Showing posts with label NJ. Show all posts
Showing posts with label NJ. Show all posts

Sunday, April 15, 2007

தமிழ்மணத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

வரும் ஏப்ரல் 28ஆம் தேதி நியூ ஜெர்ஸியில் வலைப்பதிவர் சந்திப்பு ஒன்றை வசந்த விழாவாக கொண்டாட இருப்பது பற்றிச் சொல்லி இருந்தோம். இந்த சமயத்தில் பேச இருக்கும் தலைப்புகளில் ஒன்றாக "தமிழ்மண சேவைகளில் நாம் விரும்பும் மாற்றங்கள்" என்ற ஒரு தலைப்பையும் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

இந்த சமயத்தில் அங்கு வந்து பங்கேற்கும் பதிவர்கள் மட்டுமல்லாது, மற்றவர்களின் கருத்துக்களும் விருப்பங்களும் கேட்டு அதனையும் குறித்து விவாதித்து, அனைத்து கருத்துக்களையும் தொகுத்து தமிழ்மண நிர்வாகத்தினரின் பார்வைக்கு அனுப்பலாம் என திட்டமிட்டு இருக்கிறோம். இதற்காக உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம்.

தமிழ்மணத்தின் தற்போதைய சேவைகளில் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் என்ன?

தமிழ்மணத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் மேலதிக சேவைகள் என்னென்ன?


இவை தொடர்பாக உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். ஆக்கபூர்வமான கோரிக்கைகளையும் யோசனைகளையும் தமிழ்மண நிர்வாகத்தினர் கட்டாயம் பரிசீலிப்பார்கள் என நம்புகிறோம். அவற்றை பயனர்கள் என்ற முறையில் அவர்களுக்குத் தெரியப்படுத்துவது நம் கடமை எனவும் நம்புகிறோம். ஆகையால் உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறோம்.

டிஸ்கி : பூங்கா மற்றும் தமிழ்மண நட்சத்திர தேர்வுகள் முறையே பூங்கா ஆசிரியக் குழு மற்றும் தமிழ்மண நிர்வாகிகளின் தனிப்பட்ட தேர்வுகள் என்பதால் அதில் கருத்து கூற வேண்டாம் என்பது எங்கள் எண்ணம். அதனால் திரட்டி என்ற வகையில் தமிழ்மணத்தில் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்களை மட்டுமே பற்றி பேசினால் பொருத்தம் என நினைக்கிறோம்.

Thursday, April 05, 2007

Floralia 2007 - பூக்களுக்கான உற்சவம் !

பண்டைக்கால ரோமேனியர்களின் நம்பிக்கைப்படி பூக்களுக்கும் இளவேனிற்காலத்திற்குமான தெய்வம் ஃப்ளோரா . இன்றைக்கு ஃப்ளோரா என்று செடி கொடிகளை அழைக்கக் காரணமும் இந்த தெய்வம்தான். இத்தெய்வத்தைக் கொண்டாடும் வகையில் ப்ளோரேலியா என்ற ஒரு திருவிழா இளவேனிற்கால தொடக்கத்தில் நடத்தப் பெறுமாம். கடுமையான பனிக்காலம் முடிந்து வாழ்வின் சுழற்சி மீண்டும் துவங்குவதைக் கொண்டாடும் விதமாக ஆட்டமும் பாட்டமுமாக நடைபெறும் விழா இது. பொதுவாக வெள்ளை துணிகளையே உடுத்தும் ரோமேனியர்கள் இந்த நாளன்று வண்ண வண்ணத் துணிகள் அணிந்து இத்தெய்வத்திற்குப் பாலும் தேனும் படைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடும் ஒரு விழா இது. அவர்கள் இத்திருவிழாவைக் கொண்டாடும் நாள் இன்றைய நாள்காட்டியின் படி ஏப்ரல் 28ஆம் தேதியாம்.

இப்போ எதுக்குடா ஹிஸ்டரி கிளாஸ், அதான் இந்த தொந்தரவு எல்லாம் வேண்டாமத்தானே ஸ்கூலிலேயே சாய்ஸில் விட்டோம் அப்படின்னு கேட்கறீங்களா? மேட்டர் இல்லாமலேயா இம்புட்டு பில்டப். நாம காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போற வரை ஒரு விதமான பூவைப் பார்த்துக்கிட்டே இருக்கோமே. அந்த பூக்களையும் இந்தத் திருவிழாவில் சேர்த்துக் கொண்டாடலாம் அப்படின்னு ஒரு ஐடியா. அதுக்குத்தான் இந்த பில்டப். காலைல கண் முழிச்ச உடனே கடகடன்னு கிளம்பி ஆபீசுக்குப் போயி ஆணி புடிங்கி, சாயங்காலம் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் தமிழ்மணத்தில் மேஞ்சுட்டு அப்புறமா படுத்தோமா தூங்கினோமான்னு இருக்கோம். இதுல எங்க பூவைப் பார்க்கறதுன்னு அப்படின்னு அலுத்துக்காதீங்க மக்களே. நான் சொல்ல வந்தது நம்ம வலைப்பூக்கள் பத்தி!

போதுண்டா பில்டப்பு, மேட்டரைச் சொல்லுன்னு நீங்க கத்தறதுக்கு முன்னாடி நானே சொல்லறேன்.

நிகழும் 2007ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி, சனிக்கிழமை, கூடிய சுபயோக சுபதினத்தில், அமெரிக்கா நியூ ஜெர்ஸி மாநிலத்தில், இளவேனிற் காலத்தைக் கொண்டாடும் வகையிலும், வலைப்பூக்களைக் கொண்டாடும் விதமாகவும் ப்ளோரேலியா 2007 என்ற திருவிழா நடக்க இருப்பதாக பெரியோர்கள் ஆசியுடன் நிச்சயிக்கப்பட்டு இருப்பதால் தாங்கள் தங்கள் குடும்பத்தாருடனும் இஷ்ட மித்ர பந்துக்களுடன் வந்திருந்து மேற்படி விழாவை சிறப்பாக நடத்தித் தந்து எங்களையும் கௌரவிக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

உலகெங்கிலும், முக்கியமாக அமெரிக்க வட கிழக்கு மாநிலங்களில், இருக்கும் பதிவர்கள் வந்து கலந்து கொண்டு இந்த விழாவை வெற்றிகரமான விழாவாக செய்துதர வேண்டுகிறோம். விழா நடக்க இருக்கும் இடம், நேரம் போன்றவை இனி வரும் நாட்களில் அறிவிப்பாக வெளி வரும். தேவையான கட்டமைப்பை செய்வதற்கு தங்கள் வருகையை பின்னூட்டங்கள் மூலம் உறுதி செய்தால் வசதியாக இருக்கும்.

வாருங்கள்! கொண்டாடலாம் Floralia 2007!!


டிஸ்கி: என்னடா இது தமிழ் வலைப்பூக்களுக்கான விழாவுக்கு ஆங்கிலப் பேரா? வரிவிலக்கு கூட கிடைக்காதே எனக் கவலைப்படும் நண்பர்களே, அதுக்கும் காரணம் இருக்கு. இந்த விழாவுக்கு வருகை தரவிருக்கும் நட்சத்திரப் பதிவர் பாபா ஆச்சே! அதான் இப்படி!