Sunday, January 07, 2024

பெரு(ம்) பயணம் - 7

கடல்மட்டத்தில் இருக்கும் லீமாவில் இருந்து மலையுச்சியில் இருக்கும் கூஸ்கோ செல்ல ஒன்றரை மணி நேர விமானப்பயணம். கூஸ்கோ இன்கா நாகரிகத்தின் தொன்மையான தலைநகரம். பதினோராயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. சுமார் ஐந்து லட்சம் பேர் வசிக்கும் இந்நகரத்தை பெருவின் கலாச்சாரத் தலைநகராக அறிவித்துள்ளது இந்நாட்டு அரசு. ஆனால் நாம் இன்று கூஸ்கோ நகருக்குள் செல்லப் போவதில்லை. அங்கு பின்னர் வரலாம். விமானநிலையத்தில் இருந்து நாம் நேராகச் செல்ல இருக்கும் இடம் புனிதப் பள்ளத்தாக்கு (Sacred Valley).

இங்கு எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் நீலோ. தொலைக்காட்சியில் நைல் நதி பற்றிப் பார்த்த இவரது பெற்றோர்கள் அதன் நினைவாக இவருக்கு நீலோ என்ற பெயர் சூட்டியதாகச் சொன்னார். க்வெட்சுவா, ஸ்பானிஷ், ஆங்கிலம் என பல மொழிகள் அறிந்தவர். எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்வது, பார்க்கும் இடங்கள் பற்றி அனைத்து விபரங்களையும் சொல்வது, நமக்கு வேண்டியதை முகம் சுளிக்காமல் செய்து தருவது எனப் பயணத்தின் இந்தப் பகுதியை இனிமையாகச் செய்தவர் நீலோ. இந்தப் பகுதி அதிகம் தகவல்களைக் கொண்டிருப்பது இவரால்தான். நீளமாகப் போனால் அதற்குக் காரணமும் இவரே!

வழிகாட்டி நீலோ

அங்கு செல்லும் வழியில் நாம் முதலில் காண்பது சக்ஸேவாமன் (Saqsawaman). க்வெட்சுவா மொழியில் அரசரின் கழுகு அல்லது கழுகின் இடம் எனப் பொருள். அரசர் ஒருவர் தன் மீது அமர்ந்த கழுகு ஒன்றிற்கு உணவளித்த இடம் என்பது ஐதிகம்.  கூஸ்கோ நகரின் வட எல்லை அருகே இருக்கும் இடம். இன்காவினரால் கட்டப்பட்ட மிகப்பெரும் கோட்டை. இன்கா நாகரிகத்தின் பேரரசர்களில் ஒருவரான பச்சகுட்டி (Pachacuti) அவர்களால் தொடங்கப்பட்டு அவர் பின் வந்த அரசர்களால் கட்டி முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இருபதாயிரம் வேலையாட்களைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது இந்தக் கோட்டை. பல அடுக்குகள் கொண்ட இந்தக் கோட்டை, பூகம்பங்களால் அழியாமல் இன்றும் நிற்பது அதன் உறுதிக்குச் சான்று.

கிட்டத்தட்ட ஏழாயிரத்து ஐநூறு ஏக்கர்களில் விரிந்திருக்கும் இந்தக் கோட்டையில் சூரியனுக்கும் (Inti) பூமிக்கும் (Pachamama) கோயில்கள் இருக்கின்றன. உயரத்தில் இருப்பதால் இந்தக் கோட்டையைத் தகர்க்கப்படவே இல்லை. ஆயிரம் போர்வீரர்களுக்கு மேல் இக்கோட்டையில் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். நாலு மீட்டர் உயரம் நூறு டன் எடை கொண்ட கற்கள் வைத்து இக்கோட்டையின் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. பூச்சு வேலைகள் ஏதுமில்லாமலேயே இக்கற்கள் இடைவெளி இன்றி கட்டப்பட்டு இருப்பது இன்காவினரின் கட்டடக் கலையின் சிறப்பம்சம்.

இங்குள்ள பழங்குடியினர் வசிக்கும் இடம் ஒன்றைப் பார்த்தோம். அவர்கள் இயற்கையோடு இணைந்து வாழும் முறை பற்றியும் அவர்களின் நெசவுத் தொழில் பற்றியும் அழகுற விளக்கினார் அங்கிருந்த பெண் ஒருவர். லாமா, விக்யூன்யா போன்ற விலங்குகளில் முடியில் இருந்து நெய்த துணிமணிகளை விற்பனையும் செய்கின்றனர். 


தொடர்ந்து செல்லும் வழியில் மலை முகட்டில் தொங்கவிடப்பட்டு இருக்கும் கண்ணாடிக் கூண்டுகளைப் பார்த்தோம். இவை சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கானவையாம். மலைமுகட்டில் தொங்குவது தேவையா என யோசித்தால் அங்கு செல்ல நூலேணிகளைப் பிடித்து ஏறிச் செல்ல வேண்டுமாம். ஐயோ சொக்கா, இது நமக்கில்லை என்ற வசனம்தான் நினைவிற்கு வந்தது. இணைத்திருக்கும் தளத்தில் இருக்கும் விடியோவில் இந்த நூலேணிப் பாதை இருக்கிறது. 


இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு நாங்கள் வந்து சேர்ந்தது ஓயான்டைடாம்போ (Ollantaytambo) என்ற ஊர். இன்று மாச்சுப் பிச்சுவின் நுழைவாயில் என்று அறியப்பட்டாலும் ஒரு காலத்தில் இது இன்கா தலைநகராக இருந்த இடம். பிஸாரோ ஆட்சியைப் பிடித்த பின் அவரை எதிர்த்துப் போராடிய இன்கா அரசர்களும் கூட இங்குதான் வசித்தார்கள். இங்குள்ள மலை மேல் இருக்கும் கோட்டை, சூரியக் கோயில், களஞ்சியங்கள், இந்த ஊரின் நடுவில் இருக்கும் சதுக்கம், சுற்றி உள்ள கடைகள் எனப் பார்க்கப் பல இடங்கள் உள்ளன.


உயரத்தில் களஞ்சியம்
ஓயாண்டைடாம்போ கோட்டை
ஓயான்டைடாம்போவின் சிறப்பு இங்கிருந்து மாச்சுப் பிச்சுவிற்குச் செல்லும் ரயில் பாதைதான். மாச்சுப் பிச்சு செல்ல மலையில் ஹைக்கிங் செய்வது ஒரு வழி. நான்கு நாட்கள் மலையேறிச் செல்ல வேண்டும். அது வேண்டாமென்றால் இந்த ரயில் செல்வது ஒன்றுதான் மாற்று வழி. இந்த ரயிலில் முக்கால்வாசி தூரம் சென்று பின் ஒரு நாள் மலையேற்றம் செய்து மாச்சுப் பிச்சு அடைவோரும் உண்டு. விஸ்டாடோம் என்ற கண்ணாடி மாடங்கள் அமைந்த ரயில்கள் என்பதால் செல்லும் வழியில் இயற்கையை நன்றாக ரசிக்கலாம். நாங்கள் தங்கியிருந்த விடுதி இந்த ரயில்நிலையத்திலேயே அமைந்திருந்தது சிறப்பு.  

இந்த விடுதியில் அவர்களே தோட்டத்தில் விளைக்கும் காய்கறிகளைக் கொண்டு சமைக்கின்றனர். காப்பிக் கொட்டையை வறுத்து அரைக்கும் கூடம் உள்ளது. அவர்களே பிஸ்கோ செய்யும் சிறு கூடமும் வைத்துள்ளனர். இவற்றுக்கு எல்லாம் மேலே ஒரு சிறிய பள்ளிக்கூடமும் நடத்தி வருகின்றனர். உண்மையிலேயே பாராட்டத்தக்க சேவை. 

மாச்சுப் பிச்சு செல்வதற்கு முன் வேறு இரு இடங்களைப் பார்த்தோம். முதலில் நாங்கள் சென்றது மொரே (Moray) என்ற இடம். இங்கு ஒரு இடத்தில் வட்டமான படிகளால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு ஒன்று இருக்கிறது. சிறிய வட்டங்கள் ஆழத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வட்டங்கள் பெரிதாவதுடன் அவற்றின் உயரமும் அதிகரிக்கும் வகையில் இந்த அமைப்பு கட்டப்பட்டுள்ளது. சட்டெனப் பார்த்தால் ஒரு விளையாட்டு அரங்கம் போல காட்சியளித்தாலும் இது ஒரு விவசாய ஆராய்ச்சிக் கூடம் என்பது ஆச்சரியம் அளிக்கக்கூடிய தகவல். அந்த சிற்றூரின் தெருக்களில் கொஞ்சம் நடந்தோம்.

இந்தப் படிகளின் உயரம் காரணமாக மேலிருந்து கீழே செல்லச் செல்ல அப்பகுதியின் வெப்பம் அதிகமாகிறது. முதல் படி இருக்கும் இடத்தின் வெப்பத்தில் இருந்து தரை மட்டத்தில் இருக்கும் படியின் வெப்பம் கிட்டத்தட்ட பதினைந்து டிகிரிகள் அதிகமாக உள்ளதாம். இது மட்டும் இன்றி, ஒவ்வொரு படியிலும் மலையில் எங்கு அந்த தட்பவெப்பம் இருக்கிறதோ அங்கிருந்து மண் எடுத்து வரப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியின் மண்வளம், தட்பவெப்ப நிலை எல்லாம் இங்கு மீளுருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படிகளுக்கு நிலத்தடி கால்வாய்கள் மூலம் நீர் வரவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. 


இந்த அமைப்பினை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் எந்த நிலத்தில் எந்த வகைச் செடிகள் நன்றாக வளரும் என்ற ஆராய்ச்சி நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்கூடம் இது என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். கிட்டத்தட்ட ஆறாயிரம் வகை உருளைக்கிழங்குகள், நானூறு வகைச் சோளங்களும் பயிரிடப்பட்டதாகக் கணித்திருக்கிறார்கள். வித்தியாசமான வடிவங்களில் இருக்கும் உருளைக்கிழங்குகளின் படங்களைக் காண்பித்தார் நீலோ. 


இப்படி ஒரு ஆராய்ச்சிக் கூடம்  உண்மையிலேயே ஆச்சரியமான இடம்தான். இங்கிருந்து நாங்கள் சென்றது மராஸ் (Maras) என்ற ஊர். இங்கு மலை மேல் ஏற்படுத்தப்பட்ட உப்பளங்களும் அவற்றில் இருந்து எடுக்கப்படும் உப்பும் மிகப் புகழ் பெற்றவை. இங்கு இருக்கும் மலையில் இருந்து வரும் சுனைநீர், அம்மலையில் இருக்கும் உப்புச் சத்தினை கரைத்துக் கொண்டு வருவதால் உப்பு நீராக இருக்கிறது. இந்த நீரை உப்பளங்களில் தேக்கி நீர் ஆவியாக உப்பு கிடைக்கறது. 


இம்மலையில் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் உப்பளங்கள் உள்ளன. இங்குள்ள குடும்பங்கள் ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் இந்த உப்பளங்களை நடத்துகிறார்கள். இங்கு எடுக்கப்படும் உப்பிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது. இதே போல போலந்து சென்ற பொழுது க்ராக்கோவ் நகருக்கு அருகே மலைக்கு அடியில் குகைகளாகக் குடைந்து உப்பு எடுப்பதைப் பார்த்தது பற்றி குடும்பத்தாரிடம் சொன்னேன்.


இந்த மலையில், எங்கள் முகவர் நிறுவனம் ஒரு அருமையான விருந்தளித்தார்கள். பெருவின் பாரம்பரிய உணவு வகைகள் மிகச் சுவையாக இருந்தன. இந்த அருமையான சாப்பாட்டுக்குப் பின் விடுதிக்குத் திரும்பினோம். நாளை மாச்சுப் பிச்சுவிற்குப் பயணம். 


பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன -  கூஸ்கோ புகைப்படங்கள்


0 comments: