Tuesday, November 09, 2010

கமலோடு நான் - தீபாவளிக் கொண்டாட்டம்!

இந்த தீபாவளிக்கு நாங்க பராகபுரியில் ரொம்ப பிசியா இருந்தோம். அன்னிக்கு லீவு எல்லாம் கிடையாது என்பதால் ஒழுங்கு மரியாதையாக ஆபீசுக்குப் போனோம். வேலையைப் பார்த்தோம். ஆனால் கொண்டாட்டமோ கொண்டாட்டம் என்று அடுத்த வந்த சனி ஞாயிறு ரெண்டு நாளா கொண்டாடித் தள்ளிட்டோமுல்ல. அதை விடுங்க. சொல்ல வந்த விஷயமே வேற.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் ‘Koffee with Anu' என்ற நிகழ்ச்சியில் கமல் கலந்துக்கிட்டாராம். அப்போ கமலைப் பற்றிப் பேசிய முனைவர் கு.ஞானசம்பந்தன் சொன்னாராம் “வெண்பா எழுதுவது ரொம்பக் கஷ்டம். அதனாலதான் கம்பன் கூட ராமாயணத்தை விருத்தத்தில் எழுதினார். ஆனா கமல் நினைச்சா வெண்பா எழுதுவாரு”ன்னு. என்ன அநியாயம் ஐயா. நீங்க கமல் வெண்பா எழுதுவாருன்னு சொல்லுங்க. அதுக்கு ஏன் கம்பனை வம்புக்கு இழுக்கணும். வெண்பா கஷ்டம்ன்னா விருத்தம் மட்டும் சுலபமா என்ன? போகட்டும்.

வெண்பாவை விட்டு ஏன் கம்பர் விருத்தம் எழுதினார் என்பதற்கு பெனாத்தல் ட்விட்டரில் ஒரு காரணம் சொல்லி இருந்தார். பொதுவாக வெண்பா - செப்பல் ஓசை, அதாவது மெசேஜ் டோன். மேட்டரை டப்புன்னு சொல்லிட தோதான டோன். தசரதனுக்கு ராமர் மகனாகப் பிறந்தார்ன்னு சொல்ற மாதிரி.

ஆனா விருத்தம் அகவல் ஓசை, அதாவது அழைக்கிற ஓசை, ரிங் டோன். விதவிதமா அலங்காரம் பண்ணி, வாடா மாப்ளே, ராமர் கதை கேட்டுக்கன்னு சொல்லற மாதிரி. இதுதான் சரியான காரணம் மாதிரி இருக்கு.

கமலுக்கு வெண்பா எழுதச் சொல்லிக் குடுத்த ஈற்றடி “கல்லுஞ்சொல் லாதோ கதை”. எங்க வெண்பா வாத்தி ஜீவ்ஸ் மட்டும் இதைக் கேட்டா அவரு முதுகுலயே ஒரு சாத்து சாத்தி ஏன்யா அனாவசியா மகிழ்ச்சியா குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிற வார்த்தைங்க நடுவில் விவாகரத்து வாங்கித் தர. குடும்பத்தைக் கலைக்காம ஈற்றடி தர முடியாதான்னு கேட்டு இருப்பாரு. நல்லவேளை அவரு பார்க்கலை.

நான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கலை. ஆனால் ட்விட்டரில் பெனாத்தல் இது பத்திப் போட்டு இருந்தார். பார்த்தவுடன் சரி நாம இதுக்கு ஒரு வெண்பா எழுதலாமேன்னு முயற்சி செஞ்சேன்.

சொல்லையே கேட்டதால் சும்மாக் கிடந்தவொரு
தொல்லையும் தீர்ந்துதன் தோற்றமும் பெற்றதை
வில்லொடு வந்தவொரு வீரனின் கால்பட்ட
கல்லுஞ்சொல் லாதோ கதை
அப்போ வீட்டில் இருந்த நண்பர் படித்துவிட்டு “டேய் நீ எழுதும் கவிதை(!!) எனக்குப் புரியுதேடா. அது என்ன சொல்லையும் கேட்டு அதை மட்டும் சொல்லு” அப்படின்னார். என் வெண்பாவுக்கே நோட்ஸ் தேவைப்படுதா? அப்ப கமல் வெண்பாக்கு நோட்ஸ் போட்டா சாதா கோனார், ராஜக்கோனார் ஆயிருவார் போலன்னு நொந்து போய் கௌதம மகரிஷியின் சாபத்தினால் கல்லாய் கிடந்த தொல்லையானது தீர்ந்து எப்படி அகலிகை தன் தோற்றம் திரும்பக் கிடைக்கப் பெற்றாள் என்பதைத்தான் சொல்லி இருக்கிறேன் என்றேன்.

பெனாத்தலும் அவர் பங்குக்கு சமகால அரசியலைப் பற்றிப் பா ஒன்றைப் போட்டார். அரசியலே உன் பெயர்தான் பெனாத்தலோ! :)

ஆள்வோர் கொடுத்த அரசியல் தானங்கள்
நாள்போய் அறிகின்ற சூத்திரம் - ஆள்படை
அல்லும்பகலும் கீறி அயராது வெட்டியதால்
கல்லுஞ் சொல்லாதோ கதை
அடுத்து நம்ம வெண்பா வாத்தி ஜீவ்ஸைப் பிடித்தேன். வேலை இருக்கிறதப்பா என்றவர் வெண்பா என்றவுடன் விட முடியாமல் ஒரு குறட்பாவை கொடுத்தார். இரண்டு அடிகளில் எப்படி பெரிய விஷயங்களைக் கூட அருமையாக சொல்ல முடிகிறது என்பதற்கு நல்ல உதாரணம் இது.

வெல்லுஞ் செயலுடை வேந்தர்கள் மூப்பதைக்
கல்லுஞ்சொல் லாதோ கதை
இது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் வாஞ்சிநாதன் அவர்களும் தனி மடலில் இரண்டு வெண்பாக்களை அனுப்பி வைத்தார்.
அலைகடல் மோதும் அழகுமல்லை மேவுஞ்
சிலையின் நளினஞ் செதுக்கிய நேர்த்தியென்ன
தில்லானா ஆடும் திரைப்படத்தின் மேலாகக்
கல்லுஞ்சொல் லாதோ கதை

சிந்தையில் தேற்றமுடன் செந்தமிழ்நாட் டங்கொண்டோர்
நொந்திடார் யாப்பை நுகத்தடியாய் --- செந்தழலின்
மெல்லிய மேனிசெய சிற்பி முயன்றிடின்
கல்லுஞ்சொல் லாதோ கதை
இப்படி எல்லாம் வெண்பாக்கள் கிடைத்த உடனே இந்தப் பதிவைப் போட நினைத்தேன். ஆனால் கமல் இந்த ஈற்றடிக்கு எழுதிய வெண்பாக்கள் கிடைக்கவே இல்லை. அவை இல்லாது எப்படிப் போட என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று ஜெயஸ்ரீ அக்கா அது பற்றிய பதிவு போட்டு இருக்கிறார்கள்.

அதிலும் வெண்பாக்கள் முழுமையாக இல்லை என்றாலும் அது எப்படி இருக்கும் என்று ஒரு அளவிற்குத் தெரிகிறது. அவரின் பதிவில் இருந்தே

*மக…. கல்பட்டும் தேறினளாம் அவளக்காள்
அகலிகையும் கால்பட்டு மீண்டனளாம் – இகமிதிலே
அல்லலுறும் நவயுகத்து நாயகியர் அகமகிழக்
கல்லும்சொல் லாதோ கதை.

[*முதல் வார்த்தை இன்னதென்று விளங்கவில்லை. என் சிற்றறிவை வைத்துக்கொண்டு அனுமானிக்கவும் முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். தனிச்சொல் 'இகமிதிலே' பேராசிரியரால் பாராட்டப்பட்டது.]

ஆத்தமா னார்(அ)யலார் பள்ளிப் பறித்தெடுத்து
மூத்தவர்யா மெனக்கூறி அமர்ந்திருக்கும் சூத்திரத்தைச்
சொல்லின்றிக் கூறிவிடும் பழங்கோயில் கேட்டுப்பார்
கல்லும்சொல் லாதோ கதை.

["ஆத்தமானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்.." என்ற திருவாசக அடியிலிருந்து தான் எடுத்தாண்டதாக கமல் கூறினார்.]

ம்ம்ம்.. நல்ல முயற்சி. வெண்பா அதிகம் தெரியாமல் ஆனால் ஓசைநயத்திலேயே சரியாக எழுதுபவர் என்று கமலை பேராசிரியர் அறிமுகப்படுத்தினார். அப்படிப்பட்ட கமல் கொஞ்சம் மோனையிலும் கவனம் செலுத்தியிருக்கலாமோ… (இப்ப ரொம்ப முக்கியம்!)

எத்தனை இடங்களில் பிரிக்கமுடியுமோ பிரித்துவிட்டேன்; அத்தனையும் மீறி இத்தனை இடங்களில் தளைதட்டிய ஒன்றை வெண்பா என்று பேராசிரியர் பாராட்டித் தள்ளினார். இவர்கள்தான் கமலின் வளர்ச்சிக்குப் பிரச்சினை.

இதற்கு மேல் நான் தனியாகச் சொல்ல ஒன்றும் இல்லை. வெண்பாவில் நாட்டம் உள்ளவர்கள் இந்த ஈற்றடிக்கு மேலும் சில வெண்பாக்களை எழுதலாமே!

வெண்பா எழுத ஆசை இருக்கிறது ஆனால் எப்படி என்று தெரியவில்லையே என்று சொல்லுபவர்கள் உடனடியாக இங்கு செல்லவும்! :)

15 comments:

said...

ராஜராஜசோழன் ஏன் கல்வெட்டு வெட்டினான்னு வெண்பா எழுதினா சமகால அரசியல்னு நீ பண்றதுதான் சமகால அரசியல்!

said...

கமலோட வெண்பாவில் முதல் வார்த்தை மகதலினா என்று இரா முருகன் பேஸ்புக்கில் சொன்னார்.

said...

இல்லாத கடவுளரை இவர் ஏசுவார்
பொல்லாத பொய்யுமென புறம் பேசுவார்
சொ‌ல்லாது முன்னோர்கள் கண‌ம் கண்டவோர்
கல்லுஞ் சொல்லாதோ கதை

இது "பா"வா இல்ல "பாம்"ஆ?

said...

எனக்கு ஒரே குழப்பமாகீது!

புரியுது ஆனா புரியல

said...

மகதலினாவையும் அகலிகையும் முடிச்சுப் போட்டது அழகா இருக்கு. ஆனா அது வெண்பாவா இல்லை. யாரேனும் சரியானபடி அசை பிரிச்சு வெண்பாதான்னு சொல்லறாங்களான்னு பார்க்கலாம்.

said...

லதாமகன்,

இப்போதைக்கு இது பாம் மாதிரின்னு வெச்சுக்கலாம்.

வெண்பாவா வர தளைதட்டாம இருக்கணும். அதுக்கு வெண்பா விதிகள் தெரியணும்.

அதுக்கு..... ஹிஹி....

said...

தம்பி சிவா,

இப்போ என்ன புரியுதுன்னு சொல்லு. அதை வெச்சு புரியாததை எப்படி புரிய வைக்கலாமுன்னு பார்க்கறேன்.

said...

அண்ணே பெனாத்தல்

ராஜராஜன் கல்வெட்டு வெட்டினானா? எப்போ!! :)

இருந்தாலும் இப்படி எதுனா எஸ்கேப் ரூட்டு வெச்சு இருப்பீருன்னு நினைச்சேன்.

said...

இது என் முதல் முயற்சிதான்.
கண்டிப்பா இதுலே நகாசு வேலை செய்யணும்..

கடன்பட்டு கடன்காரங்க சொன்ன சொல்லுக்கெல்லாம் //
உடன்பட்டு ஒரு சிறிய வீட்டைக் கஷ்டப்பட்டு //
அல்லும்பகலுமாய் கட்டியதை அங்கிருக்கும் ஒவ்வொரு //
கல்லுஞ் சொல்லாதோ கதை

said...

கமல் வெண்பா பத்தி பேசிட்டு இருக்கும் போதே, இலவசம் நினைப்புதான் வந்திச்சு. அது மாதிரியே இங்க பொளந்து கட்டியிருக்கீங்க. எஞ்சாய்ட்!

said...

வெண்பா பத்தி பேசிக்கிட்டிருக்கீங்கன்னு புரிஞ்சுது! :) டிரெயினிங்கெல்லாம் எடுத்துக்கிட்டு அப்பாலிக்கா வந்து பார்க்குறேன் !

//வெண்பா வாத்தி ஜீவ்ஸைப் பிடித்தேன். வேலை இருக்கிறதப்பா என்றவர்//

அடடே!!! :)

said...

ஜெய்ஸ்ரீ எழுதினதைப் படிச்சுட்டு, உங்க பேரைப் பார்த்து இங்க வந்தால் இன்னும் சந்தோஷம்.
அந்த நிகழ்ச்சி வந்தபோது பேத்தி ரிமோட்டைக் கீழ போட்டதால் , தப்பித்தேன். வெண்பா எழுதவோ விருத்தம் எழுதவோ.. இதெல்லாம் மிட்லைஃப் க்ரைசிஸ்னு வச்சுக்கலாம்.இப்ப நானெல்லாம் வலைப்பூ வைத்திருக்கிற மாதிரி:)
மனம் நிறைந்த பாராட்டுகள் கொத்ஸ். என் பின்னூட்டம் புரியவில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பெடுத்துக்கறேன். எழுத வந்த சப்ஜெக்ட் அப்படி:)

said...

நெசமா கேக்குறேன், கடவுள் எதிரே வந்து "வரம் கேள்" ன்னா உடனே நிரை நேர் புளி மா ன்னுதான் மனசிலே படுமா?
ஹும்! வெண்பா எழுத ஆசை இருக்கு; எப்ப நடக்குமோ!
:-)))))))

said...

தொல்லைக் காட்சியை சாதாரண நாட்களிலேயே பார்க்கிறது இல்லை, நல்ல வேளை, பிழைச்சோம் தீபாவளி அன்னிக்கு தொல்லை காட்சிக்கு ரெஸ்ட்!

said...

இங்கன என்னா நடக்குது? முழுக்க படிச்சிட்டு திரும்ப வ‌‌ேர‌ன்.