Showing posts with label விவாதக் களம். Show all posts
Showing posts with label விவாதக் களம். Show all posts

Friday, June 01, 2007

சில விவாகரத்துக் குறிப்புகளும் ஜீவனாம்ச கேள்விகளும்...

இப்படித் தமிழ்மணத்தில் ஊறிப் போய் கிடந்தால் வேற என்ன நடக்கும், இதெல்லாம் உனக்குத் தேவைதான் என முனகிக் கொண்டு வரும் நண்பர்களே. என் திருமண வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது. கவலை வேண்டாம்!! இது என்னைப் பற்றிய பதிவு இல்லை. பொதுவானதொரு பதிவுதான்!! சமீபத்தில் படித்த சில செய்திகளால் தூண்டப்பட்டே இந்த பதிவு.

மூன்று பாகங்கள் கொண்ட பதிவு இது. பாகம் ஒன்று சற்றே சுவையான செய்தித் தொகுப்பினை பகிர்ந்து கொள்வது. பாகம் இரண்டும் மூன்றும் விவாதக் களம். உங்க கருத்தை கட்டாயம் வந்து சொல்லுங்க.

விவாகரத்துக் காரணங்கள் - ஒரு சுவையான தொகுப்பு

Marriage is an institution அப்படின்னு சொல்லறவங்க பல பேரு. Wedding is a word, Marriage is a sentence! அப்படின்னு சொல்லறவங்க கூட்டம் அதிகம். நம்ம சமூகத்தில் திருமண பந்தம் புனிதமானது எனக் கருதப்படுகிறது. அதற்கு நாம் தரும் மரியாதை அலாதிதான். ஆனால் அதனை ஒரு விளையாட்டாக எண்ணுபவர்களும் எத்தனையோ பேர். பிரிட்னி ஸ்பியேர்ஸ் கூட குடிபோதையில் நண்பன் ஒருவனைத் திருமணம் செய்து கொண்டு உடனே விவாகரத்து செய்ததைப் படித்து இருப்பீர்களே. அந்த வகையில் விவாகரத்து செய்வதற்கான காரணங்கள் பற்றி சமீபத்தில் படிக்க நேர்ந்தது. முதலில் அதனைப் பாருங்களேன்.

கெண்டக்கி மாநிலம்: "நான் பர்கர் சாப்பிடும் பொழுது அதிலுள்ள வெங்காயத்தை என் மனைவியைக் கேட்காமல் எடுத்துவிட்டு சாப்பிட்டால் அவள் என்னை அடிக்கிறாள். அதனால் எனக்கு விவாகரத்து தேவை."

கனெக்ட்டிகட் மாநிலம்: "என் மனைவி எழுதிய துண்டு சீட்டு இது - ' நான் சீட்டாட நண்பர்கள் வீட்டுக்குச் செல்கிறேன். வர நேரமாகும். உங்கள் இரவு உணவுக்கான குறிப்பு சேனல் இரண்டில் ஏழு மணிக்கு வரும்.' நான் ஏன் விவாகரத்து கோரக் கூடாது!!"

தென் கரோலினா: காது கேளாத ஒருவர் தன் விவாகரத்து காரணமாகச் சொல்வது -" என் மனைவி என்னை மிகவும் தொண தொண எனப் பேசி நச்சரிக்கிறாள். அவள் அப்படி நச்சரிப்பது சைகை மொழியில்!"

காலராடோ: ஒரு பெண் சொல்வது " அவருடைய பழைய காதலியின் வீட்டைத் தாண்டிச் செல்லும் பொழுது எல்லாம் காரில் என் தலையை அழுத்திக் கீழே தள்ளி, அவருடன் யாரும் இல்லாதது போல ஒரு தோற்றத்தை உண்டு பண்ணுகிறார். "

ஜியார்ஜியா: இங்கு ஒரு பெண் தன் கணவரை விவாகரத்து செய்த காரணம். அவர் அதிக நேரம் வீட்டில் செலவழிப்பதும், அவளிடம் அளவுக்கு மீறி அன்பு மழை பொழிவதும்தான் காரணமாம். He was much too affectionate!!!

நியூஜெர்ஸி: "என் கணவர் எப்பொழுது மடிக்கணினியோடே இருக்கிறார். கண்ட கண்ட நேரத்தில் எழுந்து மின்னரட்டை அடிக்கிறார். கணினி முன் அமர்ந்திருக்கும் பொழுது திடீர் திடீரென சிரிக்கிறார் அல்லது கோபப்படுகிறார். அவரின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றால் எங்கே பின்னூட்டம் என உளறுகிறார். மருத்துவர்கள் இவர் தீவிர தமிழ்மணமாட்டிஸ் வியாதிக்கு ஆளாகி இருப்பதாகச் சொல்கிறார்கள்." - இது மட்டும் உண்மை இல்லைங்க. வெறும் கற்பனைதான். ஹிஹி...

ஜீவனாம்சம் - சில கேள்விகள்

இப்படி எல்லாம் கண்ட கண்ட காரணத்துக்கு எல்லாம் இங்க விவாகரத்து நடக்குது. Alimony எனப்படும் ஜீவனாம்ச தொகை பலருக்கு வாடகைக்கு அடுத்து இருக்கும் பெரிய செலவாகவே இருக்கிறது. இதனைத் தருபவர்களுக்கு வரிச்சுமையில் சிறுது குறைவதும், பெறுபவர்கள் இதற்கும் சேர்த்து வரி கட்ட வேண்டும் என இது ஒரு பெரிய டாபிக்காகவே ஆகிவிட்டது. பெரும்பாலான சமயங்களில் (99%?) ஆண்கள் பெண்களுக்குத் தருவதாகவே இந்த ஜீவனாம்சத் தொகை இருக்கிறது. Child Support எனப்படும் குழந்தைகளைப் பராமரிக்கப் பட வேண்டிய தொகை யாரிடம் குழந்தை இருக்கிறதோ அவர்களுக்கு மற்றவர் தரும் தொகையாக இருக்கிறது என்ற அளவில் புரிகிறது.

ஆனால் இன்று மற்ற எல்லா வகைகளிலும் சமத்துவம் பேசும் பெண்கள் இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார்கள்? தனது சொந்தக் காலில் நிற்கக்கூடிய ஒரு பெண்ணிற்கு அவளது மாஜிக் கணவன் ஜீவனாம்சம் தரத்தான் வேண்டுமா? ஒரு பெண் தனியாகத் தன் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள முடியும் என்பதற்கு என்ன அளவுகோல்? இதனை யார் முடிவு செய்வார்கள்? இதலாம் பற்றி பேசலாம் வாருங்கள்.

ஜீவனாம்சம் - ஒரு புதிய பிரச்சனை

இவ்வளவு எல்லாம் போதாதென்று இப்பொழுது ஒரு புதிய குழப்பம் நீதிமன்றப் படியேறி இருக்கிறது. விவாகரத்தான ஒரு கணவன் தன் மாஜி மனைவிக்கு ஜீவனாம்சம் தந்து கொண்டிருக்கிறார். இந்தப் பெண் ஒரு நாள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாறி விடுகிறார். அப்பொழுது அந்த கணவன் தான் இனி ஜீவனாம்சம் தரத் தேவையில்லை என நிறுத்தி விடுகிறார். ஜீவனாம்சம் பெறுபவர் தன் மாஜி கணவர் தொடர்ந்து ஜீவனாம்சம் தர வேண்டும் என நீதிமன்ற படி ஏறுகிறார்.

தன் மாஜி மனைவி தற்பொழுது ஒரு பெண்ணாக இல்லை. அவர் ஒரு ஆணாக மாறி விட்டதால், தான் ஜீவனாம்சம் தர வேண்டியது இல்லை. அவர் வேறு பால், வேறு பெயர் கொண்ட வேறு ஒரு நபராகி விட்டார். இவருக்கும் எனக்கும் எந்த விதமான உறவும் இருந்ததில்லை. ஆகையால் தான் இனி ஜீவனாம்சம் தரத் தேவையில்லை என்பது மாஜி கணவரின் வாதம். தான் இறந்தாலோ அல்லது மறுமணம் புரிந்தாலோதான் ஜீவனாம்சம் தருவதை நிறுத்த வேண்டும். இவை இரண்டும் நடக்கவில்லை. ஜீவனாம்சம் தருவது பழைய உறவுக்காக. தனது பாலின மாற்ற சிகிச்சையால் அந்த உறவு இல்லை என ஆகப் போவதில்லை. ஆகையால் ஜீவனாம்சம் தொடர்ந்து தர வேண்டும் என்பது எதிர் வாதம். நீதிமன்றங்கள் இது வரை தீர்ப்பு வழங்கியதாகத் தெரியவில்லை.

இப்படிப் பார்த்தால் இது சரியா இருக்கு. அப்படிப் பார்த்தால் அது சரியா இருக்கு. நீங்க என்ன சொல்லறீங்க?