), எம்.எஸ் ஆங்கில உரை ஒன்றை எழுதி வைத்துக் கொண்டு தயார் செய்கையில் சரியான உச்சரிப்புக்காக அதில் தமிழில் எழுதிக் கொண்ட படம் என வித்தியாசமான படங்கள் பலவற்றையும் தந்திருக்கிறார்கள்.
2007ஆம் ஆண்டு வெளியான இந்தப் புத்தகம், கர்நாடக இசைக்கலைஞர்கள் பற்றி அத்துறை வல்லுநர்களால் எழுதப்பட்டிருக்கும் புதிய முயற்சி என்பதே வாங்கிப் படிக்கவும் பாதுகாத்து வைத்துக் கொள்ளவும் போதுமான காரணம். இதன் தமிழ் மொழியாக்கம் ஒன்றும் வந்திருக்கிறது. அதை படித்துப் பார்க்கவில்லை என்பதால் மொழியாக்கம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
Voices Within | Bombay Jayashri, TM Krishna | 188 Pages | Rs.1900 | http://www.matrka.org/voiceswithin/index.html
Wednesday, March 06, 2013
தமிழ் வளர்க்க சங்கம். சரி, ஆனால் தமிழைக் கற்க?
நண்பர் @anoosrini எழுப்பும் கேள்வி இது. விளையாட்டாய் பலரும் வாத்தி என்று ட்விட்டரில் அழைப்பதால் இதை என்னிடம் கேட்டுவிட்டார் போல! அவர் என்னிடம் கேட்டு கொஞ்ச நாள் ஆனது. ஆனால் என்னிடம் பதில் இல்லை. இது குறித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன்.
இனி அனுவின் கேள்வி
தமிழை தனிப்பட்ட முறையில், பள்ளி சாராமல், ஒரு மொழியாக கற்க முடியுமா? இது எனக்குள்ள ரொம்ப நாளா இருக்கற கேள்வி. நான் பள்ளியில் இரண்டாவது மொழியாக தமிழ் படித்தேன். ஆனால் பள்ளியில் தமிழை ஒரு மொழியாகச் சொல்லித் தராமல் ஒரு பாடமாகத்தான் சொல்லித் தருகிறார்கள்.
நான் பள்ளி வழியாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் இந்தி படித்திருக்கிறேன். அதற்கு தக்ஷிண பாரத் இந்தி ப்ரசார் சபா இருக்கு. ஃப்ரென்ச் படித்திருக்கிறேன், Alliance Française இருக்கு. ஸ்பானிஷ் படித்திருக்கிரேன், Instituto de Cervantes இருக்கு. மாண்டரின், ஆங்கிலம், ஜாப்பனீஸ், ஜெர்மன், என்று எல்லா முக்கிய மொழிகளையும் உலகம் முழுவதும் படிக்க முடியும். அதற்கான கட்டமைப்புகள் உள்ளன.அவ்வளவு ஏன்? சென்னையிலேயே இவை அனைத்தையும் படிக்க முடியும். ஆனால் தமிழ் கற்றுக் கொடுக்க, இப்படி ஒரு அமைப்பு இல்லையே என்ற ஆதங்கம் வெகு நாட்களாக எனக்கு உண்டு.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோம் என்று பெருமை பேசுவதைத் தவிர வேறு ஒன்றும் புதுசாக யாரும் செய்யவில்லை. தமிழ்ப் படங்களை தடை செய்வதை விட்டு, தமிழைக் கற்றுத் தர வழி செய்யலாமே!
பி.கு. - ட்விட்டர் நிறுவனத்தார் இந்த பாஸ்டரஸ் தளத்தினை வாங்கிவிட்டார்கள். ஏப்ரல் மாதத்தோடு இந்த சேவைக்கு சங்கு ஊதப் போகிறார்களாம். வழக்கம் போல மீண்டும் ப்ளாக்ஸ்பாட்டுக்கே போக வேண்டியதுதான் போல. செய்வோம்.
Tuesday, February 05, 2013
நிறுத்தணும்! எல்லாத்தையும் நிறுத்தணும் - 2!
Monday, February 04, 2013
குஞ்சரி மணவாளா...
முருகா என்றதும் உருகாதா மனம் மோகன குஞ்சரி மணவாளா!
பாட்டு பிரபலம்தான்.
ஆனா அது என்ன மோகன குஞ்சரி?
இங்க ஒரு எட்டு போய்ப் பாருங்க. - http:// 4varinote.wordpress.com/2013/02/04/guest05/
எந்த பதிவைப் பார்க்க?
எல்லாம் நம்ம பதிவுதேன்...
Sunday, January 27, 2013
சர்க்கரை இனிக்கிற சர்க்கரை!
வழக்கம் போல ட்விட்டர் புராணம்தான். வழக்கம் போல ஆரம்பிச்சு வெச்சுது நம்ம @nchokkanதான்.
நான் எதையோ எழுதும் பொழுது சந்திப்பிழை செய்ய, நீர் செய்வது ஆயாசம் அளிக்கிறது. பதிலுக்குப் பாயாசம் அளியும் என்ற ரேஞ்சில் ஒரு ட்விட்டைப் போட்டுட்டு பாயாசமா, பாயசமா என்ற கேள்வியையும் இலவச இணைப்பாகக் கேட்டுட்டுப் போயிட்டார்.
பாயசம்தான் சரி, ஆனால் ஏன் அந்தப் பெயர் வந்தது என்று எனக்குத் தெரியாது என்று நான் விவகாரம் சின்னதாக இருக்கும் பொழுதே அமுக்கிவிட நினைத்தாலும் நடக்கிறதா? விதி @anoosrini @krangana @kekkepikkuni ரூபத்தில் வந்து விளையாட்டை ஆரம்பித்தது.பாயசம் கொஞ்சம் நிறம் மாறி திருக்கண்ணமுது, அக்காரவடிசல் என்று சுவையேறத் தொடங்கியது.
அக்காரம் என்றால் வெல்லம். அடிசில் என்றால் சோறு. இதை அக்காரவடிசில் என்றுதான் சொல்ல வேண்டும் என @ragavang ஜீப்பில் ஏறிக் கொண்டார். இதை இன்னும் அழகாகக் கன்னலமுது எனச் சொல்லாமே, கன்னல் என்றால் சர்க்கரை என்று நினைக்கிறேன் என அனுராதாவும் அக்காரவடிசிலில் வெல்லம்தானே அதில் எங்கே சர்க்கரை வந்தது என்று கிருஷ்ஷும் விவாதத்தை பாயசத்தில் இருந்து வெல்லம், சர்க்கரை பக்கம் திருப்பினர். இந்த பேச்சு நடந்து கொண்டு இருக்கும் பொழுது @sathishvasan @akaasi @Jsrigovind @4sn எனப் பலரையும் இணைத்துக் கொண்டு ஒரு சின்ன பொதுக்கூட்டமே போட்டோம்.
கன்னல் என்றால் கரும்பு. அந்தக் கரும்பில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரையையும் கன்னல் என்று சொல்லுவார்கள். கோதை நாச்சியார் தாலாட்டு என்ற தொகுதியில் செந்நெல் விளைய செகமுழுதும் தான்செழிக்க, கன்னல் விளைய கமுக மரம்தான் பழுக்க என்று வரும். இங்கு கரும்பு என்ற பொருளில்தான் கன்னல் என்ற சொல் வந்திருக்கின்றது. அதே தொகுதியில் வேறு ஒரு இடத்தில் கன்னல் மொழி என இனிமையான சுவைகூடிய என்ற பொருளிலும் வருகின்றது. நண்பர் ஒருவர் தம் மகளுக்குக் கன்னல் என்றே பெயர் சூட்டி இருக்கின்றார். சுவையான பெயர் என்பதில் சந்தேகமே இல்லை.
கன்னலாகட்டும், வெல்லம் ஆகட்டும். சர்க்கரை ஆகட்டும், கரும்பினில் இருந்து எடுக்கப்படும் தித்திப்பினைத் தரும் பண்டம்தானே. இவற்றிடையே வேறுபாடு உண்டா என்றால் கிடையாது. ஆனால் தற்காலத்தில் Refined Sugar என ஆங்கிலத்தில் வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை சர்க்கரை என்றும் அப்படி வெள்ளையாக இல்லாத சர்க்கரையை நாட்டு சர்க்கரை என்றும் வெல்லம் என்றும் குறிப்பிடத் தொடங்கிவிட்டோம். (Refined என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? சுத்திகரிக்கப்பட்ட என்பது எனக்கு சரியாகப்படவில்லை.)
