Friday, December 31, 2010

ஜே ஜே இல்லாத குறிப்புகள்!

படிக்கும் நல்ல நெஞ்சங்களுக்கு என் உள்ளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். எல்லா செல்வங்களும் சந்தோஷங்களும் உங்களைச் சேரட்டும்.

இந்த வாரம் தமிழ் பேப்பரில் சில எழுத்துப்பிழைகள், சில வார்த்தைகளின் மூலம் என வழக்கம் போல் எழுதி இருந்தாலும் ரஜினி பட பாடல் ஒன்றைப் பற்றிச் சொல்லப் போக அதற்கு அவர்கள் போட்ட படம் பற்றித்தான் பேச்சு அதிகமாக இருக்கிறது. படிக்க கீழே இருக்கும் உரலைச் சுட்டிப் பார்க்கவும்.


மன் மதன் அம்பு படம் பார்த்தோம். எல்லாரும் படம் சகிக்கவில்லை என்று சொல்லிவிட்டதால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றதினாலோ என்னவோ படம் அந்த அளவு மோசமாகத் தெரியவில்லை.

கமலின் மிகச்சிறந்த ஆக்கமா என்றால் இல்லைதான். க்ரேஸி மோகன் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமா என்றால் இருந்திருக்கும்தான். திரைக்கதையில் அபத்தமான ஓட்டைகள் இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஈழத்து டாக்ஸி ட்ரைவர், மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் என்று கமல் தனக்குத் தெரிந்ததைக் காட்ட வகையாக நுழைத்தப்பட்ட கேரக்டர்கள் இருக்கிறதே என்றால் இருக்கிறதேதான். அதே கமலின் அஜெண்டா திணிப்புகளாக காதலியுடன் இருக்கும் பொழுது பகுத்தறிவு பிரச்சாரமும் அரசியல் வசனங்களும் இருக்கிறதே என்றால் இருக்கிறதேதான். ஊர்வசியும் ரமேஷ் அரவிந்தும் வேஸ்ட் செய்யப்பட்டு இருக்கிறார்களே என்றால் இருக்கிறார்களேதான்.

ஆனால் சமீபகால நேட்டிவிட்டி என்ற பெயரில் தரப்படும் திராபை இல்லாமல், குத்துப் பாட்டு ஆபாச நடனங்கள் இல்லாமல், அடிதடி சண்டைகள் இல்லாமல், ரத்தக் களறி இல்லாமல், காமெடி என்ற பெயரில் நடத்தப்படும் அபத்தக் கூத்துகள் இல்லாமல், மூளையை ஆப் செய்துவிட்டு குடும்பத்துடன் உட்கார்ந்து சிரித்துவிட்டு வர முடிகிறது. பஞ்சதந்திரம், பம்மல் கே ரேஞ்சில் இல்லாவிட்டாலும் ஒரு முறை பார்க்கக்கூடிய தரத்தில்தான் இருக்கிறது.

கமல் தொப்பையும் தொந்தியுமாக ஆகிவிட்டார். இனிமேல் வயதுக்கேற்ற கேரக்டர்கள் செய்வது நலம். மனைவியை இழந்தவராக வருவது, மனைவி மகள் என்று யாரேனும் இறக்கும் பொழுது ஒரு ட்ரேட்மார்க் அழுகையுடன் அழுவது போன்றவற்றில் இருந்து சீக்கிரம் வெளிவருதல் நலம். கே எஸ் ரவிக்குமாரை படத்தில் காணவே இல்லை. எல்லாருக்கும் அவரவர் இடத்தைக் கமல் தர வேண்டும். இசை பற்றிப் பேசாமல் இருப்பதே எல்லாருடைய ரத்த அழுத்தமும் ஏறாமல் இருக்க ஏதானது. இளையராஜாவுடன் சேர்வதினால் ஆய பயன் யாதெனின் என்று கமல் யோசிக்க வேண்டும்.

பெரும்பாலும் இணையத்தில் நன்றாக இருக்கும் படங்கள் எனக்குப் பிடிக்காமல் போவதும் (அஞ்சாதே, பசங்க, இன்னும் பல), மட்டம் என்று விமர்சிக்கப் படும் படங்கள் (மும்பை எக்ஸ்ப்ரெஸ்) பல எனக்குப் பிடிப்பதும் எப்பொழுதும் நடப்பதுதான். புவிவெப்பமயமாதலினால் இதில் மாற்றமெதுவும் இல்லை. நல்லது.

Comfort Fabric Softner, V Guard Stabilizer போன்ற எழுத்துப்பிழைகளுடான விளம்பரங்களும், ஷாரூக் கானின் குரலில் தமிழும் வராத விளம்பரங்களும் வரும் வருடமாக 2011 இருக்கப் பிரார்த்திப்போம்.

பிகு: இன்று படம் பார்க்க எங்கள் குடும்பத்துடன் வேறு மூன்று குடும்பங்கள் மட்டுமே அரங்கில் இருந்தனர். எனவே ஜே ஜே எனக் கூட்டம் இல்லாத என்று தலைப்பைப் படித்துக் கொள்ளவும்.

21 comments:

said...

//ஷாரூக் கானின் குரலில் தமிழும் வராத விளம்பரங்களும் வரும் வருடமாக 2011 இருக்கப் பிரார்த்திப்போம்//

:)
வாழ்த்து சொல்லுறதில் கூட நுண்ணரசியலா? :)

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கொத்ஸ்!

said...

//ஈழத்து டாக்ஸி ட்ரைவர், மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் என்று கமல் தனக்குத் தெரிந்ததைக் காட்ட வகையாக நுழைத்தப்பட்ட கேரக்டர்கள் இருக்கிறதே என்றால் இருக்கிறதேதான்//

//அதே கமலின் அஜெண்டா திணிப்புகளாக காதலியுடன் இருக்கும் பொழுது பகுத்தறிவு பிரச்சாரமும் அரசியல் வசனங்களும் இருக்கிறதே என்றால் இருக்கிறதேதான்//

நீங்க படம் பார்க்க போனீங்களா? இல்லை கமல் பார்க்கப் போனீங்களா? :)

அதைப் பொறுத்தே மேற்கண்ட "இருக்கிறதே" ஆச்சர்யக் குறி/ஆச்சரியமில்லாக் குறி! :)

said...

//இளையராஜாவுடன் சேர்வதினால் ஆய பயன் யாதெனின் என்று கமல் யோசிக்க வேண்டும்//

கொத்தனார் நோட்ஸ் என்பது இது தானோ? :)

said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

said...

இந்தப் புத்தாண்டு அனைவருக்கும்
நல்லாண்டாய் திகழ்ந்திட இறைவனிடம்
இறைஞ்சுகிறேன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

said...

எனக்கும் மும்பை எக்ஸ்ப்ரெஸ் ரொம்பப் பிடிச்சது.

அதில் அந்தக் குண்டுப்பையன் சூப்பர்!!!!

ஆமாம்....முக்கால்வாசி....கமல் படங்களில் கடைசி க்ளைமேக்ஸ் ஏன் கார் ச்சேஸாவே இருக்கு....

said...

ரங்கமணிக்கு தங்கமணி உறவினரா இ.கொ?

said...

ரொம்பத்தான் தான் போட்டு இருக்கீங்க. அதனால குழம்பு கூட்டு ஆயிருச்சு போல இருக்கு!

said...

Comfort Fabric Softner,
இது தப்பு சரி. Softener ன்னு இருக்கணும்ன்னு ஸ்பெல் செக் சொல்லுது. V Guard Stabilizer ல என்ன பிரச்சினை? அமெரிக்க ஸ்பெல்லிங் சரி போல இருக்கே?

said...

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்!

said...

/வாழ்த்து சொல்லுறதில் கூட நுண்ணரசியலா? :)/

இதுல நுண்ணரசியல் எல்லாம் இல்லை தல. அந்த விளம்பரத்தைக் கேட்டீங்கன்னா தெரியும்.

said...

/நீங்க படம் பார்க்க போனீங்களா? இல்லை கமல் பார்க்கப் போனீங்களா? :)/

கமல்ப் படம் பார்க்கப் போனேன்!

said...

/கொத்தனார் நோட்ஸ் என்பது இது தானோ? :)/

படிச்சால் நல்லதுதானே!

said...

/புத்தாண்டு வாழ்த்துகள்./

உங்களுக்கும்,

நீங்கள் தமிழ் பேப்பரில் கேட்டு இருந்தது ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டதே. பழைய இதழ்களைப் பாருங்கள்.

said...

/உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!/

உங்களுக்கும் என் வாழ்த்துகள் நிஜாமுதீன்.

said...

/எனக்கும் மும்பை எக்ஸ்ப்ரெஸ் ரொம்பப் பிடிச்சது.

அதில் அந்தக் குண்டுப்பையன் சூப்பர்!!!!

ஆமாம்....முக்கால்வாசி....கமல் படங்களில் கடைசி க்ளைமேக்ஸ் ஏன் கார் ச்சேஸாவே இருக்கு..../

குண்டுப் பசங்க எல்லாருமே ஜூப்பருதானுங்கோ ரீச்சர்!! :)

கமலும் கார்ச்சேஸும் அப்படின்னு ஒரு முனைவர் பட்ட மெட்டீரியல் ரெடியா இருக்கு!! :)

said...

/ரங்கமணிக்கு தங்கமணி உறவினரா இ.கொ?/

ரே!!

said...

/ரொம்பத்தான் தான் போட்டு இருக்கீங்க. அதனால குழம்பு கூட்டு ஆயிருச்சு போல இருக்கு!//

குழம்போ கூட்டோ, டேஸ்ட் நல்லா இருந்தாச் சரி!!

said...

/Comfort Fabric Softner,
இது தப்பு சரி. Softener ன்னு இருக்கணும்ன்னு ஸ்பெல் செக் சொல்லுது. V Guard Stabilizer ல என்ன பிரச்சினை? அமெரிக்க ஸ்பெல்லிங் சரி போல இருக்கே?/

இல்லை திவா. பிரச்சனை இங்க இல்லை. இவங்களோட தமிழ் விளம்பரங்களில் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள்.

said...

/இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்!/

மகேஸ்வரன், உங்களுக்கும் என் வாழ்த்துகள்.

said...

ஓ தமிழ் விளம்பரங்களில தவறுகளா? அது நிறைய பாத்து இருக்கேனே!