Showing posts with label கர்நாடக சங்கீதம். Show all posts
Showing posts with label கர்நாடக சங்கீதம். Show all posts

Sunday, October 14, 2018

இருட்டுக்கும் குரல் உண்டு....




சமீபத்தில் நியூஜெர்ஸியில் நடந்த கச்சேரியில் பாடகர் டிஎம் கிருஷ்ணா அவர்கள், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய பாடல் ஒன்றை ரீதிகௌளை ராகத்தில் பாடினார். சுவாரசியம் அப்பாடலின் பாடுபொருள். 


பொதுவாக கர்நாடக இசையில் பெரும்பாலும் பக்தி சார்ந்த பாடல்களே பாடப்பெறும். மிகக் குறைவான அளவில் ஜாவளி போன்ற வடிவங்களில் காதற் பாட்டுகள் இடம் பெறும். அல்லது கச்சேரியின் இறுதிப் பகுதியில் பாரதியார் பாடல்கள் போன்ற நாட்டுப்பற்று பாடல்கள் இடம் பெறும். இவ்வகையில் இல்லாத பாடல்கள் மிகவும் அரிதே. 

இந்தக் கச்சேரியில் பாடிய பாடல் ஒரு பறவையைப் பற்றிய பாடல். அதுவும் பொதுவாக அதிகம் பேசப்படாத ஆந்தையைப் பற்றிய பாடல். ஆந்தையும் கண்கள் பற்றியும் அதன் அலறல் பற்றியும் அழகாக எழுதப்பட்ட இந்தப்பாடலை பாடிக் கேட்கும் பொழுது அத்தனை அற்புதமாக இருக்கிறது.  உடன் வாசிக்கும் கலைஞர்கள் ஶ்ரீராம்குமாரும், அருண்பிரகாஷும் இப்பாடலின் தன்மையை உணர்ந்து வெகு அழகாக வாசித்தனர். குறிப்பாக இருளின் தன்மையைக் கொண்டு வர மிருதங்கத்தில் ஒரு பக்கம் மட்டும் கொண்டு அருண்பிரகாஷ் வாசித்த இடங்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். இந்தப் பாடலுக்கு மெட்டமைத்தவர் டிஎம் கிருஷ்ணா. 

ஆந்தை மட்டுமல்லாது மேலும் சில பறவைகள் மேல் பாடல் புனைந்திருப்பதாக பெருமாள் முருகனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சொன்னார். அவையும் விரைவில் மேடை ஏறும் என எதிர்பார்க்கிறேன். தற்பொழுது பாடப்படும் பாடு பொருளினால் கர்நாடக இசையினுள் வரத் தயக்கம் கொண்டோரை உள்ளே இழுக்க இது அற்புதமான வழி. தொடர்ந்து பல கலைஞர்களும் இது போன்ற பாடல்களைப் பாட முன் வர வேண்டும். 

இப்பாடலின் தனித்தன்மையை உணர்ந்து இதனை எல்லாரும் கேட்க வகை செய்த CMANA இயக்கத்தினருக்கு என் நன்றி. 



ஆந்தைப் பாட்டு

பல்லவி
இருட்டுக்கும் குரலுண்டு
ஆந்தையின் அலறலது
பொருட்டாக்கிக் கேட்டால் பல
பொருளுணர்த்தும் மொழியாகும் (இருட்டுக்கும்)

அனுபல்லவி
இருளின் கனத்தை உடைத்து
பெருத்த அமைதி கலைத்துத்
தரும்பயம் போக்கிப் பேசும் (இருட்டுக்கும்)

சரணம்
உருட்டி விழிக்கும் கண்கள்
உருளும் பந்தாய் மிளிரும்
விருட்டென்று வாய்திறந்து
மருட்டி அலறி ஒலிக்கும்
விரித்து மனதைத் திறந்தால்
சிரிக்கும் குழந்தைக் குரல்போல்
இருளை உருக்கி நெஞ்சில்
முருகு பெருக்கி வளர்க்கும் (இருட்டுக்கும்)


