Sunday, May 16, 2021

மொழி குறித்து...

கடந்த சில தினங்களில் புதிய எழுத்தாளர்கள் பலர் எழுதிய சிறுகதைகளைப் படித்தேன். இவற்றில் சில பரிசு பெற்ற கதைகளும் கூட. படித்த பின் மிஞ்சியது வருத்தமே.

ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்கான கருவி இருப்பது போல் எழுத்துக்கான கருவி மொழி. ஆனால் மொழியை அறிந்து, அது கை கூடி, அதில் தேர்ச்சி பெற்று அதை நன்றாகப் பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்பே இல்லாமல் ஆகிவிட்டது.
ஒருவர் விடாமல் அனைவரின் கதைகளிலும் அத்தனை எழுத்துப் பிழைகள். அத்தனை இலக்கணப் பிழைகள். அத்தனை தேவையற்ற ஆங்கிலக் கலப்பு. இங்கு சொல்லப் போகும் உதாரணங்கள் நான் பல முறை சொன்னவையே. மீண்டும் மீண்டும் அத்தனை பேரும் அவற்றை தொடர்ந்து எழுதுவதால் அவை சரிதான் என்றே நிறுவப்படுமோ எனக் கவலையாகத்தான் இருக்கிறது.
முக்கியமாகச் சொல்லப்பட வேண்டியவை - முயற்சித்து, அருகாமை, எண்ணெய் ஆகிய சொற்கள். இந்தப் புதியவர்கள் மட்டுமல்லாமல் முன்னணி எழுத்தாளர்களும் இவற்றைக் கையாள்வதைப் பார்க்கிறோம்.
முயல் என்பதில் இருந்து வருபவை முயல்வது, முயல்வேன், முயல்கிறேன், முயன்றேன், முயற்சி என்பது போன்ற சொற்கள். இதிலிருந்து முயற்சியை எடுத்துக்கொண்டு முயற்சிப்பேன், முயற்சிக்கிறேன் என்று எழுதுவது அபத்தம். பயிற்சிக்கிறேன், தளர்சிக்கிறேன் என்று எழுதுவது தவறாகத்தானே படுகிறது. அது போலத்தானே முயற்சிக்கிறேன் என்பதும்.
அருகில் இருக்கிறேன் என்பதை அருகாமையில் இருக்கிறேன் என்று எழுதினால் இலக்கியத்தரம் என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அருகாமை என்பது அருகிப் போகாதது என்ற பொருளைத் தருமே அன்றி அருகில் என்ற பொருளைத் தரவே தராது. அருகில், அண்மையில் என்று எழுதுவதே சரி.
நெய் என்பது வேர்ச்சொல். எள்ளில் இருந்து எடுக்கப்படும் நெய் எள்நெய். அது எண்ணெய் என்றானது. அது பொதுப்பெயராகவும் ஆனது. எனவே தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் என வழங்கத் தொடங்கிவிட்டோம். ஆனால் இதை எண்ணை என்று எழுதுவது சரியா? எண்ணை எடு என்றால் ஒன்றை எடுக்கவா இரண்டை எடுக்கவா என எண்களில் ஒன்றை எடுக்கச் சொல்வது போல இருக்கிறது. எண்ணெய்யில் இருந்து எண்ணெய்யால் செய்து என எழுத வேண்டாமா? ஆசான் ஜெயமோகனும் கூட இன்று வரை எண்ணெய் என்பதை எண்ணை என்றுதான் எழுதுகிறார்.
தொடர்ந்து பார்க்கக்கூடிய மற்றொரு தவறு ஒருமை பன்மை குறித்தது. ஒருமையில் ஆரம்பிக்கும் வரி பன்மையில் முடிகிறது. பன்மையில் ஆரம்பித்தால் ஒருமையில் முடிகிறது. ஒவ்வொரு விரல்களிலும் என்று எழுதுகிறார்கள். படிக்கும் பொழுதே சரியாக இல்லையே என்று தோன்றாதா?
அது என்பது ஒருமை. இதன் பன்மை அவை. அது போல இது ஒருமை. இவை பன்மை. ஆனால் அவைகள் இவைகள் என எழுதுகிறார்கள். அவற்றை, இவற்றை எனச் சொல்ல வேண்டியவைகளை அவைகளை இவைகளை என்கிறார்கள்.
எழுத்துப்பிழைகள் என்று பார்க்கத் தொடங்கினால் ர / ற, ந / ன / ண, ல / ள / ழ இடையே உள்ள வேற்றுமைகளை உணர்ந்து கொள்வதே இல்லை. பட்டியலிடத் தொடங்கினால் முடிவே இல்லாது போகும். வலி மிகும் மிகா இடங்கள் பற்றிய நினைப்பே இல்லை. ஒன்றே ஒன்றைச் சொல்கிறேன். ஞாபகம் என்பதை நியாபகம் என எழுத வேண்டாமே.
தேவையற்ற ஆங்கிலக் கலப்பு மற்றுமொரு குறை. ஆங்கிலச் சொல் ஒன்றை எழுதிப் பின் பண்ணு என்பது ஒரு வழக்காகவே ஆகிவிட்டது. வெயிட் பண்ணு, குக் பண்ணு, ரீச் பண்ணு, பே பண்ணு என்று ஒரு பண்ணு தமிழ் உருவாகி இருக்கிறது. எழுதிய பின் எங்கெல்லாம் பண்ணு என எழுதி இருக்கிறோம் எனப்பார்த்து அங்கெல்லாம் சரியான தமிழ்ச்சொல்லை எழுதுவது கடினமான வேலை இல்லை.
எழுதியதைப் படித்தால் பிழைகள் கண்ணில் படும். சரி செய்யலாம். ஆனால் எழுதி அதை பிரசுரிப்பதில் இருக்கும் ஆர்வம் படிப்பதில் இல்லை. நல்ல எழுத்தாளர்களைப் படித்தால் எழுத்து மேம்படும். எழுதுபவர்களில் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது கேள்வியே.
புற்றீசலாய் வரும் இணையப் பத்திரிகைகளில் வருவதைப் போடலாம் என்று இருக்கிறார்களே தவிர படித்தேனும் பார்க்கிறார்களா எனத் தெரியவில்லை. இப்படிப்பட்ட பிழைகளைக் களைந்து பிரசுரம் செய்யலாமே என்ற எண்ணமே இல்லை. இதனாலேயே இணையப் பத்திரிகைகளில் எழுதுவதில்லை என்று சொல்லிவிட்டே நிறுத்தி இருக்கிறேன். தரம் பற்றிய கவலை யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அச்சு பத்திரிகைகளின் லட்சணத்தைச் சொல்லவே வேண்டாம்.
எழுத வருபவர்களுக்குச் சொல்ல ஆசைப்படுவது இதுதான். பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்று முயற்சி செய்யுங்கள். எழுதியதைப் படித்துப் படித்து மேம்படுத்துங்கள். நல்ல எழுத்துகளைத் தேடிப்படியுங்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அதனைக் கேட்டு மீண்டும் அவற்றையே செய்யாதிருக்கப் பாருங்கள். மொழி உங்களுக்கான கருவி. அதனைத் திறம்படக் கையாளப் பழகுங்கள்.
வாழ்த்துகள்! நன்றி.

1 comments:

said...

பள்ளியில் இருக்கும்வரை கணிதம், இயற்பியல், வேதியியல் மட்டும்தான் படிக்கச்சொல்லி ஆசிரியர் முதல் பெற்றோர் வரை வலியுறுத்துகின்றனர். பின்னர் ஏதோ பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பின் ஆங்கிலம் தவிர மொழிப்பாடமே கிடையாது. பொறியியலும் ஒழுங்காகப் படிப்பதில்லை. தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர வக்கில்லாமல் யூடியூப் அலைவரிசை, தொலைக்காட்சி, திரைத்துறை என்று எங்காவது ஒதுங்குகிறார்கள். பிறகு எங்கிருந்து தமிழறிவு இருக்கும் ?

யூடியூப் பெருந்தலைகள் (பரிதாபம், மரத்துக்குப்பின்னால் (அதான் behindwoods), கருப்புஆடு (blacksheep)) எல்லாம் பொறியியல் படித்தவர்கள்தான். சிவகார்த்திகேயன், Jeயம் ரவி, கார்த்தி என நடிகர்கள் எல்லாம் பொறியியல் படித்தவர்கள். கலை ஆர்வம் உள்ளவர்களையும் கூட கலைப்படிப்புகள் படிக்க விடாமல் பொறியியல் பின்னால் ஓட வைத்த நம் சமூகம் இதனைத் தாங்கித்தான் ஆக வேண்டும்.

ஆனால் நான் பெரிதாக இது குறித்து கவலைப்படவில்லை. தொழில்நுட்பம் நம்மைக் காக்கும். இன்னும் சில ஆண்டுகளுக்குள் grammarly போன்ற நிறுவனங்கள் தமிழ் இலக்கணத்தை, சொற்றொடர் அமைப்பை, எழுத்து முறையை மாற்றி அமைக்கும். auto-complete என்ன சொல்கிறதோ அதையே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு உலகின் எல்லா மொழி எழுத்தாளர்களும் தள்ளப்படுவர். இப்போதே கூட மின்னஞ்சலில் கூகிள் AI என்ன பதில் சொல்கிறதோ, அதையே பதிலாக அனுப்ப ஆரம்பித்து விட்டனர் மக்கள். தானாக சிந்திப்பதில்லை. போலவே எழுத்தாளர்களும் மாறி விடுவர்.