Friday, June 01, 2007

சிறுவர் சிரிப்பே சிறப்பு! - (வெ.வ.வா)

உண்மையில் இந்த வெண்பா பதிவு மே 31ஆம் தேதியே வந்திருக்கணும். அன்றுதான் உலக புகையிலை மறுப்பு தினம். இது பற்றி நம்ம சாத்தாங்குளத்தாரும், நாமக்கல்லாரும் போட்டு இருக்கும் பதிவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். நான் கூட அதை முன் வைத்து ஒரு வெண்பா பதிவு போடலாமே என நினைத்தேன். ஆனால் சில பல காரணங்களினால் அது போட முடியாமல் போனது. அதற்கு பதிலாக எப்பொழுது போடலாம் என யோசித்த பொழுது குழந்தைகள் தினமான இன்றே போடலாமே எனத் தோன்றியதால் இந்தப் பதிவு.

இன்று ஜூன் 1, இன்றைக்குப் போய் குழந்தைகள் தினமென சொல்கிறானே இந்த கிறுக்கன் அது நவம்பர் 14ஆம் தேதி நேரு பிறந்தநாள் அன்றல்லவா வரும் என என்னை விநோதமாகப் பார்த்தீர்களானால் நீங்கள் மேற்கொண்டு கட்டாயம் படிக்க வேண்டும். ஏனென்றால் வேறு சில நாட்களைப் போல் இல்லாமல் குழந்தைகள் தினம் உலகின் பல பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது. ஐநாவால் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படும் சர்வதேச குழந்தைகள் தினம், உலகின் பல்வேறு நாடுகளில் ஏப்ரல் தொடங்கி டிசம்பர் வரை வெவ்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது.

அதில் குறிப்பிடம் படியாக சைனா, செக் குடியரசு, வட கொரியா, ரஷ்யா, ஆர்மேனியா, அசர்பெய்ஜான், கசக்கிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், லட்வியா, லித்துவேனியா என பல மாஜி சோவியத் நாடுகள் உட்பட பெரும்பாலான கம்யூனிஸ்ட் நாடுகளில் ஜூன் ஒன்றாம் தேதியே குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இன்றும் ஜெர்மெனியின் சில இடங்களில் கம்யூனிச ஆட்சிக்காலத்தின் மிச்சங்களில் ஒன்றாக ஜூன் 1 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகிறது. போர்சுகலும் அதன் காலனியாக இருந்த நாடுகளிலும் கூட இன்றுதான் குழந்தைகள் தினம். கம்யூனிச நாடுகள் மட்டும்தான் என இல்லாமல் அதற்கு நேரெதிராக விளங்கும் அமெரிக்காவின் சில பகுதிகளில் கூட இன்று குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. ஆகவே இன்றும் குழந்தைகள் தினம்தான் நண்பர்களே!குழந்தைகள் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அவர்களின் குமிழ் சிரிப்புதான். அது மட்டுமில்லை குழந்தைகள் கடவுளை ஒத்தவர்கள் எனவும் சொல்லக் கேட்டு இருக்கிறோம். குழந்தைக் கடவுள்கள் எனப் பார்த்தால் உடனடியாக நமக்கு ஞாபகத்திற்கு வருவது கண்ணனும் முருகனும்தான். அவர்களையும் ஆட்டத்திற்கு இழுத்து "சிறுவர் சிரிப்பே சிறப்பு! " என்ற ஈற்றடியைக் கொண்டு வெண்பா வடிக்கலாம் வா தொடரின் அடுத்த பகுதியாய் இந்த பதிவைப் போட்டு இருக்கிறேன்.

நட்சத்திர வாரமாய் இருப்பதால் இந்த ஒரு முறை மட்டும் வெண்பா இல்லாமல் புதுக் கவிதையாய் எழுதினாலும் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் ஈற்றடி கொடுத்த அடியாகவே இருத்தல் அவசியம். முதலில் நான் வெண்பாவாகவே எழுத முயல்கிறேன்.


திருமால் மருகன் தினந்தோள் முருகன்
குருவாய் அமர்ந்த குமரன் அருளால்

கருவறை தாண்டிக் கடவுளாய் வந்த

சிறுவர் சிரிப்பே சிறப்பு!


பட உதவி: ஆனந்த்

44 comments:

said...

கடவுளர் எல்லாம் கருவறையில்
விடமுண்ட அரனும் அங்கே
படம் கொண்டபாம்பணைக்காரனும் அங்கே
அழகன் குமரனும் அங்கே
அத்தனை சாமியும் கருவறைக்குள்ளே
அதனையும் மீறும்
கருவறை தாண்டி வந்து
கள்ளமில்லாமல் சிரிக்கும்
சின்னஞ்சிறாரின் சிரிப்பு

இது புரியுதா, இல்லை உங்க கவுஜ புரியுதா?

மக்களே! மக்களுக்கு மக்களே!
நீங்க சொல்ல்லுங்க!

said...

சமர்ப்பணம் பத்தி சொல்லணும் இல்லையா?

வர வெண்பாக்கள் எல்லாம் எங்க வெண்பா வாத்தி ஜீவ்ஸுக்கே!

வர கவிதைகள் எல்லாம் நம்ம வீ.எஸ்.கே. அவர்களுக்கே!

said...

வெண்பா சூப்பர்... அதுவும் முருகனையும் கண்ணனையும் இணைத்தது அருமை..

said...

அடாடா, " நாந்தான் முதல்" அப்படின்னு பின்னூட்டணும்னு இருந்தேனே.....சரி இங்க prose க்கே ததிங்கிணதோம் அதுல poetry க்கு எங்க போறது??
உங்க வெண்பா நல்ல வந்திருக்கு கொத்ஸ்!!

said...

காதல் கலவிக் கடுப்புகள் கல்மிஷம்
நோதல் நொடிப்பு எதுவுமற்று ஆதல்
ஒருவர் அழுது ஒருவர் சிரிக்கும்
சிறுவர் சிரிப்பே சிறப்பு!

said...

இ.கொ,

கவிதை அருமையாக வந்துள்ளது.

நன்றாக எழுதவே நிறைய படிக்க வேண்டும். கவிதை கொஞ்சம் கடினமே. இணையத்தில் பயிற்சி எடுத்து விட்டு எழுதுகின்றேன் / சொக்கனைத் தேடிக் கொண்டு இருக்கின்றேன்.

அன்புடன்
இராசகோபால்

said...

நுரைபடர் கையாய் நுதல்மேற் சிகையாய்

வரைவிலா இன்பம் வழங்கிடும் பிள்ளாய்

இறுகிய நெஞ்சை இளக்கியதில் கண்டேன்

சிறுவர் சிரிப்பே சிறப்பு

(பதிவில் இருக்கும் படத்திலுள்ள குழந்தைக்காக டாக்டர் வாஞ்சிநாதன் அவர்கள் எழுதி அனுப்பிய வெண்பா)

said...

எனக்கு பாதி வெண்பா,பாதி கவிதையாகத்தான் வருகிறது.பதிவின் அழகை கெடுக்க மனம் வரவில்லை.
:-))

said...

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ..!

said...

கருவறை தாண்டிக் கடவுளாய் வந்ததும்
திருமறை தந்தெமை தடுத்தாட் கொண்டதும்
பெறுவரோ எல்லாம் பாரினில்? பேணுவோம்
சிறுவரின் சிரிப்பே சிறப்பு!

said...

இலவசம் பதிவினில் இளம்பிஞ்சு கண்டதும்
இலைவசம் என்மனம் என்னிடில் - இனிக்கவே
அறுமுகன் குறுநகை அழகினைக் காட்டிலும்
சிறுவரின் சிரிப்பே சிறப்பு!

said...

களிப்பு வந்து, களைப்பைப் போக்கும் பாப்பா சிரிக்கும் சிரிப்பிலே.
இந்தச் சிரிப்பு வெண் சிரிப்பு
வெண்பா பாட முடியாத சிரிப்பு

சாமி பார்க்க கோவில் வேண்டாம்
இந்சாமிகள் இருந்தால் போதும்.:-))

said...

// திருமால் மருகன் தினந்தோள் முருகன்
குருவாய் அமர்ந்த குமரன் அருளால்
கருவறை தாண்டிக் கடவுளாய் வந்த
சிறுவர் சிரிப்பே சிறப்பு! //

கொத்ஸ், கவியரசரின் வரிகள் எனக்கு நினைவிற்கு வருகின்றன. உலகிலாடும் தொட்டிலெல்லாம் உன் புகழ் பாடும். இது சொல்லச் சொல்ல இனிக்குதடா என்ற பாடலில் வரும் வரி. குழந்தை வரம் என்பது இறைவன் கொடுப்பது. எல்லா வரமும் இறைவன் கொடுப்பதுதான் என்றாலும் கோடியில் இருப்பவரும் கோடியில் கிடப்பவரும் விரும்பும் செல்வம் மழலைச் செல்வமாக உள்ளது. ஆகையால்தான் அதை மழலைச் செல்வம் என்று சொல்கின்றார்கள். அப்படி முருகனருளை இந்தக் குழந்தைகள் நாளில் நினைவுகூர்ந்தமைக்கு நன்றி. வாழ்க. வளமுடன்.

வெண்பா இலக்கணம் எனக்குத் தெரியாது. ஆகையால நீங்க விதிமீறல் செஞ்சிருக்கீங்களான்னு தெரியலை. ஆனா செய்யுள் இலக்கணம் புரியும். அதை வெச்சுச் சொல்றேன். மொத வரி தனியாத் தொங்கிக்கிட்டிருக்குது. அதக் கொஞ்சம் சரி செய்யப் பாருங்களேன்.

said...

எளிய வரிகள், அருமையான வெண்பா..

பின்னூட்ட வெண்பாக்களும் அருமை..

வாழ்த்துக்கள்

said...

ஓ இங்க பாட்டாதான் சொல்லனுமா! வெண்பால்லாம் பெரியவங்க விளையாட்டு. என் பாவோட நிறுத்திக்கிறேன். :)

தமிழ்ப்பாவும்
குமிழ்ப்பூவும்
தலைகொள் வேலன்
அருள் பாயும்
புவி பிறக்கும்
சிறுவர் சிரிப்பே சிரிப்பு!

said...

இன்னொண்ணு:
வீணே கிடந்து வெறுக்கும் தினங்களும்
தேனே குடித்தும் கசக்கும் உடற்குறை
வேனில் படுத்தும் வியர்வைக் கொடுமை
ஆணி பிடுங்கி அசத்தும் தொழிற்பளு -

சிறுசிறு தொல்லை சடுதியில் போக்கும்
சிறுவர் சிரிப்பே சிறப்பு.

said...

ரொம்ப நல்லாயிருக்குங்க. இவ்வளவு அழகாக எழுதியிருக்கறீர்கள். !!!children are the greatest gift!!!

said...

கள்ளம் கபடம் கருப்புமனம் கல்மிஷம்
கொள்ளைக் கொலைமனம் கொள்ளுதலும் - பிள்ளை
அறியுமோ வெள்ளை அழகாம் மழலைச்
சிறுவர் சிரிப்பே சிறப்பு.

said...

பதின்மரின் கள்ளச்சிரிப்போ,
பதுமையின் புன்சிரிப்போ,
காளையின் கொள்ளை சிரிப்போ,
முதுமையின் பொக்கை சிரிப்போ,
சிரிப்பல்ல,
சின்னஞ் சிறுவர் சிரிப்பே சிறப்பு!!!

(இத பாத்துட்டு விழுந்து விழுந்து சிரிச்சிரிந்தீங்கன்னா..... எனக்கு கெட்ட கோபம் வரும்:):))

said...

படம் அருமை.

said...

டீச்சர் கூறியதை வழிமொழிகிறேன்.

said...

உள்ளிருந்து உவகையுடன்
கள்ளமில்லா மனதுடனே
தெள்ளியதோர் புன்னகையை
கண்டதும் அணைத்தே முத்தம்
ஆயிரம் தந்திட உள்ளம் ஏங்கையில்
சிறப்புச் சிரிப்பு சிறுவரிடம் என்று
கவிதை கேட்கும் உம்மை கண்டே
என்னுள் எழுந்தது
எக்காளச் சிரிப்பு

said...

//இது புரியுதா, இல்லை உங்க கவுஜ புரியுதா?//

நான் எழுதினது கவுஜயா?

மக்களே! மக்களுக்கு மக்களே!
நீங்க சொல்ல்லுங்க!

said...

//வெண்பா சூப்பர்... அதுவும் முருகனையும் கண்ணனையும் இணைத்தது அருமை..//

மால் மருகன் என்ற பதம் எத்தனையோ பேர் சொன்னதுதானே. நான் என்னத்தை புதுசா சொல்லிட்டேன்?

said...

//அடாடா, " நாந்தான் முதல்" அப்படின்னு பின்னூட்டணும்னு இருந்தேனே.....சரி இங்க prose க்கே ததிங்கிணதோம் அதுல poetry க்கு எங்க போறது??//

ஆரம்பிக்கும் போது அப்படிதான் இருக்கு. அப்புறம் சித்திரமும் கைப்பழக்கம் என்ற பழமொழிதான். :))

//உங்க வெண்பா நல்ல வந்திருக்கு கொத்ஸ்!!//
நன்றி இராதா.

said...

//காதல் கலவிக் கடுப்புகள் கல்மிஷம்
நோதல் நொடிப்பு எதுவுமற்று ஆதல்
ஒருவர் அழுது ஒருவர் சிரிக்கும்
சிறுவர் சிரிப்பே சிறப்பு!//

ஆமாங்க. எந்த வித எதிர்பார்ப்புகளும் இன்றி அந்த நிமிடத்தை அனுபவிக்கும் சிரிப்பு அது. :))

said...

//கவிதை அருமையாக வந்துள்ளது.//

நன்றி இராசகோபால்.

//நன்றாக எழுதவே நிறைய படிக்க வேண்டும். கவிதை கொஞ்சம் கடினமே. இணையத்தில் பயிற்சி எடுத்து விட்டு எழுதுகின்றேன் / சொக்கனைத் தேடிக் கொண்டு இருக்கின்றேன்.//

விக்கி பசங்க தளத்தில் வெண்பா வடிப்பது எப்படின்னு குறிப்புகள் இருக்கு. படியுங்க. எழுதிப் பாருங்க. அப்புறம் நீங்களே சொக்கனாயிடுவீங்க. சொக்கிப் போயிடுவீங்க!! :)

said...

//நுரைபடர் கையாய் நுதல்மேற் சிகையாய்

வரைவிலா இன்பம் வழங்கிடும் பிள்ளாய்

இறுகிய நெஞ்சை இளக்கியதில் கண்டேன்

சிறுவர் சிரிப்பே சிறப்பு//

வாஞ்சி, வந்து வெண்பா தந்ததிற்கு நன்றி. உங்கள் வருகையே பெரு மகிழ்ச்சியைத் தருகிறது.

said...

//எனக்கு பாதி வெண்பா,பாதி கவிதையாகத்தான் வருகிறது.பதிவின் அழகை கெடுக்க மனம் வரவில்லை.
:-))//

முயற்சி செய்யுங்க குமார், ரொம்ப கஷ்டமெல்லாம் இல்லை. நானும் இந்த வலைப்பதிவுக்கு வந்து கத்துக்கிட்டதுதான்.

said...

//ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ..!//

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? ரூமெல்லாம் போட மாட்டோம். மரத்தடியா போய் உக்காந்துக்கிட்டு போண்டா சாப்பிடறதோட சரி!! :))

said...

//கருவறை தாண்டிக் கடவுளாய் வந்ததும்
திருமறை தந்தெமை தடுத்தாட் கொண்டதும்
பெறுவரோ எல்லாம் பாரினில்? பேணுவோம்
சிறுவரின் சிரிப்பே சிறப்பு!//

மக்கட் செல்வத்தின் பெருமையை அருமையாகச் சொல்லிட்டீங்க. அங்கங்கே தளை தட்டுது. அதை சரி செஞ்சா அருமையான வெண்பா ஆகிடும்.

மின்னரட்டைக்கு வாங்க. எங்க தட்டுது எப்படிக் கொத்தலாம் எனப் பார்ப்போம்.

said...

//இலவசம் பதிவினில் இளம்பிஞ்சு கண்டதும்
இலைவசம் என்மனம் என்னிடில் - இனிக்கவே
அறுமுகன் குறுநகை அழகினைக் காட்டிலும்
சிறுவரின் சிரிப்பே சிறப்பு!//

முருகனை வெச்சு வம்பு பண்ணலைன்னா தூக்கம் வராதே. அதே மாதிரி தளை தட்டல் இருக்கு. உடனடியாக ட்யூஷன் கிளாசுக்கு வரவும்.

said...

//களிப்பு வந்து, களைப்பைப் போக்கும் பாப்பா சிரிக்கும் சிரிப்பிலே.
இந்தச் சிரிப்பு வெண் சிரிப்பு
வெண்பா பாட முடியாத சிரிப்பு//

அதான் இந்த பதிவில் மட்டும் கவுஜ அலவுட்ன்னு சொல்லியாச்சே. அப்புறம் என்ன? எதாவது உடைச்சு உடைச்சு எழுத வேண்டியதுதானே! :))

//சாமி பார்க்க கோவில் வேண்டாம்
இந்சாமிகள் இருந்தால் போதும்.:-))//

ஆமாம் கொள்ளை கொள்ளும் சிரிப்பு இல்லையா? :))

said...

//ஆகையால்தான் அதை மழலைச் செல்வம் என்று சொல்கின்றார்கள். அப்படி முருகனருளை இந்தக் குழந்தைகள் நாளில் நினைவுகூர்ந்தமைக்கு நன்றி. வாழ்க. வளமுடன்.//

வாழ்த்துக்களுக்கு நன்றி ஜிரா.

//வெண்பா இலக்கணம் எனக்குத் தெரியாது. ஆகையால நீங்க விதிமீறல் செஞ்சிருக்கீங்களான்னு தெரியலை. ஆனா செய்யுள் இலக்கணம் புரியும். அதை வெச்சுச் சொல்றேன். மொத வரி தனியாத் தொங்கிக்கிட்டிருக்குது. அதக் கொஞ்சம் சரி செய்யப் பாருங்களேன்.//

ஆமாம். சரி செய்ய டூ லேட். ஒரு அவசரத்தில் எழுதிய வெண்பா. வாஞ்சி சார் கூட தினந்தோள் என்றால் தினவெடுத்த தோள்கள் என்ற பொருள் வராமல் தினம் தோள் என்ற பொருள்ளற்ற சொல்தான் வருகிறது மாற்றுங்களேன் என்றார். நேரமின்மையால் விட்டு விட்டேன். இருவரும் மன்னிக்கவும்.

said...

//எளிய வரிகள், அருமையான வெண்பா..

பின்னூட்ட வெண்பாக்களும் அருமை..//

நன்றி ஏஸ்.

said...

//தமிழ்ப்பாவும்
குமிழ்ப்பூவும்
தலைகொள் வேலன்
அருள் பாயும்
புவி பிறக்கும்
சிறுவர் சிரிப்பே சிரிப்பு!//

ஆசிரியப்பா கேட்டா ஆச்சரிய பா தரீங்களே!! :))

said...

//வீணே கிடந்து வெறுக்கும் தினங்களும்
தேனே குடித்தும் கசக்கும் உடற்குறை
வேனில் படுத்தும் வியர்வைக் கொடுமை
ஆணி பிடுங்கி அசத்தும் தொழிற்பளு -

சிறுசிறு தொல்லை சடுதியில் போக்கும்
சிறுவர் சிரிப்பே சிறப்பு.//

சுரேஷ், இந்த மாதிரி இரண்டு பாராவாக பிரித்தால் முதல் பாராவின் கடைசி அடிக்கும் இரண்டாவது பாராவின் முதல் அடிக்கும் தளை தட்டுதா எனப் பார்க்க வேண்டாமா?

//தொழிற்பளு -

சிறுசிறு //

இதில் தளை தட்டல் இருக்கே. அதனால கேட்கிறேன்.

said...

//ரொம்ப நல்லாயிருக்குங்க. இவ்வளவு அழகாக எழுதியிருக்கறீர்கள். !!!children are the greatest gift!!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டெல்பின்.

said...

நல்ல வெண்பா ஓகையாரே. வந்து வெண்பா தந்ததிற்கு நன்றி.

said...

//(இத பாத்துட்டு விழுந்து விழுந்து சிரிச்சிரிந்தீங்கன்னா..... எனக்கு கெட்ட கோபம் வரும்:):))//

இராதா, சேரின் கைப்பிடியைப் பிடித்துக் கிட்டதால் விழுவே இல்லை!! :)))

என்னங்க நல்லாத்தானே கவுஜ எழுதி இருக்கீங்க. அப்புறம் என்ன? :))

said...

//படம் அருமை.//

சொந்தமா எழுதின பதிவைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சுட்டுப் போட்ட படத்தைப் பத்தி மட்டும் பேசியது ஏன்? ஏன்? ஏன்? ஏன் டீச்சர் ஏன்? :))

said...

//டீச்சர் கூறியதை வழிமொழிகிறேன்.//

புலி, யூ டூ?

said...

//உள்ளிருந்து உவகையுடன்
கள்ளமில்லா மனதுடனே
தெள்ளியதோர் புன்னகையை
கண்டதும் அணைத்தே முத்தம்
ஆயிரம் தந்திட உள்ளம் ஏங்கையில்
சிறப்புச் சிரிப்பு சிறுவரிடம் என்று
கவிதை கேட்கும் உம்மை கண்டே
என்னுள் எழுந்தது
எக்காளச் சிரிப்பு//

ஆமாங்க குழந்தையைக் கொஞ்சப் போறவங்க கிட்ட வெண்பா குடு வெந்தயம் குடுன்னு கேட்டு வெறுப்பேத்தினா இப்படித்தான். போகட்டும். சிரிக்கிறதுதான் சிரிச்சீங்க, உங்க பேரைச் சொல்லிட்டு சிரிக்கக்கூடாதா? :)

said...

அண்ணாச்சி வெம்பாவெல்லாம் நல்லாதான் போட்டீரு..

ஆனா அந்த நாலுவரியை மாத்தி

//
கருவறை தாண்டிக் கடவுளாய் வந்த
சிறுவர் சிரிப்பே சிறப்பு!
//

இப்படி போட்டிருந்தீர்னா இன்னும் சூப்பரா இருந்திருக்கும். எல்லார்க்கும் ஏத்த மாதிரி

சரி என்னோட வெண்பா ..

வெள்ளைச் சிரிப்புடனே பிள்ளை வருகையிலே
துள்ளும் மனமதுவே துன்பமின்றி - கள்ளம்
வருவதில்லை புல்பனித் தூய்மையில் பாரீர்
சிறுவர் சிரிப்பே சிறப்பு