Tuesday, January 09, 2024

பெரு(ம்) பயணம் - 9


கூஸ்கோ. பதினோராயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள நகரம். பெருவின் ஏழாவது பெரிய நகரம். தனது பாரம்பரியத்தின் தலைநகர் எனப் பெரு அரசால் அறிவிக்கப்பட்ட இடம். இன்கா இனத்தவரின் புராதானத் தலைநகரம். தொடர்ந்து மூன்றாயிரம் வருடங்களாக மக்கள் வசித்து வரும் நகரம். யுனெஸ்கோவால் பாரம்பரியத் தலம் என அறிவிக்கப்பட்ட நகரம். ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வரும் நகரம். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். என்னளவில் நான் பார்த்த மிக அழகான மலைநகரங்களில் ஒன்று. 






இன்காவினருக்கும் முன்பே மக்கள் வசித்து வந்த பகுதி இது. பொயுமு 500ஆம் ஆண்டில் இருந்தே இப்பகுதியில் மக்கள் வசித்து வந்துள்ளனர். கில்கே எனப்படும் இனத்தவர் பொயு 900ஆம் ஆண்டிலிருந்து 1200ஆம் ஆண்டு வரை இங்கு இருந்ததற்கானச் சான்றுகள் கிடைத்துள்ளன. அவர்களைத் தொடர்ந்து இன்காவினர் இந்தப் பகுதியின் சக்திவாய்ந்த  இனமாக விளங்கினர். அப்பொழுது கூஸ்கோவை தங்கள் தலைநகராகக் கொண்டனர். 


ப்யூமா எனப்படும் புலி இன மிருகம் இப்பகுதியில் காணக் கிடைக்கும் ஒன்று. இம்மிருகத்தை புனிதமாகக் கருதினர் இன்காவினர். அதனால் இந்நகரை ப்யூமா ஒன்றினைப் போல வடிவமைத்தார்கள். அதன் தலைப்பகுதிதான் நாம் முன்பு பார்த்த சக்ஸேவாமன் கோட்டை. அதன் வால் பகுதியில் ப்யூமாவின் வால் என்ற பெயரில் ஒரு நீரூற்று உள்ளது. இன்று அந்த வடிவத்தைத் தாண்டி பெருநகராக உருவெடுத்திருக்கிறது கூஸ்கோ. 


இன்காவினரைத் தோற்கடித்த பிஸாரோ முதலில் தனது இருப்பை நிலைநாட்டியது கூஸ்கோவில்தான். இதற்குப் பின்னரே லீமா உருவாக்கப்பட்டது. எனவே ஸ்பென் காலனியாதிக்கச் சமயத்திலும் கூஸ்கோ முக்கியமான ஒரு நகராக இருந்தது. இன்கா கோவில்கள் அழிக்கப்பட்டு அவற்றின் மேல் கிருத்துவ தேவாலயங்கள் கட்டப்படுவது இங்குதான் தொடங்கியது. இன்றும் பெரும் தேவாலயங்களைப் பார்த்தோமானால் அவற்றின் அடித்தளம் இன்காவினர் கட்டிய கற்களால் இருப்பதைப் பார்க்க முடிகிறது. பூச்சு கூட இல்லாமல் அடுக்கப்பட்ட கற்களை உடைக்க இரும்பு ஆணிகளை ஆப்பு போல வைத்து அடித்துதான் எடுக்க முடிந்தது ஸ்பானியர்களால். இன்றும் கூட இது போல ஆணிகள் அடிக்கப்பட்ட கற்களைக் காண முடிகிறது. 


இன்கா கற்களே அடித்தளம்

இன்காவினரின் கட்டமைப்பில் சுவர்கள் செங்குத்தாக இருப்பதில்லை. கீழிருந்து மேல் செல்லும் பொழுது சற்றே உள்ளே சரிவது போன்ற அமைப்பில்தான் அவர்கள் கட்டி இருக்கிறார்கள். இது பூகம்பத்தின் விளைவுகளைத் தாங்கக்கூடிய வடிவமைப்பு. மேலே கட்டப்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தாலும் இந்தக் கல் சுவர்கள் இன்னும் நிற்பதற்குக் காரணம் இந்த வடிவமைப்புதான் என விளக்கினார் நீலோ. இது போன்ற அமைப்பினை மாச்சுப் பிச்சு, சாக்ஸேவாமன் என எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது. 


இன்காவினர் தங்கள் நாட்டினை டவாண்டின்ஸுயு (Tawantinsuyu) எனப் பெயரிட்டிருந்தனர். நான்கு பகுதிகளின் இணைப்பு என்பது இப்பெயரின் பொருள். அப்பெயருக்கு ஏற்ற மாதிரி நாடு நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. இந்த நான்கு பகுதிகளுக்கு நடுவே இருப்பதால் கூஸ்கோவை உலகின் தொப்புள் என்று அழைத்திருக்கிறார்கள். கூஸ்கோ என்ற பெயருக்கே நடு அல்லது தொப்புள் என்றுதான் பொருள். 


கூஸ்கோவிற்குக் கிழக்கே இருந்தது ஆண்டிஸுயு என்ற மலைப்பகுதி. இங்கு மரங்கள், பறவைகள், மருத்துவ குணம் கொண்ட செடிகள், தங்கம் போன்ற வளங்கள் மிகுந்திருந்தன. வடமேற்கில் இருந்தது சின்சாய்ஸுயு என்ற பகுதி. இது விவசாய நிலங்கள் மிகுந்த பகுதி. தென்கிழக்கே இருந்தது காண்டிஸுயு என்ற பகுதி. இது கடல்வளங்கள் மிகுந்த பகுதியாகத் திகழ்ந்தது. இறுதியாக தெற்கில் கொயாஸுயு எனப்படும் மலைப்பாங்கான சமவெளிகள். இங்கு யாமா, அல்பகா போன்ற மிருகங்கள் வளர்க்கப்பட்டன. உருளைக்கிழங்கு, உப்பு, தங்கம், வெள்ளி, செம்பு போன்றவை கிடைத்த பகுதி இது. தலைநகர் கூஸ்கோவில் இருந்து இந்த நான்கு பகுதிகளுக்கும் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. 


அல்பகா

ஸ்பானியர்கள் கூஸ்கோ வந்த பொழுது மலைக்குச் செல்லும் பாதையைக் காண்பித்து, இந்தச் சாலை செல்லும் மலைகளுக்குப் பெயர் என்ன எனக் கேட்டனராம். அவர்கள்  மொழி புரியாத இன்காவினர் அம்மலைகளில் வசிக்கும் இனத்தவர் பெயர்களைக் கேட்கிறார்கள் என நினைத்து ஆண்டிஸ் எனப் பதிலளித்தனராம். இப்படித்தான் அம்மலைத் தொடருக்கு ஆண்டிஸ் மலைத்தொடர் எனப்பெயர் வந்தது என்ற வரலாற்றுக் கதையைச் சொன்னார் நீலோ. கங்காரு என்ற பெயர் அவ்விலங்கிற்கு வந்தது கூட இது போல ஒரு மொழிப்பிரச்னையினால்தானே. 


கூஸ்கோ நகர் இரு பகுதிகளாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது. வடக்கில் இருந்த பகுதி சற்றே உயரத்திலும் தென்பகுதி சற்று உயரம் குறைவாகவும் இருந்தன.  தென்பகுதியை விட வடப்பகுதி மதிப்பு கொண்டதாய் இருந்தது. இவற்றிற்கிடையே உள்ள சதுக்கத்தில்தான் விழாக்கள் நடைபெறும். கூஸ்கோவில் இருந்த சூரியக்கோவில் மிகப்பிரச்சித்தமானது. இந்தக் கோயில் தங்கத்தால் வேயப்பட்டிருந்தது. அதே போல இங்கிருக்கும் நிலவுக்கோயில் வெள்ளியால் வேயப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட வயல்வெளி மாதிரிகள், மிருகங்களின் சிலைகள், பறவைகளின் சிலைகள் என விலைமதிப்பற்ற பொக்கிஷங்களால் இக்கோயில் நிறைக்கப்பட்டிருந்தது. தங்கத்தால் செய்யப்பட்டிருந்த சூரியனின் சிலையின் மாதிரிகளை பல இடங்களிலும் பார்க்கலாம். சுற்றுலாப் பயணிகளும் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். 


சூரியக் கோவில் சிதலத்தில் தேவாலயம்

சூரியன் சிலை


இந்த சூரியன் சிலை போலவே சுற்றுலாப் பயணிகள் பலரும் வாங்குவது எருது சிலைகளை. அருகில் உள்ள புக்காரா என்ற ஊரில் செய்யப்படுவதால் இதனை புக்காரா எருதுகள் என்கிறார்கள். இந்த புக்காரா எருது சிலைகளை வீட்டின் மேல் பொருத்துவது இவர்களின் வழக்கமாக இருக்கிறது. செழிப்பையும் நல்லூழையும் இவை கொண்டு வரும் என்பது இவர்கள் நம்பிக்கை. 





பிரம்மாண்டமான இந்தச் சூரியக் கோயிலை இடித்து அதன் மேல் சாண்டோ டொமினிகா மடாலயத்தைக் கட்டினார் பிஷப் வின்செண்டே டி வல்வெர்டே. இவர்தான் கூஸ்கோவின் முக்கியச் சதுக்கத்தில் வெற்றிகளின் தேவாலயம் என்ற பெயரில் பெரிய தேவாலயம் ஒன்றைக் கட்டினார். இதுவும் ஒரு இன்கா கோயிலை இடித்துக் கட்டப்பட்டதுதான். பூகம்பத்தால் சரிந்த இந்த தேவாலயம் மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது. நாங்கள் சென்றது கிருத்துமஸ் அன்று என்பதால் தங்கள் இல்லங்களில் பிறந்த யேசுவை ஒரு கூடையில் வைத்து இந்தத் தேவாலயத்திற்குக் கொண்டு வந்து ஆசி பெற்றுச் சென்றனர் இங்குள்ளவர். சதுக்கத்திலும் கிருத்துமஸ் கொண்டாட்டங்கள் பெரும் வாணவேடிக்கையோடு நடைபெற்றது. 






ரியோ டி ஜெனீரோ நகரில் இருப்பது போலவே இங்கு கைகள் விரித்தபடி இருக்கும் ஏசுவின் பெரிய சிலை ஒன்று இருக்கிறது. இந்தச் சிலையை வெள்ளைக் கிருத்து என அழைக்கிறார்கள். ஏனென்றால் இங்கு ஒரு கருப்பு கிருத்துவும் இருக்கிறார். உள்ளூர் மக்களை கத்தோலிக்க மதத்தைத் தழுவச் செய்ய, அவர்களைப் போலவே கிருத்துவையும் மாற்றினால் எளிதாக இருக்கும் என ஸ்பெயினின் பிலிப் III அரசர் நினைத்ததால் அப்படி ஒரு சிலை செய்யப்பட்டது. மிகவும் சக்தி வாய்ந்த சிலையாக இது கருதப்படுகிறது. 


சுவர்களில் வரையப்படும் கிராபிட்டி வகை கலை இங்கு பெரிதும் காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு கலைப் பகுதிகளை விற்பனை செய்ய ஒரு பகுதியே இருக்கிறது. பொதுவாகவே கலைகளுக்கு பெருமதிப்பு தரும் ஊராகத் திகழ்கிறது கூஸ்கோ. 


எளிமையான மக்கள், அருமையான தட்பவெட்பநிலை, அழகான ஊர் என கூஸ்கோ என் மனத்தை மிகவும் கவர்ந்துவிட்டது. ஆனால் இங்கிருந்து கிளம்பும் நேரம் வந்துவிட்டதே. உண்மையிலேயே காடு வா வா என்கிறது. 


பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன -  கூஸ்கோ புகைப்படங்கள்


0 comments: