Friday, January 05, 2024

பெரு(ம்) பயணம் - 5

இன்னமும் பெருவின் கோஸ்டா பகுதியில்தான் சுற்றிக் கொண்டு இருக்கிறோம். கோஸ்டா என்றால் பாலை நிலம் என்றார்கள் ஆனால் லீமா அப்படி இல்லையே என்று நினைக்க வேண்டாம். ஏற்கனவே சொல்லியது போல ஆறுகள் இருக்கும் இடம் என்பதால் அது பாலை நிலம் போலில்லை ஆனால் கொஞ்சம் தள்ளி வந்தால் பாலை நிலம்தான் என்பதை நான் உணர்ந்து கொள்வோம். இதை நன்கு உணர லீமாவில் இருந்து சுமார் நான்கு மணி நேரத் தொலைவில் இருக்கும் பராகஸ் என்ற ஊருக்குப் பயணம் செய்வோம். 


முன்பே சொல்லியது போல் இந்த பயணங்கள் அனைத்தையும் எங்கள் முகவரே ஒருங்கிணைத்து அதற்குத் தேவையான அனைத்தையும் செய்துவிட்டதால் எங்கள் பணி நேரத்திற்குக் கிளம்புவது, ஊர் சுற்றிப் பார்ப்பது என்றானது. எந்த வித அழுத்தமுமே இல்லாமல் இருந்தது. வழக்கம் போல கடலை ஒட்டிய நெடுஞ்சாலையில் பயணம். முந்தும் வண்டிகளுக்கு இடம் விட்டு நிதானமாகச் சென்றார் எங்கள் ஓட்டுநர். நடுவே தென்படும் காட்சிகளைக் குறித்த விளக்கங்களைத் தந்து கொண்டிருந்தார் உடன் வந்த வழிகாட்டி. மதியம் பராகஸ் வந்து சேர்ந்தோம்.


இங்கு தங்கிய விடுதி பற்றி குறிப்பிட்டாக வேண்டும். கடலோரத்தில் அமைந்த விடுதி. பின்வழியா கடலுக்குச் சென்று விடலாம். எந்நேரத்தில் சென்றாலும் கடற்கரையில் பறவைகளைக் காண முடிந்தது. விடுதியின் வரவேற்பறை, சாப்பாட்டறை, பார் என எங்கு பார்த்தாலும் பழமையான பொருட்களை நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தனர். விடுதியின் உள்ளேயே ஒரு சிறிய அருங்காட்சியகம் கூட இருந்தது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்தது அங்கு எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெம்மிங்வே தங்கி இருந்து மீன் பிடித்ததைக் குறிப்பிடும் பதாகைதான். எழுத்தாளர்களுக்கு மரியாதை செய்யும் கலாச்சாரம் நம்மை மகிழச் செய்யும்தானே! 


பராகஸ் விடுதி



கரையோரப் பறவைகள்


சென்ற இடமெல்லாம் சிறப்பு


விடுதி அருங்காட்சியகத்தில்

க்வெட்சுவா மொழியில் பராகஸ் என்றால் மணல் மழை எனப் பொருள். கடலோரப்பகுதி என்பதால் வீசும் காற்றில் மண் எழுந்து மீண்டும் மழை போல விழுவதால் இந்தப் பெயர். அப்பொழுதே இந்தப் பகுதி பாலையாகத்தான் இருந்தது என்பதற்கு இது சான்று. பொயுமு 800ஆம் ஆண்டில் இருந்து பொயு 200ஆம் ஆண்டு வரை இங்கு பராகஸ் என்ற இனம் தழைத்தோங்கி இருந்தது. இவர்களின் நெசவுத் தொழில் மிகவும் நேர்த்தியானதாக இருந்தது. 


1820ஆம் ஆண்டு பெருவின் சுதந்திரத்திற்காகப் போராட வந்த சான் மார்ட்டின் இங்குள்ள கடற்கரையில்தான் கரையேறினார். அவர் தன்னுடன் ஆறு கப்பல்களைக் கொண்டு வந்திருந்தாராம். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியில் சுற்றுலாப் பயணம் வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதற்கேற்றாற்போல் பல விடுதிகள் கட்டப்பட்டன. சுற்றுலா இன்று இப்பகுதியின் முக்கிய தொழிலாக உள்ளது. 


மணற்மழை என்ற பெயர் கொண்ட இடத்தில் முதலில் செய்ய வேண்டியது மணல் விளையாட்டுகள்தான் என முடிவு செய்து பாலைவனத்தில் உள்ளே எங்களைக் கூட்டிச் சென்றார்கள். அங்கு பெரிய மணற்குன்றுகள்தாம். வேறு எதுவுமே இல்லை. அதற்காக வடிவமைக்கப்பட்ட ஊர்திகளில் எங்களை அமரச் செய்து கண்ணிலும் மூக்கிலும் மணல் நுழையாது இருக்க பிரத்யேகமாகச் செய்யப்பட்ட கண்ணாடிகளை அணிவித்தனர். பின்னர் அந்த வண்டிகளைப் பெருவேகத்தில் ஓட்டத் தொடங்கினர். இஷ்டம் போல வளைப்பதும், மேடுகளை ஏறுவதும் இறங்குவதும், ஒருவரை ஒருவர் முந்துவதுமாக தங்கள் வித்தைகளை முழுவதும் காட்டினர் அந்த ஓட்டுநர்கள். கடைசியாக ஒரு பெருங்குன்றின் உச்சியில் நிறுத்தி பனியில் சறுக்குவது போல ஒரு பலகையைக் கொண்டு நாங்கள் மண்ணில் சறுக்குவதற்கு உதவினர். இறங்குவதற்கு எளிதாக இருந்தாலும் அந்தப் பலகையைத் தூக்கிக் கொண்டு மீண்டும் மலையேறுவது கடினமாகத்தான் இருந்தது! இந்த மணல் விளையாட்டுகள் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவம்தான்.







அன்றிரவை விடுதியில் போக்கிவிட்டு அடுத்தநாள் நாங்கள் சென்றது பயேஸ்டாஸ் தீவுகளை (Islas Ballestas) நோக்கி. வட பயேஸ்டாஸ், மத்திய பயேஸ்டாஸ், தென் பயேஸ்டாஸ் என்ற மூன்று தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டம் பயேஸ்டாஸ் தீவுகள். இத்தீவுகளில் கரையேற விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மட்டுமே அனுமதி உண்டு. பொதுமக்கள் பராகஸ்ஸில் இருந்து படகு மூலம் இத்தீவுகள் சுற்றி வரலாம். இந்தத் தீவுகளில் வசிப்பவை ஏராளமான பறவைகள் மட்டும் கடல் சார்ந்த மிருகங்கள். கடல்நாய்கள், கடல் சிங்கங்கள், ஆமைகள், ப்ளெமிங்கோ, பெலிகன், கல், குவானோ என விதவிதமான மிருகங்களையும் பறவைகளையும் பார்க்க முடியும். ஹம்போல்ட் பென்குயின்கள் என்ற வகைப் பென்குயின்களைக்கூட இங்கு பார்க்கலாம். எதனால் இந்தச் செழிப்பு? 


பயேஸ்டாஸ் தீவு
புவியியல் பாடம் படித்தோம், வரலாற்றுப் பாடம் படித்தோம், கொஞ்சம் உயிரியல் பாடமும் படிப்போம். இதற்குக் காரணம் ஹம்போல்ட் பெருங்கடல் ஓட்டம் (Humboldt Ocean Current). தென் பசபிக் பெருங்கடலில் இருந்து குளிர்ந்த நீரை பூமத்திய ரேகை நோக்கி, தென்னமெரிக்காவின் மேற்குக் கடற்கரையை ஒட்டி இருக்கும் நீரோட்டம் இது. இப்பகுதியில் வெகுநாள் தங்கி ஆராய்ச்சி செய்த ஜெர்மன் விஞ்ஞானி அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் அவர்களின் பெயர் சூட்டப்பட்ட இந்த நீரோட்டம் பெரு நீரோட்டம் என்றும் அழைக்கப்பெறுகிறது. தெற்கில் இருந்து வரும் குளிர்ந்த நீரானது வடப்பகுதியில் இருக்கும் நீரின் சூட்டினை ஏழு முதல் எட்டு டிகிரி செல்ஷியஸ் வரை குளிர்வித்துவிடுகிறது. கடலின் அடிப்பகுதியில் இருக்கும் வளங்களை இந்த நீரோட்டம் மேலெடுத்து வருகின்றது. இதனால் சீலே, பெரு, ஈகுவேடார் நாடுகளின் கடலோரப்பகுதிகள் மிக வளமானவையாக இருக்கின்றன.  மீன்வளம் அதிகரிக்க அவற்றை உண்டு வாழும் மற்ற விலங்குகளும் இங்கு ஏராளமாக வாழ்கின்றன. எல் நீன்யோ காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் இந்த சூழலமைப்பு கெடுவதாகச் சொல்கிறார்கள். 


உயிரியல் பாடம் போதும். மீண்டும் வரலாற்றுப் பக்கம் செல்வோம். கடலின் நடுவே பாறைகள். பாறைகள் நிரம்பப் பறவைகள். பறந்து சென்று கடலில் மீன்களைப் பிடிக்க வேண்டியது, பாறையில் வைத்து உண்டு பின் இளைப்பாற வேண்டியது. இதுதான் இவற்றின் வேலை. இவை இடும் எச்சத்தால் அப்பாறைகளே வெள்ளையாக மாறிவிட்டன. இந்த எச்சத்தின் பெயர் குவானோ (Guano). இப்பாறைகளின் மேல் இருந்த எச்சம் 20 மீட்டர் முதல் 70 மீட்டர் உயரம் வரை இருந்ததாம். 


குவானோ - பறவை எச்சம்

இந்த எச்சம் நல்ல உரம் என்பதை இன்கா நாகரிக காலத்திலேயே கண்டு கொண்டனர். ஆனால் பொயு 1850 காலகட்டத்தில் பெருவின் அதிபராக இருந்த தளபதி ரமோன் காஸ்டியா இந்த எச்சத்திற்கான மதிப்பை உணர்ந்து, வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு விற்கத் தொடங்கினார். அன்றைய பெருவின் பொருளாதாரத்தை கிடுகிடுவென உயர்த்தியது இந்த பறவை எச்ச ஏற்றுமதி. பின்னர் இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு இப்பொழுது கடுமையான விதிகளுக்கு உட்பட்டு வருடத்திற்கு மூன்று மாதங்கள் மட்டுமே குவானோ சேகரிப்பு நடைபெறுகிறது. 


பறவைகளின் கூச்சலையும் பென்குயின்களில் தளிர்நடையையும் கடலின் ஆட்டத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். உயிரியல் ரசிகர்களுக்கு அருமையான இடம் இந்தப் பயேஸ்டாஸ் தீவுகள்.









பராகஸில் இருந்து பயேஸ்டாஸ் தீவுகளை நோக்கிச் செல்லும் பொழுது பாறைகளில் வரையப் பட்ட ஒரு பெரும் சித்திரத்தைப் பார்க்க முடிகிறது. பராகஸ் கேண்டலப்ரா (Paracas Candelabra) என்று அழைக்கப்படும் இந்தச் சித்திரம் பாறைகளில் இரண்டு அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டுள்ளது. இச்சித்திரத்தின் உயரம் கிட்டத்தட்ட 600 அடி. யாரால் வரையப்பட்டது, எப்பொழுது வரையப்பட்டது என்பது பற்றி எந்தவித தீர்மானத்திற்கும் ஆராய்ச்சியாளர்களால் வரமுடியவில்லை. ஆனால் நவீன நாகரிகத்திற்கு முன்பாக எப்படி இவ்வளவு பெரிய சித்திரத்தை பாறைகளில் வடிவமைத்திருக்க முடியும் என்று பார்த்தால் ஆச்சரியம்தான். 


பராகஸ் கேண்டலப்ரா

இன்று படகில் இருந்து பார்த்தது ஒரு விதம் என்றால் நாளை நாம் பார்க்கப் போவது ஒரு விமானத்தில் ஏறி வானில் இருந்து…. 


பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன -  பராகஸ் புகைப்படங்கள் 





Thursday, January 04, 2024

பெரு(ம்) பயணம் - 4

பெருவின் தலைநகரம் லீமா. வெளிநாட்டுப் பயணிகள் பெரும்பாலும் தங்கள் பெரு பயணத்தைத் தொடங்குவது இங்குதான். நாங்களும் அப்படித்தான். ஆஸ்டினில் இருந்து பனமாவில் இருக்கும் பனாமா சிட்டிக்கு வந்து பின் அங்கிருந்து லீமாவுக்கு அடுத்த விமானம். வீட்டிலிருந்து கிளம்பி விடுதிக்கு வந்து சேர கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேரப் பயணம். 


லீமாவில் எங்கள் விமானம் தரையிறங்கும் பொழுது இரவு இரண்டு மணி இருக்கும். குடியுரிமைச் சோதனை முடித்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்த எங்களை வரவேற்றார் எங்கள் முகவர். விமானநிலையத்தில் இருந்து சுமார் ஒரு மணி நேரத் தொலைவில் இருந்தது எங்கள் விடுதி. பயணத்தின் பெரும்பகுதி ஒரு புறம் கடலும் மறுபுறம் குன்றுகளும் இருந்த அழகான சாலை. அந்த நேரத்திலும் எங்கு பார்த்தாலும் ஆள் நடமாட்டம். கடற்கரைகளில் அமர்ந்திருந்தார்கள், தெருவோரம் உலாவிக் கொண்டிருந்தார்கள். விடுமுறைக் காலம் என்பதால் இப்படியா எனக் கேட்டதற்கு முகவர் எப்பொழுதும் இப்படித்தான். நீங்கள் எல்லாம் நியூயார்க்கைத் தூங்கா நகரம் என்பீர்கள் ஆனால் உண்மையான தூங்கா நகரம் லீமாதான் என்றார். அவரிடம் எங்களுக்கெல்லாம் மதுரைதான் தூங்கா நகரம் எனச் சொல்லவில்லை. உள்ளூர்க்காரர்கள் போலல்லாது, விடுதிக்குச் சென்ற உடனே பயணம் செய்த களைப்பில் நாங்கள் தூங்கிவிட்டோம்.

லீமா முரண்களால் ஆன ஒரு நகரம். 

நாம் முன்பு பார்த்த கோஸ்டா பகுதியில் அமைந்துள்ளது. பாலை நிலம் ஆனால் கிலோன், ரிமாக், லூரின் என மூன்று நதிகளின் முகத்துவாரங்கள் அமைந்துள்ள பகுதி. அதனால் தண்ணீருக்குத் தட்டுப்பாடு இல்லை. 


பூமத்திய ரேகைக்கு அருகே அமைந்துள்ள நகரம். கடல் மட்டத்தில் அமைந்திருக்கும் நகரம். ஆனால் சென்னை போல வெப்பமும் வேர்வையும் இல்லை. அதிகக் குளிரும் இல்லாத மிதமானத் தட்பநிலை. நகரம் கடல்மட்டத்தில் இருந்தாலும் ஐயாயிரம் அடி உயரம் வரை இருக்கும் குன்றுகள் சூழ்ந்த நகரம். 


ஒரு புறம் செல்வச் செழிப்போடு மிளிரும் நவீன மிராப்ளோரெஸ் பகுதி, மறுபுறம் பழமை குலையாது பாதுகாக்கப்படும் தொன்மையான வரலாற்று வட்டாரம், இவைதாண்டி அடிப்படை வசதிகளுக்குக் கூடப் போராட வேண்டிய நிலையில் இருக்கும் புறநகர்ப் பகுதிகள் என இந்நகரத்திற்குத்தான் எத்தனை முகங்கள். 



நாங்கள் தங்கி இருந்த இடம் மிராப்ளோரெஸ் பகுதி. கடலோரத்தில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்த பகுதி. உயர்தர விடுதிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் என சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்குத் தேவையான அனைத்தும் கொண்ட இடம். இங்கிருந்து சிறிது தொலைவில் உள்ளது காதல் பூங்கா. லீமா கடற்கரையை மேலிருந்து பார்க்கும்படியான அமைப்பு. இங்கு அமர்ந்து சூரிய அஸ்தமானத்தைப் பார்க்க கூட்டம் அலைமோதுகிறது. தங்கள் பெயர்களை எழுதிய பூட்டை இங்குள்ள கிராதிகளில் மாட்டிவிட்டால் பிரியாது இருப்போம் என்ற நம்பிக்கை கொண்ட ஜோடிகள் ஆயிரக்கணக்கான பூட்டுகளை மாட்டி இருக்கிறார்கள். இந்தப் பூங்காவின் அருகில் பாராகிளைடிங் எனப்படும் சாகச விளையாட்டுக்கான இடமும் உள்ளது. 




லீமா நகரை நிர்மாணித்தது பிஸாரோ என முன்பே பார்த்தோம். அப்பொழுது அவர் நிர்மாணித்த நகரம் இன்றைய லீமாவில் ஒரு சிறு பகுதி. மன்னர்களின் நகரம் (Ciudad de los Reyes) என்ற பெயரை அவர் இந்நகரத்திற்கு அளித்தார். ஆனால் பொது வழக்கில் இன்று வரை நீடித்திருக்கும் பெயர் லீமாதான். இந்த ரிமாக் நதியின் பெயர்தான் லீமா என்று மருவியதாகச் சொல்கிறார்கள் அதே சமயம் இங்கிருந்த நிமித்தக்காரர்கள் கோவில் ஒன்றின் பெயர் க்வெட்சுவா மொழியில் லிமாக் (பேசுபவர்) என்று வழங்கப்பட்டதாகவும் அதுவே லீமா எனத் திரிந்ததாகவும் கூடச் சொல்கிறார்கள். 


கப்பல்கள் வந்து போகத் தோதாக இருக்க வேண்டும், அதே சமயம் தாக்குதல்களைத் தவிர்க்கப் பாதுகாப்பான இடமாகவும் இருக்க வேண்டும். வளமான நிலம் கொண்ட, மிதமான தட்பவெப்ப நிலை கொண்ட பகுதியாகவும் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்தான் லீமா. முதலில் குடியேறிய பகுதியை அந்த பழமை மாறாமல் வைத்துள்ளார்கள். யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியத் தலம் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்தப் பகுதி. 


தேவாலயங்கள், அரசு அலுவலகங்கள், அதிபர் மாளிகை, மாநகராட்சி அலுவலகங்கள், பேராயரின் அரண்மனை எல்லாம் அமைந்துள்ள இப்பகுதி பெருஞ்சதுக்கம் என அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டடங்களில் உள்ள அழகான மாடங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. விடுமுறைக்காலம் என்பதால் கோலாகலமாக இருந்தது. அத்தனை கூட்டம் இருந்தாலும் குப்பைகளே இல்லாத சுத்தம் கண்ணைப் பறித்தது. அத்தனை செல்வம் இருந்தாலும் பழங்குடியினர் பலர் கையேந்தி நின்றது மனத்தைக் குத்தியது. 


மர மாடங்கள்

அதிபர் மாளிகை

பெருஞ்சதுக்கம்

விழாக்கால கோலாகலம்

தேவாலய முகப்பு

இங்குள்ள சான்பிரான்ஸிஸ்கோ பேராலயம் கண்களுக்கு ஒரு விருந்து. அருமையான வேலைப்பாடு, மிக அழகான குவிமாடம் (Dome), கலைப்பொருட்கள், பிரம்மாண்டமான ஆர்கன் (Organ), சேர்ந்திசை மண்டபம், மரப்படிகள் கொண்ட பல அடுக்குகள் கொண்ட பழங்கால நூலகம் என்று பார்க்கும் இடம் எல்லாம் பிரமிக்கச் செய்யும்படி இருந்தது. இங்கு படங்கள் எடுப்பது தடை செய்யப்பட்டிருப்பதால் படங்கள் ஏதும் இல்லை. 


இத்தனை அழகையும் காண்பித்துவிட்டு பின் தரைமட்டத்திற்குக் கீழ் உள்ள தளத்திற்குக் கூட்டிச் சென்றனர். அங்கு நாங்கள் கண்டது கேட்டகோம்ஸ் (Catacombs). இறந்தவர்களைப் புதைக்கும் பிணவறைகள். அருட்பெற்ற இடங்களில் புதைக்கப்பட்டால் சொர்க்கம் நிச்சயம் என்ற நம்பிக்கையால் இப்படி தேவாலயத்தின் கீழ் புதைக்கப்படுவது வழக்கமாக இருந்ததாம். இருபத்தி ஐந்தாயிரம் உடல்களாவது புதைக்கப்பட்டு இருக்கும் என்கின்றனர். தனி மாடங்களில் புதைக்கப்பட்ட உடல்கள், கிணறு போன்ற அமைப்பில் மொத்தமாகப் புதைக்கப்பட்ட உடல்கள் எனப் பார்க்க முடிந்தது. 


பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பொதுமக்களின் உடல்கள் புதைக்கப்படுவது தடை செய்யப்பட்டுவிட்டாலும் இறைப்பணியில் இருந்தவர்களின் உடல்கள் மட்டும் இன்னமும் இங்கு புதைக்கப்படுவதற்கு அனுமதி இருக்கிறது. நாங்கள் சென்ற பொழுது, அப்படி ஒருவரின் உடல் குழிகளில் இறக்கப்படுவதைப் பார்த்தோம். 


பேராலய முகப்பு

லீமா என்ற நகரம் 1535ஆம் ஆண்டு பிஸாரோவால் நிர்மாணிக்கப்பட்டாலும் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பெருவின் பழங்குடியினரால் குடியேறப்பட்ட இடம்தான். இதற்குச் சான்றாக இருப்பது வ்வாக்கா புக்கியானா (Huaca Pucllana).


20ஆம் நூற்றாண்டின் கடைசி தசாப்தங்கள். மிராப்ளோரேஸ் பகுதி செல்வந்தர்களுக்கான பகுதியாக நிலைப்பெற்றுக் கொண்டு இருக்கின்றன நேரம். கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. புதிய கட்டடம் ஒன்றிற்காக அங்கிருந்த மணற்குன்றினைத் தரைமட்டமாக்கத் தொடங்கினர். அப்பொழுது அவர்கள் கண்ணில் பட்டது புதைத்திருந்த களிமண் செங்கல்கள். விஷயம் தெரிந்த அரசு அந்நிலத்தைக் கைப்பற்றி அகழ்வாராய்ச்சி துறையிடம் தந்தது. அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது அங்கிருந்த ஏழடுக்குப் பிரமிட். 


பொயு 200 முதல் 700 வரை இந்தப் பகுதியில் வாழ்ந்த லீமா இனத்தவரால் முதலில் கோவிலாகக் கட்டப்பட்டது இந்தப் பிரமிட். இங்குள்ள பலிபீடங்கள் அதற்குச் சான்றுகள். கையால் உருவாக்கப்பட்டு, வெயிலில் காய வைக்கப்பட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது இந்தப் பிரமிட். செங்கற்களை செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்ட வாக்கில் இந்தப் பிரமிட் கட்டப்பட்டதால் இதற்கு நூலக கட்டுமான முறை என்ற பெயர் வழங்கப்பட்டது. அதிலும் சில செங்கற்களுக்கு இடையே இடம் விட்டு கட்டப்பட்ட முறை இந்தப் பிரமிட் நிலநடுக்கங்களால் பாதிப்பு ஏற்படாமல் செய்கிறது. ஒரு புறம் கடலையும் மறுபுறம் மலைகளையும் பார்க்கும் படி கட்டப்பட்டு இருப்பதற்குக் காரணம் இவர்கள் கடலையும் மலைகளையும் கடவுளாகக் கருதியதால்தான். 


இவர்களைத் தொடர்ந்து வந்த வாரி, இச்மா இனத்தினர் இந்த இடத்தை கல்லறையாகப் பயன்படுத்தியுள்ளனர். இவர்களின் முதுமக்கள் தாழிகள் மேலடுக்குகளில் காணப்படுகின்றன. இன்றும் இப்பகுதியில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுற்றிலும் நவீன கட்டடங்கள் சூழ்ந்திருக்கும் இந்தப் பழமையான இடம் கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். 


பிரமிட்

பழமையும் புதுமையும்

நூலகக் கட்டுமானம்

மண்பாண்டங்கள்

முதுமக்கள் தாழி

தெரிவதும் மறைந்திருப்பதும்

லீமாவில் இன்னும் பார்க்கப் பல இடங்கள் இருந்தாலும் எல்லாப் பெருநகரங்கள் போலத்தான் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. நாளை லீமாவை விடுத்து தென் திசை செல்வோம்.


அது வரை... 


பெருவின் தேசிய பானம் - பிஸ்கோ சவர் (Pisco Sour)


பிகு: புகைப்படங்கள் எல்லாம் நம் கைவண்ணம்தான். மேலும் பலப் புகைப்படங்கள் இத்தளத்தில் உள்ளன - லீமா புகைப்படங்கள் 


Wednesday, January 03, 2024

பெரு(ம்) பயணம் - 3

 பொயு 1526

பெயர் புகழ் செல்வம் தேடி வந்த பிரான்ஸிஸ்கோ பிஸாரோ தென்னமெரிக்காவில் கால் பதித்தார்.

 

இன்கா நாகரிகம் தனது உச்சத்தில் இருந்த நேரம். தற்போதைய ஈகுவேடாரில் தொடங்கி சீலே வரை பரந்திருந்த நாடு. சுமார் 700,000 சதுர மைல்களில் ஒன்றேகால் கோடி மக்கள் வசித்து வந்தனர். சமாதானப் பேச்சுகள் மூலமாகவும் போர் தொடுத்தும் பல குழுக்களை இணைத்து தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருந்தார் இன்கா பேரரசர் வ்வொய்னா கபக் (Huayna Capac). காடு மலைகள் வழியாக இவர்கள் அமைத்த சாலைகளின் தூரம் மட்டுமே 15,000 மைல்கள். இவற்றின் பல பகுதிகளை இன்றும் பார்க்கலாம். விவசாயம், நெசவு, மண்பாண்டங்கள், பீங்கான் என்று எல்லாத் தொழில்கள் சிறப்பாகச் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. அரண்மனைகளிலும் கோயில்களிலும் தங்கமும் வெள்ளியும் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. 


இவற்றைக் கைப்பற்ற நினைத்தார் பிஸாரோ. ஆனால் தானாகச் செய்வதை விட ஸ்பானிஷ் அரசரின் உத்தரவைப் பெற்றோமானால் இந்த நிலத்திற்கு தான் ஆளுநர் ஆகிவிடலாம் என்று எண்ணி அரசரின் உத்தரவை எதிர்நோக்கி ஸ்பெயினுக்குத் திரும்பிச் சென்றார். 


அதே சமயம் பேரரசர் கபக்கும் அவரது பட்டத்து இளவரசனும் ஒரே சமயத்தில் இறந்தார்கள். பிஸாரோ குழுவினர் மூலம் ஐரோப்பாவில் இருந்து தென்னமெரிக்கா வந்த அம்மை நோயினால் அவர்கள் மறைந்தார்கள் என எண்ணப்படுகிறது. கபக்கின் மகன்களான வ்வாஸ்கார் (Huascar), அதவுஅல்பா (Atahualpa) அரசாட்சியைப் பிடிக்க தங்களுக்குள்ளே அடித்துக் கொள்ளத் தொடங்கினர். இந்தச் சண்டை இனப்போராக மாறியது. இன்கா நாகரிகம் ஆட்டம் காணத் தொடங்கியது. இறுதியாக அதவுஅல்பா அரியணையைக் கைப்பற்றினான். ஆனால் இந்த இனப்போரினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். அந்தப் பகுதியின் பொருளாதாரமும் நிலை குலைந்து போனது. 


பொயு 1532


இந்தச் சமயத்தில்தான் பிஸாரோ, தென்னமெரிக்காவை ஸ்பெயின் காலனி ஆக்க  ஸ்பெயின் அரசரின் அனுமதி பெற்று மீண்டும் வந்தார். அப்பொழுது அவருக்கு வயது 54. தன்னுடன் 168 வீரர்களையும் 37 குதிரைகளை மட்டுமே கொண்டு வந்திருந்தார். 


மன்னர் அதவுஅல்பாவை சந்தித்து ஸ்பெயின் மன்னருக்குக் கீழ்படிய வேண்டும், கத்தோலிக்க மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொன்னார். மொழிப் பிரச்னையோ அல்லது மதம் மாறுவதில் விருப்பம் இல்லாததாலோ பேச்சுவார்த்தை தோல்வியடைந்து சண்டை தொடங்கியது.



இன்கா இனத்தினர் பெரும்பாலும் ஈட்டி, வேல், தடி போன்ற ஆயுதங்களைக் கொண்டு நெருக்கமாக இருந்து சண்டையிடுவர். ஆனால் ஸ்பானியர்களோ இரும்புக் கத்தி, துப்பாக்கிகள் கொண்டு தள்ளி இருந்து தாக்கும் திறன் கொண்டிருந்தனர். அந்த ஆயுதங்களைச் சமாளிக்கும் வழி இன்காவினருக்கு இல்லை. அது மட்டுமல்லாது தென்னமெரிக்காவில் குதிரைகள் கிடையாது. இவர்கள் கொண்டு வந்திருந்த குதிரைகள் போர்களத்தில் சுற்றிச் சுழல அதற்கு பதில் இல்லாமல் தவித்தார்கள் இன்காவினர். 


தன் ஆட்களில் ஒருவர் கூட பலியாகாமல் கிட்டத்தட்ட ஏழாயிரம் இன்காவினரைக் கொன்று குவித்து மன்னர் அதவுஅல்பாவையும் கடத்திச் சென்றார் பிஸாரோ. அதவுஅல்பாவைக் கொன்று தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னரைக் கொண்டு சில காலம் பொம்மை அரசினை நடத்தினார். தொடர்ந்து எதிர்ப்புகள் இருந்தாலும் ஸ்பானியர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. பொயு 1572ஆம் ஆண்டு கடைசி இன்கா மன்னராக இருந்த டுபக் அமருவைக் கொன்று இன்கா நாகரிகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிஸாரோ. 


லீமா என்ற நகரை நிர்மாணித்து அங்கிருந்து பெருவை ஸ்பெயினின் காலனியாக அறிவித்து ஆட்சியும் செய்தார். இன்கா நாகரிகத்தின் எச்சத்தை பெருமளவு அழித்து அவர்கள் கலாச்சாரத்தையே இல்லாமல் செய்தார்கள். அரண்மனைகளும் கோயில்களும் அழிக்கப்பட்டன. கத்தோலிக்க தேவாலயங்கள் பழைய கோவில்களின் மேலேயே கட்டப்பட்டன. கடுமையான வரி விதிப்புகள் செய்யப்பட்டன. உள்ளூர் ஆட்கள் அடிமையாகவே ஆனர். 


அடுத்த முந்நூறு வருடங்களுக்கு ஸ்பானியர்கள் ஆட்சி. விவசாயம் தொடர்ந்து நடந்தாலும் இயற்கை வளங்களை எப்படி எல்லாம் வழித்தெடுக்கலாமோ அதற்கெல்லா வழிவகைகளையும் செய்தனர். வெள்ளி, தங்கம், பாதரசம் என ஏராளமான வளங்கள் சுரண்டி எடுக்கப்பட்டன. நாட்டின் பிற பகுதிகளைப் பற்றி கவலைப்படாமல் லீமாவை மட்டுமே செல்வச் செழிப்பாக்கினர். உள்ளூர் மக்கள் பட்ட துயரங்கள் கணக்கிலடங்கா. 


உலகின் மற்ற பகுதிகளில் நடந்ததைப் போலவே பெருவிலும் ஸ்பானியர்களுக்கு எதிரான குரல்கள் எழத் தொடங்கின. சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. ஆர்ஜண்டீனாவின் ஹோசே டி சான் மார்ட்டின் ஆர்ஜண்டீனா, சீலே நாடுகளின் சுதந்திரத்திற்காகப் போராடிவிட்டு ஸ்பானியர்களை தென்னமெரிக்காவில் இருந்தே விரட்ட பெருவில் சண்டையிடத் தொடங்கினார். பொயூ 1821ஆம் ஆண்டு லீமாவில் நுழைந்து பெருவின் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினாலும் அவரால் முழு வெற்றியைப் பெற முடியவில்லை. அதற்காக அவர் வெனிசுவேலாவின் சிமோன் பொலிவாரின் துணையை வேண்டினார். முதலில் தயங்கிய பொலிவார் பின்னர் இணைந்து பெருவின் சுதந்திரத்தை உறுதி செய்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட உடன்படிக்கைப்படி மார்ட்டின் பெருவிலிருந்து வெளியேறினார். பொலிவார் பெருவின் அதிபரானார். 


ஸ்பானியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தாலும் பெருவிற்கு விடிவு காலம் வரவில்லை. காலனி நாட்டிலிருந்து தன்னாட்சியாக மாறுவதில் பெரும் குழப்பங்கள் விழைந்தன. 1826ஆம் ஆண்டு பொலிவார் பெருவில் இருந்து வெளியேறினார். அவர் விட்டுச் சென்ற இடத்தை பிடித்துக் கொண்டனர் ராணுவத்தினர். பல தளபதிகள் பதவியைப் பிடித்தாலும் பிடிக்கப் போட்டியிட்டாலும் அவர்களால் சாதிக்க முடிந்தது அதிகமில்லை. 1845ஆம் ஆண்டு ஜெனரல் ரமோன் காஸ்டியா அதிபரானார். இவர் நாட்டின் செல்வத்தைப் பெருக்க கையில் எடுத்தது பறவை எச்சம். இது குறித்துப் பின்னர் பார்ப்போம். இந்த சமயத்தில் விவசாயத்திற்கும் மற்ற துறைகளிலும் ஆள்கள் தேவை இருந்ததால் சீனாவில் இருந்தும் ஜப்பானில் இருந்தும் வந்து குடியேறினர். இவர்களில் ஒருவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஊழல் குற்றச்சாட்டுகளால் நாட்டை விட்டே விரட்டப்பட்டதும் பின்னாள் வரலாறு.


அக்கம்பக்கத்து நாடுகளோடு சிறு உரசல்கள் சில போர்கள் அதிகாரத்திற்கான தொடர் போட்டி என்று பெரு தத்தளித்துக் கொண்டுதான் இருந்தது. பல சர்வாதிகாரிகள் வந்தார்கள். சில நன்மைகளும் நடந்தன. சமயங்களில் தேர்தல் நடந்தது. ஆட்சி மீண்டும் ராணுவத்தின் கைகளுக்குச் சென்றது. இதனால் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. ஒளிரும் பாதை (Shining Path) போன்ற கொரில்லா இயக்கங்களால் வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. 


இருநூறு ஆண்டுகளாக இப்படித்தான் ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது பெருவில். பெருந்தொற்றினால் பொருளாதாரம் சரிந்த நிலையில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தார் பெட்ரோ காஸ்டியா. ஆனால் இவர் மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட, பெரும் கலவரங்களுக்கு நடுவே, 2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தனது பதவியை ராஜினமா செய்தார். இங்குதான் எங்கள் பயணம் தடைபட்டது. 


காஸ்டியாவைத் தொடர்ந்து அதிபரானது அவரது துணை அதிபர் டினா பொலுவார்டே. பெருவின் முதல் பெண் அதிபர் இவர். ஆனால் இவர் ராஜினமா செய்ய வேண்டும், புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனப் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. இந்தப் போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் நிலைமையை மேலும் கொந்தளிக்கச் செய்தன. 


கடந்த ஆறு ஆண்டுகளில் ஏழாவது அதிபர் டினா என்றால் அங்கு எப்பேர்ப்பட்ட நிலையாமை இருக்கிறது எனப் புரியும். அரசியலைத் தாண்டி நோக்கினோமானால், வளர்ச்சி லீமாவைச் சுற்றியே இருக்கிறது சியரா செல்வா பகுதிகளை அரசாங்கம் கண்டு கொள்வதில்லை. லீமா பகுதியில் பெரும்பாலும் ஸ்பானிஷ் பேசுபவர்கள். ஆனால் மற்ற பகுதிகளில் க்வெட்சுவா, அய்மரா போன்ற மொழிகளைப் பேசுபவர்கள் அதிகம். இந்தப் பகுதிகளில்தான் போராட்டம் அதிகம் நடைபெற்றது. நாம் இந்தியாவில் பார்க்கும் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது அல்லது இந்தி மொழி பேசுபவர்களுக்கும் பேசாதவர்களுக்கும் இடையே ஆன உரசல் என ஒப்பு நோக்க முடிகிறது. இந்தியாவின் நிலையான அரசு அமைப்பு ஒரு முக்கிய வித்தியாசமாகப் படுகிறது. 


இன்று வெளியில் இயல்பு நிலை இருப்பது போலக் காணப்பட்டாலும் நீறு பூத்த நெருப்பாகவே தோன்றுகிறது பெருவின் நிலைமை. இப்படி அரசியல் நிலையாமை, கலவரங்கள் என்று பேசினாலும் வாழ்க்கையை நடத்தத்தானே வேண்டும். பெரு எப்படி இருக்கிறது? லீமாவிற்குப் போகலாம்.


பிகு: படங்கள் இணையத்தில் எடுக்கப்பட்டவை.






Tuesday, January 02, 2024

பெரு(ம்) பயணம் - 2

பெருவின் வரலாறு என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது இன்கா நாகரிகமும் மாச்சு பிச்சுவும்தான். ஆனால் அதன் வரலாறு மிகத் தொன்மையானது. ஏறத்தாழ இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் இங்கு வாழத் தொடங்கியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இன்கா நாகரிகத்திற்கு முன்னர் சேவின் (Chavin), பராகஸ் (Paracas), நாஸ்கா (Nasca), வாரி (Wari), மோச்சி (Moche) எனப் பல நாகரிகங்கள் தொடர்ச்சியாக இருந்து வந்ததற்கான சான்றுகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. 

ஆசியாவில் இருந்து வட அமெரிக்கா வழியாக தென் அமெரிக்காவிற்கு மனிதர்கள் வந்திருக்க வேண்டும் என யூகிக்கின்றனர் விஞ்ஞானிகள். முதலில் வடக்கு மற்றும் மத்திய கடலோரப் பகுதிகளில்தான் இவர்கள் வாழத் தொடங்கினர். ஆயகுச்சோ (Ayacucho) பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பிக்கிமாச்சே (Pikimachay) குகைகளில் கிடைத்த பழமையான கல் கருவிகள் மற்றும் இதர பொருட்களை ஆராய்ந்து அங்கு மக்கள் பொயுமு 12,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் இது குறித்த தீர்மானமான முடிவுகள் இதுவரை வரவில்லை. இது வரை கிடைத்துள்ள மனித உடல் பகுதிகளின் வயது பொயுமு 7000 ஆண்டுகள் என நிர்ணயித்துள்ளார்கள். இதே கால அளவில் குகை ஓவியங்களும் கிடைத்துள்ளன.

கரால் (Caral) என்ற இடத்தில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு முழுமையான நகரம் நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகக் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டு இருக்கிறது. இருபதாயிரம் பேர் வரை இந்நகரத்தில் வசித்திருக்கலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மக்கள் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென இந்நகரம் கைவிடப்பட்டு இருக்கிறது. அதற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை. பூகம்பம் அல்லது காலநிலை மாற்றம் காரணமாக மக்கள் இந்நகரைக் கைவிட்டு வேறிடம் சென்றிருக்கலாம் எனக் கருதுகின்றனர். 




இதற்குப் பின் தோன்றிய முக்கியமான நாகரிகங்களைப் பற்றி பார்க்கலாம். 


சேவின் (1200 - 400 பொயுமு): மத்திய பெருவில் தோன்றிய இந்த நாகரிகம்தான் மூத்த நாகரிகமாகக் கருதப்படுகிறது. இவர்கள் அமைதியான இனத்தவராகத் திகழ்ந்தார்கள். போர்கள் புரிந்ததாகத் தெரியவில்லை. மண்பாண்டங்கள், நெசவு மற்றும் கல் வேலைகள் செய்வதில் திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. இவர்கள் கட்டடக்கலையில் சிறந்து விளங்கினார்கள். இன்றும் இவர்களின் கோயில் ஒன்றினை வ்வாரெஸ் (Huaraz) என்ற ஊரின் அருகே பார்க்கலாம். 


பராகஸ் (700 பொயுமு - 200 பொயு): தென்கடலோரப் பகுதிகள் வாழ்ந்தவர்கள் இவர்கள். பண்டைகால நாகரிகங்களில் இவர்கள் நெசவு செய்த துணிகள்தான் மிக நேர்த்தியானவை எனச் சொல்லலாம். அது மட்டுமில்லாமல் கிடைத்த சில மண்டை ஓடுகளை வைத்துப் பார்க்கும் பொழுது தலையில் ஓட்டை போட்டு எதோ சிகிச்சையும் செய்திருக்கிறார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 


மோச்சி (200 - 1100 பொயு): வட கடலோரப் பள்ளத்தாக்குகளில் வாழ்ந்த இவர்கள்தான் முதல் நகர்புற நாகரிகம் எனச் சொல்லலாம். அக்கம்பக்கம் இருந்த சிறுகுழுக்கள் மேல் போர் தொடுத்து தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவாக்கியவர்கள் இவர்கள். சூரியனுக்கும் நிலவுக்கும் இவர்கள் எழுப்பிய கோயில்கள் அந்நாளில் மனிதர்களால் கட்டப்பட்ட பெரும் கட்டடங்களாகத் திகழ்ந்தன. இவர்களின் கல்லறைகளில் கிடைத்த பொருட்கள் மூலம் அரசர்கள், செல்வந்தர்கள், போர் வீரர்கள், பொது மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று நன்றாகத் தெரிய வருகிறது. 


நாஸ்கா (300 - 800 பொயு): பராகஸ் அருகே அமைந்த நாகரிகம் இது. இவர்களின் பொறியாளர்களின் திறன் வியக்க வைப்பது. பாலை நிலைத்தில் நிலத்தடியில் கால்வாய்கள் அமைத்து தண்ணீரைக் கொண்டு வந்து விவசாயம் செய்திருக்கிறார்கள். அதே போல நாஸ்கா கோடுகள் என்ற வியக்கத்தக்க ஓவியங்களையும் படைத்துள்ளனர். அவற்றை நாம் பின்னர் பார்ப்போம். 


வாரி (600 - 1100 பொயு): ஆண்டிஸ் மலைத்தொடரில் ஆரம்பித்த நாகரிகம் இது. போர் செய்து தம் எல்லைகளை விரிவடையச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்தவர்கள். அவர்களின் உச்சத்தில் அவர்களது எல்லை இன்றைய சீலேவில் இருந்து பொலிவியா வரை இருந்தது. மலைப்பகுதிகளில் படிகள் போலச் செய்து அதில் விவசாயம் செய்யும் முறையினை இவர்கள் திறம்படச் செய்தனர். 


இவர்கள் தவிர சிமு (Chimu), சசபோயாஸ் (Chachapoyas), இகா (Ica) இன்னும் பல நாகரிகங்கள் இந்தச் சமயத்தில் பெருவின் பல பகுதிகளில் தழைத்தன. இவர்களுக்கு பின் வந்தவர்கள்தாம் இன்கா. 


இன்கா (1200 - 1532 பொயு): பெரு என்றாலே இன்கா என்ற அளவுக்கு இவர்களின் தாக்கம் இன்னமும் இருக்கிறது.  மாச்சு பிச்சு மட்டுமின்றி நாடு முழுவதும் இவர்களது கோயில்களும் அரண்மனைகளும் நிறைந்து கிடக்கின்றன. இவர்களது உச்சம் ஒரு நூற்றாண்டுதான் என்றாலும் இவர்களது நாட்டின் எல்லைகள் தற்கால கொலம்பியாவில் இருந்து சீலே வரை நீண்டு இருந்தன. சுமார் 3500 மைல்கள். மாச்சு பிச்சு போகும் பொழுது இவர்களின் திறமைகள், கடவுள்கள், பழக்க வழக்கங்கள் பற்றி எல்லாம் விரிவாகப் பார்க்கலாம்.




இப்பேர்பட்ட நாகரிகம் எதனால் வீழ்ந்தது? வழக்கம் போல ஐரோப்பியர்களின் காலனியாதிக்கம்தான். ஸ்பெயினில் இருந்து வந்தவர்கள் சதித் திட்டம் தீட்டியும் போர் செய்தும் இவர்கள் எல்லோரையும் இல்லாமல் செய்தார்கள். அவர்கள் கொண்டு வந்த தொற்றுநோய்களுக்கு இவர்கள் பலியானார்கள். பிரித்தாளும் சூழ்ச்சிக்குச் சோரம் போனார்கள்.


ஸ்பானிஷ் படைகள் பெருவை கைப்பற்றியதையும், அவர்களிடமிருந்து விடுதலை பெற்ற நவீன பெரு பற்றியும் இன்று அங்கிருக்கும் நிலை பற்றியும் அடுத்த பகுதியில் படிப்போம். அதற்குப் பின் பயணம்தான்.


பிகு: படங்கள் இணையத்தில் எடுக்கப்பட்டவை.