Saturday, January 06, 2024

பெரு(ம்) பயணம் - 6

பென்குயின்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்ததில் ப்ளெமிங்கோக்களை மறந்துவிட்டேன். கடற்கரை முழுவதும் கொத்து கொத்தாக நின்றுகொண்டிருக்கின்றன இந்த ப்ளெமிங்கோ பறவைகள். இப்பொழுது மட்டுமில்லை. பொயு 1820ஆம் ஆண்டு இந்தக் கடற்கரையில் வந்து இறங்கிய சான் மார்ட்டின் பார்த்த காட்சியும் இதுதான். சரேலென்று கிளம்பி இரு பெரும் இறக்கைகளை விரித்துப் பறந்த ப்ளெமிங்கோ பறவைகள் அவர் கண்களில் தென்பட்டுக் கொண்டே இருந்தன. பெருவிற்கான கொடியை அவர் வடிவமைத்த பொழுதும் இதுதான் அவர் மனக்கண்ணில் இருந்தது. இரு புறமும் சிவந்த இறக்கைகள், நடுவே வெளிரிய உடல் என் ப்ளெமிங்கோ பறவையை நினைவுபடுத்தும்படி இரு புறமும் சிவப்புப் பட்டைகள் நடுவே வெள்ளைப் பட்டை என பெருவின் கொடியை வடிவமைத்தார் சான் மார்ட்டின். அவர் வடிவமைத்த கொடியில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்த அடிப்படை சிவப்பு வெள்ளை சிவப்பு வண்ணங்கள் மட்டும் மாறவே இல்லை.


ப்ளாமிங்கோ

பெரு நாட்டின் கொடி

நீர் நாய்களையும், ப்ளெமிங்கோக்களையும், பென்குயின்களையும், மற்ற பறவைகளையும் அவற்றின் குவானோவையும், மூக்கை மூடிக்கொண்டே, பார்த்தாகி விட்டது. அடுத்து பக்கத்து ஊரான பிஸ்கோவிற்குப் போகலாம். 


பிஸ்கோ என்றால் க்வெட்சுவா மொழியில் சிறிய பறவை எனப் பொருள். இந்தப் பகுதியில் நிறைந்திருக்கும் பறவைகளால் இப்பெயரை பழங்குடியினர் சூட்டி இருக்கலாம். ஆனால் இன்று பிஸ்கோ என்றால் பறவைகள் ஞாபகத்திற்கு வருவதில்லை. அங்கு தயாரிக்கப்படும் மதுவின் ஞாபகம்தான் எல்லாருக்கும் வரும். ஷேம்ப்பெயின் என்றால் பிரான்ஸின் பகுதி என்பதையும் விட அங்கு தயாராகும் மதுபானம் ஞாபகத்திற்கு வருவது போல. பத்தமடை என்றால் ஊரைத் தெரியாதவர்களுக்குக் கூடப் பாயைத் தெரிவது போல.


பெருவில் இருந்து ஸ்பெயின் எடுத்துச் சென்றதுதான் அதிகம் என்றாலும் அவர்கள் சிலவற்றை கொண்டும் வந்துள்ளார்கள். அதில் ஒன்று திராட்சைப்பழம். இங்குள்ள தட்பவெட்ப நிலைக்கும் நிலத்தின் வாகிற்கும் ஏற்ப இந்த திராட்சைப் பழங்கள் தனித்துவமான சுவை கொண்டதாகின. தங்களுக்குத் தேவையான பழங்களை, முதல் தரப் பழங்களை, எடுத்துக் கொண்டு மற்றவற்றை பெருவினருக்குத் தந்தார்கள் ஸ்பானியர்கள். அப்பழங்களில் இருந்து செய்யப்பட்டதுதான் நெருப்புநீர் எனப் பொருள் வரும் Aguardiente. நாளடைவில் இப்பெயர் மறைந்து போய், தயாரிக்கப்படும் இடத்தின் பெயரான பிஸ்கோ என்றே அறியப்பட்டது. பிராந்தி வைகை மது என்றாலும் மற்ற இடங்களில் செய்யப்படுவது போலல்லாமல் இங்கு இந்த மது மர பேரல்களில் தயார் செய்யப்படுவதில்லை. அதனால் இதன் சுவை முற்றிலும் திராட்சையில் இருந்தே கிடைப்பது இதன் தனித்துவம் என்கிறார்கள். 


இதே செய்முறையில் சீலேவிலும் மதுபானம் தயார் செய்யப்பட்டது. அதற்கும் பிஸ்கோ என்றே பெயரிட்டனர். சாமர்த்தியமாக 1931ஆம் ஆண்டே புவிசார் குறியீட்டை வாங்கி வைத்துவிட்டனர். இதற்காக தங்கள் நாட்டில் ஒரு சிறிய ஊரின் பெயரைக் கூட பிஸ்கோ என்று மாற்றினர். ஆனால் பிஸ்கோ எங்கள் சொத்து என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது பெரு. தங்கள் பங்குக்கு அவர்களும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையே இது பெரும் பிரச்னையாக இருக்கிறது. நான் சீலே சென்றிருந்த பொழுது தனிப்பட்ட முறையில் அங்குள்ள நண்பர்கள் பெருவின் பிஸ்கோதான் உண்மையானது எங்கள் பிஸ்கோவை விடச் சிறந்தது என்றார்கள். ஆனால் அவர்களே அதைப் பொதுவெளியில் சொல்ல மாட்டார்கள். இந்த மதுபானச் சண்டை இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 


பிஸ்கோவில் அதிகம் சுற்ற நேரமில்லை. நேரடியாக விமான நிலையம் செல்ல வேண்டும். அந்தச் சிறிய நகரத்திற்குச் சம்பந்தமில்லாமல் ஒரு பெரிய விமானநிலையம். கேப்டன் எப்ஏபி ரெனான் எலியஸ் ஒலிவேரா சர்வதேச விமான நிலையம் (Capitán FAP Renán Elías Olivera Airport) எனப் பெயரும் பெரிய பெயர். ஆனால் உள்ளே சென்றால் பெரும்பகுதி மூடித்தான் கிடக்கிறது. ஒரு சிறிய பகுதியில் மட்டும்தான் புழக்கம். ஏன் இப்படி எனக் கேட்டால் பொரிந்து தள்ளிவிட்டார் வழிகாட்டி. யாரோ ஒரு அரசியல்வாதியின் கனவாக இவ்வளவு பெரிய விமான நிலையம் அமைந்துள்ளதாகவும், இதனால் பயனே இல்லை என்றும், தீனி போட்டு மாளாத யானையைப் போல இதற்காகும் செலவு கட்டுக்கடங்காமல் இருப்பதாகவும், ஒரே ஒரு விமான நிறுவனம் மட்டுமே சேவை வழங்குவதற்கு எதற்கு இவ்வளவு பெரிய விமான நிலையம் எனக் கதறிவிட்டார். 


நான் இலங்கை சென்றிருந்த பொழுது இதேக் கதையை கேட்டிருந்தேன். அங்கு ராஜபக்ச ஆட்சியில் இருந்த காலத்தில் தன் சொந்த ஊரான அம்பாந்தோட்டைக்கு அருகே மத்தளை ராஜபக்ச பன்னாட்டு விமான நிலையம் என இலங்கையின் இரண்டாவது பெரிய விமான நிலையத்தைக் கட்டியதும், அதற்குப் பயனில்லாமல் போனதும், இதே போல அதை பராமரிக்க ஏற்படும் செலவுகள் குறித்தும், ஒரு சமயம் நெல் மூட்டைகளை பாதுக்காத்து வைத்திட இந்த விமான நிலையம் பயன்பட்டதையும் அங்குள்ளவர்கள் சொல்லிக் குமுறியது என் ஞாபகத்திற்கு வந்தது. எல்லா இடங்களிலும் அரசியல் ஒரே மாதிரிதான் போல. 


இங்கு நாங்கள் விமானமேறியது அருகில் இருக்கும் நாஸ்கா கோடுகளைப் பார்க்க. சிறிய விமானம்தான். பத்துப் பனிரெண்டு பேர்கள் செல்லக்கூடிய விமானம். எல்லா இருக்கைகளுமே ஜன்னலோர இருக்கைகள்தாம் என்பதால் அனைவராலும் வெளியே பார்க்க முடியும். இந்தச் சுற்றுலா விமானங்கள் மட்டுமே இந்த விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. 

அது என்ன நாஸ்கா கோடுகள்? பராகஸ்ஸில் கேண்டலப்ராவைப் பார்த்தோமல்லவா? அது போல நிலத்தில் மிகப்பெரிய அளவில் வரையப்பட்ட சித்திரங்கள் இந்த நாஸ்கா கோடுகள். வெறும் கோடுகள், முக்கோணங்கள், சதுரங்கள், சுருள்கள் என்றெல்லாமும் குரங்கு, சிலந்தி, காண்டார் பறவை, தேன்சிட்டுப் பறவை, மரங்கள், செடிகள் போன்ற உருவங்களும் இப்படி வரையப்பட்டிருக்கின்றன. அளவு பற்றிச் சொல்ல வேண்டுமானால் முந்நூற்று அறுபது அடி குரங்கு, இருநூற்றுப் பத்து அடி திமிங்கிலம், நானூற்று ஐம்பது அடியில் காண்டார் பறவை, கிட்டத்தட்ட ஆயிரம் அடி நீளத்தில் பெலிகன் பறவை என எல்லாமே மிகப்பெரிய அளவில் வரையப்பட்ட சித்திரங்கள்தான். 


சிவந்த சமவெளி (Pampa Colorado) என்ற பெயர் கொண்ட பாலைவனத்தில் இச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. தரை மட்டத்தில் இருக்கும் ஆழ்ந்த நிறத்தில் உள்ள மண்ணைத் தோண்டி எடுத்தால் கீழிருக்கும் மங்கிய நிற மண் தெரிகிறது. இது சுற்றி இருக்கும் ஆழ்ந்த நிற மண்ணில் இருந்து மாறுபட்டுத் தெரிகிறது. இப்படித் தோண்டித்தான் இந்தச் சித்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இங்கு அடிக்கும் காற்று, இந்த பள்ளங்களில் விழும் மண்ணைத் தொடர்ந்து பறந்துவிடச் செய்வதால் இந்தப் பள்ளங்கள் மூடப்படாமலேயே இருக்கின்றன. இப்படித்தான் இந்தச் சித்திரங்கள் இவ்வளவு நாட்களாகப் பாதுக்காக்கப் பட்டுள்ளன. பராகஸ் இனத்தவரும் அவர்கள்களுக்குப் பின் வந்த நாஸ்கா இனத்தவரும் இச்சித்திரங்களை வரைந்ததாகச் சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 


பறவையும் மரமும் பின்னே பார்வையாளர் மாடமும்
குரங்கிலிருந்து பிறந்தவன்
ஏலியன் இவந்தனோ..

நாஸ்காவில் உள்ள சித்திரங்கள்

எதற்காக இவ்வளவு பெரிய சித்திரங்களைச் செய்தார்கள்? எப்படி இவ்வளவு பெரிய உருவங்களைக் கற்பனை செய்து கணக்குத் தவறாமல் வடிவமைத்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு நம்மிடையே பதில் இல்லை. தண்ணீர் வரும் கால்வாய்களாகப் பயன்படுத்தி இருப்பார்கள், வானவியல் சம்பந்தப்பட்ட சித்திரங்களாக இருக்கும் என்றெல்லாம் சில ஹேஷ்யங்கள் முன்வைக்கப்பட்டாலும் சரியான, முடிவான கருத்து ஏதும் இதுவரை இல்லை. இது வேற்றுக்கிரகவாசிகளின் கைவண்ணம். அவர்களின் ஊர்திகள் இறங்குவதற்கான தளங்கள் இவை என்கிறார்கள் ஒரு சாரர்.  


இவ்வளவு பெரிய சித்திரங்களை முழுவதும் பார்க்க வேண்டுமானால் உயரத்தில் இருந்துதான் பார்க்க வேண்டும். அதற்கென சில பார்க்கும் மேடைகளை அமைத்திருக்கிறார்கள் ஆனால் அவற்றை விட உசிதம் விமானத்தில் இருந்து பார்ப்பதுதான் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதையே பெரிதும் விரும்புகிறார்கள். எல்லாவற்றையும் பார்க்க ஏதுவாக விமானத்தை இப்படியும் அப்படியும் திருப்பித் திருப்பிக் காண்பிக்கும் பொழுது அடிவயிறு கலங்கிவிடுகிறது. சாதாரண விமானப் பயணங்களிலேயே வயிறு கலங்குபவர்கள் இதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நல்லது. 


இந்த நாஸ்கா கோடுகளோடு நம் கோஸ்டா பகுதி பயணம் நிறைவடைகிறது. இங்கிருந்து மீண்டும் லீமா திரும்பி நாம் அடுத்து செல்ல இருப்பது சியாரா பகுதி. மலையகம். நம் பாணியில் சொல்ல வேண்டுமானால் குறிஞ்சி. 


பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன -  நாஸ்கா புகைப்படங்கள் 





Friday, January 05, 2024

பெரு(ம்) பயணம் - 5

இன்னமும் பெருவின் கோஸ்டா பகுதியில்தான் சுற்றிக் கொண்டு இருக்கிறோம். கோஸ்டா என்றால் பாலை நிலம் என்றார்கள் ஆனால் லீமா அப்படி இல்லையே என்று நினைக்க வேண்டாம். ஏற்கனவே சொல்லியது போல ஆறுகள் இருக்கும் இடம் என்பதால் அது பாலை நிலம் போலில்லை ஆனால் கொஞ்சம் தள்ளி வந்தால் பாலை நிலம்தான் என்பதை நான் உணர்ந்து கொள்வோம். இதை நன்கு உணர லீமாவில் இருந்து சுமார் நான்கு மணி நேரத் தொலைவில் இருக்கும் பராகஸ் என்ற ஊருக்குப் பயணம் செய்வோம். 


