Showing posts with label answers. Show all posts
Showing posts with label answers. Show all posts

Thursday, June 19, 2008

பதிமூன்றாம் ஆழ்வாருக்குப் பரபரப்புக் கேள்விகள்!!

இந்த மாதிரி தொடர் விளையாட்டுகள் தமிழ்மணத்தில் நிறைய பார்த்திருக்கிறேன். 'ஏம் வே! உமக்கென்ன கோட்டியா புடிச்சிருக்கு?' என்று கேட்டா சிலருக்கு கோபம் வரலாம். ஆனால் 'ஐயா, weird தொடர்விளையாட்டில் உங்களையும் இணைத்திருக்கிறேன்' அப்படின்னு பதிவு போட்டா உடனே பதிவு போட நிறைய பேர் தயாரா இருக்காங்க. இந்த தொடர் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பது ஒரு நல்ல அனுபவம்.

இந்தியர்கள் கடைக்கு போய் கத்திரிக்காய் வாங்குவதால்தான் கத்திரிக்காய் விலையேறுகிறது என்று கண்டுபிடித்திருக்கும் கொத்தனார் -

இவர் ஒரு மூத்த பதிவர். நாலு விசயமும் தெரிஞ்ச நல்ல மனசுக்காரர். "நாலு பேர் பாக்குற மாதிரி நல்லா இரு"ன்னு சொல்லாம இப்படி நாலு பேரு பாக்குற மாதிரி கேள்வி கேக்குராரேன்னு யோசனையாத்தான் இருக்கு. இதில சோடி போட்டுகிட்டு வேற திரியறாங்கங்க. ஒருத்தர் கேள்வி கேப்பாராம். இன்னொருத்தர் பஞ்ச் கொடுப்பாராம்.

இதுகெல்லாம் அசந்துருவோமா. கைப்புள்ள! எடுறா உலாவியை! விடுறா மெயில்லை!

1. பதிவுலகில் தொடர்ந்து இயங்கும் நீங்க, பல பதிவர்களை விட பின்னூட்டங்களில் பட்டையைக் கிளப்பும் நீங்க ஏன் இதுவரை பதிவு தொடங்கலை?

பதிவு எழுத தேவை கொஞ்சம் எழுத்து திறமை, வாசகர் வட்டம் பற்றிய தெளிவு, கொஞ்சம் 'தடித்த தோல்' மற்றும் நிறைய்ய்ய்ய நேரம். நம்ம வேலை நேரம் பத்தி சொல்லவே முடியாது. அதான் இப்படியே இருந்திட்டு இருக்கேன். சோம்பேறியா :-)

2. பதிவுகள் எழுதும் நாங்களெல்லாம் வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்வது போல நீங்கள் படித்துப் பின்னூட்டமிடுவதற்காகவே வாங்கிக் கட்டிக் கொள்வது உண்டா?

இது வரைக்கும் நான் எதுவும் வாங்கிக் கட்டிக்கலை. பொதுவா அவங்கதான் 'வாங்கிக் கட்டிப்பாங்க'. நாம வெறும் டவுசர் பார்ட்டிதானே.

3. அடிப்படையில் ரஜினி ரசிகராக அறியப்படும் நீங்கள் தசாவதாரத்திற்கு கமலே நினைக்காத கோணங்களில் பின்னூட்டங்கள் போட்டு ஆதரவு திரட்டுவதின் பின் இருக்கும் நுண்ணரசியல் என்ன? (நான் ரஜினி ரசிகன் என்று யார் சொன்னது போன்ற மொக்கை பதில்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது)

புதிய செய்தி அறியத் தந்தமைக்கு நன்றி :-). ரஜினி ராம்கி சண்டைக்கு வந்திடப் போறார் அப்புறம்.

பொதுவாக நாம் ஒரு படைப்பை அணுகும்போது பல முன்முடிவுகளோடே அணுகுகிறோம். முதல் பார்வையில் மோனாலிசா ஒரு இத்தாலிய சீமாட்டியின் போர்டிரெய்ட் படம். இது மிகச் சுலபமான புரிதல். "இதில் என்ன பெருமை இருக்கிறது? ரவி வர்மா இதைவிட பிரமாதமா வரைவார்" என்றோ, "போர்டிரய்ட் எல்லாம் எலிமெண்டரி ஆர்ட்" என்றோ சொல்லிவிட்டு வந்து விடலாம். ஒரு மாட்ர்ன் ஆர்ட் தலைகீழா மாட்டினாலும் யாரும் கண்டுபிடிக்கமாட்டாங்க அப்படின்னு சுலபமா ஜோக் அடிக்கலாம்.

Dan Brown மோனாலிசா பத்தி நிறைய எழுதறார். பல புதிய கோணங்கள் கிடைக்கின்றன.

கமல்ஹாசன் பல திரைக்கதைகள் எழுதியிருந்தாலும், அதில் பின் வரும் மூன்றும் ஒரு சில புள்ளிகளில் ஒன்று சேர்கின்றன. ஹேராம், அன்பே சிவம் இப்பொழுது தசாவதாரம். பாத்திரங்களின் பெயர்களுக்கு அவர் தரும் முக்கியத்துவம், மனிதனின் அகப்பயணம், சித்தாந்தங்கள் மற்றும் மொழியின் ஊடே நடக்கும் வெளிப்பயணங்கள், மனிதனின் இருப்பு சார்ந்த அலசல்கள், இறை நம்பிக்கை பற்றிய கேள்விகள் போன்ற பல விசயங்களை ஒரு திரையில் தீட்டுகிறார். அந்த பெரிய திரை நிறைய பேர் கண்ணுக்கு தெரிவதில்லை.

அட நமக்கு முதலில் புரியவில்லை. ஆனால் புரிந்து கொள்ள முயற்சிக்கலாமே என்றுதான் நினைத்தேன். எழுதினேன் :-)

4. காலப் பயணம் செய்ய முடிந்து உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு சம்பவத்தை மாற்ற முடியும் என்ற சக்தி கிடைத்தால் எதனை மாற்றுவீர்கள்? எவ்வாறு மாற்றுவீர்கள்?

இதுவரை அப்படி ஒரு சம்பவமும் நினைத்ததில்லை. ஆனால் வாழ்க்கையை ரிவர்ஸில் எப்படி இருக்கும் என்று எங்கோ படித்த ஞாபகம்.

தொண்டு கிழமாக இருந்துவிட்டு, மீண்டும் உடலில் வலு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து, 'தொல்லை கொடுக்கும் பெருசு'ல் இருந்து பிள்ளைகளுக்கு சூப்பர் மேனான அப்பாவாக மாறி, சப்பென்று இருக்கும் இல்லற வாழ்வில் மீண்டும் காதலை சந்தித்து, மீண்டும் கல்லூரி வாழ்க்கை வாழ்ந்து, பள்ளிப் பாடங்களை இப்பொழுதாவது புரிந்து படித்து, துன்பம் இல்லாத மழலைப் பருவத்தில் தவழ்ந்து, அந்த ஒரு நொடி சம்போகத்தில் ஒரு உயிரணுவாக மாறிப் பார்க்கலாம்.

நாம யாரை கேள்வி கேட்கிறது? அப்படியே கேட்டாலும் நம்மளை மதிச்சு யாரும் பதில் போடுவாங்களான்னு தெரியாது. 'ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்' அப்படின்னு வடிவேலுக்கு அப்புறம் இணையத்தில் இவரைத்தான் எல்லாரும் சொல்கிறார்கள்.

எங்கள் அருமை அண்ணன், சிலம்புச் செல்வன், கண்ணகியின் கோவலன், மாதவிப் பந்தலான், பதின்மூன்றாம் ஆழ்வார், இணைய தளபதி இப்படியெல்லாம் பில்டப் கொடுக்காமலே அவரைப் பத்தி நிறைய பேருக்கு தெரியும். இப்ப கேள்விகள் (இது வேறயா):

1. நான் வறட்டு ஆன்மீக பற்றாளன் இல்லை. ஆனால் உங்கள் எழுத்தில் இருக்கும் ஆன்மீகம் பல புதிய புரிதல்களை தருகின்றன. நீங்கள் இறை மறுப்பாளராக இருந்து பின்னர் மாற்றம் கண்டதாக அறிகின்றேன். மாற்றங்கள் வாழ்வில் இன்றியமையாதது. ஆனால் ஆன்மீகத் தேடலைத் தாண்டி நீங்கள் ஆன்மீகம் வளர்க்க நிறைய சிரத்தை எடுக்கிறீர்கள். எதனால் இந்த மாற்றம்?

2. இத்தனைப் பதிவுகள், பின்னூட்ட மட்டுறுத்தல், தொடர்ந்து விவாதம் என்று எப்படி நேரப் பங்கீடு செய்கிறீர்கள்?

3. இந்த மாதிரி ஒரு தொடர் விளையாட்டில் உங்களை மூன்று பேர் ஒரே சமயத்தில் அழைக்கிறார்கள். ஒரு சங்கிலியில் தான் நீங்கள் பங்கு பெற முடியும் என்று விதி இருந்தால் (அட இருக்குன்னு சொல்றேன்!) யாருடைய சங்கிலியை தொடர வைப்பீர்கள்? ஏன்?

உங்களை தொடரச் சொல்லும் அந்த மூன்று பதிவர்கள்

அ) கோ. இராகவன்

ஆ) கோவி கண்ணன்

இ) வெட்டிப் பையல் பாலாஜி

4. உங்கள் நினைவில் ஆழப் பதிந்து போன சிறுவயது கதை? யார் அந்த கதையை உங்களுக்கு சொன்னார்கள்?

டிஸ்கி: பதிவுக் கயமைத்தனம் செய்வதற்காகவே நான் பதிவெழுதா ஸ்ரீதரைக் கேள்வி கேட்டதாகப் பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டு ஸ்ரீதரின் பதில்களையும் கேள்விகளையும் இங்கு பதிவாய் அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

Tuesday, June 17, 2008

வித விதமாய் நுண்ணரசியல் (பெனாத்தலுக்கு நன்றி!)

பதிவு போட விஷயமே இல்லைன்னு சொல்லறவங்களைக் கட்டி வெச்சு உதைக்கணும். நேரம் இல்லை, ஆணி அதிகம் அப்படின்னு சொன்னா விஷயம் வேற. ஆனா இந்த பதிவுலகத்தில் எத்தனையோ எழுதலாமே. அன்பே சிவம், சிவாஜி, தசாவதாரம் என அப்பப்போ எதாவது திரைப்பட சீசன் வருது. அப்புறமா கேள்வி பதில் என்ற பெயரில் நமக்கு நாமே விளையாடிக்கலாம். அதுவும் இல்லையா, தொடர் விளையாட்டுக்கள் எத்தனையோ வருது - சிவாஜி வாயில் ஜிலேபி, அதைத் தொடர்ந்து இந்த கேள்விக்கென்ன பதில் விளையாட்டு. அப்புறம் என்ன விஷயப் பஞ்சம் அதான் எனக்குப் புரியவே இல்லை. நிற்க.

மேலே சொன்ன கேள்விக்கென்ன பதில் விளையாட்டில் நம்மளை பாத்து நாலு கேள்வி கேட்டுப்புட்டாரு நம்ம பெனாத்தல். அதுல கருப்பு வெள்ளையில் எழுது, கலரில் எழுதுன்னு ஆயிரம் நுண்ணரசியல். இருந்தாலும் அவர் ஆசைப்படி என் பதில்களோட பஞ்ச் அண்ணாவின் கருத்துக்களையும் வாங்கிப் போட்டாச்சு.

1. எழுத்தில் மட்டும் சந்திக்கும் பதிவர்களை நேரிலும் சந்திக்க ஆசைப்படுவீர்களா? யார் யார் உங்கள் லிஸ்டில்?

பதிவினால் பெற்ற பயன் யாதெனின் அப்படின்னு முன்னமே சொல்லி இருக்கேன் - "எந்த ஊர் போனாலும் பார்ப்பதற்கு நண்பர்கள். அதில் சிலர் பதிவுகளையும் தாண்டி நல்ல நண்பர்களாய் இருப்பது." அப்படிச் சொல்லி இருக்கும் போது பார்க்காம இருப்பேனா? லிஸ்ட் எல்லாம் இல்லை. எந்த ஊர் போனாலும் அங்க யார் இருக்காங்கன்னு பார்த்து முடிஞ்சா ஒரு சந்திப்பு போட்டுடறதுதான். முக்கியமா அதை வெச்சு நாலு பதிவு போட முடியுமே. அதுக்காகவாவது பார்க்க வேண்டாமா?

ஒரே ஒரு பிரச்சனை. அவங்க நம்மளைப் பார்க்க பிடிக்காம ஊரை விட்டே போயிடறாங்க நம்ம குமரன் மாதிரி . இல்லை நம்ம ஸ்ரீதர் வெங்கட் மாதிரி கடைக்குப் போனேன். கத்திரிக்காய் வாங்கினேன். அப்படின்னு தொலைபேசிக்கிட்டே அடுத்த முறை பார்க்கலாம் அப்படின்னு சொல்லிடறாங்க.

என்ன, நம்மை யாரு என்னான்னு தெரியாம, எதிர்வினைகளை முன்வைப்பதால் நம்மைப் பற்றிய முன்முடிவுகளுடன் காரசாரமாய் பதிவு / பின்னூட்டம் போட்டு காய்ச்சி எடுக்கிற பதிவர்கள் நேரில் பார்த்தா என்ன சொல்லுவாங்க. ஒரு முறை நேரில் பார்த்துப் பழகிய (பாப்பையா சொல்லும் பழகல் எல்லாம் இல்லை) பின் அந்த முன்முடிவுகளில் மாற்றம் இருக்குமான்னு தெரிஞ்சுக்க ஆசை.

பஞ்ச் அண்ணா: பெனாத்தலா கேள்வி கேட்டாரு? அந்த ஆளுக்கு கேள்வி கேக்கத் தெரியலையா இல்ல உம்மகிட்ட பயமான்னு தெரியல! இப்படி இருந்திருக்கணும் கேள்வி: எழுத்தில் மட்டும் சந்திக்கும் பதிவர்கள் உங்களை நேரில் பயமில்லாமல் சந்திப்பார்களா? இல்லை சாக்கு போக்கு சொல்லி ஓடிவிடுவார்களா?

2. திருநெல்வேலிலே ஆரம்பிச்சு அமேரிக்கா வரைக்கும் பல ஊர் பாத்திருக்கீங்க.. நேர்மையாச் சொல்லுங்க.. எந்த ஊர்லே சைட்டடிக்கும்போது தங்கமணிகிட்டே மாட்டினீங்க? அதன் பின் விளைவுகள் என்ன?


வைப்பாலஜியில் முனைவரான நீங்க என் கிட்ட இப்படி ஒரு கேள்வி கேட்டது சிரிப்பாத்தான் இருக்கு. முதலில் மாட்டாமல் இருக்க முடியாது என்ற உண்மையை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய மனப்பக்குவம் வர வேண்டும். சரி. பார்த்தாச்சு, மாட்டியாச்சு. அடுத்தது என்ன செய்ய. முதலில் யாரைப் பார்த்தோமோ அவங்களை மட்டம் தட்டி விட வேண்டும். என்ன இது நீல சுரிதாருக்குப் பச்சை துப்பட்டா? அல்லது காதில் என்ன அது தோடா இல்லை கத்திச் சண்டைக்கு பயன்படும் கேடயமா? இப்படி எதாவது. இல்லையா, அந்த சேலையைப் பாரு. நீ வேண்டாம் என்று வீட்டில் வேலை செய்பவருக்குத் தந்தது மாதிரியே இருக்கே. இந்த மாதிரி வேற வியாபாரம் நடக்குதா? நீ அன்னிக்குப் போட்ட டிசைன் இன்னிக்கு இவங்க போட்டு இருக்காங்களே அப்படின்னு சொல்லணும். (நான் வந்து இன்னிக்கு இருக்கும் பேஷன் படி உடுத்தறது இல்லையா? என்ற கேள்வி வரலாம்).

எதுவும் வொர்க் அவுட் ஆகலைன்னா உனக்கு மனக்கஷ்டமா இருந்தா இனிமே பார்க்கலைன்னு சொல்லணும். அடுத்த முறை சினிமா போகும் போது படம் பூராவும் கண்ணை மூடிக்கிட்டு இருக்கணும். அதை அவங்களுக்குத் தெரியற மாதிரி செய்யணும். என்னன்னு கேள்வி வரும். கொத்ஸ் (இங்க உங்க பேரைச் சொல்லணும்) வாக்குக் குடுத்தா தவற மாட்டான். திரையில் வரும் பெண்களை எக்காரணம் கொண்டும் பார்க்க மாட்டேன் அப்படின்னு வசனம் பேசணும். நல்ல படமான சிரிச்சுக்கிட்டே பார்த்துத் தொலை அப்படின்னு வரும் இல்லை படம் குருவி ரேஞ்சுக்கு இருந்தா அந்தக் கடுப்பெல்லாம் சேர்ந்து ஒரு மிதி விட்டு இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. குடுத்த காசை வீணாக்காம நான் பெற்ற துன்பம் பெருக நீயும் என ஒரு பதில் வரும். ஆக மட்டும் பார்க்கலாம்.

தங்கமணியையும் பையனையும் கூட்டிக்கிட்டுக் கடைக்குப் போகும் போது எல்லாம் அவன் எதையாவது எடுக்க முனைந்தா 'Son, there are some rules in life. When you are in a public place, there are things you can see, but you can't touch!" அப்படின்னு சொல்லிக் குடுத்துடறது!

பஞ்ச் அண்ணா: நல்லாத்தான்யா ப்ளான் எல்லாம் பண்றீங்க.. ஆனா பேக்பயர் ஆச்சுன்னா வாழ்நாள் ஆப்பு ப்ரீ! இதே சிச்சுவேஷன்லே "அட.. ரொம்ப நல்லவன் தான்யா நீ.. எனக்காகத்தான் எல்லாத்தையும் சைட் அடிச்சே சரி.. அப்படித்தான் போற வற பொம்பளைங்க என்ன தோடு போட்டிருக்காங்க, எது லேடஸ்ட் டிசைன், துப்பட்டா போட்டிருக்காங்களா இல்லியான்னு டீட்டெயிலா நோட் பண்ணுவியா? என்னோட பேட்டைக்கு வா" ன்னு சொன்னா கொத்தனார் கொத்துக்கறியனார்!

3. நுண்ணரசியல்: சாதா பிராண்ட், பி ந பிராண்ட், இன்னும் வேற எதாச்சும் இருந்தா அதைப்பத்தியும் படம் வரைந்து பாகங்களைக் குறியுங்கள் பார்க்கலாம்?

அரசியல் என்றால் என்ன என்பது நமக்கெல்லாம் நல்லாவே தெரியும். திமுக, அதிமுக என பெரிய அளவில் செய்யும் அரசியல் நமக்கெல்லாம் ஓரளவு தெரியும். அலுவலகத்தில் ஒருத்தனுக்குப் பதவி உயர்வு கிடைத்தால் அதற்கு நாம் கற்பிக்கும் காரணமோ அல்லது வீட்டில் நம் மைத்துனர் குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு நாம் கற்பிக்கும் காரணமோ நாம் நம்மளவில் செய்யும் அரசியல். இதெல்லாம் வெளிப்படையா நடப்பது.

இவ்வளவு வெளிப்படையா இல்லாம கொஞ்சம் நுணுக்கமா கொஞ்சம் யோசிச்சால் மட்டுமே புரிபடற மாதிரி செய்யும் அரசியல் நுண்ணரசியல். இன்றைக்குப் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரும் பாடு படுவது திமுக அரசு அப்படின்னு ஒரு அறிக்கை வெளிவந்தா, அதை விமர்சனம் பண்ணி ஒரு பதிவு போடும் பொழுது, "அதுக்கு தமிழகத்தில் இன்று மதுரைதான் ஆட்சி!!" அப்படின்னு தலைப்பு வெச்சீங்கன்னா அது பல அடுக்குகளில் வேறு வேறு விதமான பொருள் தரும். பெண்கள்தான் சக்திவாய்ந்தவர்கள் என்ற நேரடி விளக்கம், அதற்கு ஒரு படி கீழே போனால் இன்று அமைச்சகத்தில் நடப்பதை விட கலைஞரின் வீடுகளில்தான் பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று ஒரு கோணம். அதையும் தாண்டி அழகிரி கை ஓங்கி இருப்பதை சொல்லும் வேறு ஒரு கோணம். இப்படி பல விதமான கோணங்கள் பல விதமான முடிவுகளைத் தருவது என்பது நுண்ணரசியல். ஆனா இது எல்லாம் சாதா நுண்ணரசியல்.

அடுத்து வருவது கலர்கண்ணாடி நுண்ணரசியல். இதில் பல வலையுலக ஜாம்பவான்கள் எல்லாம் இருக்காங்க. ஒரு விளையாட்டு இருக்கும். ஒரு அட்டையின் ஒரு பகுதியில் கேள்வி இருக்கும். அதன் விடை அந்த அட்டையின் பின்புறத்தில் இருக்கும். ஆனா அது தெளிவாகத் தெரியாது. அந்த விளையாட்டோட ஒரு சிகப்புக் கண்ணாடி தருவாங்க. அதைப் போட்டுக்கிட்டுப் பார்த்தா விடை பளிச் எனத் தெரியும்.

அந்த மாதிரி இந்த க.க.நுண்ணரசியலில், முதலில் நீங்க முன்முடிவுகள் பலவற்றோட இருக்கணும். எந்த பதிவையும், எந்த நிகழ்வையும் இந்த முன் முடிவோடதான் அணுகணும். அப்படிச் செய்யும் போது, இந்த கலர் கண்ணாடியைப் போடாதவங்களுக்குத், அதாங்க அந்த முன்முடிவுகள் இல்லாதவங்களுத், தெரியாத பல விஷயங்கள் இவங்களுக்குத் தெரியும்.

உண்மையாச் சொல்லப்போனா இதுக்கும் வேண்டாத மருமக கைபட்டா குத்தம் -கால்பட்டா குத்தத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. பிடிச்ச ஆளு காளை மாட்டுக்கு நாலு கொம்பு ன்னு சொன்னாக் கூட "100% உடன்படுகிறேன்" என்பதும், பிடிக்காத ஆளு ஜூலை மாசத்துக்கு 31 நாள்னாக்கூட சண்டை பிடிக்கறதும் நடக்கிறதைத்தான் பார்க்கறீங்களே.

மூணாவது பி.ந.நுண்ணரசியல். இது ஒரு பெரிய வாசாப்பு. இந்த நுண்ணரசியல் எழுதறவனுக்கும் ஒண்ணும் புரியாது. படிக்கிறவனுக்கும் ஒண்ணும் புரியாது. ஆனா எழுதறவன் தான் என்னமோ சாக்ரடீஸ் மாதிரி நினைப்பில் எழுதுவான். படிக்கிறவன் புரிஞ்சா மாதிரி பட்டையைக் கிளப்பிட்டீங்க வாத்தியாரே அப்படின்னு பின்னூட்டம் போடுவான். அதுவும் சில சமயங்களில் அவனுக்கும் அறிவு ஜீவி வியாதி தொத்திக்கும். அப்போ அவ்வளவுதான் ரெண்டு பேரும் மாறி மாறி எழுதிக்கிறதைப் படிச்சா நமக்கு மண்டையில் முடி எல்லாம் கொட்டிப் போயி உடம்பு சூடேறி கண்ணைக் கட்டிக்கிட்டு மயக்கமா வரும். இது உதாரணமா எதையாவது சொல்லப் போக உங்களுக்கு எதாவது ஆயிடிச்சுன்னா என்ற கவலையில் அதை எல்லாம் செய்யலை.

கடைசியா, (நுண்ணரசியல் பத்திப் பேசும் போது கடைசியான்னு சொல்லறதே தப்பு. ஏன்னா இதையும் தாண்டிப் புனிதமானது ஒண்ணு வரலாம்!) நாம பண்ணற நுண்ணரசியல். இதுல என்ன விசேஷமுன்னா செய்யறவங்களுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது. ஆனா நம்ம கண்ணுக்கு இதெல்லாம் பளிச்சுன்னு படும். அதைச் சொன்னா அப்போதான் அதைச் செஞ்சவருக்கு நாமா இதெல்லாம் செஞ்சோம் அப்படின்னு தோணும். உதாரணத்திற்குப் போன பதிவில் நாம சொன்ன மாதிரி ஆஸ்கார் பிலிம்ஸ் என தசாவதாரத்தில் வரும் பொழுது அந்தப் பையன் சட்டையில் 'கேப்டன்' அப்படின்னு எழுதி இருக்கும். அது எதேச்சையா நடந்திருப்பது. அதன் மூலம் கமலை விட விஜயகாந்த் எவ்வளவோ மேல் அப்படின்னு ரவிசந்திரன் சொல்ல வராரு அப்படின்னு ஒரு பதிவு போட்டா அது இந்த மாதிரி நுண்ணரசியல்.

இதுல முக்கியமானது இதை வெளிப்படுத்தும் பொழுது உம் நுண்ணரசியல் என்னை பிரமிக்க வைக்கிறது, உமது நுண்ணரசியல் கண்டு பிரமித்து நிற்கிறேன் எனச் சொல்வது அவசியம். ஆனா ஒண்ணு, இதுதாங்க இருக்கிறதுலேயே ஆபத்தில்லாதது. படிச்சுட்டு சிரிச்சுட்டு, பின்னூட்டமா ஒரு சிரிப்பானாவது போட்டுட்டு போனா முடிஞ்சுது வேலை.

பஞ்ச் அண்ணா: யானையக் குருடனுங்க தொட்டு என்னவோ சொன்ன மாதிரி எங்கயோ ஒரு மேட்டரைப்பாத்துட்டு என்னவோ வாய்க்கு வந்தபடியோ மனசுக்கு வந்தபடியோ பேசறதுதான் நுண்ணரசியல் - அப்படின்னு ஒரு வரிலே முடிக்கவேண்டிய பதிலை வச்சுகிட்டு ஜிலேபி சுத்தியிருக்கீரே .. உம்மை!

4. பின்னூட்டப் பிதாமகரே, நீங்களும் பார்த்து வெறுத்து ஒதுக்கும் பதிவுகள் என்னவோ, ஏனோ?

முதல் இரண்டு வார்த்தைகள் என்னை ரீச்சருக்கு எதிரா கொம்பு சீவற மாதிரி இருக்கு. ஏன்யா இப்படி (நுண் இல்லாத)அரசியல் பண்ணறீரு. அது மட்டுமில்லாம வெறுத்து ஒதுக்கும் அப்படின்னு பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லறீங்களே!! அதிகம் படிக்காத பதிவுகள் அப்படின்னு வேணா சொல்லிக்கலாமா? அப்படிப்பட்ட பதிவுகளில் சில வகைகள் இருக்கு.

முதலாவது ஒருத்தர் எதாவது சொல்ல வந்த அவரு என்ன சொல்லறாரு என்பதை விட அவர் யாரு என்பதற்கு அதிக கவனத்தைக் குடுத்து நமக்குப் பிடிக்காதவரா இருந்தா அவரை விமர்சனம் செய்வதையே பதிலாகத் தருவது. இந்த மாதிரி தனிமனித தாக்குதல்களால் சொல்ல வந்த கருத்து காணாமப் போகுது. இது மாதிரி தொடர்ந்து நடக்கும் பதிவுகள் சிலவற்றின் பக்கம் போறது இல்லை. அனானியா வந்து ஒருத்தர் கேள்வி கேட்டா, பெயர் போடக்கூட பயப்படும் உனக்கெல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும் என்ற மேட்டிமைத்தனமும் இதில் அடங்கும்.

இரண்டாவது போன பதிவில் செல்லமா உவ்வேக் என அறியப்பட்ட வகை எழுத்துக்கள் இருக்கும் பதிவு. அதுக்கும் நமக்கும் ஏழாம் பொருத்தம். அதனால அந்தப் பக்கம் எல்லாம் போறது இல்லை.

மூணாவது இந்த ரொம்ப இலக்கியங்கள் மற்றும் ஆத்திகம் பற்றிய பதிவுகள். இதெல்லாம் நமக்கு ஏணி வெச்சாலும் எட்டாது. ரொம்பவே தீவிரமா விவாதங்கள் நடக்குற இடத்தில் நம்ம என்ன கும்மி ஆட்டையா போட முடியும். அதனால பொதுவா ஒண்ணு ரெண்டு பதிவு படிச்சாலும் அப்படியே சத்தம் காட்டாம நகர்ந்து போயிடறது.

கடைசியா இப்போ வர நிறையா பதிவுகளில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள். நிலக்கடலை சாப்பிடும் போது நடுவில் கெட்டுப் போன பருப்பு மாட்டினா மாதிரி படிக்கும் பொழுது என்னவோ செய்யுது. அதுவும் எதோ ஒண்ணு ரெண்டு இருந்தாலும் பரவாயில்லை. தட்டச்சுப் பிழைகள் அப்படின்னு ஒதுக்கிடலாம். ஆனா வரிக்கு வரிக்கு இதே மாதிரி தப்பு இருந்தா படிக்கவே பிடிக்க மாட்டேங்குது. "ற்" என்ற எழுத்துக்குப் பின் வரும் மெய்யெழுத்துக்கள், "ண,ந,ன' தவறுகள், "ற,ர" தவறுகள் எல்லாம் படிச்சா ரொம்பவே கடுப்பா இருக்கு. எவ்வளவுதான் சொல்லறது. அதனால இந்த மாதிரி எழுத்துப் பிழைகள் இருக்கும் பதிவுகளை இப்போ எல்லாம் புறக்கணிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப தெரிஞ்ச நண்பர்களா இருந்தால் மட்டும் சுட்டிக் காட்டறது.

பஞ்ச் அண்ணா:
அதாவது உங்களுக்கு பின்னூட்டம் போடாத பதிவர்கள் பக்கம் போறதில்லைன்னு சிம்பிளா முடிவெடுத்துட்டு, அதுக்கு காரணமா சந்திப்பிழை, மரியாதை இல்லை ன்னு தேடித்தேடி சொல்றா மாதிரி இல்ல இருக்கு!


கடைசியா நானும் யாரையாவது கேள்வி கேட்கணுமாமே. பதிவர்களில் பாதி பேர் கேள்வி பதில் எழுதும் பொழுது நாம யாரைன்னு போய் கேட்கன்னு யோசிச்சேன். பதிவு எழுதறவங்களை விட்டுட்டு பதிவே இல்லாதவரைக் கேட்டா என்னான்னு நினைக்கும் போது முதலில் நம்ம நினைவுக்கு வந்தது ஸ்ரீதர் வெங்கட்தான். ஸ்ரீதரே, நம்ம கேள்விக்கு பதிலை எல்லாம் எழுதி மின்னஞ்சல் பண்ணுங்க. நானே பதிவாப் போடறேன். இல்லை இதையே சாக்கா வெச்சு நீங்க பதிவு போடத் தொடங்கினாலும் சரிதான். உங்களுக்கான கேள்விகள்

  1. பதிவுலகில் தொடர்ந்து இயங்கும் நீங்க, பல பதிவர்களை விட பின்னூட்டங்களில் பட்டையைக் கிளப்பும் நீங்க ஏன் இதுவரை பதிவு தொடங்கலை?
  2. பதிவுகள் எழுதும் நாங்களெல்லாம் வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்வது போல நீங்கள் படித்துப் பின்னூட்டமிடுவதற்காகவே வாங்கிக் கட்டிக் கொள்வது உண்டா?
  3. அடிப்படையில் ரஜினி ரசிகராக அறியப்படும் நீங்கள் தசாவதாரத்திற்கு கமலே நினைக்காத கோணங்களில் பின்னூட்டங்கள் போட்டு ஆதரவு திரட்டுவதின் பின் இருக்கும் நுண்ணரசியல் என்ன? (நான் ரஜினி ரசிகன் என்று யார் சொன்னது போன்ற மொக்கை பதில்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது)
  4. காலப் பயணம் செய்ய முடிந்து உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு சம்பவத்தை மாற்ற முடியும் என்ற சக்தி கிடைத்தால் எதனை மாற்றுவீர்கள்? எவ்வாறு மாற்றுவீர்கள்?