இரண்டு விஷயங்கள் பத்திப் பேசலாம்.
முதலில் இந்த மாதத்திலிருந்து பாண்டிச்சேரி புதுச்சேரி என அழைக்கப்படப் போகிறதாம். இந்த பெயர் மாற்றம் ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. வெள்ளைக்காரன் வாயில் நுழையாமல் மாற்றி வைத்த பேரை நாம் மாற்றுவது தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. பெரிய நகரங்களின் பெயர் மட்டும்தான் மாறுகிறதா? சிறிய ஊர்களின் பெயர்களும் மாற்றப் படுகின்றனவா? உதாரணமாக வத்திராயிருப்பின் பெயர் மாற்றப்பட்டுவிட்டதா? இப்படி மாற்றுவதற்கு என்ன செலவாகிறது? இதற்காக அங்கு இருக்கும் எல்லா அலுவலகங்களும் தங்கள் லெட்டர்ஹெட், விசிட்டிங் கார்ட் உட்பட எல்லாவற்றையும் மாற்ற நிர்பந்திக்கப் படுகின்றனரா? அதனால் விளையும் பொருள் சேதமென்ன? இந்த மாதிரி பெயர் மாற்றத்தினால பாதிக்கப் பட்ட யாராவது சொல்லுங்களேன்.
புதுச்சேரி கச்சேரி அப்படின்னு பேரு வெச்சாச்சு. அதான் புதுச்சேரி பத்தி பேச வேண்டியதாப் போச்சு. உண்மையில் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் ஏன் வலையுலகில் பேசப்படறது இல்லைன்னு அப்படின்னு தெரியலை. பேசலாமே அப்படின்னு சொல்லறவங்க எல்லாம் வாங்க, இப்போ பேசலாம்.
இன்னைக்கு அடுத்த டாபிக் கச்சேரி. இன்னிக்கு கூட யாரோ வலைப்பதிவர் இந்த வார்த்தையை நீதிமன்றம் என்ற பொருளில் உபயோகப்படுத்தியுள்ளதைப் படித்தேன். இதைப் பல பழைய திரைப்படங்களிலும் இந்த பொருள் வருமாறு உபயோகப்படுத்தியதையும் கவனித்துள்ளேன். கன்னடத்தில் கூட கச்சேரி என்றாம் நீதிமன்றம்தான் என நினைக்கிறேன். இந்த வார்த்தை எப்படி சங்கீத கச்சேரி என்ற பொருளில் வருமாறு மாறியது? யாராவது விளக்குங்களேன்.
கச்சேரி என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது நம்ம பெரியவர் எழுதிய ஒரு நகைச்சுவை கட்டுரைதான்.
நிலாச்சாரலில் வெளிவந்த அந்த கட்டுரையை அவர் அனுமதியுடன் இங்கு மீள்பதிவு செய்கிறேன். (இதெல்லாம் போடலையின்னா வலையுலகில் போராட்டம் நடக்குமாமே ...:) )
கச்சேரிக்கு கூட்டமும், காணாமல் போன எஸ்.என்.ஜெ.வும்
எனது நண்பர் எஸ்.என்.ஜெ. ஒரு கர்நாடக இசை வல்லுநர். (ஆமாம், இவங்க எல்லாருமே மூணு எழுத்துல ஒரு பேர் வச்சுக்கராங்களே, நம்ம சிந்து பைரவி ஜே.கே.பி. மாதிரி. அது ஏன்?) அவரிடம் பேசும்போது அடிக்கடி அவர் வருத்தப்படுவது கச்சேரிகளுக்கு இளைஞர்கள் வருவதேயில்லை, சரியான கூட்டம் இருப்பதில்லை என்பதுதான். நம்மைப் பற்றி தெரிந்தும் இப்படி சொல்லலாமோ? எடுத்துவிட்டேன் கூட்டம் சேர்க்கும் வழிகளை. இதோ வரேன்னு சொல்லிட்டு போனவர்தான். ஆளையே காணும். அப்படி என்னதான்யா சொன்னே என்று கேக்கறீங்களா. மேலே படியுங்கள். சாரி, கீழே படியுங்கள்.
என்ன செய்யணும் என்பதற்கு முன்னால் என்ன நடக்குதுன்னு பார்ப்போம். கச்சேரிக்கு என்று போனால், உள்ளே இருப்பது முக்கால்வாசி கிழங்கள்தான். அந்த வழுக்கைத் தலைகளையும், நரைத்த முடிகளையும் பார்த்தால், நமக்கும் வயசாகி விட்டதோ என்ற பயம்தான் வருகிறது. அதிலும் பாதி பேர் வீட்டில் மருமகள் பாடும் கோபப் பாட்டைக் கேட்க மனமில்லாமல் இங்கே வந்துவிட்டு மண்டையாட்டி ரசிப்பது போல் ஒரு குட்டி தூக்கம் போடும் வெரைட்டி. இவங்களைத்தாண்டி பார்வையை ஓட விட்டால், ராகம் பாடும் போது நெற்றி சுருக்கி, புருவத்தைத் தூக்கி, பின் கீர்த்தனை வரும் போது கர்நாடிக் கான்ஸர்ட் கைடில் அவசரம் அவசரமாய் ராகம் தேடும் கத்துக்குட்டிகள் ஒரு புறம். பட்டு புடவை சரசரக்க வந்து 'கோமதி மாமி பொண்ணு அமெரிக்கனை கல்யாணம் பண்ணிண்டுட்டாளாமே' என வம்படிக்கும் மாமிகள் மறுபுறம். நடு நடுவே ஒன்றும் புரியாவிட்டாலும், ஓரிடத்தில் அசையாமலிருந்து் எதையோ அனுபவிக்கும் குர்த்தா பைஜாமா வெள்ளைக்காரர்கள், கூடவே குங்கும நெற்றியும், கனகாம்பரமும், சல்வாருமாய் அவர்கள் சகதர்மிணிகள். இவர்களோடு இந்த சபாவில் பாடுவது யார் என்பதை விட காண்டீன் போடுவது யார் என்று ஆராய்ந்து வைத்துக் கொண்டு தனியாவர்த்தனத்தின் போது வெளிநடப்பு செய்து, பாடகர்களின் பிளட் பிரஷரை ஏத்தும் சாப்பாட்டு ராமர்கள். கடைசியாய், எனக்கு இவரைத் தெரியும் என்று அலட்டிக் கொள்ளவே வந்து, தப்பு தப்பாய் தாளம் போடும் பந்தா பார்ட்டிகள். இதுதான் கூட்டம்.
சரி இப்போ கச்சேரிக்கு வருவோம். வர்ணம், ஒரு பிள்ளையார் பாட்டு, ராக ஆலாபனையுடன் ஓரிரண்டு கீர்த்தனைகள், நிரவல், ஸ்வரப் பிரஸ்தாரங்கள், நடு நடுவே ஒரு வேகமான பாட்டு, தனி ஆவர்த்தனம், ராகம் - தானம் - பல்லவி (முடிந்தால்), துக்கடாக்கள், ஒரு தில்லானா, மங்களம் என ஒரு மாற்றமே இல்லாத ஒரு பழம் பாணி. இதில் 'சாருக்கு ஒரு காப்பி', என்பது போல் வரும் நேயர் விருப்ப சீட்டுகளும், அது தமிழில் வந்தால் படிக்கத் தெரியாமல் முழிக்கும் பாடகர்களும் ஒரு தனி காமெடி ட்ராக். சில இடங்களில் தமிழ்ப் பாட்டு, தமிழ்ப் பாட்டு என்ற ஏலம் வேறு தனியாக ஒரு பக்கம் நடக்கும். இவ்வளவுதான். அப்புறம் எங்கயிருந்தய்யா வரும் கூட்டம், அதுவும் இளைஞர் கூட்டம்?
சும்மா புதுசு புதுசா மாற்றங்கள் வேண்டாமோ? சாம்பிளுக்கு சிலது பார்ப்போம்.
- இனிமேல் பாடகர்கள் உட்கார்ந்து கொண்டு பாடக்கூடாது. சும்மா மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி நடனமாடிக் கொண்டே பாடவேண்டும். அதிலும் பாடகர்களும், பாடகிகளும் சேர்ந்து கும்பலாய்ப் பாடினால் இன்னும் விசேஷம். கூடவே துணைப்பாடகர்கள், பாடகிகள் எல்லாம் வெள்ளை கவுன் போட்டுக் கொண்டு பின்னாடி ஆடலாம்.
- அதிலும் ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறு உடை அணிந்து கொண்டு வந்தால் இண்டிரஸ்டிங்காய் இருக்கும். இதற்குத் தனியாய் ஸ்பான்ஸர்ஷிப் வேறு கிடைக்கும். பாடகிகள் அட்லீஸ்ட் ஒரு ஜன்னல் வைத்த ஜாக்கெட்டாவது போட்டுக் கொண்டு வர வேண்டும். அப்போதான் அதை பார்த்து காமெண்ட் அடிக்க ஒரு தாய்மார் கூட்டம் வரும்.
