பல்லவி
ஏதய்யா கதி எனக்கேதய்யா கதி
ஏதய்யா கதி  எனக்கேதய்யா கதி அனுபல்லவி
மா தயாநிதி உமாபதி சுகுமார வரகுணநிதி
நீதான் அல்லேது வேறேதய்யா கதி 
 சரணம்
பேதை எனக்குன்னருள் காட்டாது
என்னோடேதைய்யா  விளையாட்டா
பூதல சலநாட்டா நின் தாள்தான் கதி
புகழ் கவி குஞ்சர தாசனுக்கேதய்யா  கதி
  ராகம் - சலநாட்டை              தாளம் - ஆதி
புனைந்தவர் - கோட்டீஸ்வர ஐயர்
பாடியவர் -  சஞ்சய் சுப்பிரமணியம்
 பாண்டேஜ் பாண்டியன், மயிலை மன்னாரு, பவுர்ணமி பாண்டியன் வரிசையில் யாரும்  வராததுனால பின்நவீனத்துவ விளக்கம் குடுக்க ஆள் இல்லாம போனதுனால, நம்மளே களத்தில்  இறங்க வேண்டியதாப் போச்சு. 
 முதலில் வழக்கம் போல டிஸ்கிகள்.
1) நம்ம  பதிவுக்கு பல விதமான மக்கள்ஸ் வராங்க. வெறும் கர்நாடக சங்கீத பாட்டு ஒண்ணு மட்டும்  போட்டா, அது பிடிக்காதவங்க கோபப்படலாம் இல்லையா. அதான் இப்படி. பாட்டு வேணுமுன்னா  பாட்டு, பின்நவீனத்துவம் வேணுமா அதுவும் இருக்கு. எல்லாரும் பாட்டையும் கேளுங்க.  நல்ல பாட்டுங்க.
2) இந்த மாதிரி நினைச்சுப் பார்த்ததுக்கு நம்ம சின்ன மருத்துவரின் இந்தப் பதிவுதான் காரணம்.  அடிக்க வரவங்க நேரா ஒரிஜினல் பார்டியையே கவனிச்சுக்கலாம். யாரு கவுஜ எழுதினாலும்  பின்நவீனத்துவமா போயி தும்மிட்டு வந்துடறீரே, அந்த காலத்து கர்நாடக சங்கீத  பாட்டுக்கு அப்படி எழுத முடியுமான்னு ஒரு சவால் வந்ததால இப்படி.
3) நல்ல  கர்நாடக சங்கீதப் பாடலை இப்படி எல்லாம் அர்த்தம் பண்ணிக் கெடுக்கணுமா படவா ராஸ்கல்  அப்படின்னு திட்டறவங்க இதுக்கு மேல படிச்சு ப்ளட் பிரஷரை ஏத்திக்க வேண்டாம். கோட்டீஸ்வர ஐயர் என்னை மன்னிக்க.
4)  இதைப் புனைந்தவர் பெயர் கோட்டீஸ்வர ஐயர்  அப்படின்னு இருக்கே. பெயரில் ஐயர்  அப்படின்னு ஜாதி எல்லாம் இருக்கக் கூடாதுன்னு வம்பெல்லாம் பண்ணக்கூடாது. அவரை  எல்லாரும் அப்படித்தான் கூப்பிடறாங்க. நடேச, சரி வேண்டாம், நாகேஸ்வர ராவ்  பார்க் அப்படின்னு அழகா தமிழில் சொல்லறது இல்லையா, அது மாதிரி இதையும்  வெச்சுக்கலாம்.
5)  இன்னிக்கு நடக்க போற விஷயத்தை அன்னைக்கே சொல்லிட்டாரு  பாருப்பா எங்காளு, அதான் அறிவு அப்படின்னு சொல்ல வரவங்களும், அதுக்கு பதிலா  காறித்துப்பறவங்களும் தனிப்பதிவு போட்டுக்குமாறு வேண்டிக்கறேன்.
அடுத்தது சிச்சுவேஷன்.
ஒரு பத்து பதினைஞ்சு நாள் முன்னாடி, நம்ம எக்ஸ் மந்திரி தயாநிதி கீறாரு பாரு,  அவருக்கு ஒரு கனவு வருது. ஒரே பாட்டுல பெரிய ஆளு ஆவுற ஹீரோ கணக்கா, இவரும்  ஒரே தேர்தலில் பெரிய மினிஸ்டரு ஆவறாரு. அல்லாரும் ஆஹா ஓஹோன்னு கூவிக்கினுக்கீறாங்க.  அது மட்டுமில்லாம சன் ரீவி, தினகரன் பேப்பருன்னு எல்லாமே இவங்க குடும்பம் கையுலதானே  இருக்கு. அந்த மெதப்புல இவரு படுத்துக்குனு கனவு காணறாரு. கனவுல அவரோட தாத்தா  கலிஞ்சரு வந்து இவராண்ட இந்த பாட்டு பாடறாரு. 
  
  இனி பின்நவீனத்துவம் 
 ஏதய்யா கதி எனக்கேதய்யா கதி
ஏதய்யா கதி எனக்கேதய்யா  கதி
  அதாவது ஆட்சி செய்ய இன்னைக்குத் தேவை படறது என்னவென்று பார்த்தால், மக்களிடம்   நம் கருத்தைக் கொண்டு போய் சேர்க்கிற ஊடகங்கள்தான் முக்கியம்.  அதுல மழை பெய்தால்  அது என் ஆட்சியினால்தான்,  அதுவே அதிகமாகி வெள்ளமானால் அதற்கு போன ஆட்சிதான் காரணம்  என்று நமக்கு வேண்டியபடி செய்தி எல்லாம் தர வேண்டும். அது போன்ற ஊடகங்களில்  முக்கியமானது சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளையோ, அழுது வடியும் தொடர்களையோ தந்து   அறிவை வளர்க்கும் ரீவிதான் முதல். அதில் பிரபலமானதாக இருக்கும் சன் ரீவி உங்கள்  குடும்ப சொத்து.  அதனால் உன்னை விட்டால் எனக்கு ஏதய்யா கதி அப்படின்னு பாடறாரு.
 அது மட்டுமா? இன்னைக்கு என்னதான் நாம இலவசமா ரீவி குடுத்தாலும், அதைப் பாக்க  மின்சாரம் இருக்கிறதா? பவர் கட்டு எனச் சொல்லி மின்சாரம் குடுக்க முடியாமல் போனால்  நாம் சொல்ல வந்த செய்தியை மக்களிடம் எப்படிச் சேர்ப்பது? அதுக்கு நமக்கு வேண்டியது  ஒரு செய்தித்தாள். அதையும் சின்னப்புள்ளங்க எல்லாம் இடுப்பை அசைச்சுக்கிட்டு ஆடி  நம்பர் ஒன்னா ஆக்கிக்கிட்ட பேப்பரும் உன் கையில்தான் இருக்கு. அதுனால இன்னொரு முறை  ஏதய்யா கதின்னு பாடறாரு.
என்னதான் நம்பர் ஒன் அப்படின்னு நம்மளே சொல்லிக்கிட்டாலும், மிடில் கிளாஸ்  எல்லாம் நம்ம பேப்பரையா படிக்கிறாங்க. அவங்க படிக்கிறது எல்லாம் நடிகைகள் படத்தை  அட்டையா போட்டு சினிமா செய்தியா தர பத்திரிக்கைகள்தானே. அதுல பார்த்தா நம்ம பெஸ்ட்  கண்ணா பெஸ்டுன்னு சொல்லி விக்கற குங்குமமும் உங்க கையிலதான் இருக்கு. பார்க்கறது  பத்திச் சொல்லியாச்சி, படிக்கிறதைப் பத்திச் சொல்லியாச்சு. அடுத்து கேட்கறதுன்னு  பார்த்தா, அங்கயும் 'கேட்டீங்களா'ன்னு நீங்கதான் சூரியன் எப்.எம் ரேடியோவை  வெச்சுக்கிட்டு இருக்கீங்க. இதுக்காக இன்னும் ரெண்டு ஏதய்யா கதி. இப்படி  எல்லாத்துக்குமே உங்களை விட்டா வழி இல்லைன்னு சொல்ல வெச்சுட்டீங்களேப்பா. 
 மா தயாநிதி உமாபதி சுகுமார வரகுணநிதி
நீதான் அல்லேது  வேறேதய்யா கதி 
 சாதா தயாநிதி அப்படின்னு இருந்த நீ ஒரே எலக்ஷனில் நின்னு கிட்டத்தட்ட ஒன்றரை  லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிச்சு, முதல் முறை பாராளுமன்றத்தில் காலடி எடுத்து  வைக்கும்போதே காபினெட் மினிஸ்டரா நுழைஞ்சு, அப்புறம் என்னமோ ஒத்த ரூபா வித்தை  எல்லாம் காமிச்சு நாடே உன்னைப் பாக்கும்படியா செஞ்சு, இன்னைக்கு மா தயாநிதியா  ஆகிட்டியே. 
  
 
உமா என அழைக்கப்படும் பார்வதியின் மறுபெயரைக் கொண்ட ப்ரியாவை மணந்து கொண்டவனே,  தன் தந்தையின் பெயரும் புகழும் தொடரும்படியாக நடந்து கொள்ளும் தனயனே, மிகத் தெளிவாக  நிதி பரிபாலனம் செய்து ஃபோர்ப்ஸ் பட்டியலில் பெயர் வருமாறு செய்த குடும்பத்தினனே!  (குறிப்பு: வரநிதிகுண - அதாவது நிதி வரும் வழிகளை நன்றாக தெரிந்து கொண்ட என இருக்க  வேண்டும். அதனை வரகுணநிதி எனச் சொல்வது பொயடிக் லைசென்ஸ்.) 
  
 
இன்னிக்கு தமிழகத்தில் காங்கிரஸ் தயவில்தான் என் ஆட்சி நடக்குது. அந்த  காங்கிரஸ் மேலிடம் இருக்கும் டெல்லியில் நீதானே இன்னிக்கு நம்ம சார்பில் இருக்க.  அவங்க கிட்ட உனக்குத்தானே நல்ல பேரு. எனக்கு எதாவது காரியம் ஆகணமுன்னா அவங்களை  மிரட்ட உன் மூலமாதானே போக வேண்டி இருக்கு. இப்படி எனக்கு பலவிதங்களில் ஊன்றுகோலா  இருக்கும் நீ மட்டும் இல்லைன்னா என் கதி என்ன ஆவறதுன்னு பாடறாரு.
 பேதை எனக்குன்னருள் காட்டது
என்னோடேதைய்யா விளையாட்டா
பூதல  சலநாட்டா நின் தாள்தான் கதி
புகழ் கவி குஞ்சர தாசனுக்கேதய்யா கதி
  நானும் ஐம்பது வருஷமா அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கேனேப்பா, ஆனா நான் இவ்வளவு  வருஷங்களில் செய்யாத சாதனை எல்லாம் ஒரு ஐந்து வருஷம் கூட ஆகலை, இப்படி ஒரு சாதனை  பண்ணிட்டு நிக்கிறியே, உனக்கு முன்னாடி நான் ஒரு பேதை. எனக்கு நீதான் அருள் காட்ட  வேண்டும். எனக்கு பின்னாடி கட்சி மற்றும் ஆட்சி தலைமைக்கு யாரு வரணமுன்னு  ஆசைப்படறேன்னு உனக்குத் தெரியாதா?
அதுக்கு இன்னிக்கு பிரச்சனை இருக்கறதுனாலதானே  தள்ளாத வயசில் நானே இன்னும் ஆட்சிக் கட்டிலில் படுத்துக்கிட்டு இருக்கேன்.  அதெல்லாம் நடக்கணமுன்னா உங்க செய்தித்தாளான தினகரனில் அதுக்கு ஏத்தா மாதிரி செய்தி  வர வேண்டாமா? அதை விட்டுட்டு இப்படி கருத்துக் கணிப்பு எல்லாம் போட்டு அந்த  திட்டத்துக்கு ஆப்பு வெச்சா என்ன அர்த்தம்? என்ன விளையாட்டு இது?
கலைஞர் எனப் புகழ்பெற்ற தமிழ்க்கவியான எனக்கு, (திராவிடக்) குஞ்சுகளின் அரசனான  அண்ணாவுக்கும் பெரியாருக்கும் அடியவனான எனக்கு இன்றைக்கு உன்னை விட்டால் வேறு  ஏதைய்யா கதி எனப் பாடுகிறார். 
 
முடிவுரை
 கனவுதான் கண்டாரு. அப்படியே சும்மா இருக்கலாமில்ல. அதைப் போயி தாத்தா கிட்ட  சொன்னாரு. அவரு கடுப்பானதுனால இப்போ அண்ணன் ரன் அவுட்டு. அடுத்து என்ன நடக்கப்  போகுதுன்னு பார்க்கலாம். அதுக்கு ஏத்தா மாதிரி வேற பாட்டு வரும்.