“ஒவ்வொரு வருடமும் சென்றிராத ஓரிடத்திற்குச் செல்” - தலாய் லாமா
யார் எதைச் சொன்னால் கேட்கிறோமோ இல்லையோ, இந்த ஓர் அறிவுரையை மட்டும் பின்பற்றி ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய இடத்திற்காவது செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அதைச் செய்ய முடியாமல் ஆக்கியது பெருந்தொற்று.
ஏப்ரல் 2022
பெருந்தொற்றினால் முடங்கிப் போன பயணத் திட்டங்களைத் தூசு தட்டினோம். உலகின் ஏழு புதிய அதிசயங்களாகக் கருதப்பெறும் இடங்களில் இந்தியாவில் தாஜ் மஹாலையும் மெக்சிகோவில் சிச்சன் இட்ஸாவையும் பார்த்தாகிவிட்டது. அடுத்ததாக பெருவில் இருக்கும் மாச்சு பிச்சுவைப் பார்க்கலாம் எனத் திட்டமிட்டோம். எங்களுக்குக் குளிர்கால விடுமுறை வரும் டிசெம்பர் மாதத்தில், தென் பகுதி நாடான பெருவில் வெயில் காலம் என்பதால் அங்கு பயணம் செய்ய அது சரியான நேரம் எனக் கருதி வருடத்தின் கடைசி இரண்டு வாரங்களை பெருவில் கழிக்க, ஒரு முகவர் மூலம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தோம்.
டிசெம்பர் 2022
டிசெம்பர் முதல் வாரத்தில் முகவரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. பெருவின் அதிபர் பெட்ரோ காஸ்டியோ (Pedro Castillo) பதவியிறக்கப்பட்டதால் பெரும் அரசியல் கலவரம் ஏற்படுவதாகவும் அதில் வன்முறைக்குச் சாத்தியம் இருப்பதால் எங்களின் பயணத்தைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். சில நாட்களிலேயே விமான நிலையங்கள் மூடப்பட்டதால் வேறு வழியின்றி பயணத்தை ஒத்தி வைத்தோம்.
பெருவில் நாங்கள் பார்க்க நினைத்த இடங்களைப் பற்றி மட்டுமே படித்திருந்தேன். எதனால் இந்த கிளர்ச்சி என்றும் அந்நாட்டைப் பற்றி பொதுவாக அறிந்து கொள்ளவும் இந்த ஒத்திவைப்பு ஒரு தூண்டுதலாக அமைந்தது. இந்த நாட்டின் வரலாற்றைப் படிக்கப் படிக்க, கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும் என்று நினைக்கத் தோன்றியது.
அக்டோபர் 2023
போராட்டங்கள் நீடித்தாலும் பெரும்பாலும் அமைதியாகவே இருப்பதால் இந்த வருடம் பயணம் செய்யலாம் என முகவரிடம் இருந்து மின்னஞ்சல் வந்தது. எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்ற பதைபதைப்போடு ஏற்பாடுகளை மீண்டும் செய்யத் தொடங்கினோம். சென்ற வருடமே திட்டமிடலை முழுதாகச் செய்திருந்ததால் சிறு மாற்றங்களோடு அதையே தொடர்வதென முடிவானது.
டிசெம்பர் 2023
திட்டமிட்டபடி வருடத்தின் கடைசி இரண்டு வாரங்களில் பெருவைச் சுற்றி வந்தோம். எந்த விதத் தடங்கலும் இன்றி பார்க்க நினைத்த இடங்களைப் பார்க்க முடிந்தது, செய்ய நினைத்தவற்றைச் செய்ய முடிந்தது. பல நேரம் இந்தியாவில் இருக்கிறோமோ என்ற எண்ணம் எழுந்து கொண்டே இருந்தது. அதே சமயம் இந்தியாவிற்கும் பெருவிற்கும் தென்பட்ட வித்தியாசங்களையும் உணர முடிந்தது. பெரு பற்றியும் அங்கு நாங்கள் பார்த்தவை பற்றியும் இந்தத் தொடரில் எழுதுகிறேன். கொஞ்சம் பொறுமையாக என்னோடு வாருங்கள். பயணம் செய்யலாம்.
முதலில் இந்த நாட்டைப் பற்றி அறிந்து கொள்வோம்.
பிரேசில், ஆர்ஜண்டீனாவை அடுத்து தென்னமெரிக்காவின் மூன்றாவது பெரிய நாடு பெரு. மேற்கில் பசபிக் பெருங்கடலும் மற்ற திசைகளில் ஈகுவேடார், கொலம்பியா, பிரேசில். பொலிவியா, சீலே ஆகிய நாடுகளை எல்லையாகக் கொண்டது பெரு. பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கும் நாடு. இதன் தலைநகரம் லீமா. இந்த நாட்டின் மக்கள்தொகை சுமார் மூன்றேகால் கோடி. அதில் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் தலைநகர் லீமாவில் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் தலைநகரிலேயே வசிப்பதும், 72% மக்கள் நகர்ப்பகுதிகளில் வசிப்பதும் அங்கு ஏற்பட்ட குழப்பங்களுக்கு ஒரு காரணம்.
பெரு மூன்று நிலப்பகுதிகளைக் கொண்டது. இந்த நாட்டின் வரைபடத்தில் வடக்கில் இருந்து தெற்காக இரண்டு கோடுகளைக் கீறினால் வரும் மூன்று பகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இவை சமமான அளவைக் கொண்ட பகுதிகள் அல்ல.
மேற்கில் பசபிக் பெருங்கடலைக் கொண்ட முதல் பகுதி நாட்டின் மொத்த அளவில் சுமார் 11% தான். கோஸ்டா (Costa) என அழைக்கப்படும் இந்தப் பகுதி கடலோரச் சமவெளி. பெரும்பாலும் பாலை நிலம். ஆனால் சில ஆறுகள் ஓடுவதால் இங்கு விவசாயம் பெருமளவில் செய்யப்படுகிறது. அதனை அடுத்து இருக்கும் மத்தியப் பகுதி சியரா (Sierra) எனப்படும் மலைப்பகுதி. பெருவின் மொத்த நிலப்பரப்பில் இது சுமார் 30%. பெரும் சிகரங்களைக் கொண்ட ஆண்டிஸ் மலைத்தொடர் (Andes) இருக்கும் பகுதி இது. பெருவின் மிக உயரமான மலைச்சிகரம் வ்வாஸ்கரன் (Huascaran) இங்குள்ளது. இதற்குக் கிழக்கில் இருக்கும் மூன்றாவது பகுதி செல்வா (Selva) என்று அழைக்கப்படும் வனப்பகுதி. பரப்பளவில் இது சுமார் 59%. அமேசான் காடுகள் என்று அழைக்கப்படும் வனப்பகுதி இங்குதான் தொடங்குகிறது. ஏராளமான நதிகள் ஓடும் பகுதி இது. இந்த நதிகள் கிழக்கு திசை நோக்கி ஓடி ஒன்றோடு ஒன்று கலந்து உலகின் மிகப்பெரிய நதியான அமேசான் நதியில் சேர்கின்றன.
மக்கள்தொகையைப் பார்த்தோமானால் பரப்பளவிற்கு நேர் மாறாக, கோஸ்டா பகுதியில் 52%, சியரா பகுதியில் 36%, செல்வா பகுதியில் 12% என உள்ளது. பரப்பளவிற்கும் மக்கள்தொகைக்குமான தலைகீழ் விகிதாச்சாரம் இங்கு ஏற்பட்ட குழப்பங்களுக்கு மற்றொரு காரணம்.
எங்களால் இந்த இரண்டு வாரங்களில் இந்த மூன்று பகுதிகளுக்கும் செல்ல முடிந்தது. இந்நிலப்பகுதிகள் பற்றி பின்னர் பார்க்கலாம்.
இப்படிப் பலதரப்பட்ட நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளதால் உயிர்ப்பல்வகைமை (Biodiversity), அதாவது பல வித உயிரினங்கள் வாழும் இடமாக பெரு உள்ளது. இங்குள்ள பறவை வகைகள் மட்டுமே ஆயிரத்து எழுநூற்றுக்கும் மேல். வேறெந்த நாட்டிலும் இத்தனை பறவை வகைகள் வசிப்பதில்லை என்கிறார்கள். செல்வா பகுதியில் இருக்கும் மாத்ரே தே தியோஸ் (Madre de Dios - கடவுளின் தாய்) என்ற வட்டாரத்தில் இருக்கும் ஒரே ஒரு மரத்தில் மட்டும் ஐந்தாயிரம் விதமான பூச்சி வகைகளை விஞ்ஞானிகள் கண்டனராம். அவற்றில் 80% வகைகள் புதிதாகக் கண்டுக்கொள்ளப்பட்டவையாம். இதனால் செல்வா பகுதியின் பல இடங்களைப் பாதுகாக்கப்பட்ட நிலங்களாக அறிவித்துள்ளது பெருவியன் அரசு.
இந்த மூன்று நிலப்பகுதிகள் மட்டுமல்லாமல் பெருவில் பல தீவுகளும் உண்டு. குறிப்பாக பயேஸ்டாஸ் தீவு (Ballestas Island) என்றழைக்கப்படும் தீவு குறித்து நாம் பின்னர் பார்ப்போம். பெருவின் தென் கிழக்கில் இருக்கும் டிட்டிக்காக்கா ஏரி மிகவும் புகழ் பெற்றது. உலகிலேயே அதிக உயரத்தில் (12,500 அடி உயரம்) உள்ள படகுகள் செலுத்தப்படக்கூடிய ஏரி இது. இங்கு நாணலினால் செய்யப்படும் செயற்கைத் தீவுகள் புகழ் பெற்றவை. பார்க்க வேண்டும் என நினைத்தும் பார்க்க முடியாமல் விட்டுப் போன இடம் இது.
பயணக் கட்டுரை எனச் சொல்லிவிட்டு ஏன் இப்படிப் பூகோளப் பாடம் எடுக்கிறாய் என்று கேட்க வேண்டாம். பூகோளப் பாடத்தோடு கொஞ்சம் சரித்திரத்தையும் அரசியலையும் பார்த்துவிடுவோம். பின்னர் பெருவினுள் நுழையலாம். சரிதானே?
பிகு: படங்கள் இணையத்தில் எடுக்கப்பட்டவை.
8 comments:
Wafting
அப்பிடியே 'இதயம் பேசுகிறது' மணியன் எழுதுறா மாதிரியே இருக்கு. நீங்கதான் அவரோட நிஜ வாரிசு.
சரி ...
இந்த நாட்டை பற்றி கொஞ்சமாக படித்தோடு சரி . தொடர்கிறேன் .
இந்த பகுதி ரீச்சரை நினைவுபடுத்தவில்லை
நடத்தும் நடத்தும்
நன்றி.. We are waiting for the story
👍🏽
Post a Comment