Showing posts with label Lake George. Show all posts
Showing posts with label Lake George. Show all posts

Monday, May 28, 2007

துளசி டீச்சருக்கு சமர்ப்பணம்!

முகவுரை

பதிவெழுத ஆரம்பிச்ச புதுசில் என்ன எழுதணும் அப்படின்னு தெரியாம முழிச்ச நேரங்கள்தான் அதிகம். (ஆமாங்க, கட் பேஸ்ட் விளையாட்டெல்லாம் அப்போ தெரியாது.) அப்போ நம்ம டீச்சர்தான் ஒரு முக்கியமான அறிவுரை தந்தாங்க. கண்ணையும் காதையும் திறந்து வெச்சுக்கோ, உன்னை சுத்தி நடக்கிற விஷயங்களை பாரு. எத்தனை பதிவுகள் எழுத வேண்டுமானாலும் மேட்டர் கிடைக்கும் அப்படின்னு சொன்னாங்க. அதைத்தான் இன்னைக்கு வரை பின்பற்றிக்கிட்டு வரேன். அதனாலதான் நான் நட்சத்திரமா இருக்கும் இந்த வாரத்தில் அவங்களுக்கு முதல் பதிவு சமர்ப்பணம்.

அது மட்டுமில்லை. இன்னிக்கு பயணக்கட்டுரை அப்படின்னு சொன்னா உடனே அவங்க ஞாபகம்தான் நமக்கெல்லாம் வரும். இதுவும் ஒரு பயணக் கட்டுரை என்பதாலும் அவர்களுக்கு சமர்ப்பணம். ஒரு விஷயத்தில் அவங்களை மிஞ்சிட்டோமில்ல. ஏன்னா இது ஆன் லொகேஷன் பதிவு. டீச்சர், இதுக்கு என்ன சொல்லறீங்க.

முகவுரை முற்றிற்று.
____________________________________________________________________

இந்த வாரயிறுதி அமெரிக்காவில் ஒரு நீண்ட வாரயிறுதி. இந்த திங்கள்கிழமை மெமோரியல் தினம் என போரில் உயிர்நீத்தோரைப் பெருமைப் படுத்தும் வகையில் விடுமுறை அறிவிக்கப்பட்டு கொண்டாடப் படுகிறது. நல்ல வெயில் வந்தபின் வரும் முதல் நீண்ட வாரயிறுதி என்பதால், அனைவரும் வெளியூர் சென்று கொண்டாடப்படும் நாட்களாகவே இருக்கிறது. நாங்களும் ஒரு நண்பர் குடும்பத்துடன் நியூயார்க் மாநிலத்தில் லேக் ஜியார்ஜ் என்ற இடத்திற்கு சென்று வந்தோம்.




நியூயார்க் மாநிலத்தின் வடப்பகுதியில் இருக்கும் இந்த ஏரி அடிராண்டேக் என்ற மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்து இருக்க்கிறது. கிட்டத்தட்ட 30,000 ஏக்கர் பரப்பளவும் 300 அடி வரை ஆழமும் கொண்டது இந்த ஏரி. இதன் தென்முனையில் இருக்கும் ஒரு கிராமம்தான் லேக் ஜியார்ஜ் கிராமம். இந்த வாரயிறுதியில் இந்தியர்களால், அதுவும் குறிப்பால் தமிழர்களால் முற்றுகை இடப்பட்டது என்றால் மிகையே இல்லை. அவ்வளவு தமிழர்கள்.

சுற்றுலா வரும் விருந்தினர்களையே நம்பி இருக்கும் கிராமம். ஊர் முழுவதும் ஹோட்டல்கள்தான். எல்லா விதமான உணவகங்கள், ஊரின் மையப்பகுதியில் குழந்தைகளும் பெரியவர்களும் விளையாடி களிக்க கேளிக்கை இடங்கள், பல விதமான வீரவிளையாட்டுகள் என பொழுது போக்குவதற்காகவே இருக்கும் ஊர். வார நாட்களில் இவ்வளவு விருந்தினர்கள் இல்லாமல் எப்படி இருக்கும் என நினைத்தே பார்க்க முடியவில்லை.

இது மட்டுமில்லாமல், ஒரு பழைய கோட்டையும் இருக்கிறது. கோட்டை என்றால் உடனே நம்மூர் கோட்டை மாதிரி எல்லாம் எண்ணிப் பார்க்காதீர்கள். நம்மூர் அரசர்கள் எல்லாம் அவர்கள் குழந்தைகளுக்கு விளையாட கட்டிக் கொடுக்கும் கோட்டைகள் கூட இதை விடப் பெரிதாக இருக்கும். வில்லியம் ஹென்றி கோட்டை எனப் பெயர் கொண்ட இது இப்பொழுது ஒரு மியூசியமாகவும் ஒரு ஹோட்டலாகவும் இருக்கிறது. செவ்விந்தியர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் சண்டைகள் நடந்த இடம் இது. இன்று இதனை ஒரு டிராமா போல் செய்து காண்பிக்கிறார்கள். சிறார்களுக்கு அந்த வீரர்களைப் போன்று உடையணிவித்து, அவர்கள் படையில் சேர்ந்ததுக்காக ஒரு சான்றிதழும் தருகிறார்கள். (எல்லாவற்றிற்கும் தனித்தனி கட்டணம் உண்டு.)



நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் இடமில்லாமல் போய் எங்களை இந்த கோட்டையில் இருக்கும் ஹோட்டலுக்கு மாற்றிவிட்டார்கள். ஏரிக்கரையிலேயே அருமையான ஹோட்டல். அறையில் இருந்து பார்த்தால் ஏரியும் அதனைச் சுற்றியுள்ள சிறுவனமும் தெரிவது போன்ற அமைப்பு. ரொம்பவே சந்தோஷமாக ஆரம்பித்தது.




சுற்றிப் பார்க்கவும், செய்து பார்க்கவும் ஏராளமான வாய்ப்புக்கள் உள்ள இடம். ஏரியில் படகு வாடகைக்கு எடுத்து ஓட்டுவது, பெரிய கப்பலில் பிரயாணம் செய்வது, மீன் பிடிப்பது போன்றவைகள் இருந்தாலும் பேரா செய்லிங் (Para Sailing), ரிவர் ரேப்டிங் (river rafting), ரிவர் ட்யூபிங் (river tubing), பலூன் சவாரி (hot air ballooning) என பலவிதமான சாகச விளையாட்டுக்களும் உண்டு. இதில் நாங்கள் பேரா செய்லிங் மற்றும் ரிவர் ட்யூபிங் மட்டும் செய்தோம். பலூன் சவாரியின் விலை மிக அதிகமாக இருந்ததால் சாய்சில் விட வேண்டியதாகப் போயிற்று.

பேரா செய்லிங் என்றால் ஒரு படகில் ஒரு பேராசூட்டை கட்டி விட்டு அந்த படகு செல்லும் பொழுது மேலெழும் பாராசூட்டில் தொங்கிக்கொண்டு செல்வது. சுமார் 300 அடி உயரம் வரை அழைத்துச் செல்கிறார்கள். ஒரு ஊஞ்சலில் ஆடும் பொழுது வெகு உயரமாகச் செல்வது போல்தான் உணர்கிறோம். 5 - 7 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் இந்த சவாரி ஒரு வித்தியாசமான அனுபவம்தான். ட்யூபிங் என்றால் நம்ம ஊரில் லாரி ட்யூபை ஆற்றில் போட்டு அதில் மிதந்து செல்வதுதான். அதைக் கொஞ்சம் ஆர்கனைஸ்டாகச் செய்கிறார்கள். நியூயார்க் நகர் வரை வரும் ஹட்சன் நதியின் ஆரம்பப் பகுதிகளில் ட்யூபில் பயணம் செய்தது நன்றாகத்தான் இருந்தது. ஒர் இரவில் செய்த படகு பயணமும், அப்பொழுது கண்ட வாண வேடிக்கைகளும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய மற்றொரு விஷயம்.




மிக அதிகமான கூட்டம் இருந்தாலும் சற்றே சரியாக திட்டமிட்டதாலும் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்பதை விட பார்ப்பதை நன்றாக பார்க்க வேண்டும் என முடிவு செய்ததால் ரொம்பவும் அவதி அவதி என ஓடாமல், அழகாகக் கழிந்தது இந்த விடுமுறை. அமெரிக்க கிழக்கு கடற்கரை ஓரம் வசிப்பவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய ஒரு இடம் இது. போகுமுன் என்னிடம் சொல்லுங்கள் மேலும் தகவல்கள் தருகிறேன்.