Monday, January 08, 2024

பெரு(ம்) பயணம் - 8


1911ஆம் ஆண்டு, ஜூலை மாதம்.  தொலைந்த நகரமான வில்காபம்பாவைத் தேடி அலைந்த யேல் பல்கலைக்கழகத்தின் ஹிராம் பிங்க்ஹம் (Hiram Bingham), தனது இலக்கை எட்டிவிட்டதாகவே நினைத்தார். கானகத்தூடே செடி கொடிகளை வெட்டி, மரங்களைச் சாய்த்துப் பாலங்களாக்கி மெதுவாக சென்று கொண்டிருந்த அவர் கண்ணில் பட்டனர் அங்கு இருந்த சில விவசாயிகள். அவர்களிடம் விசாரிக்க, சற்று தொலைவில் இருக்கும் ஒரு இடத்தை காண்பிக்க ஒரு சிறுவனை அவருடன் அனுப்பினர். அங்கு அவர் கண்டது கல்லால் எழுப்பப்பட்ட ஒரு கோட்டை போன்ற அமைப்பை. பெருங்கற்களால் அமைக்கப்பட்டிருந்தன அந்தக் கோட்டையின் மதிற்சுவர்கள். எந்த வித பூச்சும் இல்லாமல் மிகக் கச்சிதமாகப் பொருத்தப்பட்டிருந்தன அப்பெரும் கற்கள். அவரின் கத்தி முனை கூட அவற்றிக்கு இடையே போக முடியாத அளவு கச்சிதம். எதோ ஒரு முக்கியமான இடத்தைக் கண்டுபிடித்திருக்கிறோம் என அவருக்குப் புரிந்தது. இதுதான் வில்காபம்பா என நம்பினார். ‘இன்காவினரின் தொலைந்த நகரம்' என்று அவர் எழுதிய புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 


கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகளை ஆராய்ந்து அந்த இடம்தான் வில்காபம்பா என நிரூபிக்கப்பட்டது. இதில் நகைமுரண் என்னவென்றால் 1911ஆம் ஆண்டு பிங்க்ஹம் இந்த இடத்தைத் தாண்டித்தான் தனது பயணத்தைத் தொடர்ந்தார். இந்தச் சிதைவுகளைக் கண்ட அவர் அவற்றைப் பெரிதாக நினைக்கவில்லை. பிங்க்ஹம் கண்டுபிடித்தது வில்காபம்பா இல்லை என்றால் அது என்ன? பிங்க்ஹம் கிட்டத்தட்ட நூறு எலும்புக்கூடுகளைக் கண்டெடுத்தார். அவற்றில் முக்கால்வாசி பெண்களின் எலும்புக்கூடுகளாய் இருந்தன. இதனால் இந்த இடம் பெண் துறவியர்களுக்கான மடமாக இருக்கலாம் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. 


இந்த இடத்தைப் பற்றி வரலாற்றில் குறிப்புகளே இல்லை. இன்கா நாகரிகத்தில் இது பற்றிப் பேசப்படவில்லைம் பின் வந்த ஸ்பானிஷ் வரலாற்றிலும் இது குறித்த செய்திகளே இல்லை. இது ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கியது. அதற்கு ஏற்றாற்போல் பல கதைகளும் புனையப்பட்டன. இன்கா வம்சத்தினரின் மூதாதையர்கள் தோன்றிய இடம் என்றும் சொல்லப்பட்டது.  கடவுள்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதால் உயரத்தில் உள்ள, உருபம்பா நதி சூழ்ந்த புனிதத்தன்மை கொண்ட இடம் என்பதால் இது இன்காவினரின் புனிதத் தலமாக இருக்கலாம் என்று எண்ணினார்கள். ஆனால் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டடங்கள், அவற்றின் அமைப்பைப் பார்த்தால் கோயில்கள், வானவியல் கூடங்கள், விவசாயத்திற்குத் தேவைப்படும் இடங்கள், வீடுகள், முற்றங்கள் என்று ஐந்து மைல் பரப்பளவில் விரிந்து கிடக்கும் இந்த இடம் வெறும் கோயிலாக இருக்க வாய்ப்பில்லை என்றும் நினைத்தார்கள். 


அங்கு கிடைத்த எலும்புக்கூடுகளை ஆய்வு செய்கையில் அவை வெறும் பெண்களின் எலும்புக்கூடுகள் மட்டுமில்லை ஆண்களின் எலும்புக்கூடுகளும் சம அளவில் இருப்பதைக் கண்டறிந்தார்கள். இவர்கள் எல்லாரும் இன்கா இனத்தவர் மட்டுமில்லை பெருவின் மற்ற இடங்களில் வாழ்ந்த இனங்களில் இருந்தும் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். இவற்றை எல்லாம்  சேர்த்துப் பார்க்கும் பொழுது இந்த இடம் ஒரு பல்கலைக்கழகமாகச் செயல்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இவை எல்லாமே யூகம்தான். தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. 


இதுதான் இன்று உலகின் புதிய ஏழு அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படும் மாச்சுப் பிச்சு. இதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது பிங்க்ஹம் என்றாலும் இங்கு முதலில் வந்தவர் இல்லை அவர். அவருக்கும் முன்பே 1902ஆம் ஆண்டு பெருவின் அகுஸ்டின் லிஸார்க்கா என்பவர் இந்த இடத்தைக் கண்டுபிடித்ததாகவும் அரசு ஒத்துழைப்பு இல்லாமல் போனதால் அவரின் கண்டுபிடிப்பு பிரபலமாகாமல் போனதாகவும் ஒரு தகவல் உண்டு. இங்குள்ள ஒரு பாறையில் அகுஸ்டின் அவர் பெயரைப் பொறித்து வைத்திருப்பதை பிங்க்ஹம் கண்டுகொள்ளவே இல்லை. அகுஸ்டினுக்கும் முன்பே சில கிருத்துவ மதப்பணியாளர்கள், இந்தப் பகுதியில் வசித்தவர்கள் எனப் பலரும் இங்கு வந்திருப்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இங்கிருந்தவர்களுக்கு எப்பொழுதுமே இந்நகரத்தைப் பற்றித் தெரிந்திருந்ததால் இதை தொலைந்த நகரம் எனச் சொல்வதே தவறு. ஆனால் ஸ்பானியர்கள் கண்ணில் படாமல் இருந்ததால் மற்ற இடங்களைப் போலல்லாமல் இது அவர்களால் அழிக்கப்படவில்லை. இன்றும் கட்டுமானங்களில் 75% மேல் இன்காவினர் கட்டியபடியே இருப்பதாகச் சொல்கிறார்கள்.



நம் பெரு பயணத்தின் நோக்கமே மாச்சுப் பிச்சுவைப் பார்ப்பதுதான். நல்ல வேளை நாம் பிங்க்ஹம் போல காடு மலை ஏறி வர வேண்டியது இல்லை. ஓயான்டைடாம்போவில் இருந்து விஸ்டாடோம் ரயில் மூலம் அகுவாஸ் காலியண்டேஸ் (Aguas Calientes, சுடுநீர் எனப் பொருள்) என்ற இடத்திற்கு வந்தோம். இந்த மலைப்பகுதியில் சுடுநீர்ச் சுனைகள் இருப்பதால் இந்தப் பெயர். மாச்சுப் பிச்சுவிற்கு அருகில் இருக்கும் ஊர் இதுதான். இங்கிருந்து மாச்சுப் பிச்சு வரைச் செல்ல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்தப் பேருந்துகளுக்குப் பிங்க்ஹம் பெயரைத்தான் சூட்டி இருக்கிறார்கள். மாச்சுப் பிச்சுவின் அடிவாரம் வரை இந்தப் பேருந்துகள் செல்கின்றன. 

இங்கும் பூட்டுகள்

50 ஆண்டு நினைவுக் கல்வெட்டு

தென்னமெரிக்காவிலேயே அதிகச் சுற்றுலாப்பயணிகள் வரும் இடமாக மாச்சுப் பிச்சு திகழ்கிறது. இந்தக் கூட்டத்தினால் சுற்றுச்சூழல் கெடுவதைப் பார்த்த பெரு அரசாங்கம் சுற்றிப்பார்க்க வருபவர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி இருக்கிறது. ஒரு நாளைக்குக் குறிப்பிட்ட அளவு அனுமதிச்சீட்டுகள்தான் வழங்குகிறார்கள். முகவர் மூலம் ஏற்பாடு செய்ததால் முன்பதிவு செய்ய முடிந்தது. மேலேறிச் சுற்றிப் பார்க்க சில ஆயிரம் படிகள் ஏற வேண்டும். ஆனால் ஆங்காங்கே நின்று எதையாவது பார்த்துக் கொண்டே செல்வதால் அத்துணை கடினமாக இல்லை. 


மாச்சுப் பிச்சு என்றால் பழைய மலை எனப் பொருள். இது தற்காலப் பெயர்தான். முன்பு பார்த்த இன்கா பேரரசர் பச்சக்குட்டியின் காலத்தில், பொயு 1450களில் மாச்சுப் பிச்சு கட்டப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இன்று பார்த்தோமானால் இரு பகுதிகள் கொண்ட தொகுப்பாக இது இருக்கிறது. ஒரு பகுதி விவசாயப்பணிகளுக்காகவும் மற்றொன்று நகர்பகுதியாகவும் இருக்கின்றன. மலையில் படிகள் போல உருவாக்கப்பட்ட விவசாய நிலம், அவற்றிற்கு நீர் கொண்டு சேர்க்க நீர்வழிகள், அறுவடை செய்த பொருட்களைச் சேகரிக்க வீடுகள் என நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருக்கின்றன. நகர்புறத்தில் அரசக்குடும்பத்திற்கான இடம், மதக்குருமார்களுக்கான இடம், மற்றவர்களுக்கான இடம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பகுதிகளுக்கும் இடையே ஒரு பெரிய சதுக்கம் உள்ளது. இவை மட்டுமல்லாமல் சூரிய கடவுளுக்கான கோயில், காண்டார் பறவைக்கான கோயில், மலைகளுக்கான கோயில், பலிபீடங்கள், வானவியலுக்கான ஆராய்ச்சிக்கூடம் எனப் பலக் கட்டடங்கள் உள்ளன. கல்லால் செய்யப்பட்ட சூரியனை ஆதரமாகக் கொண்ட கடிகாரங்கள், நாள்காட்டிகள், நட்சத்திரங்களையும் கோள்களையும் பார்க்கக்கூடிய அமைப்புகள் பற்றி நீலோ கூறக் கேட்கும் பொழுது மிகச் சுவாரசியமாக இருந்தது. 


படிகளில் விவசாயம்

வானவியல் உபகரணங்கள்

கோயிலின் நேர்த்தியான கற்கள்

மலைகளை வழிபட

பின்னால் இருக்கு மலை போலவே வழிபடும் கல்

இயற்கையாகவே அமைந்த பாறை அமைப்புகளை அடித்தளமாகக் கொண்டு அவற்றின் மேல் கச்சிதமாகப் பொருந்தும் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடங்கள் மழை, வெயில், பூகம்பங்கள் என எல்லாவற்றையும் தாங்கி உறுதியாக நிற்பது அக்காலக்கட்டத்தில் இன்காவினருக்கு இருந்த கட்டுமான அறிவுக்கு சான்று. இவற்றினுள்ளே மழைநீர் வடிகால்களை மறைத்துக் கட்டி இருக்கிறார்கள். இன்று விளையாடக் கிடைக்கும் லெகோ செங்கல்கள் போல ஒன்றில் ஒன்று பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட கற்கள் கொண்டு கட்டடங்களைக் கட்டி இருக்கிறார்கள். இரண்டு கற்களில் கால்வாய் போன்ற அமைப்பை வெட்டி, ஒன்றின் மேல் ஒன்று தலைகீழாக வைக்க தண்ணீர் செல்லும் குழாய்கள் போலச் செய்துள்ளார்கள். இவ்வளவு வேலைப்பாடுகள் இருந்தாலும் எங்கும் ஒரு இரும்பு ஆணி கூடக் கிடையாது. பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. 

பாறைகளே அடித்தளம்

அதிலும் கோயில்களும் அரசக் குடும்பத்தினரின் இடங்களும் கட்டப்படும் பொழுது மிகச் சரியாகப் பொருந்தும் கற்களைக் கொண்டும் மற்ற இடங்களில் அவ்வளவு துல்லியம் இல்லாமல் இருப்பதும் இவர்கள் எப்படி எல்லாவற்றையும் யோசித்து ஆயத்தம் செய்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இவற்றைக் கட்ட நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஆட்களைக் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் அடிமைகளாக இருந்திருக்கலாம் என்றும் சொல்கின்றனர். வேலையில் சுணக்கம் காட்டினால் ஒரே முடிவுதான். தலையைக் கொய்து விடுவார்களாம். பாதி வேலை செய்து விடப்பட்ட கற்கள் பல இருக்கின்றன. இவர்களது வேலையாகத்தான் இருக்கும். 


இன்கா நாகரிகம் பெரிய நகரங்களை பலவற்றை நிர்மாணித்தது. அதன்படிப் பார்த்தோமானால் மாச்சுப் பிச்சு பெரிய நகரமில்லை. ஆயிரம் பேர்வரைதான் இருந்திருப்பார்கள். ஆனால் இவர்கள் இங்கு வரத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால்தான் இந்நகருக்கு ஒரு தனி மரியாதை. இப்படி மாச்சுப் பிச்சுவைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு குண்டை வீசினார் நீலோ. “அதோ பின்னால் தெரிகிறதே, காண்டாமிருகத்தின் கொம்பைப் போலத் தோன்றும் மலை, அதைத்தான் நாம் நாளை ஏறப் போகிறோம்" என்றார். 

