கைப்பு வழக்கம் போல் பேண்டேஜ் பாண்டியனாக உள்ளே நொண்டியபடி வருகிறார். சங்கத்தில் தேவ், தம்பி, விவசாயி, புலி எல்லாரும் ஒரு பக்கமாக உக்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். அருகே உட்கார்ந்து கொண்டு சங்கத்துக் கணக்கு வழக்கை எழுதிக் கொண்டு இருக்கிறார் வெட்டி. இதிலெல்லாம் சேராமல் புத்தகமும் கையுமாய் ஒரு ஓரத்தில் ராயல். இன்னொரு சைடில் பேனாவை முகவாயில் தட்டியபடி ஒரு கவுஜ எழுதும் மூடில் இருக்கிறார் சிபி. தல தலையைக் கண்டவுடன்....
தேவு: தல என்ன ஆச்சு? இன்னைக்கு யாரு முறைவாசல் வெச்சாங்க? அந்த பாழாப் போன கட்டதொரையா? இல்ல அந்த படுபாவி பார்த்திபனா? யாரு அடிச்சாங்க தல? இது யாரு வேல?
குறுக்கில் புகுந்த விவ்ஸ் : யாரு அடிச்சா என்னடா? தல, எங்கெங்க அடிச்சாங்க? எப்படி எப்படி அடிச்சாங்க அதச் சொல்லுங்க தல.
கைப்பு: ஏண்டா நாதாறிப் பசங்களா, இங்க ஒருத்தன் கண்டபடி அடி வாங்கிட்டு வந்திருக்கேன், இப்படி நிக்க வெச்சு கதையாட கேட்கறீங்க? சினிமாவாடா பாத்துட்டு வரேன் உங்களுக்கு கதை சொல்ல? வாங்குனது பூரா அடிடா அடி. நான் அப்படி எல்லாம் அடி வாங்குறது உங்களுக்கு எல்லாம் மொறவாசல் வெச்சு செய்யுற வேல மாரியாடா தெரியுது?
சிபி: தல, எனக்கு ஒரு டவுட்டு, அடிக்கிற கைதான் அணைக்கும் அப்படின்னு சொல்லுவாங்களே. அடிச்ச பின்னாடி உங்களை அணைச்சாங்களா தல?
கைப்பு: ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா,கிளம்பிட்டாங்க. என்னடா கேள்வி கேக்குற. அவனுங்க எல்லாம் பாத்தா அணைக்கிற ஆளுங்க மாதிரியாடா தெரிஞ்சுது, அவனுங்க அணைச்சது எல்லாம் அவனுங்க குடிச்சுட்டுப் போட்ட சிகரெட்டைதாண்டா.
வெட்டி: தல, உங்களை அடிச்ச கூட்டத்துல ரெட்டி, ராவ் ஆளுங்க யாராவது இருந்தாங்களா? அப்படி எதனா இருந்தா சொல்லுங்க. நான் அப்படி சைலண்டா போயி உக்காந்துக்குறேன்.
புலி: வெட்டி, இப்படி தெலுங்கு வாசனை வீசுனாலே ஆஃப் ஆனா எப்படி? நடந்தது நடந்து போச்சு, நாட்டுல வேற ஊராடா இல்லை? சிக்கிம், கேரளா, கர்நாடகா, ஒரிஸ்ஸா அப்படின்னு லாட்டிரி விக்கிற ஊருங்க இன்னும் எத்தினி இருக்கு, அதுல எதாவது பிடிச்சிக்க வேண்டியதுதானே. இல்லைன்னா சூடான் பக்கம் வா, சூடா எதுனா புடிச்சித் தரேன்.
இப்படி ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருக்கும் போது அங்கு ஒரு கண்ணாடியை ஸ்டைலாக சுத்திக் கொண்டு வரும் ஜொள்ளுப்பாண்டி, "ஹாய் பாய்ஸ். தல, வாட் ஹேப்பண்ட்? வொய் பேண்டேஜ்?" என்கிறார். அதுவரை அடங்கிப் போய் இருந்த கைப்பு ஆவேசமாக அழத் துவங்குகிறார்.
கைப்பு: எல பாண்டி, நாங்க பாட்டுக்குச் செவனேன்னுதானே இருந்தோம். சும்மா இருந்த பயலுவளை நீதானடா கோச்சிங் செண்டர் ஆரம்பிக்கறேன், கேச்சிங் செண்டர் ஆரம்பிக்கிறேன்னு உசுப்பி விட்ட. அது எங்க போயி முடிஞ்சிருச்சி பாருடா. பப்ளிக் எல்லாம் சேந்து என்னிய இப்படி சாத்திப்புட்டாங்க பாருடா.
சத்தம் தாங்க முடியாமல் புத்தகத்தில் இருந்து தலையை தூக்கிப் பார்த்து ராயல் " தல விசயத்தைச் சொல்லுங்க. இப்போ என்ன ஆச்சு? ஏன் இப்படி நம்ம பாண்டிய வையறீங்க? அவன மாரி உண்டா, அவன் ஸ்டைல் என்ன, அவன் நடை என்ன?" எனத் ஆரம்பிக்க.
கைப்பு: டேய் இருடா. இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா? இந்த பாழாப் போன பாண்டி கோச்சிங் செண்டர் ஆரம்பிச்சானா, அதுக்கு நோட்டிஸ் அடிச்சு என் கிட்ட குடுத்தான். இத்தன அப்பரசண்டிங்க இருக்கீங்களேன்னு பார்க்காம நானும் போயி கடைவீதியில் நின்னுக்கிட்டு போறவன் வரவனுக்கெல்லாம் அந்த நோட்டீஸைக் குடுத்துக்கிட்டு இருந்தேன். அப்ப அங்க வந்தாண்டா அந்த பார்த்தி பய.
கைப்ஸ் மூஞ்சியில் கொசுவர்த்தி சுழல்கிறது.
தனக்கே உரிய நீல பட்டு சட்டை வேட்டியில் கைப்பு கடைத்தெருவில் நின்று கொண்டு நோட்டீஸ் குடுத்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு பின்னாடி நின்று கொண்டு அவரைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார் பார்த்தி.
கைப்பு தெருவில் செல்லும் ஒருவரிடம்: டேய் இங்க வாடா, நோட்டீஸ் குடுத்துக்கிட்டு இருக்கோமில்ல. வாங்கிட்டுப் போகணமுன்னு தெரியாதா? நீயெல்லாம் எதுக்குடா ரோட்டுல நடந்து வர? நாங்க யாருன்னு தெரியுமில்ல. ரௌடிடா ரௌடி.
பின்னால் இருக்கும் பார்த்தி முன்னால் வருகிறார். அவரைப் பார்த்தவுடன் மனதிற்குள் 'எங்க போனாலும் பின்னாடியே வரானே, இன்னைக்கு இவன் கிட்ட வாய குடுத்து மாட்டக் கூடாது' அப்படின்னு நினைச்சுக்கிட்டு பார்த்தியைப் பார்த்து சிரிக்கிறாரு கைப்பு.
கைப்பு: வணக்கமுண்ணே.
பார்த்தி: டேய், நான் என்ன உனக்கு அண்ணனா?
கைப்பு (மனதிற்குள்): ஆஹா. வணக்கம் சொன்னாக்கூட வம்புக்கு இழுக்கறானே. இன்னிக்கி என்னென்ன செய்யப் போறானோ
பார்த்தி: என்னடா மொனகுற? அது என்ன கையில?
கைப்பு: அது ஒண்ணுமில்லை. வெறும் பேப்பரு.
பார்த்தி: எதுக்குடா வெறும் பேப்பரை போறவன் வரவன் கையில எல்லாம் குடுக்குற? எதனா வேண்டுதலா? எனக்கும் குடுடா பார்ப்போம்.
கைப்பு: இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? விடுங்க. (மனதிற்குள் - இத வெச்சுக்கிட்டு என்ன செய்வானோ, சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணணும். ஆண்டவா, நீதாண்டா என்ன காப்பாத்தணும்)
பார்த்தி: ஆண்டவன் கிட்ட அப்பீல் பண்ணுனா விட்றுவோமா? குடுன்னு ஒழுங்க கேட்டா குடுக்க மாட்ட இல்ல, உன்னிய...
கைப்பு: ஐய்யோ, உங்களுக்கு இல்லாத பேப்பரா, ஒண்ணு என்ன எல்லாத்தையும் எடுத்துக்குங்க. நான் வரேன்.
பார்த்தி: டேய் நில்றா. நில்றான்னு சொல்லறேன் இல்ல. அப்படி என்னதான் போட்டு இருக்கு நீ ஊருக்கு எல்லாம் குடுக்குற பேப்பருல?
எந்த நேரத்தில் என்ன நடக்கப் போகுதோன்னு பயத்தில், சாதுவாய் கைப்பு பக்கத்தில் நிற்க, பார்த்தி பேப்பரை படிப்பதும், கைப்புவைப் பார்ப்பதுமாக இருக்கிறார். பேப்பரை பல தடவை படிக்கிறார்.
பார்த்தி: டேய் இதுல என்ன போட்டு இருக்குன்னு தெரியுமா உனக்கு?
கைப்பு: நம்மளை என்ன எழுதப் படிக்க தெரியாத ஆளுன்னு நினச்சியா? அதெல்லாம் தெரியாமத்தேன் குடுப்போமா? எல்லாம் நான் சொல்லித்தேன் நம்ம பசங்க பிரிண்ட் அடிக்கவே குடுத்தாங்க. இப்ப அதுக்கென்ன?
பார்த்தி: அப்போ இதுல போட்டு இருக்கறது எல்லாம் நீங்க செய்யறீங்க.
கைப்பு: செய்யறோம். செய்யறோம். அதுக்குத்தானே நோட்டீஸ் அடிச்சுக் குடுக்கறோம். சும்மாவா பின்ன. எல்லாம் நம்ம மக்களுக்காக சேவை. தெரியுமில்ல.
பார்த்தி பக்கத்தில் போகும் சனங்களைப் பார்த்து : ஐயா, கொஞ்சம் இங்க வாங்க. அம்மா நீங்களும் வாங்க. இந்த நோட்டீஸைப் பாருங்க. இதுல போட்டு இருக்கறதை எல்லாம் இவனுங்க செய்வாங்களாம். அதுல தெனாவட்டா வேற பேசறான். ஏண்டான்னு கேட்டா என்னையே முறைக்கிறான். இவனை எல்லாம் என்ன செய்யலாம் சொல்லுங்க.
நோட்டீஸைப் படித்த சனங்கள் எல்லாம் வெறி ஏறி கைப்புவைப் போட்டு மொத்தி நார் நாராய் கிழிக்கிறது. எல்லாம் அடித்து விட்டு ஓயும் பொழுது பக்கத்தில் இருக்கும் பார்த்தியிடம்.
கைப்பு: நீ வரும் போதே தெரியும் என் நிலம இப்படித்தான் ஆவப் போவுதுன்னு. இம்புட்டு அடிச்சாங்களே அப்படி என்னத்தய்யா சொன்ன அவங்க கிட்ட?
பார்த்தி: நீ ஒரு நோட்டீஸ் குடுத்தியே, அதுல கடைசி வரிய படிச்சுப் பாருடா.
கொசுவர்த்தி ரிவர்ஸில் சுற்றி முடிக்கிறது.
கைப்பு: இதாண்டா நடந்தது. நமக்காக ஒரே ஒரு நோட்டீஸ் எடுத்துக்கிட்டு வந்தேன். அப்படி என்னடா போட்டு இருக்கு நம்மள இந்த அடி அடிக்க, கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கடா.
நோட்டீஸை வாங்கிப் படித்த அப்பரசண்டிகள் கிரேசி மோகன் டிராமாவில் காணாமல் போகும் நடிகர்கள் போல அப்பீட் ஆகிறார்கள். காற்றில் பறந்து கீழே விழுந்த நோட்டீஸ் இங்கே.