Wednesday, January 03, 2024

பெரு(ம்) பயணம் - 3

 பொயு 1526

பெயர் புகழ் செல்வம் தேடி வந்த பிரான்ஸிஸ்கோ பிஸாரோ தென்னமெரிக்காவில் கால் பதித்தார்.

 

இன்கா நாகரிகம் தனது உச்சத்தில் இருந்த நேரம். தற்போதைய ஈகுவேடாரில் தொடங்கி சீலே வரை பரந்திருந்த நாடு. சுமார் 700,000 சதுர மைல்களில் ஒன்றேகால் கோடி மக்கள் வசித்து வந்தனர். சமாதானப் பேச்சுகள் மூலமாகவும் போர் தொடுத்தும் பல குழுக்களை இணைத்து தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருந்தார் இன்கா பேரரசர் வ்வொய்னா கபக் (Huayna Capac). காடு மலைகள் வழியாக இவர்கள் அமைத்த சாலைகளின் தூரம் மட்டுமே 15,000 மைல்கள். இவற்றின் பல பகுதிகளை இன்றும் பார்க்கலாம். விவசாயம், நெசவு, மண்பாண்டங்கள், பீங்கான் என்று எல்லாத் தொழில்கள் சிறப்பாகச் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. அரண்மனைகளிலும் கோயில்களிலும் தங்கமும் வெள்ளியும் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. 


இவற்றைக் கைப்பற்ற நினைத்தார் பிஸாரோ. ஆனால் தானாகச் செய்வதை விட ஸ்பானிஷ் அரசரின் உத்தரவைப் பெற்றோமானால் இந்த நிலத்திற்கு தான் ஆளுநர் ஆகிவிடலாம் என்று எண்ணி அரசரின் உத்தரவை எதிர்நோக்கி ஸ்பெயினுக்குத் திரும்பிச் சென்றார். 


அதே சமயம் பேரரசர் கபக்கும் அவரது பட்டத்து இளவரசனும் ஒரே சமயத்தில் இறந்தார்கள். பிஸாரோ குழுவினர் மூலம் ஐரோப்பாவில் இருந்து தென்னமெரிக்கா வந்த அம்மை நோயினால் அவர்கள் மறைந்தார்கள் என எண்ணப்படுகிறது. கபக்கின் மகன்களான வ்வாஸ்கார் (Huascar), அதவுஅல்பா (Atahualpa) அரசாட்சியைப் பிடிக்க தங்களுக்குள்ளே அடித்துக் கொள்ளத் தொடங்கினர். இந்தச் சண்டை இனப்போராக மாறியது. இன்கா நாகரிகம் ஆட்டம் காணத் தொடங்கியது. இறுதியாக அதவுஅல்பா அரியணையைக் கைப்பற்றினான். ஆனால் இந்த இனப்போரினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். அந்தப் பகுதியின் பொருளாதாரமும் நிலை குலைந்து போனது. 


பொயு 1532


இந்தச் சமயத்தில்தான் பிஸாரோ, தென்னமெரிக்காவை ஸ்பெயின் காலனி ஆக்க  ஸ்பெயின் அரசரின் அனுமதி பெற்று மீண்டும் வந்தார். அப்பொழுது அவருக்கு வயது 54. தன்னுடன் 168 வீரர்களையும் 37 குதிரைகளை மட்டுமே கொண்டு வந்திருந்தார். 


மன்னர் அதவுஅல்பாவை சந்தித்து ஸ்பெயின் மன்னருக்குக் கீழ்படிய வேண்டும், கத்தோலிக்க மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொன்னார். மொழிப் பிரச்னையோ அல்லது மதம் மாறுவதில் விருப்பம் இல்லாததாலோ பேச்சுவார்த்தை தோல்வியடைந்து சண்டை தொடங்கியது.



இன்கா இனத்தினர் பெரும்பாலும் ஈட்டி, வேல், தடி போன்ற ஆயுதங்களைக் கொண்டு நெருக்கமாக இருந்து சண்டையிடுவர். ஆனால் ஸ்பானியர்களோ இரும்புக் கத்தி, துப்பாக்கிகள் கொண்டு தள்ளி இருந்து தாக்கும் திறன் கொண்டிருந்தனர். அந்த ஆயுதங்களைச் சமாளிக்கும் வழி இன்காவினருக்கு இல்லை. அது மட்டுமல்லாது தென்னமெரிக்காவில் குதிரைகள் கிடையாது. இவர்கள் கொண்டு வந்திருந்த குதிரைகள் போர்களத்தில் சுற்றிச் சுழல அதற்கு பதில் இல்லாமல் தவித்தார்கள் இன்காவினர். 


தன் ஆட்களில் ஒருவர் கூட பலியாகாமல் கிட்டத்தட்ட ஏழாயிரம் இன்காவினரைக் கொன்று குவித்து மன்னர் அதவுஅல்பாவையும் கடத்திச் சென்றார் பிஸாரோ. அதவுஅல்பாவைக் கொன்று தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னரைக் கொண்டு சில காலம் பொம்மை அரசினை நடத்தினார். தொடர்ந்து எதிர்ப்புகள் இருந்தாலும் ஸ்பானியர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. பொயு 1572ஆம் ஆண்டு கடைசி இன்கா மன்னராக இருந்த டுபக் அமருவைக் கொன்று இன்கா நாகரிகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிஸாரோ. 


லீமா என்ற நகரை நிர்மாணித்து அங்கிருந்து பெருவை ஸ்பெயினின் காலனியாக அறிவித்து ஆட்சியும் செய்தார். இன்கா நாகரிகத்தின் எச்சத்தை பெருமளவு அழித்து அவர்கள் கலாச்சாரத்தையே இல்லாமல் செய்தார்கள். அரண்மனைகளும் கோயில்களும் அழிக்கப்பட்டன. கத்தோலிக்க தேவாலயங்கள் பழைய கோவில்களின் மேலேயே கட்டப்பட்டன. கடுமையான வரி விதிப்புகள் செய்யப்பட்டன. உள்ளூர் ஆட்கள் அடிமையாகவே ஆனர். 


அடுத்த முந்நூறு வருடங்களுக்கு ஸ்பானியர்கள் ஆட்சி. விவசாயம் தொடர்ந்து நடந்தாலும் இயற்கை வளங்களை எப்படி எல்லாம் வழித்தெடுக்கலாமோ அதற்கெல்லா வழிவகைகளையும் செய்தனர். வெள்ளி, தங்கம், பாதரசம் என ஏராளமான வளங்கள் சுரண்டி எடுக்கப்பட்டன. நாட்டின் பிற பகுதிகளைப் பற்றி கவலைப்படாமல் லீமாவை மட்டுமே செல்வச் செழிப்பாக்கினர். உள்ளூர் மக்கள் பட்ட துயரங்கள் கணக்கிலடங்கா. 


உலகின் மற்ற பகுதிகளில் நடந்ததைப் போலவே பெருவிலும் ஸ்பானியர்களுக்கு எதிரான குரல்கள் எழத் தொடங்கின. சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. ஆர்ஜண்டீனாவின் ஹோசே டி சான் மார்ட்டின் ஆர்ஜண்டீனா, சீலே நாடுகளின் சுதந்திரத்திற்காகப் போராடிவிட்டு ஸ்பானியர்களை தென்னமெரிக்காவில் இருந்தே விரட்ட பெருவில் சண்டையிடத் தொடங்கினார். பொயூ 1821ஆம் ஆண்டு லீமாவில் நுழைந்து பெருவின் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினாலும் அவரால் முழு வெற்றியைப் பெற முடியவில்லை. அதற்காக அவர் வெனிசுவேலாவின் சிமோன் பொலிவாரின் துணையை வேண்டினார். முதலில் தயங்கிய பொலிவார் பின்னர் இணைந்து பெருவின் சுதந்திரத்தை உறுதி செய்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட உடன்படிக்கைப்படி மார்ட்டின் பெருவிலிருந்து வெளியேறினார். பொலிவார் பெருவின் அதிபரானார். 


ஸ்பானியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தாலும் பெருவிற்கு விடிவு காலம் வரவில்லை. காலனி நாட்டிலிருந்து தன்னாட்சியாக மாறுவதில் பெரும் குழப்பங்கள் விழைந்தன. 1826ஆம் ஆண்டு பொலிவார் பெருவில் இருந்து வெளியேறினார். அவர் விட்டுச் சென்ற இடத்தை பிடித்துக் கொண்டனர் ராணுவத்தினர். பல தளபதிகள் பதவியைப் பிடித்தாலும் பிடிக்கப் போட்டியிட்டாலும் அவர்களால் சாதிக்க முடிந்தது அதிகமில்லை. 1845ஆம் ஆண்டு ஜெனரல் ரமோன் காஸ்டியா அதிபரானார். இவர் நாட்டின் செல்வத்தைப் பெருக்க கையில் எடுத்தது பறவை எச்சம். இது குறித்துப் பின்னர் பார்ப்போம். இந்த சமயத்தில் விவசாயத்திற்கும் மற்ற துறைகளிலும் ஆள்கள் தேவை இருந்ததால் சீனாவில் இருந்தும் ஜப்பானில் இருந்தும் வந்து குடியேறினர். இவர்களில் ஒருவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஊழல் குற்றச்சாட்டுகளால் நாட்டை விட்டே விரட்டப்பட்டதும் பின்னாள் வரலாறு.


அக்கம்பக்கத்து நாடுகளோடு சிறு உரசல்கள் சில போர்கள் அதிகாரத்திற்கான தொடர் போட்டி என்று பெரு தத்தளித்துக் கொண்டுதான் இருந்தது. பல சர்வாதிகாரிகள் வந்தார்கள். சில நன்மைகளும் நடந்தன. சமயங்களில் தேர்தல் நடந்தது. ஆட்சி மீண்டும் ராணுவத்தின் கைகளுக்குச் சென்றது. இதனால் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. ஒளிரும் பாதை (Shining Path) போன்ற கொரில்லா இயக்கங்களால் வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. 


இருநூறு ஆண்டுகளாக இப்படித்தான் ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது பெருவில். பெருந்தொற்றினால் பொருளாதாரம் சரிந்த நிலையில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தார் பெட்ரோ காஸ்டியா. ஆனால் இவர் மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட, பெரும் கலவரங்களுக்கு நடுவே, 2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தனது பதவியை ராஜினமா செய்தார். இங்குதான் எங்கள் பயணம் தடைபட்டது. 


காஸ்டியாவைத் தொடர்ந்து அதிபரானது அவரது துணை அதிபர் டினா பொலுவார்டே. பெருவின் முதல் பெண் அதிபர் இவர். ஆனால் இவர் ராஜினமா செய்ய வேண்டும், புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனப் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. இந்தப் போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் நிலைமையை மேலும் கொந்தளிக்கச் செய்தன. 


கடந்த ஆறு ஆண்டுகளில் ஏழாவது அதிபர் டினா என்றால் அங்கு எப்பேர்ப்பட்ட நிலையாமை இருக்கிறது எனப் புரியும். அரசியலைத் தாண்டி நோக்கினோமானால், வளர்ச்சி லீமாவைச் சுற்றியே இருக்கிறது சியரா செல்வா பகுதிகளை அரசாங்கம் கண்டு கொள்வதில்லை. லீமா பகுதியில் பெரும்பாலும் ஸ்பானிஷ் பேசுபவர்கள். ஆனால் மற்ற பகுதிகளில் க்வெட்சுவா, அய்மரா போன்ற மொழிகளைப் பேசுபவர்கள் அதிகம். இந்தப் பகுதிகளில்தான் போராட்டம் அதிகம் நடைபெற்றது. நாம் இந்தியாவில் பார்க்கும் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது அல்லது இந்தி மொழி பேசுபவர்களுக்கும் பேசாதவர்களுக்கும் இடையே ஆன உரசல் என ஒப்பு நோக்க முடிகிறது. இந்தியாவின் நிலையான அரசு அமைப்பு ஒரு முக்கிய வித்தியாசமாகப் படுகிறது. 


இன்று வெளியில் இயல்பு நிலை இருப்பது போலக் காணப்பட்டாலும் நீறு பூத்த நெருப்பாகவே தோன்றுகிறது பெருவின் நிலைமை. இப்படி அரசியல் நிலையாமை, கலவரங்கள் என்று பேசினாலும் வாழ்க்கையை நடத்தத்தானே வேண்டும். பெரு எப்படி இருக்கிறது? லீமாவிற்குப் போகலாம்.


பிகு: படங்கள் இணையத்தில் எடுக்கப்பட்டவை.






1 comments:

said...

இந்தப் பதிவிற்கு இதுவரை பின்னூட்டங்கள் இல்லை என்பது எனக்கொன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஹிஹி.
மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு இந்தப் பதிவு மிகவும் பிடித்திருந்தது. தென் அமெரிக்க வரலாற்றைப் படிக்கத் தூண்டுகிறது.