Monday, November 12, 2007

ஸ்ருதி சேரா சங்கீதம்

இதனை எழுதும் பொழுது பேசாப் பொருளைப் பேச துணிந்த உணர்வு எனக்கு. எழுத வேண்டுமா வேண்டாமா? இதனை நான் எழுதுவதை இசை ஆர்வலர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? தெரியவில்லை இருந்தாலும் எழுதுகிறேன். கர்நாடக சங்கீதம் ஒரு சிறந்த நுண்கலை, அதிலும் கடந்த பத்து இருபது வருடங்களில் பலருடைய பங்களிப்பால் வெகுவாக வளர்ந்து வரும் கலை. கடந்த சில வருடங்களாக இதில் சாதி மத ரீதியாக இருக்கும் பாகுபாடுகள் பற்றி பலர் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். இது பொதுவாக சமுதாயத்தில் காணப்பட்ட பாகுபாடுகளின் பிரதிபலிப்புதான். அதே சமயம் சாதி மதங்களைத் தாண்டி சில மிகப் பெரும் இசையாளர்களிடையே குரு சிஷ்ய உறவோ அல்லது பாடுபவர்கள், உடன் வாசிப்பவர்கள் என்ற உறவோ உறுதி பெற்று இருந்ததைப் பற்றிய புரிதலும் நம்மிடையே முழுதாக இல்லை.

ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி இன்று நம் கண் முன் தென்படும் ஒரு மிகப் பெரும் பாகுபாடு கர்நாடக சங்கீத உலகில் பெண்களுக்கு எதிராக நடத்தப் படும் பாகுபாடுதான். நேரடியாகச் சொல்ல வேண்டுமானால் அன்றும் சரி இன்றும் சரி தாங்கள் ஒரு பெண் பாடகருக்கு உடன் வாசிப்பதையோ அல்லது தனக்கு ஒரு பெண் கலைஞர் உடன் வாசிப்பதையோ மறுக்கும் கலைஞர்கள் அனேகம் பேர். முற்காலத்தில் இருந்த சமுதாய கட்டுப்பாடுகளும், அன்று இருந்த மனத்தடைகளும் பெண்களுக்கு சுதந்திரம் தராத நிலையில் இது போன்ற சூழம் ஏற்பட்டிருக்கிறது. இத்தடைகளை மீறி வந்தவர்கள்தான் இத்துறையில் வெற்றி பெற்ற பெண் கலைஞர்கள். ஆனால் இந்த பாகுபாடும் இன்றைய தலைமுறையினர் மட்டுமல்லாது அடுத்த தலைமுறையிடமும் பரவி வருவதுதான் வேதனை.

இன்று பல ஆண் கலைஞர்கள் தமக்கென ஒரு பெயர் கிடைக்கும் வரை பெண் கலைஞர்களுக்கு உடன் வாசிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. இன்னும் பச்சையாக சொல்ல வேண்டுமானால் தன்னை ஆண் கலைஞர்கள் உடன் வாசிக்க அழைக்கும் வரை பெண்களுடன் மேடையை பகிர்ந்து கொள்கிறார்கள். சிலர் தான் இனி பெண்களுக்கு பக்க வாத்தியமாக செல்லப் போவதில்லை என்ற தீர்மானத்தை பெருமையுடனே சொல்லிக் கொள்கின்றனர். இத்தகைய தீர்மானங்களை வரவேற்கும் விதமாகவே இன்றைய சூழ்நிலை இருக்கிறது. இதற்குப் பின்னால் பெரிதாக அரசியல் அல்லது சமுதாயக் காரணங்கள் எல்லாம் இல்லை. தனக்கு வாய்ப்புகள் தேவை என்ற வரையில் பெண்களுடன் வாசிக்கத் தயங்காத இவர்கள் தமக்கென ஒரு பெயர் வந்த பின் பெண் கலைஞர்களைக் கழற்றி விட்டு விடுகின்றனர். இன்று எல்லா இடங்களிலும் இருக்கும் வேலை முடிந்த பின் தூக்கி எறிந்து விடும் (Use and Throw) கோட்பாடுதான் இங்கேயும் கடைபிடிக்கப் படுகிறது.

இதுவே பெண் பக்க வாத்திய கலைஞர்களை எடுத்துக் கொண்டால், ஆண் கலைஞர்களுக்கு இணையான தகுதி இருந்தாலும் தமக்கு ஆண் பாடகர்கள் சரியான வாய்ப்பு தரவில்லை என்பது இவர்கள் குறை. இவர்கள் பெண்கள் என்பதாலே இவர்களுக்கு வாய்ப்பு குறைவது உண்மைதான். ஒரு ஆண் பாடகராக நான் இதற்குச் சொல்லக் கூடிய ஒரே காரணம் - ஆண் ஆதிக்க மனப்பான்மை!

இதுக்கு ஆண் கலைஞர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும்? அதிக அளவில் கூறப்படக் கூடிய காரணம் - பெண்களின் ஸ்ருதி மிகவும் மேல்ஸ்தாயியாக இருப்பதால் வயலினாகட்டும் மிருதங்கமாகட்டும் அந்த ஸ்ருதியில் நன்றாக ஒலிப்பதில்லை என்பதுதான். மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது ஒரு சரியான காரணமாக இருந்தாலும் கொஞ்சம் யோசித்தால் இதன் அபத்தம் புரியும். இவர்கள் முதலில் பெண்களுக்கு வாசிக்கும் பொழுது இது ஒரு பொருட்டாகத் தெரியவில்லையா? அல்லது ஆண் பாடகர்களில் மேல்ஸ்தாயியில் பாடுபவர்களுக்கும், பல விதமான கருவிகள் வாசிப்பவர்களுக்கும் இவர்கள் வாசிப்பதில்லையா? அப்பொழுது இது ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லையா? ஆக இந்த காரணம் சரியான ஒன்றாகத் தோன்றவில்லை.

மற்றொரு பிரபலமான காரணம் ஒரு பெண் பாடகரின் கச்சேரி நல்ல விதமாக நடந்தால் அதற்கான பெருமை அந்த பெண் கலைஞருக்கே போய் சேருகிறது என்றும் தான் எவ்வளவு நன்றாக வாசித்தாலும் தமக்கு எந்த விதமான பெருமையும் வருவதில்லை என்பார்கள். இது ஆண் பாடகர்களுடன் வாசிக்கும் பொழுதும் நிகழக்கூடியதுதானே? அப்பொழுது மட்டும் பரவாயில்லையா? பொதுவாக பெண் பாடகர்களுக்கு பக்க வாத்தியம் வாசித்தால் தமக்கு அந்தஸ்து கிடைப்பதில்லை என்றும் மேலும் ஒரு படி சென்று பெண் பாடகர்களுக்கு வாசிக்காவிட்டால்தான் தனக்கு அந்தஸ்து என்றும் கூடச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் இது ஒரு சரியான அணுகுமுறையே இல்லை. அந்தஸ்து என்பது ஒருவரது திறமையை சக கலைஞர்களும் பொது மக்களும் உணர்ந்து கொள்வதால் வருவதே தவிர யாருக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறார்கள் என்பதால் இல்லை.

இன்னும் சொல்வார்கள் பெண் கலைஞர்களுக்கு வாசிக்கும் பொழுது சுதந்திரமாக வாசிக்க முடிவதில்லை என்று. இதற்கு என்ன அர்த்தம்? ஒரு குறிப்பிட்ட முறையில் வாசிக்க வேண்டும். அது பெண் பாடகிகளோடு வாசிக்கும் பொழுது முடிவதில்லை. அதனால் என்ன? ஆண் பாடகர்களில் பல விதமாக பாடுபவர்கள் இல்லையா? அதற்கு ஏற்றால் போல் வாசிக்க முடியும் பொழுது இப்படி வாசித்தால் மட்டும் தவறா? பாடகர்கள், அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தாங்கள் உடன் வாசிப்பவர்களை உத்தேசித்து தாங்கள் பாடும் விதத்தை சிறிதே மாற்றிக் கொள்வது இல்லையா? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இதெல்லாம் இயற்கையான சிறு மாற்றங்கள்தானே?

அடுத்ததாக பெண்கள் ஏன் ஆண்கள் போல் பாட வேண்டும்? ஒரு காலத்தில் பெண் பாடகிகளுக்கு கிடைக்கப் பெற்ற பெரும் பாராட்டு அவர்கள் ஆண்கள் போல் பாடுகிறார்கள் என்பதாகும். என்னளவில் இது ஆண் ஆதிக்கத்தைப் பறைசாற்றும் கடும் சொற்கள் இவை. பெண்களின் இசை ஆண்களின் இசையை விட வித்தியாசமாகத்தான் இருக்கும், இருக்கவும் வேண்டும். நாம் இந்த வித்தியாசத்தைப் போற்ற வேண்டும். ஆகையால் பெண் பாடகர்களுக்கு உடன் வாசிக்கும் பொழுது பக்க வாத்தியக்காரர்களும் வித்தியாசமாகத்தான் வாசிக்க வேண்டும். பெண் பாடகர்களுக்கு ஆண்களை ஒத்த இசை ஞானம் இருப்பதை மறுக்க முடியாது. இதனை எந்த ஆண் பக்க வாத்தியக்காரரும் மறுக்கவும் மாட்டார்கள். இது சரி இல்லை எனச் சொன்னால் ஆண் கலைஞர்கள் பெண் கலைஞர்களை விட அதிக திறமையும் ஞானமும் உடையவர்கள் என ஆகி விடும். இது நம்பக்கூடிய விஷயமா என்ன?

பெண் பாடகர்கள் ஆண் பக்க வாத்தியக்காரர்களை சரி வர நடத்துவதில்லை என்பது என்னிடமே சிலர் சொல்லி இருக்கும் ஒரு குற்றச்சாட்டு. அதையும் பார்க்கலாம். ஒரு பக்கவாத்தியக்காரரிடம் ஒரு ராகத்தை மேலோட்டமாகவோ அல்லது தனியா வாசிக்கும் நேரத்தைக் குறைக்கச் சொன்னாலோ அது தவறுதான். அதைச் செய்தது ஆண் பெண் என்ற பேதமே கிடையாது. ஆனால் இதை ஒரு பெண் செய்தால் அது பெருங்குற்றமாக கருதப்படுகிறது. நான் ஒரு ஆண் பக்கவாத்தியக்காரரிடம் இப்படி ஒரு உதவி கேட்டால் அது கோரிக்கை ஆனால் அதுவே ஒரு பெண் பாடகர் கேட்டால் அது தவறு எனப் பார்ப்பது சரியா? இதையே நான் பாடும் பொழுது என்னுடன் வாசிக்கும் ஒரு பெண் பக்க வாத்தியகாரரிடம் இப்படி நடந்து கொண்டால் அது தப்பு இல்லையா? இது போன்ற தவறுகளை இரு பாலருமே செய்யலாம். அது யார் செய்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது. இதுதான் நான் சொல்ல வருவது.

ஒரு பெண் பக்கவாத்தியக்காரருக்கு ஆண் பக்கவாத்தியக்காரர்கள் அளவிற்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. நல்ல திறமையுள்ள பெண் கலைஞர்களை உதாசீனப்படுத்துவதற்கு எந்த விதமான காரணமும் கிடையாது. ஆனால் இன்று பெண்களுக்கு வாசிக்காத ஆண் கலைஞர்களைத்தான் நமக்கு பக்கவாத்தியம் வாசிக்க விரும்புகிறோம். இது ஒரு மடத்தனமான மனோநிலை என்பதைத் தவிர என்ன சொல்ல? நம்மால் திறமையுள்ளவர் என கணிக்கப்பட்ட அனைவரையும் நாம் அரவணைத்துச் செல்ல வேண்டும். ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல். இதுதான் என் நிலைப்பாடு.

இவ்வளவு எல்லாம் பேசுகிறானே, இவன் ஒரு பக்கவாத்தியக்காரனா? இவனுக்கு என்ன தெரியும்? என்ற கேள்விகள் வரும். நியாயமான கேள்விதான். அதற்கு நான் சொல்லும் பதில் ஒன்றுதான். சில பெண் பாடகர்கள் பாடிக் கேட்கும் பொழுது இவர்களுக்கு ஒரு நாளாவது நாம் பக்கவாத்தியம் வாசிக்கும் பாக்கியம் கிடைக்காதா என நினைப்பேன் என்பதுதான். அது மட்டுமில்லாமல் எனக்காக எத்தனையோ பெண் பக்கவாத்தியக்காரர்கள் வாசித்து இருக்கின்றனர். அவர்கள் எனக்கு வாசித்த ஆண் பக்கவாத்தியக்காரர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதைச் சொல்வதிலும் எனக்குத் தயக்கம் கிடையாது.

நாம் எடுக்கும் நிலைப்பாடுகள் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அதற்கான விடைகள் நம்முள்ளேயே கிடைக்கும். இதைப் பற்றிப் பேசப் படுவதே விலக்கப்பட்ட ஒன்றாக இருப்பதற்கான காரணம் என்ன? தான் செய்வதில் தவறொன்றும் இல்லை என்ற நம்பிக்கையினால்தான் இது பற்றி பொது இடங்களில் பேசுவதை ஆண்கள் விரும்புவதில்லையா? படித்த நம்மால் நம் நம்பிக்கைகள் பற்றி தைரியமாக பேச முடியாதா? அதைவிட நாம் செய்வது தவறு என்ற புரிதல் வரும் பொழுது இதுவரை செய்தது தவறென்று ஒத்துக் கொள்ள முடியாதா? இந்த விஷயத்தில் நம் நிலைப்பாடு தவறென்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

இதெல்லாம் நான் எழுதினது இல்லை. பிரபல கர்நாடக சங்கீதப் பாடகர் திரு டி.எம்.கிருஷ்ணா சமீபத்தில் ஹிந்து நாளிதழில் எழுதிய ஒரு கட்டுரையின் தமிழாக்கம். உங்கள் கருத்தையும் பின்னூட்டத்தில் சொல்லி விடுங்களேன்!

Sunday, June 03, 2007

அந்தரிகி வந்தனமு!!

எந்தரோ மஹானுபாவுலு, அந்தரிகிவந்தனமு! இந்நாட்டின் உயரிய மாந்தர்களுக்கு என் வணக்கங்கள்! (வேணுமுன்னா இந்த வலையுலகின் அப்படின்னு வெச்சுக்கலாமா?)

அப்பாடா!! ஒரு வாரம் ஆயிடுச்சுங்க. எனக்கே இப்படி இருந்தா உங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நமக்கெல்லாம் இந்த ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் போடறது எல்லாம் ஒத்து வரலைங்க. எழுத ஆரம்பிச்சு இவ்வளவு நாள் ஆச்சு. இன்னும் 100 போஸ்ட் கூட போடலை. இந்த சற்றுமுன் பார்ட்டிங்க எல்லாம் என்னடான்னு 83 நாட்களில் சகத்திரம் போஸ்டுங்களாம். நமக்கெல்லாம் அந்த ஸ்ட்ரைக் ரேட் ஒத்து வராது. இனிமே இந்த மாதிரி ஒரு நாளுக்கு ஒண்ணுன்னு எல்லாம் சொன்னா ஒரு தடவைக்குப் பத்து தடவை யோசிக்கணும்.

அதுவும் பின்னூட்டங்களை வெளியிடறதும், அதற்குப் பதில் சொல்லறதும், அடுத்த பதிவு எழுதறதும், வழக்கம் போல மத்தவங்க பதிவுகளுக்குச் சென்று உள்ளேன் ஐயா என்பதுமாக மூச்சு முட்டி விட்டது. இனி ஒரு நாள் கூட தாங்கியிருக்காது என்றே நினைக்கிறேன். நல்லபடியாக ஒரு வாரம் ஓட்ட முடிந்ததே பெரிய விஷயம்.

மீள் பதிவு பண்ணியாச்சு, பயணக் கட்டுரை எழுதியாச்சு, சமையல் குறிப்பு போட்டாச்சு, புதிர் போட்டி, வெண்பா விளையாட்டு எல்லாம் விளையாடியாச்சு. நேயர் விருப்பத்தில் மீதி இருப்பது ஒரு இசைப் பதிவுதான். கச்சேரியில் மங்களம் பாடுவது மாதிரி நம்ம நட்சத்திர வாரத்தின் இறுதி பதிவாக ஒரு இசைப் பதிவு போடலாம் என்று எண்ணிய போது வந்தது மங்களம் பாடுவதைப் போட்டே நிறைவு செய்து விடலாமே என்ற இந்த ஐடியா.

பொதுவாக நாம் 'நீ நாம ரூபமுலகு' எனத் தொடங்கும் மங்களத்தைத்தான் பாடிக் கேட்டு இருப்போம். சில கலைஞர்கள் வேறு மங்கள பாடல்கள் பாடிக் கேட்டதே இல்லை. ஆகவே நாமும் அந்த பாடலையே முதலில் கேட்போம். சௌராஷ்ட்டிர ராகம், ஆதி தாளத்தில் அமைந்த இந்த பாடல் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியகராஜரால் இயற்றப் பெற்றது.
Get this widget | Share | Track details


ஆனால் இது தவிர வேறு பல பாடல்கள் கூட ஒரு கச்சேரியின் இறுதியில் பாடப்பட்டு இருக்கின்றன. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் இது போன்று பல பாடல்களைப் பாடுவார் என நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். தற்பொழுது இளைஞர்களில் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் இப்படி வித்தியாசமான பாடல்களை தொடர்ந்து மங்களமாக பாடி வருகிறார்.



அவர் பாடியவைகளில் இருந்து எனக்குப் பிடித்த இரண்டு மங்களப் பாடல்களைக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலாவது பாடல் 'ராமசந்த்ராய ஜனக' எனத் தொடங்கும் குறிஞ்சி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த பத்ராசலம் இராமதாஸ் இயற்றிய பாடல். ஒரு கச்சேரியின் முடிவில் ஆரவாரமாக வரும் இந்த பாடலை கேட்கும் போதே ஒரு குஷி வரும் பாருங்கள்.

Get this widget | Share | Track details


அடுத்தது 'புஜகசாயினோ' எனத் தொடங்கும் யதுகுலகாம்போதி ராகம் ரூபக தாள பாடல். இப்பாடலை இயற்றியவர் சுவாதித் திருநாள் அவர்கள். ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போன்ற உணர்வினைத் தரும் இப்பாடலைக் கேட்டுப் பாருங்களேன்.


Get this widget | Share | Track details


அப்புறம் தமிழ்ப் பாடல்கள் இல்லையா என்று கேள்விகள் எல்லாம் வேண்டாமே என மத்யமாவதி ராகத்தில் அமைந்த நம் பாரதியார் பாடல் ஒன்று. வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு. வந்தே மாதரம். வந்தே மாதரம். வந்தே மாதரம்.

Get this widget | Share | Track details


இந்த மங்கள பாடல்களோடு நான் எனது நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன். இந்த வாய்ப்பைத் தந்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கும், வாழ்த்தி ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும், உப்புமா பதிவுக்கு உறுதுணையாக இருந்த பெனாத்தலாருக்கும் எனது நன்றிகள். அப்புறம் ரொம்ப முக்கியமாக இந்த வாரம் பூராவும் நம்மளை ஃப்ரீயாக (சிலேடை!!) விட்ட தங்கமணிக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

இது போன்று இந்த நான்கு பாடல்களைப் போடப் போகிறேன் எனச் சொல்லி அனுமதி கேட்ட உடன் சிறிதும் யோசிக்காமல் தன் சம்மதத்தைத் தந்த கிருஷ்ணா அவர்களுக்கு என் நன்றிகள்.

பட உதவி : திரு. ஹரிஹரன் அவர்கள்.