Tuesday, October 14, 2025

செந்தூர் முருகனுக்கு அரோகரா!


“அந்த செந்தூர் பில்டிங்தானே?” 


மும்பையில், என் அண்ணன் வீட்டிற்குச் சென்றிருந்த பொழுது, போக வேண்டிய இடத்திற்கு அடையாளமாக நான் சொன்னது அவரைக் குழப்பியது. “செந்தூர் பில்டிங்கா?” என்றார். 


“அதாம்பா. அந்த ஏர்போர்ட்க்குத் திரும்பற வழியில், வட்டமா இருக்குமே. செந்தூர் பில்டிங்”  


“வட்டமாவா? அது செந்தூர் பில்டிங் இல்லடா. அது செண்ட்டார் (Centaur) பில்டிங்” என்றார் அண்ணன். 


எனக்கு அந்தக் கட்டடத்தின் பெயர் செண்ட்டார் என்று தெரியும்தான். ஆனால் அது செந்தூர் பில்டிங்காக மாறியதற்குப் பின் ஒரு கதை இருக்கிறது. 


இந்த நிகழ்வுக்கு பல வருடங்கள் முன் அண்ணன் வீட்டிற்கு வந்திருந்தேன். அப்பொழுது அவரிடம் வேலை பார்த்த ஓட்டுநர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சண்முகம் எனப் பெயர். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் சண்முவமண்ணாச்சி. 


அமெரிக்காவில் இருந்து தம்பி வந்திருக்கார். அவருக்கு  மும்பையைச் சுற்றிக் காட்ட வேண்டியது தன் பொறுப்பு என அவராகவே முடிவு செய்து கொண்டார். அதற்கு முன் நான் மும்பை வந்திருக்கிறேனா, சுற்றிப் பார்த்திருக்கிறேனா, எனக்கு எந்த அளவு மும்பை பழக்கம் என்பது பற்றி எல்லாம் அவருக்கு கவலையே இல்லை. 


எங்கு சென்றாலும் கிரிக்கெட் போட்டியை வர்ணனை செய்பவர்களைப் போல் நிறுத்தாது, வழியில் தென்படுபவை, அந்த இடங்களின் சிறப்பு என எதையாவது பேசிக்கொண்டே வருவார். அத்தனையும் உண்மையான தகவலாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை எல்லாம் அவர் தமக்கு விதித்துக்கொள்ளவும் இல்லை. நயம் நெல்லைத் தமிழில் பேசுவார் என்பதால் எனக்குக் கேட்பதில் மகிழ்ச்சிதான். எனவே அவர் பேசுவதைத் தடுக்காமல் கேட்டுக் கொண்டே வருவேன். 


ஒரு சமயம் என்னை அவர் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. வழக்கம் போல போகும் வழியில் தென்பட்ட கோயில், ஏறிய மேம்பாலம், அந்தப் பக்கத்தில் இருக்கும் அண்ணனின் நண்பர்கள் இல்லங்கள் என வர்ணனை தொடர்ந்தது. விமானநிலையத்தை நெருங்கும் பொழுது வட்ட வடிவத்தில் அமைந்த ஒரு கட்டடம் இருந்தது. 


“அண்ணாச்சி, இந்தா பாத்தியளா, எல்லா இடத்திலும் பெட்டி பெட்டியா கெட்டி வெச்சிருக்காவள்ளா, ஆனா இங்க பாருங்க. ஒரு மாத்தா இருக்கணும்ன்னு வட்டமா கெட்டி இருக்காவ பாருங்க. இது ஓட்டலாக்கும். யாரு கெட்டி இருக்கா தெரியும்லா. நம்ம ஆளுவதான். தூத்தூடி பக்கம்ன்னு நெனைக்கேன். நம்ம ஆளுவளுக்கு எங்க போனாலும் ஊர் நெனப்புதான் பாத்துக்கிடுங்க. இங்க வந்து இவ்வளவு பெரிய கட்டடம் கட்டுனாலும் பேரு என்ன வெச்சிருக்காவ தெரியுமா? செந்தூர் ஓட்டல். நம்ம திருச்செந்தூர் சாமி பேரைத்தான் வெச்சிருக்காவ பாத்துக்கிடுங்க. ஓட்டல் சாப்பாடும் நம்ம ஊர்ச் சாப்பாடாத்தான் இருக்கும். ஆனா நான் போனதில்லை, வெல சாஸ்தில்லா” என்றபடி என்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.  



May be an image of text



அது செண்ட்டார் ஹோட்டல். அன்றைய ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஹோட்டல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் தங்குமிடம். அதன் இலச்சனை மேல் பாதி மனித உடலாகவும், கீழ்ப்பகுதி குதிரை போலவும், கைகளில் வில்லும் அம்பும் வைத்திருக்கும் கிரேக்க தொன்ம மிருகமான செண்ட்டார் என்பதை எல்லாம் அவரிடம் நான் சொல்லவில்லை. 


இன்று அந்தக் கட்டடமும் இல்லை, அண்ணாச்சியுமில்லை. ஆனால் அவரது அப்பாவித்தனமான விளக்கத்தால் செந்தூர் பில்டிங் மட்டும் என்னுள்ளே இருக்கிறது. 


Monday, October 13, 2025

ஞானசரஸ்வதி!

 

இன்று தீக்ஷிதரின் மாமவ மீனாக்ஷி எனத் தொடங்கும் வராளி ராகத்தில் அமைந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் மீனாக்ஷி, ராஜமாதங்கி, மாணிக்ய வல்லகி பாணி, மதுர வாணி என்றெல்லாம் அன்னையைத் துதிக்கும் பொழுது நாமும் இதுபோல எழுதினால் என்ன எனத் தோன்றியது.

இன்று சரஸ்வதி பூஜை. எனவே சரஸ்வதியின் மேல் எழுதலாம் என முடிவு செய்தேன்.
இந்த வருடம் எங்கள் இல்லம் வந்தவள் ஞானசரஸ்வதி. கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள சிலையின் பிரதி. கையில் ருத்திராக்ஷ மாலையும், கமண்டலமும் புத்தகமும் கொண்ட இவ்வடிவம் ஞானத்தைத் தரும் குருவின் வடிவமாகக் கருதப்படுகிறது.

May be an image of text

தீக்ஷிதரின் வரிகளால் ஈர்க்கப்பட்டு ஞானசரஸ்வதியின் மேல் எழுதிய வெண்பா இது.
கமலி உலகத்தைக் காத்திடும் காநீ
விமலி இசைவாணி வேணி - அமரியிச்
சின்னவன் எந்தனின் சிந்தனையும் முன்னேற
அன்னை அருள்வாய் அறிவு!


கமலி - கமலமாகிய தாமரை மேலமர்ந்தவளே

கா - சரஸ்வதியின் மற்றொரு பெயர்

விமலி - மலங்களற்ற தூய்மையானவளே 

இசைவாணி - இசையை மொழியாகக் கொண்டவளே

வேணி - அழகிய கூந்தலையுடையவளே

அமரி - துர்க்கை (கமலி விமலி என எழுதிய பின் அதற்கு இணையாக ஒரு சொல் தேடினேன். அமரி என்றால் துர்க்கை என அறிந்தேன். நவராத்திரி காலம் என்பதால் துர்க்கையும் அவளே என சேர்த்துவிட்டேன்)

ஞானசரஸ்வதியை எங்கள் இல்லம் சேர்த்த நண்பனுக்கு நன்றி! Lalitharam Ramachandran

மதுரையில் கடற்கரை!

 

படம் வரையும் ஒருவரிடம் சென்று சரஸ்வதி படம் வேண்டும் என்றால் அவர் ஒரு குறிப்பிட்ட வகையில்தான் வரைந்தாக வேண்டும். அவள் தாமரையில் அமர்ந்திருக்க வேண்டும், கையில் வீணை இருக்க வேண்டும், வெண்பட்டு உடுத்தியவளாக இருக்க வேண்டும். கொஞ்சம் மாற்றம் வேண்டுமானால் நான் சில நாட்கள் முன் எழுதிய ஞானசரஸ்வதி போல குருவடிவில் இருக்கலாம். இதனை மீறினால் பெரும் பிரச்சனை வரும் என்பதை நம் வாழ்நாளிலேயே பார்த்திருக்கிறோம். ஆனால் விநாயகரை வரைய இந்த அளவு கட்டுப்பாடுகள் கிடையாது. அவர் கிரிக்கெட் விளையாடலாம், ஆப்பிள் கணினியில் பேஸ்புக் பார்க்கும் படி வரையலாம். ஒரு கூடுதல் சுதந்திரம் உண்டு. 

அது போல ஒரு நேரடியான கேள்விக்குப் பதிலாக நாம் எழுதுவதில் அந்தப் பதிலை ஒட்டிய செய்திகளைத்தான் தர முடியும். சுருக்கமாக எழுதலாம், விரிவாக எழுதலாம். ஆனால் கருத்து அப்பதிலாகத்தான் இருக்க முடியும். ஆனால் ஆங்கிலத்தில் abstract எனச் சொல்லும் வகையில் இதுதான் என்றில்லாத கேள்வி வரும் பொழுது அதற்குப் பதிலாக எழுத நமக்குக் கூடுதல் சுதந்திரம் கிடைக்கிறது. அதில் நாம் எழுத நினைத்தவை, நம் கருத்துகள், பூடகமாகச் சொல்ல வேண்டியவை என எல்லாவற்றையும் கலந்து எழுதலாம். 

ஏரணமே இல்லாத ஒன்றைச் சொல்லி அது பற்றி எழுது என்றால் என் போன்றவர்களுக்குக் கொண்டாட்டம்தான். சொக்கன் எழுதப் பணித்த தலைப்புகளில் ஒன்று அப்படிப்பட்டது. அதற்கு நான் எழுதியது எனக்கே பிடித்தது என்பதால் இங்கும் பகிர்கிறேன். அவர் எழுதத் தந்த குறிப்பு - 

அன்புடையீர், நாங்கள் மதுரையில் ஒரு கடற்கரை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பொதுநலத் திட்டத்துக்கு உங்களால் இயன்ற நன்கொடையை வாரி வழங்கி உதவும்படி கேட்டுக்கொள்கிறோம். இக்கடிதத்துக்கு உங்கள் உடனடிப் பதிலை எதிர்பார்க்கிறோம்.

என் பதில் கடிதம் 

அன்புடையீர்


மதுரையில் கடற்கரை பற்றிய தங்கள் கடிதம் வந்தது. சென்னைவாழ் மக்கள் அவர்களுடைய மெரீனா கடற்கரையைப் பற்றிப் பேசும் பொழுதெல்லாம் நமக்கு இது போலப் பேச வழியில்லையா எனக் குமுறும் மதுரை மக்களின் ஆதங்கத்தைத் தீர்க்கும் வகையில் இது அமையும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. 


ஆனால் இந்தத் திட்டத்தில் எனக்கு இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன. அதனைத் தீர்த்து வைத்தபின் நாம் அதற்கான நிதியுதவி பற்றிப் பேசலாம்.


முதலாவது சங்கம் வைத்து வளர்த்த, தமிழுக்கே தலைநகர் எனத் திகழும் மதுரையில் தமிழின் நிலை. இன்று தமிழில் மெரீனா பீச் என்றே வழங்கப்படும் சென்னையின் சிறப்பை முன்மாதிரியாகக் கொண்டதால், Beach எனப்படும் ஆங்கிலச் சொல்லை கடற்கரை என மொழிப்பெயர்த்திருக்கிறீர்கள். ஆனால் ஒரு பரந்த பொருளில் பயன்படுத்த வேண்டிய சொல்லை மிகக்குறுகிய ஒரு வட்டத்திற்குள் அடைத்து வைத்திருக்கிறீர்கள்.


ஆங்கிலத்தின் முதன்மையான அகராதியான ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி, இந்தச் சொல்லுக்கான விளக்கத்தை “An area of sand, gravel, or small stones alongside a body of water” எனத் தருகிறது. இதில் நாம் முக்கியமாகக் கருத வேண்டியது அவர்கள் ‘alongside a sea or an ocean’ எனக் குறிப்பிடவில்லை. எனவே அச்சொல்லை நீங்கள் கடற்கரை என்று எழுதியது எந்த விதத்தில் நியாயமாகும் என்று நினைத்துப் பாருங்கள். அந்நிய மொழியான ஆங்கிலத்தின் வளம் நம் தமிழுக்கில்லை என்றாகுமல்லவா. இது நம் மொழிக்கு, நமக்குமே இழுக்கு என்பதை உணராமல் நீங்கள் இத்தவற்றைச் செய்திருக்கலாமா? 


கடலே இல்லாத மதுரைக்குக் கடற்கரை வேண்டுமென நிதி திரட்டினால் அது இல்லாத நதியின் மேல் பாலம் கட்டிய கணக்கெழுதிய இந்திய அரசியல்வாதியின் கதை போலக் கேலிக்குரியதாகுமல்லவா? பீச் என்பதற்கு இணையான சொல் கரைதானே. அது ஏரிக்கரையாக இருக்கலாம், நதிக்கரையாக இருக்கலாம், கடற்கரையாக இருக்கலாம். இப்படிக் கடற்கரை என்ற குறுகிய நோக்கில் பார்க்காமல் இருந்தால் நாம் செய்ய வருவது மதுரை மக்களுக்குப் பொழுது போக்க ஒரு வழி செய்து கொடுப்பது என்ற உயரிய நோக்கம் சரியாக வெளிப்படுமே. அதனைக் கேளிக்கைக்கரை எனச் சொல்வதில் ஏன் தயக்கம்? 


இன்று நான் வசிக்கும் ஆஸ்டின் நகரும் மதுரையைப் போல கடற்கரையில் இல்லை. ஆனால் இங்கிருக்கும் டிராவிஸ் ஏரியில் Pace Bend Park, Sandy Creek Park, Hippie Hollow Park, Windy Point Beach, Volante Beach என ஏராளமான கேளிக்கைக்கரைகளை உருவாக்கி, குளிப்பதற்கும், நீர் விளையாட்டுகளுக்கும், வயது வந்தோருக்கு மட்டுமானது என்றும் விதவிதமாகச் செய்திருக்கிறோமே. கடற்கரையேதான் வேண்டும் என அடம்பிடிக்கவில்லையே. 


உங்கள் கடிதத்தைப் பார்க்கும் பொழுது மதுரைக்கு வேண்டியது கடற்கரையா தமிழ்ப்பள்ளியா என்ற கேள்விதான் என்னுள்ளே எழுகிறது. பேசாமல் கடற்கரைத் திட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ்ப் பலகை ஒன்றை உருவாக்கி மீண்டும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மாநகர் என்ற பெயரை மதுரைக்கு மீட்டுத் தருவோமா? 


இல்லை, கேளிக்கைக்கரைதான் வேண்டுமென்றால் நான் சொன்ன இரண்டாவது பிரச்சனை தலையெடுக்கிறது. நாம் எங்கு இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்? கரை என்ற சொல்லுக்கு ஒரு நீர்நிலையின் எல்லையில் மணலும் சரளைக்கற்களும், கூழாங்கற்களும் இருக்கும் இடம் என்பதுதானே பொருள். ஆக நீர்நிலையை ஒட்டி இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இடமில்லையே. மதுரை, நீர் நிலை என்றால் என் நினைவுக்கு, நம் நினைவுக்கு, ஏன் இந்த உலகத்தில் மதுரையைத் தெரிந்த அனைவருக்குமே நினைவுக்கு வருவது இரண்டு இடங்கள்தான். ஒன்று மீனாட்சி அன்னை கோயிலின் தெப்பக்குளம், இரண்டாவது வைகை நதி. மற்ற நீர்நிலைகள் இருந்தாலும் இவை இரண்டும்தானே புகழ்பெற்றவை. அதனால் இவற்றுள் ஏதாவது ஒன்றின் அருகே இத்திட்டம் அமைவதுதான் சிறப்பு. 


ஆனால் தெப்பக்குளம் இத்திட்டத்திற்கு சரி வராது. அது கோயில் பகுதி. அங்கு ஏற்கனவே கற்படிக்கட்டுகள் இருக்கின்றன. கோயில் செல்பவர்கள் கூடக் கம்பிக் கிராதிகள் வழியாகப் பார்க்கக்கூடிய ஓர் இடமாக அது இன்று இருக்கின்றது. கேளிக்கைக்கான இடமாக அதை மாற்றுவது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆகவே அதை நாம் பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்வதில் எந்த வித நியாயமும் இல்லை. அதை விட்டுவிடுவோம். 


அடுத்தது வைகை. மதுரையின் உயிர் நாடி வையை என்று அழைக்கப்படும் வைகை நதி என்றால் அது மிகையே இல்லை. வைகை இல்லையேல் மதுரை இல்லை என்பது முழு உண்மை. மதுரைக்காரர்களுக்குக் கள்ளழர் ஆற்றில் இறங்கும் காட்சியைப் போல உவகை தரும் காட்சி உலகிலேயே வேறேதும் உண்டா?  வையை என்னும் பொய்யாக் குலக்கொடி என்றல்லவா சிலப்பதிகாரம் சொல்கிறது. வைகை வரண்டு போகாதாம், அது போல பொய்யே இல்லாத பாண்டியன் ஆட்சியாம். நான் சொல்லவில்லை, இளங்கோவடிகள் சொல்கிறார். ஆனால் மன்னராட்சி போய் மக்களாட்சி வந்தபின் நமக்கு வாய்த்திருக்கும் ஆட்சியாளர்களைச் சொல்லும் விதமாகவோ என்னவோ வைகையும் வரண்டு போய் இருக்கிறது. நீரே இல்லாத இடத்தில் கரையை நினைத்துப் பார்க்க முடியுமா? 


அப்படி நீரே இல்லாத வைகையின் ஓரம் நம் கேளிக்கைக்கரையை கட்டினால் என்ன? கட்டாவிட்டால் என்ன? ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது என்று கூடச் சொல்ல முடியவில்லையே. மூழ்குவதற்கும் நீரல்லவா வேண்டும். கேளிக்கைக் கரை வேண்டுமென்ற ஆர்வம் சரிதான். ஆனால் அது வேண்டுமானால் அதற்கு முன் வைகையில் நீர்வரத்து, சங்கப்பாடல்களில் சொன்னாற்போல, வர வழிவகைகளை முதலில் செய்ய வேண்டும். இப்படிச் செய்ய ஆயத்தமாக உங்கள் குழு இருக்குமானால் சொல்லுங்கள். வெறும் பிள்ளையார் சுழி இல்லை நம் மாநகருக்கு அணி சேர்க்கும் முக்குறுணிப் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குவோம். 


ஆனால் இந்த இரண்டையும் சரி செய்யாத வரை கேளிக்கைக்கரைத்திட்டத்திற்கு என் ஆதரவு இல்லை என்பதை மிகுந்த வருத்தத்தோடுச் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன். என் கோரிக்கைகளில் இருக்கும் நியாயம் உங்களுக்குப் புரிந்திருக்கும். அதைக் கருத்தில் கொண்டு திட்டத்தை மீளுருவாக்கம் செய்வீர்கள். மதுரைக்கு சிறப்பு சேர்க்க எனக்கும் பங்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் உங்களிடம் பேசும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்குகிறேன். 


வாழ்த்துகள்.


அன்புடன்

இலவசம் 


Friday, October 10, 2025

உடற்பயிற்சிக் காதை!


நண்பர் என். சொக்கன் நடத்திய எழுத்துப் பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்கள் தொடர்ந்து உரையாட ஒரு வாட்ஸாப் குழுமம் இருக்கிறது. தொடர்ந்து எழுதும் பழக்கம் வர அக்குழுவில் நிதம் ஒரு தலைப்பு தந்து சிறுகுறிப்போ, கதையோ, கட்டுரையோ ஏதேனும் எழுதச் சொல்வார். பாடம் முடிந்த பின்னரும் தொடர்ந்து வழிகாட்ட அவர் எடுக்கு முனைப்பு பாராட்டுக்குரியது.

நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகள் என்னவென்பது நேற்று அவர் கேட்ட கேள்வி. எப்பொழுதுமே சிறு குறிப்புகள் எழுதுகிறோமே. ஒரு மாற்றத்திற்குப் பாட்டாக எழுதினால் என நினைத்து முயன்று பார்த்தேன். எழுதுவது கடினமாக இல்லை. ஓரளவு நன்றாகவே வந்திருக்கின்றது என நினைக்கிறேன்.
ஒரு காலத்தில் சொக்கன், பெனாத்தல், நான் என ஒரு ஜமாவே தொடர்ந்து பாட்டும் பாவும் வெண்பாமும் போட்டது நினைவிற்கு வந்தது. ஹூம். அது ஒரு காலம்!
நேற்று எழுதிய பாட்டு இது.
இளைக்கவே ஆயிரம் வழிகளுமிங்கே
    இருக்குது என்று சொன்னாரே
சளைப்பே துளியும் இல்லாமல்தான்
    சரியனெ நானும் செய்தேனே
கையும்காலும் காயம் பட்டுக்
    காயலான் கடைக்குத் தான்போச்சே
ஐயமின்றி அடித்தே சொன்னேன்
    ஐயா எனக்கிது ஆகாதே
காலை அல்லது கருக்கலில் தினமும்
    கையை வீசி நடக்கையிலே
வேலையில் செய்ய வேண்டியவைதான்
    வேர்வையில் நனையுமென் நினைப்பாச்சே
பிளக்கும் வெய்யில் பித்தனாய் ஆக்கிடும்
    பிடிக்காதெனக்கு அதனாலே
குளத்தில் இறங்கி நீச்சல் அடித்துக்
    குளிப்பது வேறொரு வழியாச்சே
புதிதாய் வேறு செய்யத் துணிந்தால்
    புண்ணாய் என்னுடல் ஆகிடுமே
அதிகம் பயிற்சி ஆகாதெனக்கு
    அளவாய் இவையே போதுமப்பா!

Thursday, October 09, 2025

ஞானப்பழத்தின் நிறம்!

 

ஞானப்பழத்தின் நிறம் என்னங்கிற கேள்விக்கு ரெண்டு விஷயம் தெரியணும். ஒண்ணு ஞானப்பழம் அப்படின்னா என்ன? ரெண்டாவது நிறம் என்றால் என்ன?


அண்ணனும் தம்பியும் அடிச்சுக்கிட்டு, தம்பி ஆண்டியாப் போனதுக்குக் காரணமான பழம்தான் ஞானப்பழம்ன்னு நமக்கெல்லாம் தெரியும். அதுக்குப் பின்னாடி வருவோம். 


முதலில் நிறம்ன்னா என்ன? வானவில்லுக்கு ஏழு வண்ணம்ன்னு சொல்லறோம். சூரிய வெளிச்சம் கொஞ்சம் மஞ்சளா இருக்கும் ஆனா அதைப் பொதுவா வெள்ளைன்னு சொல்லிடுவோம். அதே சூரிய வெளிச்சம் மழை பெஞ்ச பின்னாடி காத்துல இருக்கிற நீர்த்துளிகள்ல பட்டு பல நிறங்களாத் தெரியறதுதானே வானவில். அதே மாதிரிதான் பிரமிட் மாதிரி கண்ணாடி வடிவம் ஒண்ணுல ஒளிக்கதிரைப் பாய்ச்சினோமானாலும் ஆகும். ஒரே ஒளிக்கதிரா இருக்கும் பொழுது ஒரே வேகத்தில் செல்லும் ஆனா அதை கண்ணாடி அல்லது நீர்துளிகள் வழியா செலுத்தும் போது ஒவ்வொரு நிறத்துக்கான ஒளிக்கதிரும் வேற வேற வேகத்தில் செல்வது தெரியும். அதனாலதான் அப்படி நிறங்கள் பிரிந்து தெரிகின்றன. ஆக ஒளி என்பது இந்த நிறங்களின் கூட்டுதான். மத்த எல்லா வண்ணங்களும் இந்த ஏழு நிறங்களோட கலவைதான். 


ஆசை மட்டுமல்ல, ஒளி செல்வதும் அலை போலத்தான்!

இப்படி நமக்குக் கிடைக்கிற ஒவ்வொரு நிறத்துக்கும் உண்டான ஒளிக்கதிரும் வேற வேற அளவு கொண்ட அலைகள் மாதிரி போகும். அதைத்தான் அலைவெளின்னு (Wavelength) சொல்லறோம். ஒளி இந்த அலைவெளியில் போனா இந்த நிறம், அந்த அலைவெளியில் போனா வேற நிறம். அவ்வளவுதான் கணக்கு. இந்த கண்ணாடி ப்ரிசம் இல்லாம வேற ஒரு பொருள் மேல இந்த வெளிச்சம் பட்டா, அது சில அலைவெளிகளை தனக்குள்ள எடுத்துக்கும் மத்த அலைவெளிகளைப் பிரதிபலிச்சுடும். எந்த அலைவெளிகளைப் பிரதிபலிக்குதோ அந்தப் பொருளுக்கு அந்த அலைவெளிக்கான நிறம்தான்னு சொல்லிடலாம். உதாரணத்துக்கு ஆப்பிளை எடுத்துக்கிட்டா சிவப்பைத் தவிர மத்த எல்லா நிறங்களையும் உள்ள இழுத்துக்கிட்டு சிவப்பை மட்டும் பிரதிபலிக்கும். அதனால ஆப்பிள் நமக்குச் சிவப்பா தெரியுது. இலைகள் எல்லாம் இதே மாதிரி மத்த எல்லா அலைவெளிகளையும் உள்ள இழுத்துக்கிட்டுப் பச்சை நிறத்தை மட்டும் பிரதிபலிக்குது. அதனால அதெல்லாம் நமக்குப் பச்சையாத் தெரியுது. எல்லா நிறங்களையும் பிரதிபலிச்சுட்டா அது வெள்ளை. எல்லா நிறங்களையும் உள்ள இழுத்துக்கிட்டா அது கருப்பு. சரியா?


இப்போ ஆப்பிள் சிவப்பு நிறத்துக்கான அலைவெளிகளை மட்டும்தான் பிரதிபலிக்குதுன்னு நமக்கு எப்படித் தெரியுது? அதுக்கான நுட்பம் நம்ம கண்ணுக்குள்ள இருக்கு. நம்ம கண்ணுக்குள்ள குச்சி வடிவத்திலேயும், கூம்பு வடிவத்திலேயுமான வடிவமைப்புகள் (Rods and Cones) இருக்கு. குச்சி வகை இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் உண்டான வித்தியாசத்தைக் காட்டும். நிறத்தைப் பத்திப் பேசும் போது அது வேண்டாம். இந்த கூம்பு வடிவத்தில் இருக்கிறதுல மூணு வகை இருக்கு. சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறங்களைத் தெரிஞ்சுக்க இந்தக் கூம்புகள் பயன்படுது. இந்த மூணில் எந்த வகை, எவ்வளவு அழுத்தமா பயன்படுதோ அதை வெச்சு எல்லா நிறங்களையும் நம்மால பாக்க முடியுது. இதில் பிரச்சினை இருந்தாத்தான் நிறக்குறைபாடு (Color Blindness) வருது. 


நமக்கு மூணு வகைக் கூம்புன்னா, ஆடு மாடுகளுக்கு ரெண்டு வகைதான். இவங்களுக்குச் சிவப்பு நிறம் தெரியாது. அதனால மாட்டுக்கு சிவப்பு நிறத் துணி பிடிக்காதுன்னு சொல்லறது எல்லாம் கட்டுக்கதைதான். அதே மாதிரி நம்மளுக்கு ஆரஞ்சு நிறத்தில் தெரியும் புலி, மான் கண்ணுல பச்சையாகத் தெரியும், அதனால மானோட பார்வையில புலி காட்டுல இருக்கிற மரம் செடி கொடியோட ஒண்ணுக்குள்ள ஒண்ணாகிடுது. தண்ணீரில் இருக்கும் உயிரினங்கள் சிலதுக்கு ஒரு வகை கூம்புதான். அதுவும் கூட இல்லாத வௌவால் மாதியான உயிரினங்களும் உண்டு. இதுக்கு நேரெதிரா பறவைகளுக்கு நம்மை விட ஒரு வகை அதிகம் - நாலு வகைக் கூம்புகள் உண்டு. வண்ணத்துப்பூச்சிகளுக்கு ஆறு வகை. ஆனா இந்த விஷயத்தில் அடிச்சுக்கவே முடியாதது மேண்டிஸ் இறால் (Mantis Shrimp) என்ற இறால் வகைதான். இதுக்குப் பதினாறு வகைக் கூம்புகளாம். இவங்க பார்க்கிற உலகமே ரொம்ப வித்தியாசமா இருக்கும். 



மனிதன் பார்வையும் மான் பார்வையும்!



மயில் போல ஷ்ரிம்பு ஒண்ணு!


முதலில் சொன்ன மாதிரி நாம பார்க்கக் கூடிய நிறங்களின் அலைவெளி ஒரு குறிப்பிட்ட அளவுதான். இதைப் பார்க்கக்கூடிய அலைவிரியம்ன்னு (Visible Spectrum) சொல்லறாங்க. இதையும் தாண்டி புற ஊதா (Ultra Violet), அகச்சிவப்பு (Infra Red), மைக்ரோவேவ் (Microwave), காமா கதிர்கள் (Gamma Rays), ரேடியோ கதிர்கள் (Radio Waves), எக்ஸ்ரே (X-ray) கதிர்கள்ன்னு எவ்வளவோ இருக்கு. நம்மை விட அதிகக் கூம்புகள் கண்ணில் இருக்கும் உயிரினங்கள் சிலதால இந்த புற ஊதா, அகச்சிவப்புக் கதிர்களை எல்லாம் கூடப் பார்க்க முடியும். 


மின் காந்த நிறமாலையும் நாம் பார்க்கக்கூடிய அலைவிரியமும்


இதெல்லாம் போதாதுன்னு நம்ம மூளை வேற நடுவில் கோடிட்ட பகுதிகளை நிரப்பப் பார்க்கும். உதாரணத்துக்கு நாம ஒரு காட்சியைப் பார்த்தோமானால் அது நம்ம விழித்திரையில் விழுந்து அங்க இருந்து மூளைக்குப் போய், மூளை இதுதான் நாம பார்க்கறோமான்னு புரிஞ்சுக்கும். ஆனா விழித்திரையில பார்வை நரம்பு இருக்கிற இடம் இருட்டுச் சந்து. இந்த இடத்தில் ஒண்ணும் தெரியாது. நம்ம மூளை என்ன பண்ணும்ன்னா அதைச் சுத்தி இருக்கிற தகவல்களை வெச்சு இங்க என்ன இருக்குன்னு ஒரு முடிவு பண்ணி நாம பார்க்கிற காட்சியை முழுசா ஆக்கிடும். 


அப்படித்தான் வண்ணங்களிலும் விளையாடும். நாம பார்க்கக்கூடிய வண்ணங்களில் ஒரு எல்லையில் இருக்கும் ஊதாவும் மறு பக்கத்தில் இருக்கும் சிவப்பும் சேர்ந்து வந்தா, சம்பந்தமே இல்லாதா அலைவெளிகளா இருக்கேன்னு நினைச்சு எதோ கணக்குப் போட்டு ஒரு புதிய நிறத்தையே உண்டு பண்ணிடும். அதுதான் மஜந்தா. தமிழில் செந்நீலம்ன்னு சொல்லறாங்க. உண்மையில் இந்த நிறமே கிடையாது, இதை சாத்தியமில்லா (Impossible) நிறம் அப்படின்னு சொல்லறாங்க. 



செந்நீலம் என்னும் மாயை!

இவ்வளவு பார்த்தாச்சு. இப்போ சொல்லுங்க. நிறம்ன்னா என்ன? ஆப்பிள் என்ன நிறம்? நாம சிவப்புன்னு சொல்லுவோம். ஆனா ஆடு மாடுக்கு அது சிவப்பா தெரியுமா? வௌவாலுக்கு ஆப்பிள் என்ன சிவப்பாவா தெரியப்போவுது? இல்லை நிறக்குறைபாடு இருக்கிறவர் ஒருத்தர் பார்த்தாருன்னா அவருக்குச் சிவப்பா தெரியுமா? வாழ்க்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பார்த்தே இருக்காதவர் கிட்டப் போய் சிவப்பு நிறத்தை எப்படி விளக்கிச் சொல்ல முடியும்? ஆக நிறம் என்பதே நாம பார்க்கும் பார்வையில்தானே இருக்கு, இல்லையா? 


சரி, ஞானத்துக்கு வரலாம். ஞானம்ன்னா என்ன? உண்மையை உணர்ந்துக்கிறதுதான் ஞானம். அவ்வளவுதானே. ஆனா எது உண்மை? ஆப்பிள் சிவப்பு என்பது உண்மைதான். ஆனா அது மேலோட்டமான உண்மை. அதையே ஆப்பிளுக்கான நிறம் அதைப் பார்ப்பவரைப் பொறுத்ததுன்னு சொல்லிட்டோம்ன்னா அது ஞானம். அந்த ஞானம் சிலருக்கு வாழைப்பழம் மாதிரி எளிதா உரிக்கும்படியாக் கிடைக்குது. சிலருக்கு பலாப்பழம் மாதிரி கொஞ்சம் பழம் கிடைக்க கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியதா இருக்கு. அதனாலதான் அதை ஞானப்பழம்ன்னு சொல்லறோம். அப்படி நம்ம மனசுக்குள்ள இருக்கும் பார்க்கச் சாத்தியமில்லாத ஞானப்பழத்துக்கு சாத்தியமில்லாத நிறம்தானே பொருத்தம்? 


எனவே ஞானப்பழத்தின் நிறம் செந்நீலம்தான். 



பிகு: பதிவில் இருக்கும் படங்கள் எல்லாம் இணையத்தில் எடுக்கப்பட்டவை.


Tuesday, October 07, 2025

உடைத்துப் பார்!

 

‘Butter Fingers’ என்ற ஆங்கிலப் பதத்திற்கு உருவம் கொடுத்தால் அது என்னைப் போலத்தான் இருக்கும். சாப்பிடும் பொழுதும் சரி, குடிக்கும் பொழுதும் சரி, சிந்தாமல் சிதறாமல் உண்ணவோ குடிக்கவோ தெரியாது. எல்லாச் சட்டைகளிலும் கறை இருக்கும். கறை நல்லது எனச் சலவைத் தூள் விளம்பரம் போல நானும் நகரப் பார்ப்பேன் ஆனால் குடும்பத்தார் விட மாட்டார்கள்.
சமைக்கும் பொழுது எதையாவது கொட்டிவிடுவேன், அம்மணி கண்ணில் படுவதற்கு முன் துடைக்கலாம் எனத் துடைத்து வைத்தாலும் அவர் பார்வையில் ஒன்று துடைக்காமல் விட்ட இடம் படும் அல்லது அந்த ஒரு இடம் மட்டும் கொஞ்சம் சுத்தமாக இருப்பதைப் பார்த்து, “இன்னிக்கு என்னத்த கொட்டின?” என்று ‘அன்பாக’ விசாரிப்பார்கள்.
இப்படி எல்லாவற்றையுமே கொட்டுவதையும் உடைப்பதையும் ஒரு கலைவடிவமாகச் செய்யும் என் கையில் இருக்கும் தொலைபேசி நிலையை நினைத்துப் பாருங்கள். போ(ன்)ன ஜென்மத்தில் ரொம்பவே பாவம் பண்ணிய தொலைபேசிகள்தான் என்னிடம் வரும் என்று நினைக்கிறேன். சட்டைப்பையில் வைத்தால் கீழே விழும், பேண்ட் பாக்கெட்டில் இருந்து கீழே விழும், பேசிக் கொண்டே இருக்கும் பொழுது கை நழுவிக் கீழே விழும். அவ்வளவு ஏன் மேஜையில் வைத்திருக்கும் பொழுது கூட என் பார்வை பட்டால் கீழே விழுந்துவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
எனக்குச் சவால்விடும் வகையில் ஆப்பிள்காரனும் கொரில்லாக் கண்ணாடி, பீங்கான் கவசம் என விதவிதமான வலிமையும் பாதுகாப்பும் கொண்ட திரைகளைக் கொண்டு வந்தாலும், என் சக்திக்கு முன்னால் அவர்கள் முயற்சிகள் எல்லாம் பொடிப்பொடியாக உதிர்ந்துவிடும். என் தொலைபேசித் திரைகளைப் போலவே. அவர்களுக்குத் துணையாக ஆட்டர்பாக்ஸ், பெலிக்கன் என்றெல்லாம் பெயர்கொண்ட தொலைபேசி உறைகள் சந்தையில் வரத் தொடங்கின. முதலில் வாங்கிய உறைகள் எல்லாம் அவ்வளவு வலிமை இல்லாதவை. இரண்டு மூன்று முறை கீழே விழுந்தாலே விரிசல் விடத் தொடங்கிவிடும். அதன்பின் திரையில் சிலந்திவலை போல் அழகான வடிவங்கள் தோன்ற அதிக நாட்களாகாது.
அவர்களும் சளைக்காமல் இது குண்டு துளைக்காத பொருட்களைக் கொண்டு செய்யப்பட்டது, இது ராணுவத் தரத்திற்கு செய்யப்பட்டது, இது பத்தடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் கூட தொலைபேசியைப் பாதுகாக்கும் என்றெல்லாம் அவர்களால் முடிந்ததைக் கொண்டு வந்தார்கள். நானும் சளைக்காமல் அவற்றை வாங்கி தொலைபேசிக்கு அணிவிப்பேன். புவியீர்ப்பும் சளைக்காமல் அதன் வேலையைச் செய்யும். புதுத் தொலைபேசி, புதிய உறை என்று காலச்சக்கரம் சளைக்காமல் சுழன்று கொண்டே இருக்கும்.
கடந்த முறை வாங்கிய உறை ரொம்பவே விசேஷமானது. தொலைபேசி விலையை நெருங்கும் அளவு விலை. இருபத்தி ஐந்து அடியில் இருந்து விழுந்தால் கூட உடையாது, இரும்பை விட உறுதியான ஆரமிட் இழைகளால் நெய்யப்பட்டது, இரண்டு படிம வடிவமைப்பு என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்பட்ட உறை. ஆஹா, நம்முடைய நல்லூழ்தான் இப்படியோர் உறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என மகிழ்ந்து உறையை வாங்கி தொலைபேசிக்கு மாட்டியாகிவிட்டது.
அவர்கள் கூறியது எல்லாம் உண்மைதான் என்று நிரூபிக்கவும் தருணம் வாய்த்தது. வழக்கம் போல தொலைபேசியைக் கீழே போட்டேன். என்ன ஆச்சரியம், தொலைபேசித் திரை உடையவில்லை. அது மட்டுமில்லை, இந்த உறையில் ஒரு சிறிய சிராய்ப்பு கூட இல்லை. சபாஷ், வல்லவனுக்கு வல்லவன் இந்த வையத்தில் உண்டு என நிரூபித்து விட்டார்களடா என மனம் மகிழ்ந்தேன். கீழே விழுந்ததே என்று தொலைபேசியைத் துடைக்க உறையைக் கழட்டினேன். இந்தப் புதிய வகைத் தொலைபேசியில் முன்பக்கம் மட்டுமல்ல பின்பக்கமும் கண்ணாடியால் செய்யப்பட்டது. உறைக்கு ஒன்றுமாகவில்லை என்றாலும் உள்ளிருந்த தொலைபேசியின் பின்பக்கக் கண்ணாடி மட்டும் எப்படியோ உடைந்து சுக்குநூறாகி இருந்தது. எப்படித்தான் இப்படி உடைக்கிறாயோ என்று அம்மணியின் ஆசிர்வாதமும் கிடைத்தது.


தொலைபேசியும் உறையும் வாங்கியே சேமிக்கும் அனைத்தையும் செலவு செய்துவிடுவாய் என்று அவர் சொல்லும் பொழுதுதான் ஒரு முடிவு செய்தேன். என்னை மாதிரி எத்தனை பேர் உலகத்தில் இருப்பார்கள். அதனால் இனி தொலைபேசி வாங்குகிறோமோ இல்லையோ ஆப்பிள் கம்பெனி பங்குகளை வாங்கி வைக்க வேண்டும் என்பதே அந்த முடிவு!
பிகு: நீங்கள் எதையாவது போட்டு உடைத்த அனுபவத்தை இங்கு போட்டு உடையுங்கள் என்ற தலைப்புக்காக எழுதியது.
பிபிகு: மீனாட்சி அம்மாளின் சமைத்துப் பார் என்ற புத்தகத் தலைப்பு நினைவுக்கு வந்ததால், இந்தக் கட்டுரைக்கு அப்படி ஒரு தலைப்பு.

Monday, October 06, 2025

Paperback Version!

 

There is something magical about holding a book in your hands. Running your fingers over the cover, flipping through the pages, pausing at a random line, even breathing in that new book smell— it never gets old. And when the book happens to be one that you have written, the feeling is on a whole different level.
My book on Peru, Perambulating in Peru, has lived as an ebook for more than a year now. For the longest time, I never thought of turning it into a paperback. But these past few weeks I found myself returning to it—polishing the text, working on a layout that would feel good in print, and even adding QR codes that connect to the online albums. And the images in those albums are in addition to the 100+ photos featured in the book itself.
KDP provided detailed specifications and was quite particular about formatting. The cover design took the most effort, and I owe a big thank you to my brother, Hariharan Sankaran, who patiently sent me draft after draft until I was happy and KDP gave its approval.





After a couple of proof rounds, the final version finally made it through. And today, I opened a box to see the first set of printed copies. It felt wonderful to hold them, to see the book come alive on paper.

Along the way, I have picked up so many lessons that are already helping me with the Spanish and Portuguese editions. What makes it even more special is that the Spanish version has been translated by someone from Lima, Peru, and the Portuguese edition is being edited there as well. Their kind feedback feels like a true validation of what I have written. I will share more as those versions get closer to release.
For now, I should mention that Amazon’s print-on-demand is not yet available in India, but the paperback can be ordered in the US, UK, and several other countries. For those who were waiting for it in print, I have added the link in the comments.
The ebook and audiobook formats are available in India and other countries.

Saturday, September 27, 2025

பண்ணேன் உனக்கான பூசை!

ஒரு மூதாட்டி கடவுளைத் தொழும் இந்தப் படத்தினை நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.



இந்தப் படத்தைப் பார்த்த உடனே பாவெழுதத் தோன்றியது. எழுதினேன். 

வேதங்கள் போற்றிடும் வேள்வியின் நாயகியுன்
பாதங்கள் பற்றிடயிப் பாவிக்குப் பேறில்லை
நீயே கதியென நிற்கிறேன் கைதூக்கித்
தாயே அருளெனக்குத் தா!


இந்த வெண்பாவினைப் படித்த உறவினர் ஒருவர் ஏண்டா இப்படி எல்லாம் பாட்டு எழுதற ஆனா கோயிலுக்குப் போய் சாமி கும்பிட மட்டும் உனக்கு ஏன் வர மாட்டேங்குதுன்னு கேட்டுட்டார். 


இந்தக் கேள்விக்கு நான் யோசித்து எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா? அதான் தாயுமானவர் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டாரே. அந்தப் பாடலை எடுத்து பதம் பிரித்து அனுப்பினேன். 


பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே

பாவித்து இறைஞ்ச ஆங்கே 

பார்க்கின்ற மலர் ஊடு நீயே இருத்தி அப்

பனிமலர் எடுக்க மனமும் 

நண்ணேன் அலாமல் இருகைதான் குவிக்க எனின்

நாணும் என் உளம் நிற்றி நீ

நான் கும்பிடும் போது அரைக் கும்பிடு ஆதலால் 

நான் பூசை செய்யல் முறையோ? 

விண்ணே! விண் ஆதியாம் பூதமே! நாதமே! 

வேதமே! வேதாந்தமே! 

மேதக்க கேள்வியே! கேள்வியாம் பூமிக்குள் 

வித்தே! அவ்வித்தின் முளையே! 

கண்ணே! கருத்தே! என் எண்ணே! எழுத்தே! 

கதிக்கான மோன வடிவே! 

கருதரிய சித் சபையில் ஆனந்த நர்த்தமிடும்

கருணாகரக் கடவுளே! 


எளிமையான பாடலாக இருந்தாலும் பாடலை அனுப்பினால் விளக்கமும் சொல்ல வேண்டுமல்லவா. 


தாயுமானவர் சொல்கிறார், “நான் ஒரு வடிவமாக உன்னைக் கொண்டு அந்த வடிவத்திற்குப் பூஜை செய்யலாம் என நினைத்து அதிகாலை வேளையிலே பனி சொட்டிக் கொண்டு இருக்கும் மலரைப் பறிக்கச் சென்றேன். அப்படி அழகாகப் பூத்திருக்கும் மலர்களைப் பார்க்கும் பொழுது அப்பூக்களிலும் நீதானே இருக்கிறாய் என நினைத்தேன். அப்படி நீ இருக்கும் பூக்களை எப்படிப் பறிக்க நினைத்தேன் என எண்ணி வெட்கப்பட்டேன். அந்த மலர்களைப் பறிக்காமலேயே வந்துவிட்டேன். மலர்கள் இல்லாமல் எப்படிப் பூஜை செய்ய? உனக்குப் பூஜையே பண்ண மாட்டேன். 


சரி, பூஜை செய்யவில்லை. குறைந்தபட்சம் என்னோட இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிடலாம்ன்னு பார்த்தேன். அப்படிக் கும்பிடும் பொழுது நீயும் நானும் வேறு வேறு என்பதாகி, வெளியில் இருக்கும் உன்னை நான் கும்பிடுவது போல ஒரு தோற்றம் வருகிறதே. அப்படிச் செய்யும் பொழுது என்னுள் இருக்கும் உன்னை நான் கும்பிடவில்லையே. அப்படி என்றால் என்னுடைய கும்பிடுதல் பாதி ஆகி விடுகிறதோ? அரைக்கும்பிடுதான் போடுகிறேனோ என்ற கேள்வி வருகிறதே. இப்படி எல்லாம் பூஜை செய்வதுதான் சரியான வழியோ என்று குழம்பி நிற்கிறேன்”. 


ஒரு விதத்தில் பார்த்தால் உருவ வழிபாடு, அதன் பின் அருவ வழிபாடு என வழிபாட்டு நிலைகளைச் சொல்லும் விதமாகவே இப்பாடல் இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் என்னும் மெய்ஞானத்தைத் தேடிச் சென்றால் நற்கதி கிட்டும் என்பதைத் தாயுமானவர் கடவுளை எப்படி எல்லாம், எங்கெல்லாம் பார்க்கிறேன் எனப் பட்டியல் இடுகிறார். 


ஆகாயம் முழுவது வியாபித்து இருப்பவனே, அந்த ஆகாயம் முதலான ஐம்பூதங்களாக இருப்பவனே, அந்த ஐம்பூதங்களோடு இருக்கும் ஒலியும்  ஒளியுமாக இருப்பவனே, வேதம் எனப்படும் உண்மையாக இருப்பவனே, அந்த வேதங்களின் சாரமாக இருப்பவனே, மேலானவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டிய கேள்வியாக இருப்பவனே, அந்தக் கேள்விகளே நிலமாகி அந்நிலத்தில் விதைக்கப்படும் விதையாக இருப்பவனே, கேள்வி என்னும் விதை முளைத்து வரும் விடையாக இருப்பவனே, அந்த விடையாக வரும் எண்ணாகவும் எழுத்தாகவும் இருப்பவனே, எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என சொல்வதால் அந்த எண்ணும் எழுத்தும் தரும் கல்வியாக இருப்பவனே, அந்தக் கல்வி தரும் பொருளாக இருப்பவனே, அதை எல்லாம் தாண்டி நற்கதி வேண்டுமானால் சும்மா இருக்கச் சொல்லும் மோன வடிவாக இருப்பவனே, நினைப்பதற்கு அரிதாக இருக்கும் சித்சபையில் ஆனந்த நடனமாடும் கருணாகரக் கடவுளே என்று கடவுளை அடைய இருக்கும் பல நிலைகளையும் சொல்கிறார்.


அருணகிரி நாதரும் நாத பிந்து கலாதி நமோ நம என அண்டத்தின் ஒலியும் ஒளியுமாக முருகப் பெருமானைச் சொல்லியதையும் அவருக்கு சும்மா இரு சொல்லற என பேச்சினை விடுத்து மனத்தில் இருக்கும் மெய்ஞானத்தை உணரச் சொல்லும் அறிவுரை கிடைத்ததையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம். 


நான் தாயுமானவர் சொல்லும் நிலைகளை அடைந்துவிட்டதால் கோயில் செல்வதில்லை எனச் சொல்ல வரவில்லை, அப்படிச் சென்று பூஜை செய்யத்தான் வேண்டுமா என்ற கேள்வி எனக்கு இருக்கிறது என்பதைத்தான் சொல்ல நினைத்தேன். மேலான பொருளை மட்டுமே சொல்லி இருக்கிறேன். இப்பாடலில் இருக்கும் படிமங்களை எனக்குத் தெரிந்த வரைச் சொல்லத் தொடங்கினால் பதிவு நீண்டுவிடும் என்பதால் நேரடியான பொருளோடு நிறுத்திக் கொள்கிறேன். 


இந்தப் பாட்டு, கருணாகரப் பதிகம் என்ற பத்து பாட்டுகள் கொண்ட தொகுப்பில் உள்ளது. எல்லா பாட்டுமே கருதரிய சித்சபையில் ஆனந்த நர்த்தமிடும் கருணாகரக் கடவுளே என முடியும் படி எழுதி இருக்கிறார் தாயுமானவர். இப்பதிகம் பாடப் பெற்றதே ஒரு சுவாரசியமான சம்பவம். தாயுமானவர் திருச்சியில் விஜயரங்கச் சொக்கநாத நாயக்கர் என்ற அரசரிடம் பணிபுரிந்து வந்தார். அந்த அரசரின் மறைவுக்குப் பின் ஆட்சி அவரது துணைவி அரசமாதேவி மீனாட்சியின் கைகளுக்கு வந்தது. அவர் தாயுமானவரின் அழகில் மயங்கி அவரைத் தகாத உறவுக்கு அழைத்தார். அதனை மறுத்த தாயுமானவர் திருச்சியை விட்டு வெளியேறி தென் திசை சென்றார். நல்லூர் என்ற இடத்தை அடைந்த பொழுது இப்பதிகத்தைப் பாடினார். 


நேரடியாகப் பார்த்தால் சிவபெருமானைக் குறித்துப் பாடியதாகத் தோன்றினாலும், சிவனும் நீயே, விஷ்ணுவும் நீயே, பிரம்மனும் நீயே, தட்சிணாமூர்த்தியும் நீயே என்று எல்லாம் பாடும் பொழுது அவர் மோனநிலை அடைந்து பொதுவான கருணை மிகுந்த கடவுளைப் பற்றிப் பாடியதாகவே கொள்ளலாம். 


இப்பாடல் கர்நாடக இசையில் விருத்தம் என்ற பாணியில் கச்சேரிகளில் பலரும் பாடி வரும் ஒன்று. 


கானகலாதர  மதுரை மணி ஐயர் குரலில் இந்தப் பாடலைக் கேட்க - 

https://youtu.be/1idznq1ADxc?si=fZ1bDzYKwBbBVmDc 


இளம் பாடகர் நண்பர் பரத் சுந்தர் பாடியது - 

https://youtu.be/m054dq9gQoU?si=-L6EOivKBw8XLAoT&t=1114 


என் ஆதர்ச பாடகர் டிஎம் கிருஷ்ணா பாடியது - https://youtu.be/j6gRDrvZGWk?si=RjRPram1pRGS9LQw