சர்க்கரை என்பது இந்தியாவில்தான் முதன்முதலாகத் தயாரிக்கப்பட்டது என்றே அறிஞர்கள் கூறுகின்றனர். மற்ற நாடுகளில் தேன் மட்டும்தான் பயன்பாட்டில் இருந்தது. இங்கு இருந்தே சர்க்கரை பற்றிய மற்றவர்கள் தெரிந்து கொண்டார்கள். இந்தியாவில் பெரும்பாலான மொழிகளில் சர்க்கரை என்பதே இதற்கான சொல்லாக இருக்கின்றது. ஆங்கிலத்தில் வழங்கும் Sugar என்பதற்கும் சர்க்கரை என்பதுதான் வேர்ச்சொல். அரேபிய, பெர்ஷியன், ஜெர்மன், போலிஷ், ரஷ்யன், பழைய ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், போர்த்துகீஸ் என பல மொழிகளிலும் சர்க்கரைக்கான சொல்லிற்கு மூலம் நம் சர்க்கரையே. (இங்கு நம் என நான் குறிப்பிடுவது இந்தியாவை. வடமொழியில் இருந்து தமிழிக்கு சர்க்கரை வந்ததா அல்லது இங்கு இருந்து அங்கு சென்றதா என்பது பற்றி எனக்குத் தெரியாது.)
தொடர்ந்து பேசும் பொழுது ஜீனி பற்றியும் பேசினோம். நெல்லைப்பக்கம் சீனி என்போம். சீனியவரைக்காய், சீனிக்கிழங்கு என்று காய்கறிகளுக்குக் கூட சீனி என்ற இனிஷியலைச் சேர்த்துவிட்டோம். இதன் மூலம் தெரியவில்லை, தேடிப்பார்க்க வேண்டும். தமிழில் சீனி என்றால் மரத்தாலான சேணம் என்கிறது என் அகராதி. அது எப்படி சர்க்கரைக்கு மாற்றாக வந்ததோ தெரியவில்லை. இதற்கு ஏதேனும் வடமொழி மூலம் உண்டா என்று தெரிந்து கொள்ள வேண்டும். சைனாவில் இருந்து வந்த வெள்ளைச் சர்க்கரைக்கே (Refined Sugar) சீனி என்ற பெயர் என்கிறார்கள் சிலர்.
சர்க்கரை, சீனி, வெல்லம், அக்காரம் என்றெல்லாம் பேசிய பொழுது ஆட்டத்திற்கு வராமல் இருந்த ஒன்று கருப்பட்டி. இன்று கருப்பட்டி என்று வழங்கப்பட்டாலும் அதைச் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் கருப்புக்கட்டி என்றுதான் சொல்ல வேண்டும். வெள்ளையாக இல்லாமல் கரிய நிறம் கொண்ட கட்டி கருப்புக்கட்டி. எளிமையான பெயர் என்றால் இதுதான். பனங்கருப்பட்டி, தென்னங்கருப்பட்டி என்று பல விதங்கள் உண்டு. இதைப் பற்றிப் பேசவே இல்லை. அதில் எனக்கு வருத்தம்தான். அதனால்தான் இங்கு நுழைத்துவிட்டேன்.
ஆனால் அஸ்கா பற்றிப் பேசினோம். நான் பணி நிமித்தம் கோவைக்கு மாற்றலாகிப் போன பொழுதுதான் இந்த வார்த்தையை முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். அது என்ன அஸ்கா என்று நண்பனிடம் தந்தையிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
அஸ்கா என்பது ஒடிஷா மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறிய நகரத்தின் பெயர். இந்தியாவில் தொடங்கப்பட்ட சர்க்கரை ஆலைகளில் மிகப்பழைய ஆலை ஒன்று இங்குள்ளதுதான். இன்றும் அஸ்கா கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ற பெயரில் இந்த ஆலை இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த ஆலைக்கு தமிழகத்தில் இருந்து, அதுவும் குறிப்பாக மேற்கு தமிழகத்தில் இருந்து கரும்பு செல்வது வழக்கம்.
நாட்டுச் சர்க்கரையை மட்டுமே அறிந்த மக்கள், இந்த ஆலையில் இருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை நாட்டுச் சர்க்கரையில் இருந்து வித்தியாசப்படுத்துக் காண்பிப்பதற்காக அதைக் கொண்டு வந்த இடத்தை / தயாரிக்கப்பட்ட ஆலையை சேர்த்து அஸ்கா சர்க்கரை என வழங்கினர். நாளடைவில் சர்க்கரை என்ற வார்த்தையை விடுத்து அஸ்கா என்றாலே சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என்றாகிவிட்டது. இந்த அஸ்கா கதை பலருக்கும் தெரியாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமே.
நிற்க.
உலகத்திலேயே இந்தியாவில்தான் நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் அதிகமாம். ஒரு சந்திப்பிழைக்கு இந்த ரேஞ்சில் சர்க்கரை பத்திப் பேசினா ஏன் இருக்காதுங்கறேன்.
