பென்குயின்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்ததில் ப்ளெமிங்கோக்களை மறந்துவிட்டேன். கடற்கரை முழுவதும் கொத்து கொத்தாக நின்றுகொண்டிருக்கின்றன இந்த ப்ளெமிங்கோ பறவைகள். இப்பொழுது மட்டுமில்லை. பொயு 1820ஆம் ஆண்டு இந்தக் கடற்கரையில் வந்து இறங்கிய சான் மார்ட்டின் பார்த்த காட்சியும் இதுதான். சரேலென்று கிளம்பி இரு பெரும் இறக்கைகளை விரித்துப் பறந்த ப்ளெமிங்கோ பறவைகள் அவர் கண்களில் தென்பட்டுக் கொண்டே இருந்தன. பெருவிற்கான கொடியை அவர் வடிவமைத்த பொழுதும் இதுதான் அவர் மனக்கண்ணில் இருந்தது. இரு புறமும் சிவந்த இறக்கைகள், நடுவே வெளிரிய உடல் என் ப்ளெமிங்கோ பறவையை நினைவுபடுத்தும்படி இரு புறமும் சிவப்புப் பட்டைகள் நடுவே வெள்ளைப் பட்டை என பெருவின் கொடியை வடிவமைத்தார் சான் மார்ட்டின். அவர் வடிவமைத்த கொடியில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்த அடிப்படை சிவப்பு வெள்ளை சிவப்பு வண்ணங்கள் மட்டும் மாறவே இல்லை.
ப்ளாமிங்கோ |
பெரு நாட்டின் கொடி |
நீர் நாய்களையும், ப்ளெமிங்கோக்களையும், பென்குயின்களையும், மற்ற பறவைகளையும் அவற்றின் குவானோவையும், மூக்கை மூடிக்கொண்டே, பார்த்தாகி விட்டது. அடுத்து பக்கத்து ஊரான பிஸ்கோவிற்குப் போகலாம்.
பிஸ்கோ என்றால் க்வெட்சுவா மொழியில் சிறிய பறவை எனப் பொருள். இந்தப் பகுதியில் நிறைந்திருக்கும் பறவைகளால் இப்பெயரை பழங்குடியினர் சூட்டி இருக்கலாம். ஆனால் இன்று பிஸ்கோ என்றால் பறவைகள் ஞாபகத்திற்கு வருவதில்லை. அங்கு தயாரிக்கப்படும் மதுவின் ஞாபகம்தான் எல்லாருக்கும் வரும். ஷேம்ப்பெயின் என்றால் பிரான்ஸின் பகுதி என்பதையும் விட அங்கு தயாராகும் மதுபானம் ஞாபகத்திற்கு வருவது போல. பத்தமடை என்றால் ஊரைத் தெரியாதவர்களுக்குக் கூடப் பாயைத் தெரிவது போல.
பெருவில் இருந்து ஸ்பெயின் எடுத்துச் சென்றதுதான் அதிகம் என்றாலும் அவர்கள் சிலவற்றை கொண்டும் வந்துள்ளார்கள். அதில் ஒன்று திராட்சைப்பழம். இங்குள்ள தட்பவெட்ப நிலைக்கும் நிலத்தின் வாகிற்கும் ஏற்ப இந்த திராட்சைப் பழங்கள் தனித்துவமான சுவை கொண்டதாகின. தங்களுக்குத் தேவையான பழங்களை, முதல் தரப் பழங்களை, எடுத்துக் கொண்டு மற்றவற்றை பெருவினருக்குத் தந்தார்கள் ஸ்பானியர்கள். அப்பழங்களில் இருந்து செய்யப்பட்டதுதான் நெருப்புநீர் எனப் பொருள் வரும் Aguardiente. நாளடைவில் இப்பெயர் மறைந்து போய், தயாரிக்கப்படும் இடத்தின் பெயரான பிஸ்கோ என்றே அறியப்பட்டது. பிராந்தி வைகை மது என்றாலும் மற்ற இடங்களில் செய்யப்படுவது போலல்லாமல் இங்கு இந்த மது மர பேரல்களில் தயார் செய்யப்படுவதில்லை. அதனால் இதன் சுவை முற்றிலும் திராட்சையில் இருந்தே கிடைப்பது இதன் தனித்துவம் என்கிறார்கள்.
இதே செய்முறையில் சீலேவிலும் மதுபானம் தயார் செய்யப்பட்டது. அதற்கும் பிஸ்கோ என்றே பெயரிட்டனர். சாமர்த்தியமாக 1931ஆம் ஆண்டே புவிசார் குறியீட்டை வாங்கி வைத்துவிட்டனர். இதற்காக தங்கள் நாட்டில் ஒரு சிறிய ஊரின் பெயரைக் கூட பிஸ்கோ என்று மாற்றினர். ஆனால் பிஸ்கோ எங்கள் சொத்து என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது பெரு. தங்கள் பங்குக்கு அவர்களும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையே இது பெரும் பிரச்னையாக இருக்கிறது. நான் சீலே சென்றிருந்த பொழுது தனிப்பட்ட முறையில் அங்குள்ள நண்பர்கள் பெருவின் பிஸ்கோதான் உண்மையானது எங்கள் பிஸ்கோவை விடச் சிறந்தது என்றார்கள். ஆனால் அவர்களே அதைப் பொதுவெளியில் சொல்ல மாட்டார்கள். இந்த மதுபானச் சண்டை இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பிஸ்கோவில் அதிகம் சுற்ற நேரமில்லை. நேரடியாக விமான நிலையம் செல்ல வேண்டும். அந்தச் சிறிய நகரத்திற்குச் சம்பந்தமில்லாமல் ஒரு பெரிய விமானநிலையம். கேப்டன் எப்ஏபி ரெனான் எலியஸ் ஒலிவேரா சர்வதேச விமான நிலையம் (Capitán FAP Renán Elías Olivera Airport) எனப் பெயரும் பெரிய பெயர். ஆனால் உள்ளே சென்றால் பெரும்பகுதி மூடித்தான் கிடக்கிறது. ஒரு சிறிய பகுதியில் மட்டும்தான் புழக்கம். ஏன் இப்படி எனக் கேட்டால் பொரிந்து தள்ளிவிட்டார் வழிகாட்டி. யாரோ ஒரு அரசியல்வாதியின் கனவாக இவ்வளவு பெரிய விமான நிலையம் அமைந்துள்ளதாகவும், இதனால் பயனே இல்லை என்றும், தீனி போட்டு மாளாத யானையைப் போல இதற்காகும் செலவு கட்டுக்கடங்காமல் இருப்பதாகவும், ஒரே ஒரு விமான நிறுவனம் மட்டுமே சேவை வழங்குவதற்கு எதற்கு இவ்வளவு பெரிய விமான நிலையம் எனக் கதறிவிட்டார்.
நான் இலங்கை சென்றிருந்த பொழுது இதேக் கதையை கேட்டிருந்தேன். அங்கு ராஜபக்ச ஆட்சியில் இருந்த காலத்தில் தன் சொந்த ஊரான அம்பாந்தோட்டைக்கு அருகே மத்தளை ராஜபக்ச பன்னாட்டு விமான நிலையம் என இலங்கையின் இரண்டாவது பெரிய விமான நிலையத்தைக் கட்டியதும், அதற்குப் பயனில்லாமல் போனதும், இதே போல அதை பராமரிக்க ஏற்படும் செலவுகள் குறித்தும், ஒரு சமயம் நெல் மூட்டைகளை பாதுக்காத்து வைத்திட இந்த விமான நிலையம் பயன்பட்டதையும் அங்குள்ளவர்கள் சொல்லிக் குமுறியது என் ஞாபகத்திற்கு வந்தது. எல்லா இடங்களிலும் அரசியல் ஒரே மாதிரிதான் போல.
இங்கு நாங்கள் விமானமேறியது அருகில் இருக்கும் நாஸ்கா கோடுகளைப் பார்க்க. சிறிய விமானம்தான். பத்துப் பனிரெண்டு பேர்கள் செல்லக்கூடிய விமானம். எல்லா இருக்கைகளுமே ஜன்னலோர இருக்கைகள்தாம் என்பதால் அனைவராலும் வெளியே பார்க்க முடியும். இந்தச் சுற்றுலா விமானங்கள் மட்டுமே இந்த விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
அது என்ன நாஸ்கா கோடுகள்? பராகஸ்ஸில் கேண்டலப்ராவைப் பார்த்தோமல்லவா? அது போல நிலத்தில் மிகப்பெரிய அளவில் வரையப்பட்ட சித்திரங்கள் இந்த நாஸ்கா கோடுகள். வெறும் கோடுகள், முக்கோணங்கள், சதுரங்கள், சுருள்கள் என்றெல்லாமும் குரங்கு, சிலந்தி, காண்டார் பறவை, தேன்சிட்டுப் பறவை, மரங்கள், செடிகள் போன்ற உருவங்களும் இப்படி வரையப்பட்டிருக்கின்றன. அளவு பற்றிச் சொல்ல வேண்டுமானால் முந்நூற்று அறுபது அடி குரங்கு, இருநூற்றுப் பத்து அடி திமிங்கிலம், நானூற்று ஐம்பது அடியில் காண்டார் பறவை, கிட்டத்தட்ட ஆயிரம் அடி நீளத்தில் பெலிகன் பறவை என எல்லாமே மிகப்பெரிய அளவில் வரையப்பட்ட சித்திரங்கள்தான்.
சிவந்த சமவெளி (Pampa Colorado) என்ற பெயர் கொண்ட பாலைவனத்தில் இச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. தரை மட்டத்தில் இருக்கும் ஆழ்ந்த நிறத்தில் உள்ள மண்ணைத் தோண்டி எடுத்தால் கீழிருக்கும் மங்கிய நிற மண் தெரிகிறது. இது சுற்றி இருக்கும் ஆழ்ந்த நிற மண்ணில் இருந்து மாறுபட்டுத் தெரிகிறது. இப்படித் தோண்டித்தான் இந்தச் சித்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இங்கு அடிக்கும் காற்று, இந்த பள்ளங்களில் விழும் மண்ணைத் தொடர்ந்து பறந்துவிடச் செய்வதால் இந்தப் பள்ளங்கள் மூடப்படாமலேயே இருக்கின்றன. இப்படித்தான் இந்தச் சித்திரங்கள் இவ்வளவு நாட்களாகப் பாதுக்காக்கப் பட்டுள்ளன. பராகஸ் இனத்தவரும் அவர்கள்களுக்குப் பின் வந்த நாஸ்கா இனத்தவரும் இச்சித்திரங்களை வரைந்ததாகச் சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பறவையும் மரமும் பின்னே பார்வையாளர் மாடமும் |
குரங்கிலிருந்து பிறந்தவன் |
ஏலியன் இவந்தனோ.. |
நாஸ்காவில் உள்ள சித்திரங்கள் |
எதற்காக இவ்வளவு பெரிய சித்திரங்களைச் செய்தார்கள்? எப்படி இவ்வளவு பெரிய உருவங்களைக் கற்பனை செய்து கணக்குத் தவறாமல் வடிவமைத்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு நம்மிடையே பதில் இல்லை. தண்ணீர் வரும் கால்வாய்களாகப் பயன்படுத்தி இருப்பார்கள், வானவியல் சம்பந்தப்பட்ட சித்திரங்களாக இருக்கும் என்றெல்லாம் சில ஹேஷ்யங்கள் முன்வைக்கப்பட்டாலும் சரியான, முடிவான கருத்து ஏதும் இதுவரை இல்லை. இது வேற்றுக்கிரகவாசிகளின் கைவண்ணம். அவர்களின் ஊர்திகள் இறங்குவதற்கான தளங்கள் இவை என்கிறார்கள் ஒரு சாரர்.
இவ்வளவு பெரிய சித்திரங்களை முழுவதும் பார்க்க வேண்டுமானால் உயரத்தில் இருந்துதான் பார்க்க வேண்டும். அதற்கென சில பார்க்கும் மேடைகளை அமைத்திருக்கிறார்கள் ஆனால் அவற்றை விட உசிதம் விமானத்தில் இருந்து பார்ப்பதுதான் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதையே பெரிதும் விரும்புகிறார்கள். எல்லாவற்றையும் பார்க்க ஏதுவாக விமானத்தை இப்படியும் அப்படியும் திருப்பித் திருப்பிக் காண்பிக்கும் பொழுது அடிவயிறு கலங்கிவிடுகிறது. சாதாரண விமானப் பயணங்களிலேயே வயிறு கலங்குபவர்கள் இதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நல்லது.
இந்த நாஸ்கா கோடுகளோடு நம் கோஸ்டா பகுதி பயணம் நிறைவடைகிறது. இங்கிருந்து மீண்டும் லீமா திரும்பி நாம் அடுத்து செல்ல இருப்பது சியாரா பகுதி. மலையகம். நம் பாணியில் சொல்ல வேண்டுமானால் குறிஞ்சி.
பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன - நாஸ்கா புகைப்படங்கள்
2 comments:
Did you taste "Pisco Sour"
பெருசு, உள்ளூர்க்காரரா எல்லாப் பதிவையும் படிச்சுக் கருத்துச் சொல்ல வேண்டாமா? நாலாவது பகுதியிலேயே பிஸ்கோ சவர் படம் போட்டாச்சே.. எல்லா இடத்திலும் பிஸ்கோ சவர் குடிச்சுப் பார்த்தாச்சு. நமக்கு அது கொஞ்சம் சுமார்தான். பிரேசிலின் காய்பிரின்ஹாதான் நம்ம சாய்ஸ்.
Post a Comment