- ராகமாலிகை மாதிரி பாகவதர்மாலிகை என்று ஒரு முயற்சி செய்யலாம். ஒரே பாட்டை ஐந்தாறு பாகவதர்களைக் கொண்டு் பாட வைக்காலாம். அதிலும் ஹிந்திக்காரர்கள் இரண்டு பேர் வந்து முக்கி முக்கி பாடினால் நல்ல வரவேற்பு இருக்கும்.
- இரு பாடல்களுக்கு நடுவே ஒரு சேஞ்சுக்கு ஃபேஷன் ஷோ, மிஸ். கச்சேரி் என வெரைட்டி தரலாம்.
- ஸ்வரம் பாடும் போது நடுவில் கேட்பவர்களையும் பாடச் சொல்லி, கச்சேரியை இண்டராக்டிவாகச் செய்யலாம்.
- வயலின், மிருதங்கம், கஞ்சிரா என ஒவ்வொரு பாட்டுக்கும் வேறு வேறு ஆட்களை மேடைக்கு நடுவே கொண்டுவந்து வாய்பாட்டுக்காரரை ஒரு பக்கமாகத் தள்ளலாம். ஒரு வித்தியாசமாகவும் இருக்கும். சில பாடகிகள் மேல் ஸ்தாயியில் பாடும் போது, முகம் அஷ்டகோணலாய் போவதை பார்க்கவேண்டிய கட்டாயமும் இருக்காது.
- சும்மா 20 ரூபாய், 50 ரூபாய் என வெறும் டிக்கெட் போடாமல் தூங்குபவர்களுக்கு ஸ்பெஷலாய் பெர்த் டிக்கெட் குடுக்கலாம். அப்புறம் ஆர்.ஏ.சி., வெயிட்டிங் லிஸ்ட் என்று நல்ல பணம் பண்ணலாம். 65 வயதுக்கு மேலிருந்தால் லோயர் பர்த் கியாரண்டி எனப் புதுத் திட்டம் கொண்டு வரலாம். கூடவே, குறட்டை வித்துவான்களுக்கென, ஸவுண்ட் ப்ரூப் கம்பார்ட்மெண்ட் எல்லாம் போடலாம். நல்ல ஐடியாவாய் இருக்கும்.
- அப்படியே மெயின் ராகம் முடிஞ்சா மசால் தோசை, துக்கடா பாடும்போது பக்கோடா என்ற கணக்கில் முன்பே ஆர்டர் வாங்கி சீட்டுக்கு வந்து சப்ளை செய்தால் தனியாவர்தனத்தின் போது வாக்கவுட் செய்பவர்கள் இல்லாமல் செய்யலாம். புதுசா, செவிக்குணவு இருக்கும்போதே வயிற்றுக்கும் ஈயப்படும்ன்னு விளம்பரம் எல்லாம் கூட செய்யலாம்.
- புதிதாய் ஒரு பாட்டை பாட முயலுமுன் 'கர்நாடக சங்கீத உலகில் முதன்முறையாக' என்று அடிக்குரலிலோ ' சும்மா நச்சுனு இருக்கு இந்த பாட்டு' என்றோ விளம்பரம் செய்யலாம்.
- கச்சேரியின் இறுதியில் டிக்கெட்டை குலுக்கி போட்டு பரிசு தரலாம். கடைசி வரை கூட்டம் இருக்கும். கூடவே இன்றைய கச்சேரியின் மூன்றாவது பாடல் எந்த ராகம் என்ற ரேஞ்சில் கேள்விகள் கேட்டு ரகசிய புதையல் எல்லாம் குடுக்கலாம்.
- இன்னும் மங்களம் முதலில் என்று ஆரம்பித்து கடைசியாய் வர்ணம் பாடி முடிக்கலாம்.
- ரொம்ப முக்கியமான கச்சேரிகளுக்கு தலைக்கு 50 ரூபாய், பிரியாணி பொட்டலம் என ரேட் பேசி லாரி லாரியாய் ஆள் சேர்க்கலாம்.
முதல்ல இதெல்லாம் செஞ்சு பாருங்க. இதுக்கும் கூட்டம் வரலைன்னா திருப்பி வாங்க, இன்னும் கொஞ்சம் சொல்லறேன்னு சொன்னேன். என்ன தப்பா சொல்லிட்டேன்? ஏன் அப்போ போனவரை இன்னும் காணும்? நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்களேன்.