முன்பே சொல்லியது போல் இந்த பயணங்கள் அனைத்தையும் எங்கள் முகவரே ஒருங்கிணைத்து அதற்குத் தேவையான அனைத்தையும் செய்துவிட்டதால் எங்கள் பணி நேரத்திற்குக் கிளம்புவது, ஊர் சுற்றிப் பார்ப்பது என்றானது. எந்த வித அழுத்தமுமே இல்லாமல் இருந்தது. வழக்கம் போல கடலை ஒட்டிய நெடுஞ்சாலையில் பயணம். முந்தும் வண்டிகளுக்கு இடம் விட்டு நிதானமாகச் சென்றார் எங்கள் ஓட்டுநர். நடுவே தென்படும் காட்சிகளைக் குறித்த விளக்கங்களைத் தந்து கொண்டிருந்தார் உடன் வந்த வழிகாட்டி. மதியம் பராகஸ் வந்து சேர்ந்தோம்.


இங்கு தங்கிய விடுதி பற்றி குறிப்பிட்டாக வேண்டும். கடலோரத்தில் அமைந்த விடுதி. பின்வழியா கடலுக்குச் சென்று விடலாம். எந்நேரத்தில் சென்றாலும் கடற்கரையில் பறவைகளைக் காண முடிந்தது. விடுதியின் வரவேற்பறை, சாப்பாட்டறை, பார் என எங்கு பார்த்தாலும் பழமையான பொருட்களை நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தனர். விடுதியின் உள்ளேயே ஒரு சிறிய அருங்காட்சியகம் கூட இருந்தது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்தது அங்கு எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெம்மிங்வே தங்கி இருந்து மீன் பிடித்ததைக் குறிப்பிடும் பதாகைதான். எழுத்தாளர்களுக்கு மரியாதை செய்யும் கலாச்சாரம் நம்மை மகிழச் செய்யும்தானே! 


பராகஸ் விடுதி



கரையோரப் பறவைகள்


சென்ற இடமெல்லாம் சிறப்பு


விடுதி அருங்காட்சியகத்தில்

க்வெட்சுவா மொழியில் பராகஸ் என்றால் மணல் மழை எனப் பொருள். கடலோரப்பகுதி என்பதால் வீசும் காற்றில் மண் எழுந்து மீண்டும் மழை போல விழுவதால் இந்தப் பெயர். அப்பொழுதே இந்தப் பகுதி பாலையாகத்தான் இருந்தது என்பதற்கு இது சான்று. பொயுமு 800ஆம் ஆண்டில் இருந்து பொயு 200ஆம் ஆண்டு வரை இங்கு பராகஸ் என்ற இனம் தழைத்தோங்கி இருந்தது. இவர்களின் நெசவுத் தொழில் மிகவும் நேர்த்தியானதாக இருந்தது. 


1820ஆம் ஆண்டு பெருவின் சுதந்திரத்திற்காகப் போராட வந்த சான் மார்ட்டின் இங்குள்ள கடற்கரையில்தான் கரையேறினார். அவர் தன்னுடன் ஆறு கப்பல்களைக் கொண்டு வந்திருந்தாராம். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியில் சுற்றுலாப் பயணம் வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதற்கேற்றாற்போல் பல விடுதிகள் கட்டப்பட்டன. சுற்றுலா இன்று இப்பகுதியின் முக்கிய தொழிலாக உள்ளது. 


மணற்மழை என்ற பெயர் கொண்ட இடத்தில் முதலில் செய்ய வேண்டியது மணல் விளையாட்டுகள்தான் என முடிவு செய்து பாலைவனத்தில் உள்ளே எங்களைக் கூட்டிச் சென்றார்கள். அங்கு பெரிய மணற்குன்றுகள்தாம். வேறு எதுவுமே இல்லை. அதற்காக வடிவமைக்கப்பட்ட ஊர்திகளில் எங்களை அமரச் செய்து கண்ணிலும் மூக்கிலும் மணல் நுழையாது இருக்க பிரத்யேகமாகச் செய்யப்பட்ட கண்ணாடிகளை அணிவித்தனர். பின்னர் அந்த வண்டிகளைப் பெருவேகத்தில் ஓட்டத் தொடங்கினர். இஷ்டம் போல வளைப்பதும், மேடுகளை ஏறுவதும் இறங்குவதும், ஒருவரை ஒருவர் முந்துவதுமாக தங்கள் வித்தைகளை முழுவதும் காட்டினர் அந்த ஓட்டுநர்கள். கடைசியாக ஒரு பெருங்குன்றின் உச்சியில் நிறுத்தி பனியில் சறுக்குவது போல ஒரு பலகையைக் கொண்டு நாங்கள் மண்ணில் சறுக்குவதற்கு உதவினர். இறங்குவதற்கு எளிதாக இருந்தாலும் அந்தப் பலகையைத் தூக்கிக் கொண்டு மீண்டும் மலையேறுவது கடினமாகத்தான் இருந்தது! இந்த மணல் விளையாட்டுகள் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவம்தான்.







அன்றிரவை விடுதியில் போக்கிவிட்டு அடுத்தநாள் நாங்கள் சென்றது பயேஸ்டாஸ் தீவுகளை (Islas Ballestas) நோக்கி. வட பயேஸ்டாஸ், மத்திய பயேஸ்டாஸ், தென் பயேஸ்டாஸ் என்ற மூன்று தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டம் பயேஸ்டாஸ் தீவுகள். இத்தீவுகளில் கரையேற விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மட்டுமே அனுமதி உண்டு. பொதுமக்கள் பராகஸ்ஸில் இருந்து படகு மூலம் இத்தீவுகள் சுற்றி வரலாம். இந்தத் தீவுகளில் வசிப்பவை ஏராளமான பறவைகள் மட்டும் கடல் சார்ந்த மிருகங்கள். கடல்நாய்கள், கடல் சிங்கங்கள், ஆமைகள், ப்ளெமிங்கோ, பெலிகன், கல், குவானோ என விதவிதமான மிருகங்களையும் பறவைகளையும் பார்க்க முடியும். ஹம்போல்ட் பென்குயின்கள் என்ற வகைப் பென்குயின்களைக்கூட இங்கு பார்க்கலாம். எதனால் இந்தச் செழிப்பு? 


பயேஸ்டாஸ் தீவு
புவியியல் பாடம் படித்தோம், வரலாற்றுப் பாடம் படித்தோம், கொஞ்சம் உயிரியல் பாடமும் படிப்போம். இதற்குக் காரணம் ஹம்போல்ட் பெருங்கடல் ஓட்டம் (Humboldt Ocean Current). தென் பசபிக் பெருங்கடலில் இருந்து குளிர்ந்த நீரை பூமத்திய ரேகை நோக்கி, தென்னமெரிக்காவின் மேற்குக் கடற்கரையை ஒட்டி இருக்கும் நீரோட்டம் இது. இப்பகுதியில் வெகுநாள் தங்கி ஆராய்ச்சி செய்த ஜெர்மன் விஞ்ஞானி அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் அவர்களின் பெயர் சூட்டப்பட்ட இந்த நீரோட்டம் பெரு நீரோட்டம் என்றும் அழைக்கப்பெறுகிறது. தெற்கில் இருந்து வரும் குளிர்ந்த நீரானது வடப்பகுதியில் இருக்கும் நீரின் சூட்டினை ஏழு முதல் எட்டு டிகிரி செல்ஷியஸ் வரை குளிர்வித்துவிடுகிறது. கடலின் அடிப்பகுதியில் இருக்கும் வளங்களை இந்த நீரோட்டம் மேலெடுத்து வருகின்றது. இதனால் சீலே, பெரு, ஈகுவேடார் நாடுகளின் கடலோரப்பகுதிகள் மிக வளமானவையாக இருக்கின்றன.  மீன்வளம் அதிகரிக்க அவற்றை உண்டு வாழும் மற்ற விலங்குகளும் இங்கு ஏராளமாக வாழ்கின்றன. எல் நீன்யோ காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் இந்த சூழலமைப்பு கெடுவதாகச் சொல்கிறார்கள். 


உயிரியல் பாடம் போதும். மீண்டும் வரலாற்றுப் பக்கம் செல்வோம். கடலின் நடுவே பாறைகள். பாறைகள் நிரம்பப் பறவைகள். பறந்து சென்று கடலில் மீன்களைப் பிடிக்க வேண்டியது, பாறையில் வைத்து உண்டு பின் இளைப்பாற வேண்டியது. இதுதான் இவற்றின் வேலை. இவை இடும் எச்சத்தால் அப்பாறைகளே வெள்ளையாக மாறிவிட்டன. இந்த எச்சத்தின் பெயர் குவானோ (Guano). இப்பாறைகளின் மேல் இருந்த எச்சம் 20 மீட்டர் முதல் 70 மீட்டர் உயரம் வரை இருந்ததாம். 


குவானோ - பறவை எச்சம்

இந்த எச்சம் நல்ல உரம் என்பதை இன்கா நாகரிக காலத்திலேயே கண்டு கொண்டனர். ஆனால் பொயு 1850 காலகட்டத்தில் பெருவின் அதிபராக இருந்த தளபதி ரமோன் காஸ்டியா இந்த எச்சத்திற்கான மதிப்பை உணர்ந்து, வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு விற்கத் தொடங்கினார். அன்றைய பெருவின் பொருளாதாரத்தை கிடுகிடுவென உயர்த்தியது இந்த பறவை எச்ச ஏற்றுமதி. பின்னர் இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு இப்பொழுது கடுமையான விதிகளுக்கு உட்பட்டு வருடத்திற்கு மூன்று மாதங்கள் மட்டுமே குவானோ சேகரிப்பு நடைபெறுகிறது. 


பறவைகளின் கூச்சலையும் பென்குயின்களில் தளிர்நடையையும் கடலின் ஆட்டத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். உயிரியல் ரசிகர்களுக்கு அருமையான இடம் இந்தப் பயேஸ்டாஸ் தீவுகள்.









பராகஸில் இருந்து பயேஸ்டாஸ் தீவுகளை நோக்கிச் செல்லும் பொழுது பாறைகளில் வரையப் பட்ட ஒரு பெரும் சித்திரத்தைப் பார்க்க முடிகிறது. பராகஸ் கேண்டலப்ரா (Paracas Candelabra) என்று அழைக்கப்படும் இந்தச் சித்திரம் பாறைகளில் இரண்டு அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டுள்ளது. இச்சித்திரத்தின் உயரம் கிட்டத்தட்ட 600 அடி. யாரால் வரையப்பட்டது, எப்பொழுது வரையப்பட்டது என்பது பற்றி எந்தவித தீர்மானத்திற்கும் ஆராய்ச்சியாளர்களால் வரமுடியவில்லை. ஆனால் நவீன நாகரிகத்திற்கு முன்பாக எப்படி இவ்வளவு பெரிய சித்திரத்தை பாறைகளில் வடிவமைத்திருக்க முடியும் என்று பார்த்தால் ஆச்சரியம்தான். 


பராகஸ் கேண்டலப்ரா

இன்று படகில் இருந்து பார்த்தது ஒரு விதம் என்றால் நாளை நாம் பார்க்கப் போவது ஒரு விமானத்தில் ஏறி வானில் இருந்து…. 


பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன -  பராகஸ் புகைப்படங்கள் 





Thursday, January 04, 2024

பெரு(ம்) பயணம் - 4

பெருவின் தலைநகரம் லீமா. வெளிநாட்டுப் பயணிகள் பெரும்பாலும் தங்கள் பெரு பயணத்தைத் தொடங்குவது இங்குதான். நாங்களும் அப்படித்தான். ஆஸ்டினில் இருந்து பனமாவில் இருக்கும் பனாமா சிட்டிக்கு வந்து பின் அங்கிருந்து லீமாவுக்கு அடுத்த விமானம். வீட்டிலிருந்து கிளம்பி விடுதிக்கு வந்து சேர கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேரப் பயணம். 


லீமாவில் எங்கள் விமானம் தரையிறங்கும் பொழுது இரவு இரண்டு மணி இருக்கும். குடியுரிமைச் சோதனை முடித்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்த எங்களை வரவேற்றார் எங்கள் முகவர். விமானநிலையத்தில் இருந்து சுமார் ஒரு மணி நேரத் தொலைவில் இருந்தது எங்கள் விடுதி. பயணத்தின் பெரும்பகுதி ஒரு புறம் கடலும் மறுபுறம் குன்றுகளும் இருந்த அழகான சாலை. அந்த நேரத்திலும் எங்கு பார்த்தாலும் ஆள் நடமாட்டம். கடற்கரைகளில் அமர்ந்திருந்தார்கள், தெருவோரம் உலாவிக் கொண்டிருந்தார்கள். விடுமுறைக் காலம் என்பதால் இப்படியா எனக் கேட்டதற்கு முகவர் எப்பொழுதும் இப்படித்தான். நீங்கள் எல்லாம் நியூயார்க்கைத் தூங்கா நகரம் என்பீர்கள் ஆனால் உண்மையான தூங்கா நகரம் லீமாதான் என்றார். அவரிடம் எங்களுக்கெல்லாம் மதுரைதான் தூங்கா நகரம் எனச் சொல்லவில்லை. உள்ளூர்க்காரர்கள் போலல்லாது, விடுதிக்குச் சென்ற உடனே பயணம் செய்த களைப்பில் நாங்கள் தூங்கிவிட்டோம்.

லீமா முரண்களால் ஆன ஒரு நகரம். 

நாம் முன்பு பார்த்த கோஸ்டா பகுதியில் அமைந்துள்ளது. பாலை நிலம் ஆனால் கிலோன், ரிமாக், லூரின் என மூன்று நதிகளின் முகத்துவாரங்கள் அமைந்துள்ள பகுதி. அதனால் தண்ணீருக்குத் தட்டுப்பாடு இல்லை. 


பூமத்திய ரேகைக்கு அருகே அமைந்துள்ள நகரம். கடல் மட்டத்தில் அமைந்திருக்கும் நகரம். ஆனால் சென்னை போல வெப்பமும் வேர்வையும் இல்லை. அதிகக் குளிரும் இல்லாத மிதமானத் தட்பநிலை. நகரம் கடல்மட்டத்தில் இருந்தாலும் ஐயாயிரம் அடி உயரம் வரை இருக்கும் குன்றுகள் சூழ்ந்த நகரம். 


ஒரு புறம் செல்வச் செழிப்போடு மிளிரும் நவீன மிராப்ளோரெஸ் பகுதி, மறுபுறம் பழமை குலையாது பாதுகாக்கப்படும் தொன்மையான வரலாற்று வட்டாரம், இவைதாண்டி அடிப்படை வசதிகளுக்குக் கூடப் போராட வேண்டிய நிலையில் இருக்கும் புறநகர்ப் பகுதிகள் என இந்நகரத்திற்குத்தான் எத்தனை முகங்கள். 



நாங்கள் தங்கி இருந்த இடம் மிராப்ளோரெஸ் பகுதி. கடலோரத்தில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்த பகுதி. உயர்தர விடுதிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் என சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்குத் தேவையான அனைத்தும் கொண்ட இடம். இங்கிருந்து சிறிது தொலைவில் உள்ளது காதல் பூங்கா. லீமா கடற்கரையை மேலிருந்து பார்க்கும்படியான அமைப்பு. இங்கு அமர்ந்து சூரிய அஸ்தமானத்தைப் பார்க்க கூட்டம் அலைமோதுகிறது. தங்கள் பெயர்களை எழுதிய பூட்டை இங்குள்ள கிராதிகளில் மாட்டிவிட்டால் பிரியாது இருப்போம் என்ற நம்பிக்கை கொண்ட ஜோடிகள் ஆயிரக்கணக்கான பூட்டுகளை மாட்டி இருக்கிறார்கள். இந்தப் பூங்காவின் அருகில் பாராகிளைடிங் எனப்படும் சாகச விளையாட்டுக்கான இடமும் உள்ளது. 




லீமா நகரை நிர்மாணித்தது பிஸாரோ என முன்பே பார்த்தோம். அப்பொழுது அவர் நிர்மாணித்த நகரம் இன்றைய லீமாவில் ஒரு சிறு பகுதி. மன்னர்களின் நகரம் (Ciudad de los Reyes) என்ற பெயரை அவர் இந்நகரத்திற்கு அளித்தார். ஆனால் பொது வழக்கில் இன்று வரை நீடித்திருக்கும் பெயர் லீமாதான். இந்த ரிமாக் நதியின் பெயர்தான் லீமா என்று மருவியதாகச் சொல்கிறார்கள் அதே சமயம் இங்கிருந்த நிமித்தக்காரர்கள் கோவில் ஒன்றின் பெயர் க்வெட்சுவா மொழியில் லிமாக் (பேசுபவர்) என்று வழங்கப்பட்டதாகவும் அதுவே லீமா எனத் திரிந்ததாகவும் கூடச் சொல்கிறார்கள். 


கப்பல்கள் வந்து போகத் தோதாக இருக்க வேண்டும், அதே சமயம் தாக்குதல்களைத் தவிர்க்கப் பாதுகாப்பான இடமாகவும் இருக்க வேண்டும். வளமான நிலம் கொண்ட, மிதமான தட்பவெப்ப நிலை கொண்ட பகுதியாகவும் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்தான் லீமா. முதலில் குடியேறிய பகுதியை அந்த பழமை மாறாமல் வைத்துள்ளார்கள். யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியத் தலம் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்தப் பகுதி. 


தேவாலயங்கள், அரசு அலுவலகங்கள், அதிபர் மாளிகை, மாநகராட்சி அலுவலகங்கள், பேராயரின் அரண்மனை எல்லாம் அமைந்துள்ள இப்பகுதி பெருஞ்சதுக்கம் என அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டடங்களில் உள்ள அழகான மாடங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. விடுமுறைக்காலம் என்பதால் கோலாகலமாக இருந்தது. அத்தனை கூட்டம் இருந்தாலும் குப்பைகளே இல்லாத சுத்தம் கண்ணைப் பறித்தது. அத்தனை செல்வம் இருந்தாலும் பழங்குடியினர் பலர் கையேந்தி நின்றது மனத்தைக் குத்தியது. 


மர மாடங்கள்

அதிபர் மாளிகை

பெருஞ்சதுக்கம்

விழாக்கால கோலாகலம்

தேவாலய முகப்பு

இங்குள்ள சான்பிரான்ஸிஸ்கோ பேராலயம் கண்களுக்கு ஒரு விருந்து. அருமையான வேலைப்பாடு, மிக அழகான குவிமாடம் (Dome), கலைப்பொருட்கள், பிரம்மாண்டமான ஆர்கன் (Organ), சேர்ந்திசை மண்டபம், மரப்படிகள் கொண்ட பல அடுக்குகள் கொண்ட பழங்கால நூலகம் என்று பார்க்கும் இடம் எல்லாம் பிரமிக்கச் செய்யும்படி இருந்தது. இங்கு படங்கள் எடுப்பது தடை செய்யப்பட்டிருப்பதால் படங்கள் ஏதும் இல்லை. 


இத்தனை அழகையும் காண்பித்துவிட்டு பின் தரைமட்டத்திற்குக் கீழ் உள்ள தளத்திற்குக் கூட்டிச் சென்றனர். அங்கு நாங்கள் கண்டது கேட்டகோம்ஸ் (Catacombs). இறந்தவர்களைப் புதைக்கும் பிணவறைகள். அருட்பெற்ற இடங்களில் புதைக்கப்பட்டால் சொர்க்கம் நிச்சயம் என்ற நம்பிக்கையால் இப்படி தேவாலயத்தின் கீழ் புதைக்கப்படுவது வழக்கமாக இருந்ததாம். இருபத்தி ஐந்தாயிரம் உடல்களாவது புதைக்கப்பட்டு இருக்கும் என்கின்றனர். தனி மாடங்களில் புதைக்கப்பட்ட உடல்கள், கிணறு போன்ற அமைப்பில் மொத்தமாகப் புதைக்கப்பட்ட உடல்கள் எனப் பார்க்க முடிந்தது. 


பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பொதுமக்களின் உடல்கள் புதைக்கப்படுவது தடை செய்யப்பட்டுவிட்டாலும் இறைப்பணியில் இருந்தவர்களின் உடல்கள் மட்டும் இன்னமும் இங்கு புதைக்கப்படுவதற்கு அனுமதி இருக்கிறது. நாங்கள் சென்ற பொழுது, அப்படி ஒருவரின் உடல் குழிகளில் இறக்கப்படுவதைப் பார்த்தோம். 


பேராலய முகப்பு

லீமா என்ற நகரம் 1535ஆம் ஆண்டு பிஸாரோவால் நிர்மாணிக்கப்பட்டாலும் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பெருவின் பழங்குடியினரால் குடியேறப்பட்ட இடம்தான். இதற்குச் சான்றாக இருப்பது வ்வாக்கா புக்கியானா (Huaca Pucllana).


20ஆம் நூற்றாண்டின் கடைசி தசாப்தங்கள். மிராப்ளோரேஸ் பகுதி செல்வந்தர்களுக்கான பகுதியாக நிலைப்பெற்றுக் கொண்டு இருக்கின்றன நேரம். கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. புதிய கட்டடம் ஒன்றிற்காக அங்கிருந்த மணற்குன்றினைத் தரைமட்டமாக்கத் தொடங்கினர். அப்பொழுது அவர்கள் கண்ணில் பட்டது புதைத்திருந்த களிமண் செங்கல்கள். விஷயம் தெரிந்த அரசு அந்நிலத்தைக் கைப்பற்றி அகழ்வாராய்ச்சி துறையிடம் தந்தது. அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது அங்கிருந்த ஏழடுக்குப் பிரமிட். 


பொயு 200 முதல் 700 வரை இந்தப் பகுதியில் வாழ்ந்த லீமா இனத்தவரால் முதலில் கோவிலாகக் கட்டப்பட்டது இந்தப் பிரமிட். இங்குள்ள பலிபீடங்கள் அதற்குச் சான்றுகள். கையால் உருவாக்கப்பட்டு, வெயிலில் காய வைக்கப்பட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது இந்தப் பிரமிட். செங்கற்களை செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்ட வாக்கில் இந்தப் பிரமிட் கட்டப்பட்டதால் இதற்கு நூலக கட்டுமான முறை என்ற பெயர் வழங்கப்பட்டது. அதிலும் சில செங்கற்களுக்கு இடையே இடம் விட்டு கட்டப்பட்ட முறை இந்தப் பிரமிட் நிலநடுக்கங்களால் பாதிப்பு ஏற்படாமல் செய்கிறது. ஒரு புறம் கடலையும் மறுபுறம் மலைகளையும் பார்க்கும் படி கட்டப்பட்டு இருப்பதற்குக் காரணம் இவர்கள் கடலையும் மலைகளையும் கடவுளாகக் கருதியதால்தான். 


இவர்களைத் தொடர்ந்து வந்த வாரி, இச்மா இனத்தினர் இந்த இடத்தை கல்லறையாகப் பயன்படுத்தியுள்ளனர். இவர்களின் முதுமக்கள் தாழிகள் மேலடுக்குகளில் காணப்படுகின்றன. இன்றும் இப்பகுதியில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுற்றிலும் நவீன கட்டடங்கள் சூழ்ந்திருக்கும் இந்தப் பழமையான இடம் கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். 


பிரமிட்

பழமையும் புதுமையும்

நூலகக் கட்டுமானம்

மண்பாண்டங்கள்

முதுமக்கள் தாழி

தெரிவதும் மறைந்திருப்பதும்

லீமாவில் இன்னும் பார்க்கப் பல இடங்கள் இருந்தாலும் எல்லாப் பெருநகரங்கள் போலத்தான் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. நாளை லீமாவை விடுத்து தென் திசை செல்வோம்.


அது வரை... 


பெருவின் தேசிய பானம் - பிஸ்கோ சவர் (Pisco Sour)


பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன - லீமா புகைப்படங்கள்