Wednesday, January 10, 2024

பெரு(ம்) பயணம் - 10

 

பெருவின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் மாத்ரே தே தியோஸ் (Madre de Dios - கடவுளின் தாய்) தான் நமது அடுத்த இலக்கு. அதே பெயர் கொண்ட நதி இப்பகுதியில் ஓடுவதால் இப்பகுதிக்கே இந்தப் பெயர். பெருவியன் அமேசான் என்று அழைக்கப்படும் காடுகள் இங்கு உள்ளன. அமேசான் காடுகளில் ஒரு பகுதி இது.   கூஸ்கோவில் இருந்து சுமார் ஒரு மணி நேர விமானப்பயணத்திற்குப் பின் நாங்கள் இறங்கியது புயெர்த்தோ மால்டனாடோ (Puerto Maldonado) என்ற நகரம். இது மாத்ரே தே தியாஸ் பகுதியின் தலைநகரம். 



இங்கு எங்களைச் சந்தித்தார் வழிகாட்டி எரிக். நம்மை காட்டுக்குள் கூட்டிச் செல்லப் போவது இவர்தான். ஓர் ஆசிரியர் போல கண்டிப்பாக இருந்தார். இவர் சொல்வதைக் கேட்டு நடக்கத்தன் வேண்டும் போல. செல்ல இருப்பது நடுக்காடு. பழங்கதைகளில் வருவது போல ஏழு மலைதாண்டி ஏழு கடல்தாண்டி எல்லாம் செல்லத் தேவை இல்லை என்றாலும். விமானத்தில் வந்து இறங்கிய நம்மை ஒரு பேருந்தில் ஏற்றிக் கொண்டு ஒரு நதிக்கரையோரம் கொண்டு சென்றார். சிறிய சாலைதான் ஆனால் அத்தனை அழகாக இருந்தது. பொதுவாகவே  இந்தப் பகுதியில் மக்கள்தொகை கம்மி என்பதால் போக்குவரத்தும் அவ்வளவு இல்லை. ஒன்றரை மணி நேரம் பேருந்துப் பயணத்தில் நடுநடுவே வந்த சிற்றூர்களைத் தவிர ஆட்களையே பார்க்கவில்லை. 



இப்பகுதி முழுவதுமே வனாந்திரம்தாம். சுற்றுலா முக்கியமான தொழிலாக உள்ளது. இயற்கை வளத்தை பாதுகாக்க பெரு அரசு பல இடங்களை பாதுகாக்கப்பட்ட வனங்களாக அறிவித்துள்ளது. அதில் ஒன்றுதான் டாம்போபாட்டா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இது  டாம்போபாட்டா என்ற நதியைச் சுற்றி அமைந்துள்ளது. இந்த காடுகளுக்குள் செல்ல ஒரே வழி இந்த நதிகளில் படகோட்டிச் செல்வதுதான். நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் பிரயாணித்த பின் அதிலிருந்து பிரியும் மண் சாலை ஒன்றில் மேலும் அரை மணி நேரம் பயணம் செய்தால் வரும் சிற்றூர் பிலடெல்பியா (Filadelfia). இங்கிருந்து படகு ஒன்றில் ஏறி டாம்போபாட்டா நதியில் செல்லப் போகிறோம். 


டாம்போபாட்டா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி (இனி டாம்போபாட்டா காடுகள் என அழைப்போம்) இருபது லட்சம் ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. இதில் மழைக்காடுகள், சதுப்பு நிலங்கள் எனப் பலவிதமான நிலங்கள் உள்ளன. அதற்கேற்றாற்போல பல்வேறு வகை மரங்கள், பறவைகள், பூச்சிகள், நீர்வாழ் இனங்கள் என இயற்கை வளம் கொட்டிக் கிடக்கும் பகுதி. இது வரை நாம் பார்த்த தட்பவெட்ப நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இடம். நல்ல வெயில் அடித்தாலும் பெரிய மரங்கள் அதனைத் தடுத்துவிடுவதால் நேரடி வெயில் தரை மட்டத்திற்கு வருவதில்லை. பதினைந்து சதவிகித வெயில்தான் கீழே வருகிறது. ஆனால் வெப்பத்திற்குக் குறைவில்லை. காற்றில் ஈரப்பதம் நிறைந்திருப்பதால் கொஞ்சம் நேரம் வெளியில் இருந்தாலே வியர்வையில் நனைந்துவிடுகிறோம். எப்பொழுது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்பதால் சிறுபையில் மழைக்கோட்டு, தண்ணீர் எல்லாம் வைத்துக் கொள்ளுங்கள் என்று முதலிலேயே சொல்லிவிடுகிறார்கள். 



இங்கு நாங்கள் இரு வேறு விடுதிகளில் தங்கினோம். இரண்டிலுமே பொதுவான விதிகள் சில இருந்தன. காடுகளுக்குள் நடக்க அவர்கள் தரும் ரப்பர் பூட்ஸ் காலணிகளைத்தான் அணிய வேண்டும். திரும்பி வரும் சமயம் அவற்றை நீரில் கழுவி விடுதிகளுக்கு வெளியே வைத்துவிட்டு நம்முடைய காலணிகளை அணிந்து உள்ளே செல்ல வேண்டும். மழைக்காடுகள் என்பதால் சேறிலும் நீரிலும் நடக்க வேண்டி இருக்கிறது. அதற்கு அந்தக் காலணிதான் சரியாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அந்த சேறு விடுதிகளுக்குள் வராமல் இருக்க இந்த ஏற்பாடு. 



அதே போல நாம் தங்கும் அறைகளில் மூன்று சுவர்கள்தான். நான்காவது சுவர் இருக்க வேண்டிய இடத்தில் காடுதான் இருக்கிறது. அதனால் அறைக்குள் உணவுப் பொருட்களை கூடியமான வரை கொண்டு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார்கள். படுக்கையைச் சுற்றிக் கொசுவலைகளைச் சுற்றிவிடுகிறார்கள். இரவில் அந்த வலைகளுக்கு வெளிய விதவிதமான பூச்சிகள் ரீங்காரமிட்டுப் பறப்பது வித்தியாசமான அனுபவம்தான். 




விடுதியின் முன்னறையில் இருந்து நாம் தங்கும் அறைகளுக்குச் செல்ல மரப்பாதை அமைத்திருக்கிறார்கள். இப்பாதைகள் பெரும் மரங்களுக்கு நடுவே செல்வதால் அறைக்குச் செல்லும் பொழுது கூட நம் தலைமேல் கிளிகளும் மக்காவ் (Macaw) பறவைகளும் பறந்த வண்ணம் இருக்கின்றன. விடுதிக்கு வெளியே காடுதான் என்பதால் மூன்று வேளை உணவும் விடுதியிலேதான். புபே முறைதான். நமக்குண்டான கட்டுப்பாடுகளை முன்னரே சொல்லிவிட்டால் அதற்கு ஏற்றாற்போல் சமைக்கிறார்கள். 




விடுதியின் எல்லைக்குள் நாம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்கு வெளியே சென்றோமானால் நம் வழிகாட்டியின் துணை இல்லாது தனியாகக் செல்லக்கூடாது என உறுதிபடச் சொல்லிவிடுகிறார்கள். இங்கே பலவித ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுவதால் தினம் அவை குறித்த அளவளாவலும் உண்டு. 


சூரியஒளி மூலம் கிடைக்கும் மின்சாரம் மட்டும்தான் என்பதால் நாள் முழுவதும் மின்சாரம் இருக்கும் எனச் சொல்ல முடியாது. கிடைக்கும் பொழுது போட்டுக் கொள்ள அறையில் ஒரு மின்விசிறி இருக்கிறது. ஆனால் அதனால் பயன் அதிகமில்லை. மின்சாரம் இருக்கும் பொழுது இணையவசதி கிடைக்கிறது. வெந்நீருக்குப் பஞ்சமில்லை. ஆனால் வெளியே சென்று வந்தால் ஊற்றும் வியர்வைக்கும் சும்மா இருந்தால் கூட இருக்கும் புழுக்கத்திற்கும் தண்ணீரே போதுமானதாக இருந்தது. 


பிலடெல்பியாவில் இருந்து ஒரு மணி நேரம் நீரோடும் திசையிலே சென்றால் வருவது ரெப்யூஜியோ அமேசோனாஸ் என்ற விடுதி. இங்குதான் நாங்கள் முதலில் சென்றோம். படகில் இருந்து இறங்கி சிறிது தூரம் காட்டுக்குள் நடந்து சென்ற பின்னால்தான் விடுதி கண்ணில் படுகிறது. கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு வாருங்கள், வெயில் தாழுமுன் ஒரு முறை காட்டுக்குள் சென்று வருவோம் என்றார் எரிக். 



அரை மணி நேரத்திற்கு மேல் நடந்து சென்றோம். செல்லும் வழியில் தென்பட்ட பிரேசில்நட், சீடர், ஐயர்ன்வுட் போன்ற மரங்களைச் சுட்டிக் காட்டிக் கொண்டே வந்தார். அவர் காண்பித்த ஒரு மரம் விசித்திரமானது. அதன் பெயர் நடக்கும் பனை (Walking Palm). பெரிய மரங்களால் வெயில் தடுக்கப்படுவதால் இது நிழலில் இருந்து வெயிலைத் தேடி மெதுவாக நகரும். துடைப்பம் போன்ற வேர்ப்பகுதி இது போல அந்த மரம் மெதுவாக நகர்வதற்கு உதவுகிறது என்றார். வீட்டுக்கு வந்த பின் அது பற்றிப் படித்தால் அது வெறும் கதைதான் அப்படி ஒன்றும் அந்த மரம் நகர்வதில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். 



காட்டுக்கு நடுவே நூறு அடி உயரத்தில் ஒரு மேடை கட்டப்பட்டிருந்தது. அதில் ஏறினால், அங்குள்ள மரங்களின் உயரத்திற்கு நாம் செல்ல முடிகிறது. மேலிருந்து பார்க்கும் பொழுது மரங்களின் நடுவே தாவும் குரங்குகள், உயரப் பறக்கும் பறவை எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. 



அவற்றை எல்லாம் பார்த்துவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்தோம். சூரியன் மறைந்த பிறகு செய்ய ஏதுமில்லை என்பதால் சீக்கிரமே உறங்குங்கள். நாளை காலை நான்கு மணிக்கு கிளம்ப வேண்டும் என்றார் எரிக். 


பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன -  அமேசான் புகைப்படங்கள்


0 comments: