இருந்தாலும் அவரு கேட்ட கேள்வி நம்ம மனசுலையே சுத்திக்கிட்டு இருந்தது. அவருகிட்ட அழகுன்னா என்னன்னு சொல்லிட்டோம். அதன் படி அழகுன்னா நாம என்ன நினைக்கிறோம், அடுத்தவங்க என்ன நினைக்கறாங்கன்னு ஒரு நினைப்பு இருந்துக்கிட்டே இருந்தது. தன் பயித்தியக்காரத்தனம் என்னென்னன்னு லிஸ்ட் போட்ட மக்கள், தங்கள் பார்வையில் எது அழகுன்னு சொல்லாமலேயா இருக்கப் போறாங்க அப்படின்னு தோணுனதுனாலதான் இந்தப் பதிவு. இது வெறும் பதிவு மட்டும் இல்லைங்க. இது அடுத்த தொடர் விளையாட்டின் ஆரம்பம். அந்த தொடர்
அழகுகள் ஆறு!
அதாவதுங்க, அழகுன்னா ஐஸ்வர்யா ராய் என்ற அளவோட நிக்காம நம்ம பார்வையில் அழகான முகம், இடம், நிகழ்வு, குறும்பு, பரிசு என நீங்கள் அனுபவித்த அழகு ஐந்தையும் எந்த அழகான விஷயம் உங்களுக்குக் கிடைக்கவில்லை அல்லது விரும்புகிறீர்கள் என்பதையும் சேர்த்து ஆறு விஷயங்களைப் பத்திச் சொல்லலாமே. பதிவு, பின்னூட்டம் எல்லாம் சொல்லி இருக்கலாம், ஆனா ஏற்கனவே நம்ம பேர் ரிப்பேர் ஆகிக் கிடக்கிற இந்த நேரத்தில் அதெல்லாம் கேட்டு சொ.செ.சூ வெச்சுக்க வேண்டாமேன்னு அதை எல்லாம் சாய்ஸில் விட்டாச்சு. சரி, இந்த ஆறு அழகுகள் பற்றி நீங்கள் எழுத வேண்டும். எழுதிய பின் உங்களுக்குப் பிடித்த மூவரை கூப்பிட்டு எழுதச் சொல்ல வேண்டும். இதுதான் அழகுகள் ஆறு விளையாட்டு. விளையாடறவங்க எல்லாரும் "அழகுகள் ஆறு " என்றே தமிழ்மணத்தில் குறிச்சொல் தந்தால் தேடிப் படிக்க எளிதாக இருக்கும்.
சரி. ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா. முதலில் என்னோட ஆறு அழகுகள்.
1. முகம்
அழகான முகம் அப்படின்னு சொல்லும் போது உடனே மனதில் பல முகங்கள் வந்து போகின்றன. சில நேரங்களில் சில முகங்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகு. ஹேர்கட் பண்ணிவிட்டு வீட்டுக்குப் போகும் பொழுது கடை வாயில்களில் இருக்கும் கண்ணடிக் கதவில் நம் முகத்தைப் பார்த்துக் கொள்வது, மேனேஜரிடம் சண்டை போட்டுவிட்டு வந்து நம் இருக்கையில் அமரும் பொழுது மேஜையில் இருக்கும் நம் குடும்பத்தாரின் முகம், சமீபத்தில் வாழ்நாள் விருது வாங்கிய என்றும் இளமையோடு இருக்கும் ரேகாவின் முகம், தேவர் மகன் படத்தின் பாதியில் சிகையலங்காரம் மாற்றி, தாடி எடுத்துப் பெரிய மீசையுடன் வந்து நம்மை ஆவெனப் பார்க்கச் செய்த கமல் முகம் என்று முகங்கள் பல இருந்தாலும், இத்தனை முகங்களுக்கு நடுவே ஒரு முகம் கொஞ்சம் அதிக அழகாக இருக்கும். அது உன்னுடன் முதல் வகுப்பில் அமர்ந்த முதல் நண்பியாக இருக்கலாம், கன்றுக் குட்டிக் காதல் வந்த அந்தப் பெண்ணாக இருக்கலாம் அல்லது உடன்பிறவா சகோதரியான பக்கத்து வீட்டு பத்மா அக்காவாக இருக்கலாம். அது போல் ஒரு முகம் எனக்குள்ளும் இருக்கிறது. அது எனக்கு மட்டுமேவாக இருந்துவிட்டுப் போகட்டுமே!
2. இடம்
இடத்திற்கும் பஞ்சமில்லை. எத்தனையோ இடங்கள். சலசலவென ஓடும் தாமிரபரணி ஆற்றின் நடுவே இருக்கும் பாறை, சிருங்கேரியில் துங்கா நதியில் காலை நனைத்தவாறு அமர்ந்திருக்கும் படித்துறை, நயாகரா நீர்வீழ்ச்சியில் நம் மீது தண்ணீர் விழும்படி நிற்க முடிந்த Cave of the winds, பிராத்தனா ட்ரைவ் இன் தியேட்டர், அமைதியான கோயில் பிரகாரங்கள் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். இவைகளுக்கு எல்லாம் மேல் எனக்கு அழகான ஒரு இடம் நான் வசித்த ஒரு வீட்டில் மா மரத்தின் கீழே இருந்த துணி தோய்க்கும் கல்தான். அதன் கீழ் அமர்ந்து சந்தோஷப் பட்ட, துக்கப்பட்ட, என்னை நானே கேள்விகள் பல கேட்டுக் கொண்ட தருணங்கள் பல. இன்று அந்த வீடும் இல்லை அந்த கல்லும் இல்லை. இருப்பதெல்லாம் வெறும் நினைவுகள்தான்.
3. நிகழ்வு
இதுக்கு ரொம்ப போட்டி இல்லைங்க. என் மகன் பிறந்து சில நிமிடங்களுக்குப் பின்னால் அழகாக ஒரு துணியில் சுற்றப்பட்டு நம்ம கையில் தரப்பட்டான் பாருங்க. உண்மையில் அந்த தருணத்துக்கு ஈடே இல்லைன்னு நினைக்கிறேன். நான் ஒரு தந்தை என்ற உணர்வாகட்டும், குழந்தையின் முகமாகட்டும், அவன் மீது நம் விரல் பட்ட ஸ்பரிசமாகட்டும், அதாங்க அழகு! இன்னும் சிலரைக் கேட்டா முதலில் சொன்ன முகத்தைப் பார்க்கும் ஒவ்வொரு சமயமுமே அவங்களுக்கு அழகுதான்னு சொல்லுவாங்க. இல்லைன்னா சொல்ல முடியும்!
4. குறும்பு
நான் சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு போன் வந்தது. அந்தக் குரல் அமெரிக்காவில் இருக்கும் என் நண்பியின் (உறவும் கூடத்தான் ஆனால் உறவுக்கெல்லாம் மேல் நட்புதான்!) குரலைப் போலவே இருந்தது. உடனே உற்சாகத்தில் நானும் பேச ஆரம்பித்து விட்டேன். கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலும் வந்து கொண்டிருந்தது. ஒரு அரை மணி நேரத்திற்கு பின்னால்தான் ஒரு கேள்விக்கு சொதப்பலாய் பதில் வர நான் பேசுவது வேறு யாருடனோ எனத் தெரிய வந்தது. உண்மையிலேயே அது ராங் நம்பர். அப்புறம் அவர்களோடு அடிக்கடி போனில் பேசுவது உண்டு. சென்னையில் இருந்த வரை நல்ல நண்பர்களாக இருந்த நாங்கள் பார்த்துக் கொண்டதே கிடையாது. சென்னை விட்டு வந்த பின் தொடர்பு விட்டுப் போனது. இன்று இணையத்தில் முகம் பார்த்திராமல் இத்தனை நண்பர்கள் இருந்தாலும் அன்றே அப்படி ஒரு நட்பு கிடைத்ததற்குக் காரணம், ராங் நம்பர் என்று சொல்லி பேச்சை நிறுத்திடாமல் வளர்த்த அவர்களின் குறும்புதானே! (நான் செய்த குறும்பைச் சொல்லி சொ.செ.சூ வைத்துக் கொள்வேன் என்று நினைத்தவர்களுக்கு என் அனுதாபங்கள்!!)
5. பரிசு
இதுவும் எவ்வளவு வேணாலும் எழுதற மேட்டர். பரிசு கிடைக்கிறது சின்னவங்களா இருந்தாலும் சரி, பெரியவங்களா இருந்தாலும் சரி, மனதில் ஒரு சந்தோஷம் வரது ஒரு இயற்கையான விஷயம்தான். இதைப் பத்தி சொல்லணுமுன்னா படிச்சப்போ வாங்கின பரிசுகள், குடும்பத்தார் தந்த பரிசுகள், மணமாகும் முன், மணமான பின் அப்படின்னு ஆரம்பிக்கலாம். தங்கமணியைக் கேட்டா நான் அவங்களுக்குன்னு செஞ்ச பிரத்யேகமான வாழ்த்து அட்டையைச் சொல்லலாம். (ஒரு காலத்தில் விளம்பரத் துறையிலும் இருந்தோமில்ல. நண்பர் ஒருவரின் கம்பெனி மூலம் நம்ம ஐடியா, கோவையில் விளம்பரப் பலகையா ஜொலிச்சு இருக்கு!) இல்லைன்னா எதிர்பாராத நேரத்தில் பையன் தரும் முத்தத்தைச் சொல்லலாம். எல்லாமே பரிசுதான். ஆனா வாழ்க்கையில் சில நட்புகள் அமையறதுதாங்க இருக்கிறதுலயே பெரிய பரிசு. அது அப்பா, அக்கா அப்படின்னு கூட இருக்கலாம். அந்த மாதிரி ஒரு நட்புதாங்க நம்ம வாழ்க்கையில் கிடைச்ச பெரிய பரிசு.
6. இல்லாத அழகு
நம் நாட்டில் எவ்வளவோ அழகு இருக்கு. ஆனா பாருங்க எவ்வளவு அழகு இருந்தாலும் நமக்கு நல்லா வெச்சுக்கத் தெரியலை. நாம தினமும் போய் வர ரோடாகட்டும் இல்ல ஒரு அமைதிக்காகச் செல்லும் ஒரு அருவியாகட்டும் எங்க போனாலும் நாம போயிட்டு வந்த சுவடா குப்பையைப் போட்டுட்டு வரதுல நாமதான் கிங். நம்ம நாட்டை விட்டுட்டு வெளிய வந்தாலே இது அவ்வளவு மோசமா இருக்கறது இல்லை. ஏன் நாம் மட்டும் இப்படி இருக்கோம்? வளர்ந்தவர்களை ஒண்ணும் செய்ய முடியாது. ஆனா பள்ளியில் பசங்களுக்குச் சொல்லித் தந்தால் அவர்களாவது நன்றாக வைத்துக் கொள்வார்களா? கற்றுக் கொடுப்பவர் வெளியில் போய் குப்பையை விட்டெறிவதை மாணவர்கள் பார்த்தார்களானால் அவர்களுக்கு சொல்லித் தந்ததைச் செய்யத் தோணுமா? இதுக்கு என்னதான் வழி?
சரி. நான் ஆடறது ஆடியாச்சு. அடுத்து ஆடறவங்களைக் கூப்பிட வேண்டியதுதான். சரி, ஒரு மூணு பேரைக் கூப்பிடலாம். அவங்க அழகை நாமளும் தெரிஞ்சுக்கலாம். ஒரு சிறு ஓடையாய்த் தொடங்கி இருக்கும் 'அழகுகள் ஆறு' என்ற தொடரைப் பெரிய ஆறா ஓடவிடும் பொறுப்பை இவங்க தலையில் வெச்சுடலாம். நான் அழைக்க விரும்பும் மூவர்
- தம்பி (நம்மளை இப்படி ஒரு தினுசா யோசிக்க வெச்சதுனால)
- துளசி டீச்சர்
- வல்லி சிம்ஹன் அம்மா