Friday, October 01, 2010

தமிழ் பேப்பரில் கொத்தனார் நோட்ஸ்!

சமீபத்தில் எட்டாம் வகுப்பு தமிழ் இலக்கணப் புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தது. நான் பள்ளியில் படிக்கும் பொழுது தமிழ் வேப்பங்காயாகக் கசந்ததிற்கான காரணம் தெள்ளத்தெளிவாகப் புரிந்தது. அன்றைக்கு இருந்த புத்தகம் ஒரு மாற்றமும் இன்றி இன்றைக்கும் அப்படியே இருக்கிறது. ஒரு சேம்பிள்

தனிக் குறிலை அடுத்து வரும் மெய்யெழுத்தை ஈற்றில்கொண்ட சொற்களின்முன் வருமொழி முதலில் உள்ள உயிர் வந்து புணரும்பொழுது நிலைமொழி ஈற்றுமெய் இரட்டித்து இரட்டித்த அந்த மெய்யுடன் உயிர் சேர்ந்து, உயிர்மெய்யாகி புணர்ந்து ஒலிக்கும்.

இப்படி திவச மந்திரம் போல் எழுதி இருந்தால் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்தை எப்படி கவரும்? அவர்களுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம்தான் எப்படி வரும்? படிக்கும் காலத்தில்தான் கோட்டை விட்டுவிட்டோம் இப்பொழுதாவது படித்துப் புரிந்து கொள்ளலாமே என்ற ஒரு ஆர்வத்தில் படிக்கத் தொடங்கினேன். தேர்வெழுத வேண்டாம் என்ற நினைப்பு மேலும் தெம்பைத் தந்தது.

பாராவிடம் இது பற்றி சொல்லி அங்கலாய்த்துக் கொண்டிருந்த பொழுது, “குறை சொல்வதை விடுத்து இதனை எளிமையாக எழுதிப் பாருமே” என்றார். ஒரு சிறிய முயற்சி செய்து காண்பித்த பொழுது, நன்றாக வந்திருக்கிறது எனச் சொல்லி ஊக்குவித்தார். சில திருத்தங்களையும் சொன்னார். அவர் சொன்னதின் பெயரில் எனக்குப் புரிந்தவற்றை தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணம்.

இன்று வெளியாகி இருக்கும் தமிழ் பேப்பர் இணைய இதழில் ஒரு தொடராக எழுத ஆரம்பித்திருக்கிறேன். படித்து கருத்தைச் சொல்லுங்கள்.

1 comments:

said...

இப்படி திவச மந்திரம் போல் எழுதி இருந்தால் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்தை எப்படி கவரும்? //
:-))))
ஏஞ்சாமி இப்பல்லாம் இங்க வந்தா அங்கிட்டு போ, இங்கிட்டு போங்கிறீரு?