Thursday, January 04, 2024

பெரு(ம்) பயணம் - 4

பெருவின் தலைநகரம் லீமா. வெளிநாட்டுப் பயணிகள் பெரும்பாலும் தங்கள் பெரு பயணத்தைத் தொடங்குவது இங்குதான். நாங்களும் அப்படித்தான். ஆஸ்டினில் இருந்து பனமாவில் இருக்கும் பனாமா சிட்டிக்கு வந்து பின் அங்கிருந்து லீமாவுக்கு அடுத்த விமானம். வீட்டிலிருந்து கிளம்பி விடுதிக்கு வந்து சேர கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேரப் பயணம். 


லீமாவில் எங்கள் விமானம் தரையிறங்கும் பொழுது இரவு இரண்டு மணி இருக்கும். குடியுரிமைச் சோதனை முடித்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்த எங்களை வரவேற்றார் எங்கள் முகவர். விமானநிலையத்தில் இருந்து சுமார் ஒரு மணி நேரத் தொலைவில் இருந்தது எங்கள் விடுதி. பயணத்தின் பெரும்பகுதி ஒரு புறம் கடலும் மறுபுறம் குன்றுகளும் இருந்த அழகான சாலை. அந்த நேரத்திலும் எங்கு பார்த்தாலும் ஆள் நடமாட்டம். கடற்கரைகளில் அமர்ந்திருந்தார்கள், தெருவோரம் உலாவிக் கொண்டிருந்தார்கள். விடுமுறைக் காலம் என்பதால் இப்படியா எனக் கேட்டதற்கு முகவர் எப்பொழுதும் இப்படித்தான். நீங்கள் எல்லாம் நியூயார்க்கைத் தூங்கா நகரம் என்பீர்கள் ஆனால் உண்மையான தூங்கா நகரம் லீமாதான் என்றார். அவரிடம் எங்களுக்கெல்லாம் மதுரைதான் தூங்கா நகரம் எனச் சொல்லவில்லை. உள்ளூர்க்காரர்கள் போலல்லாது, விடுதிக்குச் சென்ற உடனே பயணம் செய்த களைப்பில் நாங்கள் தூங்கிவிட்டோம்.

லீமா முரண்களால் ஆன ஒரு நகரம். 

நாம் முன்பு பார்த்த கோஸ்டா பகுதியில் அமைந்துள்ளது. பாலை நிலம் ஆனால் கிலோன், ரிமாக், லூரின் என மூன்று நதிகளின் முகத்துவாரங்கள் அமைந்துள்ள பகுதி. அதனால் தண்ணீருக்குத் தட்டுப்பாடு இல்லை. 


பூமத்திய ரேகைக்கு அருகே அமைந்துள்ள நகரம். கடல் மட்டத்தில் அமைந்திருக்கும் நகரம். ஆனால் சென்னை போல வெப்பமும் வேர்வையும் இல்லை. அதிகக் குளிரும் இல்லாத மிதமானத் தட்பநிலை. நகரம் கடல்மட்டத்தில் இருந்தாலும் ஐயாயிரம் அடி உயரம் வரை இருக்கும் குன்றுகள் சூழ்ந்த நகரம். 


ஒரு புறம் செல்வச் செழிப்போடு மிளிரும் நவீன மிராப்ளோரெஸ் பகுதி, மறுபுறம் பழமை குலையாது பாதுகாக்கப்படும் தொன்மையான வரலாற்று வட்டாரம், இவைதாண்டி அடிப்படை வசதிகளுக்குக் கூடப் போராட வேண்டிய நிலையில் இருக்கும் புறநகர்ப் பகுதிகள் என இந்நகரத்திற்குத்தான் எத்தனை முகங்கள். 



நாங்கள் தங்கி இருந்த இடம் மிராப்ளோரெஸ் பகுதி. கடலோரத்தில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்த பகுதி. உயர்தர விடுதிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் என சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்குத் தேவையான அனைத்தும் கொண்ட இடம். இங்கிருந்து சிறிது தொலைவில் உள்ளது காதல் பூங்கா. லீமா கடற்கரையை மேலிருந்து பார்க்கும்படியான அமைப்பு. இங்கு அமர்ந்து சூரிய அஸ்தமானத்தைப் பார்க்க கூட்டம் அலைமோதுகிறது. தங்கள் பெயர்களை எழுதிய பூட்டை இங்குள்ள கிராதிகளில் மாட்டிவிட்டால் பிரியாது இருப்போம் என்ற நம்பிக்கை கொண்ட ஜோடிகள் ஆயிரக்கணக்கான பூட்டுகளை மாட்டி இருக்கிறார்கள். இந்தப் பூங்காவின் அருகில் பாராகிளைடிங் எனப்படும் சாகச விளையாட்டுக்கான இடமும் உள்ளது. 




லீமா நகரை நிர்மாணித்தது பிஸாரோ என முன்பே பார்த்தோம். அப்பொழுது அவர் நிர்மாணித்த நகரம் இன்றைய லீமாவில் ஒரு சிறு பகுதி. மன்னர்களின் நகரம் (Ciudad de los Reyes) என்ற பெயரை அவர் இந்நகரத்திற்கு அளித்தார். ஆனால் பொது வழக்கில் இன்று வரை நீடித்திருக்கும் பெயர் லீமாதான். இந்த ரிமாக் நதியின் பெயர்தான் லீமா என்று மருவியதாகச் சொல்கிறார்கள் அதே சமயம் இங்கிருந்த நிமித்தக்காரர்கள் கோவில் ஒன்றின் பெயர் க்வெட்சுவா மொழியில் லிமாக் (பேசுபவர்) என்று வழங்கப்பட்டதாகவும் அதுவே லீமா எனத் திரிந்ததாகவும் கூடச் சொல்கிறார்கள். 


கப்பல்கள் வந்து போகத் தோதாக இருக்க வேண்டும், அதே சமயம் தாக்குதல்களைத் தவிர்க்கப் பாதுகாப்பான இடமாகவும் இருக்க வேண்டும். வளமான நிலம் கொண்ட, மிதமான தட்பவெப்ப நிலை கொண்ட பகுதியாகவும் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்தான் லீமா. முதலில் குடியேறிய பகுதியை அந்த பழமை மாறாமல் வைத்துள்ளார்கள். யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியத் தலம் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்தப் பகுதி. 


தேவாலயங்கள், அரசு அலுவலகங்கள், அதிபர் மாளிகை, மாநகராட்சி அலுவலகங்கள், பேராயரின் அரண்மனை எல்லாம் அமைந்துள்ள இப்பகுதி பெருஞ்சதுக்கம் என அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டடங்களில் உள்ள அழகான மாடங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. விடுமுறைக்காலம் என்பதால் கோலாகலமாக இருந்தது. அத்தனை கூட்டம் இருந்தாலும் குப்பைகளே இல்லாத சுத்தம் கண்ணைப் பறித்தது. அத்தனை செல்வம் இருந்தாலும் பழங்குடியினர் பலர் கையேந்தி நின்றது மனத்தைக் குத்தியது. 


மர மாடங்கள்

அதிபர் மாளிகை

பெருஞ்சதுக்கம்

விழாக்கால கோலாகலம்

தேவாலய முகப்பு

இங்குள்ள சான்பிரான்ஸிஸ்கோ பேராலயம் கண்களுக்கு ஒரு விருந்து. அருமையான வேலைப்பாடு, மிக அழகான குவிமாடம் (Dome), கலைப்பொருட்கள், பிரம்மாண்டமான ஆர்கன் (Organ), சேர்ந்திசை மண்டபம், மரப்படிகள் கொண்ட பல அடுக்குகள் கொண்ட பழங்கால நூலகம் என்று பார்க்கும் இடம் எல்லாம் பிரமிக்கச் செய்யும்படி இருந்தது. இங்கு படங்கள் எடுப்பது தடை செய்யப்பட்டிருப்பதால் படங்கள் ஏதும் இல்லை. 


இத்தனை அழகையும் காண்பித்துவிட்டு பின் தரைமட்டத்திற்குக் கீழ் உள்ள தளத்திற்குக் கூட்டிச் சென்றனர். அங்கு நாங்கள் கண்டது கேட்டகோம்ஸ் (Catacombs). இறந்தவர்களைப் புதைக்கும் பிணவறைகள். அருட்பெற்ற இடங்களில் புதைக்கப்பட்டால் சொர்க்கம் நிச்சயம் என்ற நம்பிக்கையால் இப்படி தேவாலயத்தின் கீழ் புதைக்கப்படுவது வழக்கமாக இருந்ததாம். இருபத்தி ஐந்தாயிரம் உடல்களாவது புதைக்கப்பட்டு இருக்கும் என்கின்றனர். தனி மாடங்களில் புதைக்கப்பட்ட உடல்கள், கிணறு போன்ற அமைப்பில் மொத்தமாகப் புதைக்கப்பட்ட உடல்கள் எனப் பார்க்க முடிந்தது. 


பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பொதுமக்களின் உடல்கள் புதைக்கப்படுவது தடை செய்யப்பட்டுவிட்டாலும் இறைப்பணியில் இருந்தவர்களின் உடல்கள் மட்டும் இன்னமும் இங்கு புதைக்கப்படுவதற்கு அனுமதி இருக்கிறது. நாங்கள் சென்ற பொழுது, அப்படி ஒருவரின் உடல் குழிகளில் இறக்கப்படுவதைப் பார்த்தோம். 


பேராலய முகப்பு

லீமா என்ற நகரம் 1535ஆம் ஆண்டு பிஸாரோவால் நிர்மாணிக்கப்பட்டாலும் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பெருவின் பழங்குடியினரால் குடியேறப்பட்ட இடம்தான். இதற்குச் சான்றாக இருப்பது வ்வாக்கா புக்கியானா (Huaca Pucllana).


20ஆம் நூற்றாண்டின் கடைசி தசாப்தங்கள். மிராப்ளோரேஸ் பகுதி செல்வந்தர்களுக்கான பகுதியாக நிலைப்பெற்றுக் கொண்டு இருக்கின்றன நேரம். கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. புதிய கட்டடம் ஒன்றிற்காக அங்கிருந்த மணற்குன்றினைத் தரைமட்டமாக்கத் தொடங்கினர். அப்பொழுது அவர்கள் கண்ணில் பட்டது புதைத்திருந்த களிமண் செங்கல்கள். விஷயம் தெரிந்த அரசு அந்நிலத்தைக் கைப்பற்றி அகழ்வாராய்ச்சி துறையிடம் தந்தது. அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது அங்கிருந்த ஏழடுக்குப் பிரமிட். 


பொயு 200 முதல் 700 வரை இந்தப் பகுதியில் வாழ்ந்த லீமா இனத்தவரால் முதலில் கோவிலாகக் கட்டப்பட்டது இந்தப் பிரமிட். இங்குள்ள பலிபீடங்கள் அதற்குச் சான்றுகள். கையால் உருவாக்கப்பட்டு, வெயிலில் காய வைக்கப்பட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது இந்தப் பிரமிட். செங்கற்களை செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்ட வாக்கில் இந்தப் பிரமிட் கட்டப்பட்டதால் இதற்கு நூலக கட்டுமான முறை என்ற பெயர் வழங்கப்பட்டது. அதிலும் சில செங்கற்களுக்கு இடையே இடம் விட்டு கட்டப்பட்ட முறை இந்தப் பிரமிட் நிலநடுக்கங்களால் பாதிப்பு ஏற்படாமல் செய்கிறது. ஒரு புறம் கடலையும் மறுபுறம் மலைகளையும் பார்க்கும் படி கட்டப்பட்டு இருப்பதற்குக் காரணம் இவர்கள் கடலையும் மலைகளையும் கடவுளாகக் கருதியதால்தான். 


இவர்களைத் தொடர்ந்து வந்த வாரி, இச்மா இனத்தினர் இந்த இடத்தை கல்லறையாகப் பயன்படுத்தியுள்ளனர். இவர்களின் முதுமக்கள் தாழிகள் மேலடுக்குகளில் காணப்படுகின்றன. இன்றும் இப்பகுதியில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுற்றிலும் நவீன கட்டடங்கள் சூழ்ந்திருக்கும் இந்தப் பழமையான இடம் கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். 


பிரமிட்

பழமையும் புதுமையும்

நூலகக் கட்டுமானம்

மண்பாண்டங்கள்

முதுமக்கள் தாழி

தெரிவதும் மறைந்திருப்பதும்

லீமாவில் இன்னும் பார்க்கப் பல இடங்கள் இருந்தாலும் எல்லாப் பெருநகரங்கள் போலத்தான் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. நாளை லீமாவை விடுத்து தென் திசை செல்வோம்.


அது வரை... 


பெருவின் தேசிய பானம் - பிஸ்கோ சவர் (Pisco Sour)


பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன - லீமா புகைப்படங்கள் 


3 comments:

said...

அருமையான செலவு!

said...

Huaca Pucllana ல சாப்பிட்டீங்களா கொத்ஸ்??

said...

இல்லை. அங்கு உண்ணவில்லை. நாங்கள் சென்ற நேரம் அதற்குச் சரிப்படவில்லை. மதிய உணவை முடித்துக் கொண்டு சென்றோம். இரவு வரை அங்கிருக்க நேரமில்லை. ஆனால் விளக்கொளியில் அந்த உணவகத்தில் இருந்து பார்க்க பிரமிட் மிகவும் அழகாக இருக்கும் என்று சொன்னார்கள்.