Thursday, January 11, 2024

பெரு(ம்) பயணம் - 11

 

யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும். மனிதர்கள் தவறிழைக்கும் பொழுது தம் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளுவதாகச் சொல்வார்கள். ஆனால் யானை தன் மீது மண்ணையும் சேற்றையும் போட்டுக் கொள்வது பூச்சிகளின் கடியில் இருந்து தப்ப என்தற்காகவே. ஆனால் கிளிகள் மண்ணை உண்பது பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இன்று முதலில் அதைத்தான் பார்க்கப் போகிறோம்.  


டாம்போபாட்டா காடுகளின் இயற்கை வளம் அதியற்புதமானது. அறுநூறு வகைப் பறவைகள், இருநூறு வகைப் பாலூட்டிகள், ஆயிரம் வகை வண்ணத்துப்பூச்சிகள், பத்தாயிரத்துக்கும் மேலான வகை மரம் செடி கொடிகள், எண்ணிலடங்கா வகை பூச்சிகள் என இங்கிருக்கும் உயிர்கள் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். கழுகுகள், பருந்துகள், வல்லூறுகள், டூகான்கள், மக்காவ்கள், கிளிகள் என நாங்களே பலவிதமான பறவைகளைப் பார்த்தோம். கிளிகளில் மட்டும் முப்பத்தியிரண்டு வகையும் ஆறு வகை மக்காவ் கிளிகளும் இங்கு உள்ளனவாம்.


டாம்போபாட்டா நதியின் கரைகள் களிமண்ணால் ஆனவை. அந்நதியின் நீரோட்டம் அதன் கரைகளை மெதுவாகக் கரைத்து சுவர் போலச் செய்கிறது. சமயத்தில் நீரோட்டத்தின் பாதை மாறும் பொழுது இந்தச் சுவர்கள் அப்படியே விடப்பட்டுவிடுகின்றன. ஒவ்வொரு தினமும் காலைப் பொழுதில் கிளிகளும் மக்காவ்களும் இப்படி சுவராய் நிற்கும் இடங்களுக்கு வந்து தங்கள் அலகினால் கொத்திக் கொத்திக் களிமண்ணை உண்கின்றன. இந்த இடங்களை க்ளே லிக்ஸ் (Clay Licks) என்று அழைக்கின்றனர். க்வெட்சுவா மொழியில் இவற்றுக்குப் பெயர் கொய்பா (Collpa). அப்படி ஒரு இடத்தைப் பார்க்கத்தான் விடிகாலையிலேயே எழுப்பி எங்களை அழைத்துச் சென்றார் எரிக். 



இங்கு வருவதற்கு நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து ஆற்றின் ஓட்டத்தை எதிர்த்து இரண்டரை மணி நேரம் படகில் பயணம் செய்ய வேண்டும். முதலில் வந்திறங்கிய பிலடெல்பியாவிற்குத் திரும்ப வந்து அதைத் தாண்டி தொடர்ந்து எதிர்த்திசையில் செல்கின்றது இந்தப் பயணம். காலைப் பொழுதில்தான் பறவைகள் இங்கு கூடும் என்பதால் விடிகாலையிலேயே கிளம்பிச் சென்றோம். இருளில் காட்டு வழி நடந்து படகுத்துறையை அடைந்து, அந்த இருளிலேயே பயணத்தைத் தொடங்கினோம். மழைக்காலம் என்பதால் பெய்திருந்த மழையில் அடித்து வரப்பட்ட மரங்கள் ஆற்றில் மிதந்து கொண்டே இருந்தன. அந்த இருளில் எப்படியோ இந்த மரங்களை எல்லாம் தவிர்த்து பாதுகாப்பாக படகினைச் செலுத்தினார் அப்படகின் ஓட்டுநர். சென்று கொண்டிருந்த பொழுதே பொலபொலவென விடிந்தது. அந்த வெளிச்சத்தில் நிசப்தமான காட்டையும் விரைந்தோடும் நதியையும் பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது.

 



படகு க்ளே லிக் பகுதியை அடையும் முன் கொஞ்சம் உயிரியல் பாடம் படிக்கலாம். கிளிகள் ஏன் களி மண்ணை உண்கின்றன? குழந்தைகள் கையில் கிடைத்ததை எல்லாம் வாயில் வைத்துக் கொள்வார்கள். மண்ணைத் தின்னும் கண்ணன் என்கின்ற நம் மரபுக் கதைகள். ஆனால் மண்ணைத் தின்னும் கிளிகள் பற்றி நாம் கேள்விப்பட்டதில்லையே. இதே கேள்வி எழுந்த விஞ்ஞானிகள் அது குறித்து ஆராய்ச்சி செய்தனர். கிளிகள் நாள் முழுதும் இக்காட்டில் விளையும் பழங்களையும் கொட்டைகளையும் தங்கள் உணவாகக் கொள்கின்றன. இவற்றில் டேனின் (Tanin) என்ற வேதிப்பொருள் இருக்கின்றது. இந்த டேனின் ஒரு நச்சுப் பொருள். அதிகம் உட்கொண்டால் அதனால் வயிறு சம்பந்தப்பட்டக் கோளாறுகள் வரும். வயிற்றில் களிமண் இருந்தால் அது ஸ்பாஞ்சைப்போல இந்த டேனினை உறிஞ்சிக் கொள்கிறது. கிளிகள் எச்சமிடும் பொழுது இந்தக் களிமண் வெளியே வந்துவிடுகிறது, அம்மண்ணோடு சேர்ந்து டேனினும் வெளியே வந்துவிடுகிறது. இதனால்தான் பழங்களை உண்ணக் கிளம்பும் முன் கிளிகள் முதலில் களி மண்ணை உண்கின்றன. இயற்கை இந்த உயிரினங்களுக்கு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இப்படி ஓர் அறிவை அளித்திருக்கிறது. 



அது மட்டுமில்லாமல் இந்தப் பகுதி கடலில் இருந்து வெகுதொலைவில் இருப்பதால் இங்குள்ள உயிரினங்களுக்கு உப்புச் சத்து (Sodium) கிடைப்பது கடினம். இந்தக் களிமண்ணில் இருந்து இவற்றிக்கு உப்புச் சத்தும் கிடைக்கிறது. அதனால்தான் காபிபாரா (Capybara) போன்ற பாலூட்டிகளும் கூடக் களிமண்ணை உண்கின்றன என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். இங்கு களிமண்ணை உண்ண வரும் பறவைகளையும் மற்ற விலங்குகளையும் வேட்டையாட பிற விலங்குகளும் கூட இங்கே வரும். 


இது பற்றி இணையத்தில் தேடிப் பார்க்கும் பொழுது இதே காரணங்களுக்காக உகாண்டாவில் உள்ள சிம்பன்ஸிக் குரங்குகளும் களிமண்ணையும் கரையான் புற்றுகளின் மண்ணையும் தின்கின்றனவாம். அது மட்டுமில்லை, அந்தப் பகுதியில் உள்ள பழங்குடி இனப் பெண்கள், வயிற்றுவலியின் போது பிரசவ காலத்திலும் களிமண்ணைத் தண்ணீரில் கரைத்துக் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனராம். சிறுவயதில் வயிற்றுவலி வந்தால் அம்மா நாகர்கோயிலில் இருக்கும் நாகக் கோயிலில் இருந்து வரும் புற்றுமண்ணை தண்ணீரில் கரைத்து வயிற்றில் தடவுவதும், கொஞ்சம் குடிக்கவும் தருவதுதான் ஞாபகத்திற்கு வந்தது. 


படகில் இருந்து இறங்கி அரைமணி நேரம் காட்டினுள் நடந்து சென்றால் பறவைகள் க்ளே லிக்ஸில் இருப்பதைப் பார்ப்பதற்கு வசதியாக மரத்தலான தளம் ஒன்றினை அமைத்துள்ளனர். கிளிகளும் மக்காவ்களும் பறப்பதும் மரங்களில் உட்காருவதும் போய் அந்தச் சுவர்களில் உட்கார்ந்து அதிலுள்ள மண்ணைக் கொத்துவதுமாய் இருந்தன. அவை எழுப்பிய சத்தம் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது. 


பச்சைக் கிளிகள் என்றே நமக்குத் தெரிந்தவற்றைச் சிறகின் வடிவம் கொண்டும் அவற்றின் மேலிருக்கும் கோடுகள் கொண்டும் வேறு வேறு வகைக் கிளிகள் என்று விளக்கினார் எரிக். எங்கு சென்றாலும் கையில் ஒரு தொலைநோக்கியோடுதான் அவர் வந்தார். அதன் மூலம் பறவைகளையும் விலங்குகளையும் துல்லியமாகப் பார்க்க முடிந்தது. அதன் மூலம் படங்களையும் எடுத்துத் தந்தார். இணைப்பில் இருக்கும் தளத்தில் அப்படங்களைப் பார்க்கலாம். விடியோக்களை கட்டாயம் பாருங்கள். அதில் இவற்றின் கீச்சொலிகளைக் கேட்கலாம். பல வகைக் கிளிகள், நான்கு வகை மக்காவ்கள் ஆகியவற்றை இங்கு பார்த்தோம். 






பறவைகளைப் பார்த்துக் கொண்டே காலை உணவையும் இங்கே உண்டோம். சாப்பாடு, காப்பி, நீர் என அனைத்தையும் ஏற்பாடு செய்து இந்த இடம் வரை தூக்கி வரவும் பரிமாறவும் பணியாளர்கள் கூடவே வந்தார்கள். இந்தப் பகுதியில் சுற்றுலாவை ஒருங்கிணைத்த நிறுவனம் இதை எல்லாம் நன்கு திட்டமிட்டு அழகாகச் செய்தது. 


இங்கிருந்து மீண்டும் படகேறி அடுத்துச் சென்றது டாம்போபாட்டா ஆராய்ச்சி மையம் (Tambopata Research Center). 1989ஆம் ஆண்டு இந்த க்ளே லிக்கைப் பார்க்க வந்த புகைப்படக் கலைஞர் எடுவார்டோ நைசாண்டர் விதிகளுக்குப் புறம்பாக பறவைகள் வேட்டையாடப்படுவதையும் இப்பகுதி பாதுகாக்கப்படாமல் இருப்பதையும் பார்த்து கவலை கொண்டார். இப்பகுதியைப் பாதுகாக்க இங்குள்ள மக்களோடும் அரசோடும் இணைந்து ஒரு ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கினார். அதோடு கூட சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். தங்கள் ஆராய்ச்சி மூலம் பல புதிய பூச்சி, பறவை, விலங்கினங்களைக் கண்டுபிடித்தனர் இந்த மையத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இங்கு மொத்தம் இருபத்தி நான்கு அறைகள்தாம். முன்பதிவு செய்வது மிக அவசியம். இதற்கும் முகவர் துணை இருத்தல் நலம். 


இந்த மையத்தில்தான் நம் பயணத்தின் கடைசி இரண்டு நாட்களைக் கழிக்கப் போகிறோம். அந்த அனுபவத்தை அடுத்து வரும் இந்தத் தொடரின் இறுதிப் பாகத்தில் பார்க்கலாம். 


பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன -  அமேசான் புகைப்படங்கள் 


0 comments: