இன்று ஜூன் 1, இன்றைக்குப் போய் குழந்தைகள் தினமென சொல்கிறானே இந்த கிறுக்கன் அது நவம்பர் 14ஆம் தேதி நேரு பிறந்தநாள் அன்றல்லவா வரும் என என்னை விநோதமாகப் பார்த்தீர்களானால் நீங்கள் மேற்கொண்டு கட்டாயம் படிக்க வேண்டும். ஏனென்றால் வேறு சில நாட்களைப் போல் இல்லாமல் குழந்தைகள் தினம் உலகின் பல பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது. ஐநாவால் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படும் சர்வதேச குழந்தைகள் தினம், உலகின் பல்வேறு நாடுகளில் ஏப்ரல் தொடங்கி டிசம்பர் வரை வெவ்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது.
அதில் குறிப்பிடம் படியாக சைனா, செக் குடியரசு, வட கொரியா, ரஷ்யா, ஆர்மேனியா, அசர்பெய்ஜான், கசக்கிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், லட்வியா, லித்துவேனியா என பல மாஜி சோவியத் நாடுகள் உட்பட பெரும்பாலான கம்யூனிஸ்ட் நாடுகளில் ஜூன் ஒன்றாம் தேதியே குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இன்றும் ஜெர்மெனியின் சில இடங்களில் கம்யூனிச ஆட்சிக்காலத்தின் மிச்சங்களில் ஒன்றாக ஜூன் 1 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகிறது. போர்சுகலும் அதன் காலனியாக இருந்த நாடுகளிலும் கூட இன்றுதான் குழந்தைகள் தினம். கம்யூனிச நாடுகள் மட்டும்தான் என இல்லாமல் அதற்கு நேரெதிராக விளங்கும் அமெரிக்காவின் சில பகுதிகளில் கூட இன்று குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. ஆகவே இன்றும் குழந்தைகள் தினம்தான் நண்பர்களே!

குழந்தைகள் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அவர்களின் குமிழ் சிரிப்புதான். அது மட்டுமில்லை குழந்தைகள் கடவுளை ஒத்தவர்கள் எனவும் சொல்லக் கேட்டு இருக்கிறோம். குழந்தைக் கடவுள்கள் எனப் பார்த்தால் உடனடியாக நமக்கு ஞாபகத்திற்கு வருவது கண்ணனும் முருகனும்தான். அவர்களையும் ஆட்டத்திற்கு இழுத்து "சிறுவர் சிரிப்பே சிறப்பு! " என்ற ஈற்றடியைக் கொண்டு வெண்பா வடிக்கலாம் வா தொடரின் அடுத்த பகுதியாய் இந்த பதிவைப் போட்டு இருக்கிறேன்.
நட்சத்திர வாரமாய் இருப்பதால் இந்த ஒரு முறை மட்டும் வெண்பா இல்லாமல் புதுக் கவிதையாய் எழுதினாலும் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் ஈற்றடி கொடுத்த அடியாகவே இருத்தல் அவசியம். முதலில் நான் வெண்பாவாகவே எழுத முயல்கிறேன்.
திருமால் மருகன் தினந்தோள் முருகன்
குருவாய் அமர்ந்த குமரன் அருளால்
கருவறை தாண்டிக் கடவுளாய் வந்த
சிறுவர் சிரிப்பே சிறப்பு!
பட உதவி: ஆனந்த்