வ்வாய்னாப் பிச்சு

படத்தைப் பெரிதுபடுத்திப் பார்த்தால் படிகள் தெரியும், அதில் ஏறும் ஆட்களின் அளவைக் கொண்டு மலை எவ்வளவு பெரியது என அறிந்து கொள்ளலாம். 


அந்த சிகரத்தின் பெயர் வ்வாய்னாப் பிச்சு (Huayna Picchu), இளைய மலை எனப் பொருள். இந்த மலை மாச்சுப் பிச்சுவிற்கு வடதிசையில் இருக்கிறது. எனவே இதை ஏற மாச்சுப் பிச்சுவைத் தாண்டித்தான் போக வேண்டும். மலை ஏறித் திரும்ப வர சுமார் இரண்டரை மைல் தூரம். ஆனால் ஆயிரம் அடி உயரம் ஏற வேண்டும். படிகள், படிகள், மேலும் படிகள். மொத்த தூரமும் படி ஏறுவதும் இறங்குவதும்தான். சமயங்களில் இரு கைகளையும் கொண்டு கிட்டத்தட்ட தவழ்ந்து ஏற வேண்டிய பகுதிகளும் இருந்தன. 


பாதி தூரத்தில் என்னால் முடியுமா என்ற சந்தேகம் தலைதூக்கியது. ஆனால் தேவையான அளவு ஓய்வெடுத்து மெதுவாகச் செல்லலாம். கவலைப் படவேண்டாம் எனச் சொல்லி உறுதுணையாக இருந்து மேலேக் கூட்டிச் சென்றார் எங்கள் வழிகாட்டி நீலோ. 


அதிலும் உச்சிக்கு கொஞ்சம் முன்பு வரும் படிகள் மரணப்படிகள் (Stairs of Death) என அழைக்கப்படுகின்றன. செங்குத்தாக இருக்கும் சிறுபடிகள், 60 டிகிரி சாய்வில் இருக்கின்றன இவை. ஒரு பக்கம் கிடுகிடு பள்ளம் பிடித்துக் கொள்ள பிடிமானம் ஏதும் கிடையாது. கொஞ்சம் கிறக்கமாகத்தான் இருந்தது. இறங்கும் பொழுது ஒரு சிறிய குகை அமைப்பின் உள் செல்ல வேண்டும். என் பருமனான உடலை வைத்துக் கொண்டு எங்கேனும் சிக்கிக் கொள்வேனோ எனப் பயமாகத்தான் இருந்தது. 


ஆனால் முயற்சி செய்து மேலே சென்றுவிட்டால் காணக்கிடைக்கும் காட்சிகள் மிக அழகானவை. தூரத்தில் ஓடும் உருபம்பா நதி, அகுவாஸ் காலியண்டேஸ் நகர், மாச்சுப் பிச்சு கட்டடங்கள், அழகான மலைப்பகுதிகள், பள்ளத்தாக்குகள் என்று பார்க்கும் இடமெல்லாம் இயற்கை அழகுதான்.

உச்சியில் இருந்து பார்க்கக் கிடைக்கும் காட்சி
ஒரு சமயத்தில் இருநூறு பேருக்கு மட்டும்தான் ஏற அனுமதி. அது போல இரண்டு குழுக்கள் ஆக மொத்தம் நானூறு பேர்தான் ஏற முடியும். எனவே முன்பதிவு செய்தல் அவசியம். இங்கும் முகவர் மூலம் செல்வதே சிறந்தது. என்னால் ஏற முடிந்தது, நானும் வ்வாய்னா பிச்சு மலையை ஏறி விட்டேன் என்று சொல்லிக் கொள்வதற்காகவே இம்மலையை ஏறிவிட வேண்டும் என நினைத்தேன். அதனைச் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி.

உச்சியில் மகிழ்ச்சி, காண்டார் பறவை போல நீலோ

மாச்சுப் பிச்சுவும் சரி, வ்வாய்னாப் பிச்சுவும் சரி எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாகவே இருந்தன. கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்தாம். மலையில் இருந்து இறங்கிய பின், பேருந்தில் அகுவாஸ் காலியண்டஸ் சென்று, அங்கிருந்து ரயிலில் ஓயான்டைடாம்போ திரும்பினோம். அங்கிருந்து நாங்கள் சென்றது கூஸ்கோ நகரம். நாளை கூஸ்கோ நகருலா. 


பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன -  கூஸ்கோ புகைப்படங்கள்


0 comments: