Friday, December 22, 2006

Bye! Bye! Brothers and Sisters!!

ஆமாங்க, இனி எழுதறது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன். அதனாலதான் நிறுத்தறதுக்கு முன்னாடி பை பை அப்படின்னு சொல்லிட்டுப் போகத்தான் இந்த பதிவு. டிசம்பர் மாதக் கடைசிக்கு வந்தாச்சு. உலகம் பூரா விடுமுறைக் கொண்டாட்டங்கள் நடக்கிறது. எல்லாரும் எல்லாருக்கும் பரிசுகள் தந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கிற ஒரு நேரமாத்தான் இருக்கு. எங்க எங்கேயோ இருக்கும் உங்களுக்கு எல்லாம் நான் என்ன பரிசு தந்து சந்தோஷப் படுத்த. அதான் இப்படியாவது ஒரு நிம்மதியைத் தரலாமே!! என்ன சந்தோஷம்தானே!

எல்லோருக்கும் எனது கிருத்துமஸ், விடுமுறை மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லோரும் நல்ல நிம்மதியா சந்தோஷமா (என் தொல்லையில்லாமல்) இந்த விடுமுறைகளைக் கொண்டாடுங்க.



ஏன்னா ஜனவரி முதல் வாரத்தில் இருந்து திரும்பி வந்திருவோமில்ல!

ஒண்ணுமில்லை மக்கள்ஸ். பையனுக்கு ஸ்கூல் லீவு. அதனால ஒரு வாரம் வெளியூர் பயணம். போற இடத்தில் இந்த மாதிரி 24 மணி நேரமும் தமிழ்மணமே கதின்னு இருந்தா தனியாத்தான் திரும்பி வரணும். அதனால லீவு சொல்லிட்டுப் போகத்தான் பதிவு. இப்போ பை பை சொல்லிட்டு போற சீசனா, அதான் இப்படி.

ஆனா அந்த வாழ்த்துக்கள் மட்டும் உண்மைங்க!

மீண்டும் உங்கள் கழுத்தை அறுக்கும் வரை விடை பெறுவது, உங்கள் அன்பு...

இ.கொ. (இ.கொ., இ.கொ., இ.கொ.... அட எக்கோ எபெக்ட்டுங்க)

Thursday, November 30, 2006

நியூசிலாந்தில் டீச்சர்கள் அட்டகாசம்!!

இது நியாயப் படி துளசி டீச்சர் போட வேண்டிய பதிவு. அவங்க கண்ணுல இந்த செய்தி எப்படி மிஸ் ஆச்சோ தெரியலை. அதனால கிடைச்சுது சான்ஸுன்னு நான் ஒரு பதிவு போட்டாச்சு. தலைப்புக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது சும்மா ஓரு கவர்ச்சிக்காக வைத்தது. அதனால் அதற்கும் இந்த பதிவுக்கும் தொடர்பு எதையும் தேட வேண்டாம்! :-D

விஷயம் என்னன்னா, நம்ம பசங்க குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பும் போது வார்த்தைகளை குறுக்கி தட்டெழுதி அனுப்பறாங்க இல்லையா? அதாவது Text Message என்பதையே Txt Msg என்றோ, See You என்பதை CU என்றோ தட்டெழுதுகிறார்களே. இது போல குறுக்கப்பட்ட வார்த்தைகள் மூலமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு Text Speak என்று பெயர்.

தற்பொழுது நியூசிலாந்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் தேர்வுகள் எழுதும் பொழுது இது போன்ற குறுக்கப்பட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தலாம் என அங்குள்ள தேர்வாணையக் குழு ஒரு ஆலோசனை வழங்கியுள்ளது. வழக்கம் போலவே இதனை ஆதரித்தும் எதிர்த்தும் பல குரல்கள் எழுந்துள்ளன.

இது பற்றி சி.என்.என் வலைத்தளத்தில் வந்திருக்கும் செய்திக்கான சுட்டி இது. ஒரு முறை படித்து விடுங்கள். எனக்கு மிகவும் பிடித்தது, செய்தியின் கடைசியில் இது பற்றி, நம் சக வலைப்பதிவாளர்(!) பில் ஸ்டீவென்ஸ் சொல்லி இருக்கும் கமெண்டுகள்தான் - Internet blogger Phil Stevens was not amused by the announcement. "nzqa[New Zealand Qualifications Authority]: u mst b joking," Stevens wrote. "or r u smoking sumthg?"! :-D

எனக்கு இரண்டு கேள்விகள். வழக்கம் போல எல்லாரும் வந்து உங்க கருத்தைச் சொல்லுங்க பார்க்கலாம்.

  1. தேர்வாணையத்தின் இந்த நடவடிக்கையில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?
  2. தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி உண்டா? அதில் இது போல குறுக்கி எழுதப்படும் வார்த்தைகள் உண்டா?

Wednesday, November 29, 2006

கேள்வியின் நாயகர்களே....

நம்ம விக்கி பதிவில் கேள்வியின் நாயகனே அப்படின்னு ஒரு பதிவு போட்டோம். என்ன காரணத்துனாலயோ தமிழ்மணத்துல வரலை. அதுல பின்னூட்டம் போட்டாக்கூட முகப்பில் வர மாட்டேங்குது. அதனால இந்த பதிவு ஒரு ரிபீட். விக்கி பசங்க பக்கத்தில் இருக்கும் பெரிய கேள்விக்குறியைச் சொடுக்கினால் இந்த பதிவுக்கு கொண்டு செல்லும். எல்லாம் ஒரு நடை வந்திடுங்க. இனி அந்த பதிவு. இதுக்கு அப்புறம் எழுதினது எல்லாம் விக்கி பதிவுல இருந்து கட் பேஸ்ட். அதனால கேள்விகளை அங்க கேளுங்க. இங்க இல்லை.

நம்ம மக்கள்ஸ் கிட்ட கேள்வி கேட்கலாம் அப்படின்னு ஒரு வார்த்தைதான் சொன்னோம். கேள்வி கேட்க நம்ம மக்களுக்கு சொல்லிக் கொடுக்கணுமா? சும்மா தூள் கிளப்பிட்டாங்க. கேள்விங்களை மெயிலில் அனுப்புங்கன்னு சொன்னா, அத விட்டுட்டு பின்னூட்டமா போடறாங்க, பதிவா போடறாங்க. யாரு என்ன கேள்வி கேட்டாங்கன்னு ஒரே கன்பியூஷன். என்ன கேள்வி எல்லாம் வந்திருக்கு, எதுக்கு பதில் சொல்லியாச்சு, பதில் சொல்லாத கேள்விகளை எப்படி விக்கி பசங்களுக்குள் பாகம் பிரிப்பது என எங்களுக்கே பல கேள்விகள்!!

அது மட்டுமில்லாம, ஒரு கேள்வி ஏற்கனவே யாராவது கேட்டாச்சா இல்லையான்னு தெரியலை, அப்படின்னு வேற ஒரு கம்பிளைண்ட். சரி, இதுக்கெல்லாம் ஒரு வழி செய்யலாமுன்னுதான் இந்த பதிவு.

இதுதான் கேள்விகள் கேட்கும் பதிவு. அதாவது கேள்வி கேட்கறவங்க, இந்த் பதிவுக்கு வந்து கேள்வியை பின்னூட்டம் மூலமா கேட்கணும். நாங்களும் பதில் போட்ட உடனே, அந்த கேள்வி வந்த பின்னூட்டத்தை எடிட் செய்து, பதிலுக்கான உரலைச் சேர்த்திடுவோம்.

கேள்விகளைத் தனிப் பதிவாகக் கேட்டு பதிவு எண்ணிக்கையை ஏற்றிக் கொள்ளும் அன்பர்கள், இங்கு வந்து அந்த பதிவின் உரலையாவது பின்னூட்டமாய் இடுங்கள். அவ்வாறு செய்யும் பொழுது ஒரு பதிவில் முடிந்த மட்டும் ஒரு கேள்வியைக் கேளுங்கள். எங்களுக்குள் பிரித்துக் கொள்ளவும், பதில் அளிக்கவும் அது எளிதாக இருக்கும்.

இந்த பதிவுக்கான சுட்டி விக்கி வலைத்தளத்தில் தனியாக தெரியும். அந்த சுட்டி மூலம் இங்கு வந்தால், இது வரை கேட்கப் பட்ட கேள்விகள், பதிலளிக்கப்பட்ட கேள்விகள், அதற்குண்டான உரல்கள் என எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கும்.

என்ன அன்பர்களே, இந்த ஆலோசனை சரிதானே? இனி என்ன? ஸ்டார்ட் தி மியூஜிக்!

Tuesday, November 28, 2006

விரைவில் தமிழ்மணத்திலும் 33% ஒதுக்கீடு???

இந்தியாவில் இருக்கும் வலைப்பதிவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களே! அதுவும் சும்மா 51 சதவிகிதம் 60 சதவிகிதம் எல்லாம் இல்லை. இந்திய வலைப்பதிவர்களில் 76% ஆண்களாம். இதை நான் சொல்லலைங்க. ஆனானப்பட்ட பில் கேட்ஸ் கம்பெனி வெளியிட்டு இருக்கும் ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் தெரிய வந்திருக்கும் புள்ளி விபரம் இது. (அவங்களை நம்பாதவங்க நம்ம தமிழ்மண நட்சத்திரங்களில் பெண்களின் எண்ணிக்கை அப்படின்னு ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணிப் பார்த்துக்குங்க. :) )

இன்னும் சில புள்ளி விபரங்கள் பார்க்கலாமா?

  • வலைப்பதிவுகளைப் படிப்பவர்களில் 42% உலக நிகழ்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் (பாவம் மக்கள்ஸ்!) 49% பொழுது போக்கிற்காகவும் (அடுத்தவன் சண்டை போட்டுக்கிறத பாக்கறது ஒரு பொழுது போக்கா?) படிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

  • வலையில் மேய்பவர்களில் 14% தொடர்ந்து வலைப்பூக்களில் பதிவுகள் இடுகிறார்கள். (அதுவே இந்த நிலமையின்னா மத்தவங்களும் எழுத ஆரம்பிச்சா என்ன ஆவறது?)

  • வலையில் மேய்பவர்களில் 39% பேருக்குத்தான் வலைப்பூக்கள் பற்றி தெரிந்து இருக்கிறதாம். (மத்த 61% எவ்வளவு புண்ணியம் செஞ்சு இருக்காங்க.)

  • வலைப்பதிவர்களில் 54% பேர் 25 -34 வயதுக்குள்ளாக இருப்பவர்களாகவும், 32% 25 வயதிற்குக் கீழாகவும், 15% 35 வயதிற்கு மேலாகவும் இருப்பதாகத் தெரிகிறது. (கூட்டினா 100 மேல வருதேன்னு என்னைத் திட்டாதீங்க. இது அவங்க சொன்னது.)

  • 87% வலைப்பதிவர்கள் வாரத்திற்கு ஐந்து மணி நேரம் வரை வலைப்பதிவுகளைப் பதிவதிலும் படிப்பதிலும் செலவிடுகின்றனராம். (நம்மள மாதிரி தமிழ்மண வியாதி பிடிச்சவங்களைப் பத்தி தெரியாது போல!)

  • பாதிக்கும் மேற்பட்ட வலைப்பூக்களை வாரத்திற்கு பத்து பேர் கூட வந்து படிப்பதில்லையாம். (கவர்ச்சிகரமான தலைப்பு வைக்கத் தெரியாமலோ, விவகாரமான விஷயங்களைப் பத்தி எழுதாமலோ இருந்தா எவன் வருவான்.)

  • தொழிலதிபர்களால் எழுதப்படும் வலைப்பூக்களுக்குத்தான் நல்ல வரவேற்பாம். (மா.சிவக்குமார் ஞாபகம் வருதா?)

  • அரசியல்வாதிகளால் எழுதப்படும் பதிவுகளை 24% பேர் தொடர்ந்து படிக்கிறார்களாம். (நம்ம ஊர் கரை வேட்டிங்க யாராவது வலைப்பூவில் எழுதி தமிழைப் பாதுகாக்கறாங்களா?)

இது பத்தின ரீடிப் செய்தி இங்க, ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி இங்க.



Thursday, November 16, 2006

எப்படி இருந்த கைப்பு இப்படி ஆகிட்டியேப்பா!!!

இந்த வாரம் அலுவல் காரணமாக ஜெர்மனி செல்ல வேண்டி வந்தது. போகும் பொழுது லுப்தான்ஸா விமானமொன்றில் சென்றேன். அதிலிருந்த புத்தகத்தில் அவர்கள் விமானங்களில் காண்பிக்கப் படும் திரைப்படங்கள் பற்றிய விபரங்களும் அவை பற்றிய ஒரு சிறு குறிப்பும் காணப்பட்டது.

சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களில் இந்த மாதம் காண்பிக்கப் படும் திரைப்படம் நம் கைப்பு ஸ்பெஷலான இம்சை அரசன் 23ஆம் புலிக்கேசி. அட அயல்நாட்டு விமானங்களில் கூட நம்ம கைப்பு புகழ் கொடி கட்டிப் பறக்கிறதே என ஒரு மகிழ்ச்சியோடு, ரொம்ப ஆர்வமாய் அதன் கதைச்சுருக்கத்தைப் படித்தேன். நீங்களும் அந்த கொடுமையை அனுபவியுங்கள்.




படத்தை சொடுக்குங்கள். கொஞ்சம் பெரிதாகத் தெரியும்.

என்ன படித்தீர்களா? தாங்க முடிந்ததா? எழுத்துப் பிழைகளை விட்டுத் தள்ளுங்கள். சொல்லி இருக்கும் கதையைப் பாருங்கள். நம்ம இம்சை அரசனுக்கு வாய் பேச வராதாம். ஊமையாம். படம் பார்த்த அனைவரும் வந்து கொஞ்சம் பதில் சொல்லுங்கள், இது நான் பார்த்த இம்சை அரசன் படத்தின் கதைதானா அல்லது இரண்டாம் பாகம் எதாவது வந்துவிட்டதா?

மன்னா என அழைப்பவர்களை என்னா என ஒரு திமிரோடு கேட்ட கைப்புவை, கன்னாப்பின்னாவென கேள்வி கேட்டு காவலாளிகளை மடக்கிய இம்சையரசனை இப்படி பேசா மடந்தையாக்கிவிட்டார்களே! ஐயகோ இஃது என்ன கொடுமை! Dumb Child என்ற பதத்தை வாய்பேசாதவன் என மொழிபெயர்த்த அந்த மகானுபாவனை என்னவென்று சொல்லுவது? என்ன தண்டனை கொடுக்கலாம்? உங்கள் ஐடியாக்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

இந்த லட்சணத்தில் ஆங்கில சப்டைட்டில் வேறு இருக்கிறதாம். யாராவது சென்னையில் இருந்து லுப்தான்ஸாவில் வந்தீர்களானால் மறக்காமல் இந்த படத்தை சப்டைட்டில்களோடு பார்த்திவிட்டு அதைப் பற்றி எழுதுங்கள்.

Saturday, October 28, 2006

விக்கி பசங்க நாங்க....

புதுசா ஒரு வலைப்பூ ஒண்ணு மலர்ந்திருக்கு. அதுதான் இந்த விக்கி பசங்க. நீங்க பாத்தீங்களா? பாத்த சிலவங்க மனசுல ஓடுன கேள்விகளை இங்க போட்டு இருக்கேன் பாருங்க.

என்னடா இந்த பசங்க கொத்துன பரோட்டாவையே மேல மேல கொத்தியிருக்காங்க. அடுத்து வந்த பாஸ்டாவும் பழசுதான். என்ன மேட்டர் தெரியலையே. ஒரு வேளை சமையற் குறிப்பு போடத்தான் இந்த வலைப்பதிவா? ஆனா அடுத்து வந்த ஆரஞ்சு ஜூஸ் மேட்டரில் ஆளைக் கவுத்துட்டாங்களே. என்ன இது என சிலர்.

என்னடா இந்த பசங்க. ஒருத்தன் தொந்தரவே தாங்க முடியலையே. நாலஞ்சு பேர் வேற சேர்ந்துக்கிட்டாங்க. என்ன அக்குறும்பு பண்ணப் போறாங்களோ தெரியலையேன்னு இன்னும் சில பேர்.

அடடா, இவனுங்க ஆளுக்கு ஓண்ணு ரெண்டு வலைப்பூக்களை வெச்சிக்கிட்டு பி.க. பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இப்ப இந்த வலைப்பூ வந்தாலும் வந்தது. தமிழ்மண முகப்பு பூரா வைரஸ் மாதிரி இவனுங்க பேர்தான் தெரியுது, இது என்ன மேட்டர்? இதுக்கு எதாவது போலீஸ்கார் தயார் பண்ணி அனுப்பலாமா என மேலும் சிலர்.

என்னமோ திட்டத்தோடத்தான் வந்திருக்காங்க. ஆனா விஷயம் என்னான்னு பிடிபடலையேன்னு சில பேர்.அதுல சில பேருக்கு விஷயம் பிடிபடாமலேயே, இந்த கூட்டணி நல்ல ஸ்ட்ராங்கா தெரியுதே, நாமளும் சேர்ந்துக்கலாமான்னு ஒரு யோசனை.

போட்ட மூணு பதிவும் பழைய மேட்டர். மீள்பதிவுக்கு தனியா ஒரு வலைப்பூவே ஆரம்பிச்சிட்டானுங்களா? இல்லை இது இந்த பதிவை தமிழ்மணத்தில் சேர்ப்பதற்காக செய்த கட் பேஸ்ட் வேலையா? ஒண்ணுமே புரியலையே அப்படின்னு மண்டையை உடைச்சிக்கற சில பேர்.

இந்த வாலிபர்கள் சேர்ந்ததுனால பசங்கன்னு பேரு சரி. அது என்ன முன்னால விக்கி அப்படின்னு ஒரு பேரு அப்படின்னு யோசிக்கிறவங்க ஒரு பக்கம். என்னதான் நடக்குது பார்த்திடலாமுன்னு ஒரு முடிவோட அடிக்கடி வந்து ஆஜர் குடுத்துட்டு போற நண்பர்கள் குழாம் ஒண்ணு.

இவங்க எல்லாருக்கும் நான் சொல்லப் போற பதில் ஒண்ணுதான். விஷயம் இருக்கு. உங்களுக்கு கட்டாயம் சொல்லத்தான் போறோம். என்ன இன்னும் ஒரு நாள், ஒரே ஒரு நாள் வெயிட் பண்ணுங்க. திங்கள்கிழமை விக்கிப்பையன் உங்களுக்கு எல்லாம் ஒரு சேதி தருவான். அதனால அன்னிக்கு அங்க வந்து என்னான்னு கேட்டுக்கிட்டு போங்க.

அதுவரைக்கும் சும்மா இருக்க வேண்டாம். இருக்கற மூணு பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்டுக்கிட்டே இருங்க. என்ன? :-D

ராமநாதன் வலைப்பூவில் இது சம்பந்தப்பட்ட பதிவு இது.

Tuesday, October 24, 2006

பிளேனில் போனா போலீஸ் புடிக்கும்

என்னடா இவன் இப்போதான் தமிழில் பேசினா போலீஸ் புடிக்கும் அப்படின்னு எழுதினான். இப்போ அமெரிக்காவில் பிளேனிலேயே போகக் கூடாதான்னு கேட்கும் மக்களே, இந்தப் பிரச்சனை நம் திருநாடாம் இந்தியாவில்தான். அட, ஆமாங்க ஆமாம். நேத்து ரீடிப் தளத்தில் இந்த செய்தியைப் படித்தேன். படிச்சதுலேர்ந்து வயத்தைக் கலக்குதப்பா. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். மேட்டர் இதுதான்.

நம் நாட்டில் 126 விமானநிலையங்கள் இருக்காம். அதில் இயங்குவதற்கான அனுமதி பத்திரங்கள் (Operating Licence) பெற்றுள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் ஐந்து. ஆமாம். அதிகமில்லை ஜெண்டில்மென் வெறும் ஐந்தே ஐந்து. தற்போதைய விதிமுறைகள் படி ஒரு விமான நிலையம் இயங்க வேண்டுமானால், இந்த அனுமதி பெற்றே தீர வேண்டும். ஆனால் இவ்வளவு நாட்களாக இந்த அனுமதி இல்லாமல் 121 நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்த அனுமதியை வரும் மார்ச் மாத இறுதிக்குள் பெற வேண்டும். இல்லையென்றால் இந்நிலையங்கள் இயங்க முடியாதென்று இத்துறை அமைச்சரகம் தற்பொழுது கெடு விதித்துள்ளது.

இந்த அனுமதி பெற்றிருக்கும் விமானநிலையங்கள் ஐந்தும் இவைதான் - புது தில்லி, மும்பை, கொச்சின், புட்டபர்த்தி மற்றும் மிசோரத்தில் இருக்கும் லெங்புய். நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களான சென்னை, கொல்கொத்தா, ஹைதராபாத், பெங்களூர் போன்ற விமான நிலையங்கள் கூட அனுமதி பெறாமல்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் புது தில்லி, மும்பாய் ரெண்டும் தனியார் வசம் சென்றாகிவிட்டது. சர்வதேச விமான போக்குவரத்து கழகத்தின் (International Civil Aviation Organisation) வற்புறுத்தலால்தான் இது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இப்பொழுது பாதுகாப்பு அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், ராணுவத் தலைமை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே இந்நிலையங்கள் DGCA (Directorate General of Civil Aviation) என்ற அமைப்பிடம் சென்று அனுமதி பத்திரம் பெற வேண்டும். அடுத்த ஐந்து மாதங்களில் இதைச் செய்ய வேண்டும். இது போன்று அவசரத்தில் அள்ளித் தெளித்தால் எவ்வளவு தூரம் இது முறையாகச் செய்யப்படுமோ தெரியவில்லை.

இந்த சமயத்தில் என் மனதில் சில கேள்விகள். உங்கள் கருத்தைத்தான் சொல்லுங்களேன்.
  • இது நாள் வரை எப்படி இவ்வளவு விமான நிலையங்களையும் அனுமதித்துள்ளனர்? ஒரு விமான நிலையம் கட்டும் பொழுது பெற வேண்டிய அனுமதிகள் பெறப் பெற்றனவா என்ற தணிக்கையே கிடையாதா?
  • இது சட்டபூர்வமான ஒன்றா? ஒரு விபத்தே நடந்தால் இது யார் பொறுப்பு?
  • இதனை இவ்வளவு நாள் அனுமதித்திருந்த அதிகாரிகள் தண்டிக்கப் படுவார்களா?
  • இப்பொழுது ராணுவமோ, சுற்றுச்சூழல் அமைச்சகமோ, உள்ளூர் அதிகாரிகளோ எதேனும் ஆட்சேபணை எழுப்பினால் என்னவாகும்?

Sunday, October 15, 2006

வீடு பேறும் வண்டிச் சத்தமும்

இந்த வாரயிறுதியிலும் உருப்படியா ஒண்ணும் பண்ணாம குண்டுசட்டியில் குதிரை ஓட்டியாச்சு. மடிக்கணினியை வைத்துக்கொண்டு ஒரு தவமோன நிலையை அடையும் பொழுது ஒரு விவாத மேடையைப் பார்த்தேன். தங்கள் திருமணத்தில் வந்த மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான பரிசுகளைப் பற்றிய விபரங்களும் அதன் மீதான விமர்சனங்களும் இருந்தன. அதில் ஒரு சம்பவம் இது -

" என் கணவரின் வீட்டில் அவருடன் சேர்த்து ஐந்து பேர். அதில் நால்வர் பெண்கள், என் கணவர் மட்டுமே ஆண்பிள்ளை. எங்கள் திருமணம் ஆகுமுன் மற்ற நால்வரின் திருமணமும் நடந்துவிட்டது. மிகப் பெரும் பணக்காரர்களான என் கணவரின் பெற்றோர்கள், தங்கள் பெண்களின் திருமணத்தின் போது அவர்களுக்குப் பரிசாக ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு வாங்கித் தந்தார்கள்.

எங்கள் திருமணத்தின் போது எங்களுக்கு வீடு வாங்கித் தராமல் இரண்டு புதிய கார்கள் மட்டுமே வாங்கிப் பரிசாக தந்தார்கள். பின்னர் மறைமுகமாக இது பற்றிய பேச்சு வந்த பொழுது ஒரு ஆண்பிள்ளை தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும். அடுத்தவர் கையினை எதிர்பார்க்கக் கூடாது என பொருள் படும்படியாக கூறினர். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது.
"


அத்தளத்தில் மிகவும் விவாதிக்கப்பட்ட சம்பவம் இது. பெரும்பாலான கருத்துகளை இரு வகைகளில் பிரித்து விடலாம்.

கருத்து - 1

அ) இரண்டு கார்கள் பரிசாக கொடுத்து இருக்கிறார்கள். இதில் குறை காண்கிறீர்களா? எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியே கிடையாதா? எத்தனை பேருக்கு இப்படி ஒரு பரிசு கிடைக்கும்?


ஆ) எல்லாவற்றிக்கும் பெற்றோரை நம்பி இருக்கலாமா? உங்கள் முயற்சியில் நீங்கள் வீடு வாங்கி அவர்களுக்குச் சமமாக உயர வேண்டுமென்பதே அவர்கள் ஆசையாய் இருக்கும்


இ) பெண்களுக்கு அவ்வளவு செய்து அவர்கள் நொடித்துப் போயிருக்கலாம். அல்லது மற்ற வழிகளில் பணக்கஷ்டம் வந்திருக்கலாம். உங்களுக்கு முழு விபரங்கள் தெரியுமா?



கருத்து -2

அ) என்ன கிடைத்தது என்பதைப் பற்றிய பிரச்சனை இல்லை இது. மகள்களுக்கு ஒரு அளவுகோல் மகனுக்கு வேறு அளவுகோல் என்பது எந்த விதத்தில் சரி?


ஆ) தன் முயற்சியில் முன்னேற வேண்டும் என்ற அறிவுரை அவர் மருமகன்களுக்குக் கிடையாதா?


இ) மற்றவர்களுக்குச் செய்தது போல், அவர்களுக்கு வீடு கொடுக்கப் போவதில்லை என்பதை முன்பே சொல்லி இருந்தால், இந்த எதிர்பார்ப்பு இருந்திருக்காது அல்லவா?


இப்படி ரொம்ப பேரு வந்து கருத்து சொன்னாங்கப்பா. ரொம்ப சுவாரசியமா இருந்தது. இந்த மாதிரி நிறையா பேரு வந்து கருத்து சொல்லற விஷயங்கள் எல்லாம் நமக்கு அல்வா மாதிரியா, அதான் எடுத்துப் போட்டாச்சு. உங்க கருத்து என்ன? மாற்று கருத்துகளுக்கு உங்க பதில் என்ன? எல்லாம் வந்து விவரமா போடுங்க.

வெண்பா எல்லாம் தெரியாதுன்னு ஓடிப் போன மக்கள்ஸ் எல்லாரும், இப்பவாவது வந்து கருத்து சொல்லுங்கப்பா. அப்புறம் தலைப்புக்கும் மேட்டருக்கும் என்ன சம்பந்தமுன்னு கேட்டா, ஒரு பதிலும் இல்லைப்பா. இந்த மாதிரி எல்லாம் பேரு வெச்சாத்தானே வருவீங்க. அதான்.

Tuesday, October 03, 2006

தமிழில் பேசினால் தீவிரவாதியா?

விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்த ஒருவர் தனது செல்பேசியில் தமிழில் பேசினாராம். அதனால் சந்தேகப்பட்டு போலீஸார் அவரை விசாரணைக்கு கொண்டு சென்றனராம். பாவம், அவரும் இதனால் தனது விமானத்தைத் தவற விட்டுவிட்டாராம். அதைப் பற்றிய ரீடிஃப் செய்தியைப் பாருங்கள். இன்றைக்கு அமெரிக்காவில் இருக்கும் கட்டுப்பாடுகள் ஒரு அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கை என்ற போர்வையில் இதை அனுமதித்தாலும் கூட, இச்செய்தியின் கடைசி வரியைப் பாருங்கள். இனி விமான நிலையங்களில் அன்னிய மொழிகளில் பேசுவதில்லை என அவர் அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளாராம்.

என்ன கொடுமை இது சரவணன். இனி விமான நிலையத்திலிருந்து என் மனைவியிடம் பேச வேண்டுமானால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டுமா? அவர்களுக்கு ஆங்கிலம் தெரியும் சரி. ஆனால் என் தாயாரிடம் பேச வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அதையும் சொல்வார்களா? தமிழ் பேசும் நல்லுலகே, உங்கள் கருத்துகளைப் போட்டுத் தாக்குங்க.

இதுதான் அந்தச் செய்தி.

A Tamil-speaking man in the US missed his flight from Seattle over the weekend because at least one person thought he was suspicious.

According to a report in Seattle Post Intelligencer, the man was speaking Tamil and some English in a conversation over his cellphone about a sporting rivalry when getting ready to board an American Airlines flight to Dallas' Fort Worth International Airport.

An off-duty airline employee heard the conversation and alerted the flight crew.

"It's a big misunderstanding," said Bob Parker, the airport spokesman. "He had a perfectly innocent explanation that all added up."

The spokesman noted that it was mandatory for airport officials to investigate reports of suspicious activity. The man was supposed to be talking of a sporting rivalry involving his alma mater.

Parker had no explanation as to why a man speaking Tamil would be considered suspicious. The person who contacted airport officials could give an answer to that question, he added.

The detained person was said to be cooperative and later boarded a flight to Texas. He reportedly told airport officials that he will not speak a foreign language on his cellphone at an airport in the future.

Monday, October 02, 2006

புதுச்சேரி கச்சேரி... (கொஞ்சம் பெரிய பதிவு)

இரண்டு விஷயங்கள் பத்திப் பேசலாம்.

முதலில் இந்த மாதத்திலிருந்து பாண்டிச்சேரி புதுச்சேரி என அழைக்கப்படப் போகிறதாம். இந்த பெயர் மாற்றம் ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. வெள்ளைக்காரன் வாயில் நுழையாமல் மாற்றி வைத்த பேரை நாம் மாற்றுவது தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. பெரிய நகரங்களின் பெயர் மட்டும்தான் மாறுகிறதா? சிறிய ஊர்களின் பெயர்களும் மாற்றப் படுகின்றனவா? உதாரணமாக வத்திராயிருப்பின் பெயர் மாற்றப்பட்டுவிட்டதா? இப்படி மாற்றுவதற்கு என்ன செலவாகிறது? இதற்காக அங்கு இருக்கும் எல்லா அலுவலகங்களும் தங்கள் லெட்டர்ஹெட், விசிட்டிங் கார்ட் உட்பட எல்லாவற்றையும் மாற்ற நிர்பந்திக்கப் படுகின்றனரா? அதனால் விளையும் பொருள் சேதமென்ன? இந்த மாதிரி பெயர் மாற்றத்தினால பாதிக்கப் பட்ட யாராவது சொல்லுங்களேன்.

புதுச்சேரி கச்சேரி அப்படின்னு பேரு வெச்சாச்சு. அதான் புதுச்சேரி பத்தி பேச வேண்டியதாப் போச்சு. உண்மையில் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் ஏன் வலையுலகில் பேசப்படறது இல்லைன்னு அப்படின்னு தெரியலை. பேசலாமே அப்படின்னு சொல்லறவங்க எல்லாம் வாங்க, இப்போ பேசலாம்.

இன்னைக்கு அடுத்த டாபிக் கச்சேரி. இன்னிக்கு கூட யாரோ வலைப்பதிவர் இந்த வார்த்தையை நீதிமன்றம் என்ற பொருளில் உபயோகப்படுத்தியுள்ளதைப் படித்தேன். இதைப் பல பழைய திரைப்படங்களிலும் இந்த பொருள் வருமாறு உபயோகப்படுத்தியதையும் கவனித்துள்ளேன். கன்னடத்தில் கூட கச்சேரி என்றாம் நீதிமன்றம்தான் என நினைக்கிறேன். இந்த வார்த்தை எப்படி சங்கீத கச்சேரி என்ற பொருளில் வருமாறு மாறியது? யாராவது விளக்குங்களேன்.

கச்சேரி என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது நம்ம பெரியவர் எழுதிய ஒரு நகைச்சுவை கட்டுரைதான். நிலாச்சாரலில் வெளிவந்த அந்த கட்டுரையை அவர் அனுமதியுடன் இங்கு மீள்பதிவு செய்கிறேன். (இதெல்லாம் போடலையின்னா வலையுலகில் போராட்டம் நடக்குமாமே ...:) )

கச்சேரிக்கு கூட்டமும், காணாமல் போன எஸ்.என்.ஜெ.வும்

எனது நண்பர் எஸ்.என்.ஜெ. ஒரு கர்நாடக இசை வல்லுநர். (ஆமாம், இவங்க எல்லாருமே மூணு எழுத்துல ஒரு பேர் வச்சுக்கராங்களே, நம்ம சிந்து பைரவி ஜே.கே.பி. மாதிரி. அது ஏன்?) அவரிடம் பேசும்போது அடிக்கடி அவர் வருத்தப்படுவது கச்சேரிகளுக்கு இளைஞர்கள் வருவதேயில்லை, சரியான கூட்டம் இருப்பதில்லை என்பதுதான். நம்மைப் பற்றி தெரிந்தும் இப்படி சொல்லலாமோ? எடுத்துவிட்டேன் கூட்டம் சேர்க்கும் வழிகளை. இதோ வரேன்னு சொல்லிட்டு போனவர்தான். ஆளையே காணும். அப்படி என்னதான்யா சொன்னே என்று கேக்கறீங்களா. மேலே படியுங்கள். சாரி, கீழே படியுங்கள்.

என்ன செய்யணும் என்பதற்கு முன்னால் என்ன நடக்குதுன்னு பார்ப்போம். கச்சேரிக்கு என்று போனால், உள்ளே இருப்பது முக்கால்வாசி கிழங்கள்தான். அந்த வழுக்கைத் தலைகளையும், நரைத்த முடிகளையும் பார்த்தால், நமக்கும் வயசாகி விட்டதோ என்ற பயம்தான் வருகிறது. அதிலும் பாதி பேர் வீட்டில் மருமகள் பாடும் கோபப் பாட்டைக் கேட்க மனமில்லாமல் இங்கே வந்துவிட்டு மண்டையாட்டி ரசிப்பது போல் ஒரு குட்டி தூக்கம் போடும் வெரைட்டி. இவங்களைத்தாண்டி பார்வையை ஓட விட்டால், ராகம் பாடும் போது நெற்றி சுருக்கி, புருவத்தைத் தூக்கி, பின் கீர்த்தனை வரும் போது கர்நாடிக் கான்ஸர்ட் கைடில் அவசரம் அவசரமாய் ராகம் தேடும் கத்துக்குட்டிகள் ஒரு புறம். பட்டு புடவை சரசரக்க வந்து 'கோமதி மாமி பொண்ணு அமெரிக்கனை கல்யாணம் பண்ணிண்டுட்டாளாமே' என வம்படிக்கும் மாமிகள் மறுபுறம். நடு நடுவே ஒன்றும் புரியாவிட்டாலும், ஓரிடத்தில் அசையாமலிருந்து் எதையோ அனுபவிக்கும் குர்த்தா பைஜாமா வெள்ளைக்காரர்கள், கூடவே குங்கும நெற்றியும், கனகாம்பரமும், சல்வாருமாய் அவர்கள் சகதர்மிணிகள். இவர்களோடு இந்த சபாவில் பாடுவது யார் என்பதை விட காண்டீன் போடுவது யார் என்று ஆராய்ந்து வைத்துக் கொண்டு தனியாவர்த்தனத்தின் போது வெளிநடப்பு செய்து, பாடகர்களின் பிளட் பிரஷரை ஏத்தும் சாப்பாட்டு ராமர்கள். கடைசியாய், எனக்கு இவரைத் தெரியும் என்று அலட்டிக் கொள்ளவே வந்து, தப்பு தப்பாய் தாளம் போடும் பந்தா பார்ட்டிகள். இதுதான் கூட்டம்.

சரி இப்போ கச்சேரிக்கு வருவோம். வர்ணம், ஒரு பிள்ளையார் பாட்டு, ராக ஆலாபனையுடன் ஓரிரண்டு கீர்த்தனைகள், நிரவல், ஸ்வரப் பிரஸ்தாரங்கள், நடு நடுவே ஒரு வேகமான பாட்டு, தனி ஆவர்த்தனம், ராகம் - தானம் - பல்லவி (முடிந்தால்), துக்கடாக்கள், ஒரு தில்லானா, மங்களம் என ஒரு மாற்றமே இல்லாத ஒரு பழம் பாணி. இதில் 'சாருக்கு ஒரு காப்பி', என்பது போல் வரும் நேயர் விருப்ப சீட்டுகளும், அது தமிழில் வந்தால் படிக்கத் தெரியாமல் முழிக்கும் பாடகர்களும் ஒரு தனி காமெடி ட்ராக். சில இடங்களில் தமிழ்ப் பாட்டு, தமிழ்ப் பாட்டு என்ற ஏலம் வேறு தனியாக ஒரு பக்கம் நடக்கும். இவ்வளவுதான். அப்புறம் எங்கயிருந்தய்யா வரும் கூட்டம், அதுவும் இளைஞர் கூட்டம்?

சும்மா புதுசு புதுசா மாற்றங்கள் வேண்டாமோ? சாம்பிளுக்கு சிலது பார்ப்போம்.

- இனிமேல் பாடகர்கள் உட்கார்ந்து கொண்டு பாடக்கூடாது. சும்மா மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி நடனமாடிக் கொண்டே பாடவேண்டும். அதிலும் பாடகர்களும், பாடகிகளும் சேர்ந்து கும்பலாய்ப் பாடினால் இன்னும் விசேஷம். கூடவே துணைப்பாடகர்கள், பாடகிகள் எல்லாம் வெள்ளை கவுன் போட்டுக் கொண்டு பின்னாடி ஆடலாம்.

- அதிலும் ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறு உடை அணிந்து கொண்டு வந்தால் இண்டிரஸ்டிங்காய் இருக்கும். இதற்குத் தனியாய் ஸ்பான்ஸர்ஷிப் வேறு கிடைக்கும். பாடகிகள் அட்லீஸ்ட் ஒரு ஜன்னல் வைத்த ஜாக்கெட்டாவது போட்டுக் கொண்டு வர வேண்டும். அப்போதான் அதை பார்த்து காமெண்ட் அடிக்க ஒரு தாய்மார் கூட்டம் வரும்.

- ராகமாலிகை மாதிரி பாகவதர்மாலிகை என்று ஒரு முயற்சி செய்யலாம். ஒரே பாட்டை ஐந்தாறு பாகவதர்களைக் கொண்டு் பாட வைக்காலாம். அதிலும் ஹிந்திக்காரர்கள் இரண்டு பேர் வந்து முக்கி முக்கி பாடினால் நல்ல வரவேற்பு இருக்கும்.

- இரு பாடல்களுக்கு நடுவே ஒரு சேஞ்சுக்கு ஃபேஷன் ஷோ, மிஸ். கச்சேரி் என வெரைட்டி தரலாம்.

- ஸ்வரம் பாடும் போது நடுவில் கேட்பவர்களையும் பாடச் சொல்லி, கச்சேரியை இண்டராக்டிவாகச் செய்யலாம்.

- வயலின், மிருதங்கம், கஞ்சிரா என ஒவ்வொரு பாட்டுக்கும் வேறு வேறு ஆட்களை மேடைக்கு நடுவே கொண்டுவந்து வாய்பாட்டுக்காரரை ஒரு பக்கமாகத் தள்ளலாம். ஒரு வித்தியாசமாகவும் இருக்கும். சில பாடகிகள் மேல் ஸ்தாயியில் பாடும் போது, முகம் அஷ்டகோணலாய் போவதை பார்க்கவேண்டிய கட்டாயமும் இருக்காது.

- சும்மா 20 ரூபாய், 50 ரூபாய் என வெறும் டிக்கெட் போடாமல் தூங்குபவர்களுக்கு ஸ்பெஷலாய் பெர்த் டிக்கெட் குடுக்கலாம். அப்புறம் ஆர்.ஏ.சி., வெயிட்டிங் லிஸ்ட் என்று நல்ல பணம் பண்ணலாம். 65 வயதுக்கு மேலிருந்தால் லோயர் பர்த் கியாரண்டி எனப் புதுத் திட்டம் கொண்டு வரலாம். கூடவே, குறட்டை வித்துவான்களுக்கென, ஸவுண்ட் ப்ரூப் கம்பார்ட்மெண்ட் எல்லாம் போடலாம். நல்ல ஐடியாவாய் இருக்கும்.

- அப்படியே மெயின் ராகம் முடிஞ்சா மசால் தோசை, துக்கடா பாடும்போது பக்கோடா என்ற கணக்கில் முன்பே ஆர்டர் வாங்கி சீட்டுக்கு வந்து சப்ளை செய்தால் தனியாவர்தனத்தின் போது வாக்கவுட் செய்பவர்கள் இல்லாமல் செய்யலாம். புதுசா, செவிக்குணவு இருக்கும்போதே வயிற்றுக்கும் ஈயப்படும்ன்னு விளம்பரம் எல்லாம் கூட செய்யலாம்.

- புதிதாய் ஒரு பாட்டை பாட முயலுமுன் 'கர்நாடக சங்கீத உலகில் முதன்முறையாக' என்று அடிக்குரலிலோ ' சும்மா நச்சுனு இருக்கு இந்த பாட்டு' என்றோ விளம்பரம் செய்யலாம்.

- கச்சேரியின் இறுதியில் டிக்கெட்டை குலுக்கி போட்டு பரிசு தரலாம். கடைசி வரை கூட்டம் இருக்கும். கூடவே இன்றைய கச்சேரியின் மூன்றாவது பாடல் எந்த ராகம் என்ற ரேஞ்சில் கேள்விகள் கேட்டு ரகசிய புதையல் எல்லாம் குடுக்கலாம்.

- இன்னும் மங்களம் முதலில் என்று ஆரம்பித்து கடைசியாய் வர்ணம் பாடி முடிக்கலாம்.

- ரொம்ப முக்கியமான கச்சேரிகளுக்கு தலைக்கு 50 ரூபாய், பிரியாணி பொட்டலம் என ரேட் பேசி லாரி லாரியாய் ஆள் சேர்க்கலாம்.

முதல்ல இதெல்லாம் செஞ்சு பாருங்க. இதுக்கும் கூட்டம் வரலைன்னா திருப்பி வாங்க, இன்னும் கொஞ்சம் சொல்லறேன்னு சொன்னேன். என்ன தப்பா சொல்லிட்டேன்? ஏன் அப்போ போனவரை இன்னும் காணும்? நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்களேன்.

Saturday, September 16, 2006

ஏனுங்க இப்படி?

நானும் பார்த்துக்கிட்டேதான் இருக்கேன். இந்த ஒரு விஷயம் மட்டும் பிடிபடவே இல்லை. ஏன் இப்படி பண்ணறாங்கன்னு தெரியவே மாட்டேங்குது. நீங்க யாராவது கொஞ்சம் கேட்டுப் பார்த்து சொல்லுங்களேன்.

நான் சொல்லறது இந்த கிரிக்கெட் மாட்சுங்களைப் பத்திதான். எப்ப , எங்க போட்டி வைக்கணமுன்னுங்கிறது போட்டியில் கலந்துக்கற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் எல்லாம் கலந்து பேசி முடிவு பண்ணற ஒரு விஷயம். இதுல ஐ.சி.சியின் கமிட்டி ஒண்ணு வேற இருக்கு. இவங்க எல்லாம் ஒண்ணாக் கூடி டீ, பிஸ்கெட்டு எல்லாம் சாப்பிட்டுக்கிட்டு எப்ப, எந்த ஊரில் யாரு விளையாடணமுன்னு முடிவு பண்ணறாங்க.

எல்லாம் நல்லா படிச்சவங்கதானே. இவங்களுக்கு எந்த ஊரில் எப்ப மழைக்காலம், எப்ப மழை வாராது அப்படின்னு தெரியாது? தனக்கா தெரியலைனாலும் அந்தந்த பகுதியில் இருக்கும் வானிலை ஆராய்ச்சி மையங்கள் கிட்ட ஒரு பரிந்துரை வாங்கிக்க மாட்டாங்க? இப்படி எங்க போட்டி நடத்துனாலும் அங்க மழை பெய்யறதே ஒரு வாடிக்கையான நிகழ்வா ஆகிப் போச்சே.

சரி, இதையெல்லாம் பல மாதங்களுக்கு முன்னாடியே முடிவு பண்ணறாங்க. அதனால அந்த குறிப்பிட்ட நாளன்று வானிலை எப்படி இருக்குமுன்னு சொல்லறது முடியாத காரியம். ஆனா ஆகஸ்ட், செப்டம்பரில் கிழக்காசிய நாடுகளில் மழைக்காலம் என்ற அடிப்படை அறிவு கூடவா இல்லை?

மத்த விளையாட்டுங்களெல்லாமும் இந்த மாதிரிதானே முன்னாடியே முடிவு பண்ணறாங்க. இந்த அளவுக்கு வேறெந்த விளையாட்டும் மழைக் காரணமாக இந்த அளவு பாதிக்கப் படறதா தெரியலையே. அது ஏன்? ஒரு வேளை அங்க கமிட்டி எல்லாம் போடாம முடிவு பண்ணறதுனால சரியான முடிவுகள் எடுக்கறாங்களா? ஒண்ணும் புரியலையே.

இதுல மழை வரது இயற்கை நிகழ்வு. அதனால ஒரு பந்து கூட போடலையினாலும் டிக்கெட் காசை திருப்பி எல்லாம் தரமுடியாது அப்படின்னு ஏப்பம் வேற விடறாங்க. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் விளம்பரக் காசு எல்லாம் வராம போகுதுன்னு அதுக்கு வேற தனியா இன்ஷூரன்ஸ் பண்ணி அங்க வேற பணம் வாங்கிக்கறாங்க. ஒரு வேளை இதுக்கெல்லாம்தான் மழைக்காலமா பாத்து போட்டியை வைக்கறாங்களா?

சரி. அப்படி என்னதான் யோசிச்சு முடிவு எடுத்தாலும், அது என்னவோ தெரியலை என்ன மாயமோ தெரியலை, கிரிக்கெட் போட்டி நடத்துனா மட்டும் மழை வருது அப்படின்னு சொன்னீங்கன்னா, மழை இல்லாம தண்ணிக்குக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிற இடங்கள் எவ்வளவு இருக்கு. அங்கெல்லாம் போயி போட்டியை நடத்தி மழையை வர வையுங்கப்பா. உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.

இப்படிக்கு,
இணையத்தில் கிரிக்கெட் மாட்ச் பார்க்க முடியாவிட்டாலும் வர்ணனையையாவது படிக்கலாம் என தூக்கத்தைக் கெடுத்து எழுந்து உட்கார்ந்து இருக்கும்

அப்பாவி ரசிகன்.

Sunday, September 10, 2006

விடைபெறுகிறேன்

ஆஹா! தொல்லை விட்டுதுன்னு ஜாலியா பதிவை திறக்கும் மக்கள்களே. உங்களை அவ்வளவு சீக்கிரம் விடறதா இல்லை. கடந்த இரு நாட்களில் இரண்டு விடைபெறுதல்கள் நடந்தன. தத்தம் விளையாட்டுகளில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த இருவர், விளையாடியது போதும் என முடிவெடுத்து விட்டனர். எனது ஹீரோக்களான அவர்களை வாழ்த்திடவே இந்தப் பதிவு.



முதலில் சனிக்கிழமை அன்று யூ.எஸ். ஓப்பன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் தனது 50ஆவது வயதில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மார்டினா நவரத்திலோவா. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக டென்னிஸ் உலகில் தனது முத்திரையைப் பதித்த இவரது வெற்றிகளை முறியடிக்க இனி ஒருவர் பிறந்துதான் வர வேண்டும். தனது கடைசி ஆட்டத்திலும் மிகத் திறமையாய் விளையாடி கோப்பையை வென்ற இவருக்கு நமது வாழ்த்துக்கள்.



அடுத்ததாக இன்று இத்தாலிய கிராண்ட் பிரி போட்டியில் வெற்றிக் கனியை பறித்த கையோடு தனது ரிட்டயர்மெண்டை அறிவித்த மைக்கேல் ஷுமாக்கர். 90 வெற்றிகள், 68 முதலிடத் தகுதிகள், 1354 வெற்றிப் புள்ளிகள், 7 முறை உலக சாம்பியன் பட்டம் - வேறேதாவது சொல்ல வேண்டுமா? இந்த வருடமும் உலக சாம்பியன் பட்டம் பெற இவரை வாழ்த்தி, இவரின் இடத்திற்கு வர இருக்கும் கிமி ரெய்க்கோனனையும் வருக வருக என வரவேற்போம். ஃபெராரியில் மைக்கேலின் பங்கு என்னவென்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இருவரும் மனதே இல்லாமல்தான் பிரிவதாகத் தோன்றுகிறது. எல்லா வகைப்பட்ட சாதனைகளும் புரிந்திட்ட நிலையிலும் தாங்கள் பங்கு பெறும் ஒவ்வொரு போட்டியையும் ஒரு புதுமுகத்திற்குண்டான உற்சாகத்துடன் எதிர் கொண்ட இவர்கள் வாழ்வு நமக்கெல்லாம் ஒரு பாடம். இவர்களைப் பற்றி விரிவான பதிவுகள் வரும். வரவில்லையென்றால் நாமே போட வேண்டியதுதான்.

இந்த இருவருமே ஒரு வெற்றியோடு தாம் விலகுவதை அறிவித்த பாங்கு என்னைக் கவர்ந்தது. Way to go Champions!

படங்கள் இணையத்தில் திருடப்பட்டவை. தந்த தளங்களுக்கு நன்றி.

Tuesday, September 05, 2006

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி

நம்ம மக்கள் பியர் குடிக்கும்போது சும்மா குடிச்சாத்தான் தேவலையே. ஆனா சும்மா இருக்காம காரமா சைட் டிஷ் தேடி அலையறாங்க. அதுவும் வறுத்த ஐட்டமா இருந்தாதான் வசதியா இருக்கு. அது முறுக்கு, சிப்ஸ் அப்படின்னு ஆரம்பிச்சு சிக்கன் 65, சில்லி சிக்கன் அப்படின்னு போயி முடியுது. பியரை விட இந்த ஐட்டங்களில்தான் தொப்பை, தொந்தின்னு வந்து தங்கமணிங்க வாயில விழுந்து புறப்பட வேண்டியதா இருக்கு. அது மட்டுமில்லாம கொலஸ்ட்ரால், ட்ரைக்ளிஸரைட்ஸ் அது இதுன்னு வேற பயமுறுத்தறாங்க. இதுக்கெல்லாம் பயந்து அவனவன் பியர் குடிக்கறதையே விட்டுடுவான் போல இருக்கு.

இந்த போக்கே சரி இல்லையே. இவங்களுக்கு எல்லாம் நல்லதா எதாவது பண்ணணுமே அப்படின்னு ராத்திரி பகலுன்னு பார்க்காம நம்ம பக்கத்துல ஒரு ஆள் யோசிக்கிட்டே இருந்தாரு. அப்போ அவரு மூளையில திடீருன்னு உதிச்ச ஒரு உலகத்தையே புரட்டிப் போடக்கூடிய இந்த விஷயம்.



இதுதாங்க சில்லி பியர். மேட்டர் என்னான்னு படத்தைப் பார்த்தாலே புரிஞ்சு இருக்கும். " இந்த பியருக்கும் மத்த பியருக்கும் என்ன வித்தியாசம்? ஒரு மிளகாய். ஒரே ஒரு மிளகாய்" அப்படின்னு தமிழ் தெரியாத மெழுகு பொம்மை வந்து சொன்னாதான் புரியும் அப்படின்னு உங்களை நான் குறைச்சு மதிப்பிடாததுனாலதான் அதெல்லாம் பண்ணலை.

ஹேலப்பீனோ (Jalapeno) என்ற வகை மிளகாய் ஒன்றை எடுத்து ஒரு பாட்டில் பியருக்குள் போட்டு ஊற வைத்து விட்டார்கள். அதிலுள்ள காரம் எல்லாம் மெதுவாக இந்த பியருள் இறங்கி பியர் மிகுந்த சுவையோடு இருக்கிறது. நல்ல காரமாய் இருப்பதால் தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம். நமக்கு புரியற வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் -"அப்படியே சாப்பிடலாம்".

ஆகவே இந்த மாதிரி நம்ம மக்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இந்த மாதிரி ஒரு புதுமையான ஐட்டத்தைக் கண்டுபிடித்த மகானுபாவருக்கு ஒரு 'ஓ' போட்டுட்டு ஆக வேண்டிய வேலையைப் பாருங்கப்பா!

Friday, September 01, 2006

அட்லாஸ்(ட்) நன்றி

என்னடா இவன் நன்றி சொன்னா கிண்டல் பதிவு போடறான், இப்போ இவனே நன்றி சொல்லறான்னு பாக்கறீங்களா? இது விஷயம் வேற. நம்ம பசங்க எல்லாம் என்ன நீங்க எங்க எங்கயோ போயி பதிவு போடறீங்க. நாங்க எல்லாம் பதிவு படிக்கறதா இருந்தா உங்க பதிவுல மட்டும்தான் படிப்போம் அப்படின்னு ஒரே ரவுசு. இந்த அன்புக்கும் பாசத்துக்கும்தான் நன்றி. இந்த பசங்களுக்கு இப்படி எல்லாம் இருக்கக் கூடாது, அப்படின்னு சொல்லி இங்க சுட்டி தரேன் அப்புறமாவது போயி படிங்கன்னு சொல்லவும்தான் இந்த பதிவு.

ஜுலை மாதம் நம்ம வ.வா.சங்கத்தில நம்மளை அட்லாஸ் வாலிபரா தேர்ந்தெடுத்து வாரம் ஒரு பதிவு போடச் சொன்னாங்க. ஆடிக்கு ஒரு பதிவு, அமாவாசைக்கு ஒரு பதிவு போடற நம்மளால வாரம் ஒரு பதிவு போடமுடியுமான்னு ஒரே கவலை. ஓடினேன் பாரு ஒரு ஓட்டம். வாழ்க்கையின் எல்லை வரை ஓடலைன்னாலும் கிட்டத்தட்ட இந்த உலகின் எல்லை வரை ஓடி நம்ம துளசி டீச்சர் வீட்டுக் கதவைத் தட்டினேன். அவங்கதான் சொன்னாங்க, " கண்ணைத் திறந்து வச்சுக்கிட்டு இரு. நம்ம சுத்தி என்ன நடக்குதுன்னு பாரு. அதை வெச்சி வாரம் ஒரு பதிவு என்ன, ஒரு நாளைக்கு ஒரு பதிவு வேணாலும் போடலாம்." அப்படின்னு சொன்னாங்க. நாமளும் அதை சிரமேற்கொண்டு கண்ணை நல்லா திறந்து வெச்சுக்கிட்டு அலைஞ்சேன். அப்படித்தான் நான் போட்ட நாலு பதிவும் மாட்டிச்சு. ஒண்ணொண்ணா பார்க்கலாம்.

போட்ட முதல் பதிவு மண்டூகங்களுக்கு பின்நவீனத்துவ திறனாய்வு. நமக்கு வேண்டப்பட்ட ஆளு ஒருத்தரோட பேசிக்கிட்டு இருந்தம்போது வந்த ஐடியா இது. அது யாருன்னு கேட்டீங்கன்னா, வேற யாரும் இல்லை. நம்ம தளபதி நாமக்கல்லார்தான். அவரு நமக்கு புதுக்கவிதை பத்தி கிளாஸ் எடுக்கப் பாத்தாரு. நாம் அவருக்கு திறனாய்வு கிளாஸ் எடுத்துட்டோமில்ல!

அடுத்துப் போட்ட பதிவு - பரிணாம வளர்ச்சி. நம்ம தெக்கி போட்ட ஒரு பதிவு பத்தி அவரோட சாட் பண்ணும் போது வந்த ஐடியா இது. பேசிக்கிட்டே இருக்கும் போது வெகு வேகமா டெவலப் ஆச்சு. பதிவின் நீளம் கருதி யோசிச்ச சில ஐடியாக்கள் போட முடியாமப் போச்சு. தனக்கு ஒரு வளர்ச்சியும் சொல்லலையேன்னு செல்லமா திட்டினவங்க கூட உண்டு!

பரிணாம வளர்ச்சிக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 574. இது ஓடிக்கிட்டு இருக்கும் போதே ஒரு வாரம் போனதுனால அடுத்த பதிவு போடச் சொல்லி கைப்பு கிட்ட இருந்து ஒரே பிரஷர். அந்த சமயத்தில நம்ம போலிஸ்கார் வேற பின்னூட்டக் கயமைத்தனம் பத்தி போட்டாரா, நாமளும் அதைச் சாக்கா வைச்சு அடுத்த பதிவு ரெடி பண்ணியாச்சு - வ.வா. சங்கத்தினரின் மெகா பதிவுக் கயமைத்தனம்.

கடைசியாப் போட வேண்டியது நன்றி நவிலல்தானே. ஆனா அப்போ நம்ம தேன்கூடு போட்டி முடிஞ்சு எல்லாரும் நன்றி சொல்லிக்கிட்டு இருந்தாங்களா? நமக்குக் கொஞ்சம் டென்ஷனாகிப் போச்சு. சரின்னு அதை வெச்சே ஒரு நன்றி பதிவு போட்டாச்சு. அதான் தேன்கூடு போட்டி - நன்றி நவில்தல் .

இப்படித்தான் நம்ம அட்லாஸ் மாதம் ஓடிச்சு நண்பர்களே. இந்த பதிவுகளுக்கு காரணிகளாக இருந்த நண்பர்களுக்கும், இப்படி எல்லாம் கவனமா இருக்கச் சொன்ன டீச்சருக்கும், வந்து படிச்சவங்களுக்கும், செய்ய வேண்டியதை சரியா செஞ்ச நண்பர்களுக்கும், எனக்கு ஒரு சவுண்டிங் போர்டாக இருந்த (இருக்கும்)எஸ்.கே அவர்களுக்கும் நம்ம நன்றி.

Wednesday, August 30, 2006

வாள மீனுக்கும்.....


இது இன்றைய தினமலர் இணையப் பதிப்பில் வந்த புகைப்படம். பார்த்தவுடன் மனதில் தோன்றிய வரிகள்.....

"வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" . என்ன வைகோதான் விரலை நீட்டாம விட்டுட்டார்.

திஸ்கி:

இது வெறும் நகைச்சுவைக்காகத்தான். படத்தில் இருக்கும் தலைவர்களை கிண்டல் செய்யும் நோக்கத்தில் இல்லை. கொஞ்சம் டென்சன் ஆகாம சிரிச்சு வையுங்க மக்களே.

Monday, August 07, 2006

யோகன் பாரிஸ் அவர்கள் கவனத்திற்கு

நண்பர் லதா அவர்கள் தனி மடலில் அனுப்பியது. யோகன் பாரிஸ் அவர்களைப் பற்றி ஆனந்த விகடன் இதழில் வந்துள்ள செய்தி. அவர் பார்த்துள்ளாரா எனத் தெரியவில்லை. ஆகவே இந்தப் பதிவு. அவரிடம் தொடர்பு கொள்ள முடிந்தவர்கள் தயவு செய்து அவரிடம் இந்த சேதியை தெரிவிக்கவும்.

இனி செய்தி. இது 13 08 2006 தேதியிட்ட ஆனந்த விகடன் சுஜாதா கற்றதுப் பெற்றதும் பகுதியில் எழுதியது.

====
விகடன் 23.07.06 இதழ் க.பெ.பகுதியில் பத்மநாதனின் கவிதையில், 'கடகம்' என்ற சொல்லுக்குச் 'சும்மாடு' என்ற விளக்கம் தவறு என்று, யோகன் பாரிஸ் மின்னஞ்சல் செய்துள்ளார். ஈழத்தில் கடகம் என்று குறிப்பிடுவது , பொருள்களைச் சுமக்க பாவிக்கும், பனையோலையால் இழைத்து அதன் வெளிப்பகுதிக்குப் பனை நாரால் மேலிழைப்பு செய்து, வாய்ப்பக்க விளிம்பில் தடித்த நார் வைத்த பெட்டி. அது இன்றும் பாவனையில் உள்ளதாம். (பாவனை - பயன்பாடு)

====

வாழ்த்துக்கள் யோகன் பாரிஸ்.

Sunday, June 25, 2006

ஆறிப் போகுமுன் ஒரு ஆறு பதிவு

இந்த ஆறு விளையாட்டுக்கு நம்மளை அழைத்தது குமரன். என்ன எழுதலாமுன்னு யோசிக்கும் போது எண்ணங்கள் ஆறா ஓடுனதுல ஒரு ஆறு சங்கதிகள் மட்டும் சொல்லறேன். அட இதுக்கே ஓடினா எப்படி? ஆறு மனமே ஆறு.

ஆறுதான் நம்ம எண்களிலேயே முதல் மாசறு எண் (Perfect Number). அதாவது ஒரு எண்ணை வகுத்தால் வரும் முழு எண்களைப் பெருக்கினாலோ, கூட்டினாலோ, வகுக்கப்பட்ட அதே எண் வந்தால் அது மாசறு எண்ணாகும். இங்கு ஆறை வகுத்தால் வரக்கூடிய எண்கள் 1,2 மற்றும் 3. இந்த மூன்று எண்களை கூட்டினாலோ, பெருக்கினாலோ 6 வருவதால் அது மாசறு எண் என அழைக்கப்படுகிறது. (இதுக்கு வேற பேர் இருக்காங்க? எனக்கு தெரியலை. சும்மா மாசறு எண் அப்படின்னு நானா மொழிபெயர்ப்பு செஞ்சுக்கிட்டேன்). சரி கணக்கு தெரியும் என கணக்கு காட்டியாகிவிட்டதா? இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்.

1) ஆறு பற்றி சொல்ல வந்தா முதலில் நம் ஆறுமுகனின் ஆறுபடைவீடுகள்தான் ஞாபகம் வரும். ஒவ்வொன்றிற்கும் ஒரு ஒரு வரி செய்தி. தெரிந்தவர்கள் மேலதிக விபரங்கள் சொல்லுங்களேன். எல்லாம் பலவேறு இடங்களில் படித்தது. தப்பா இருந்தா சொல்லுங்கப்பூ.

திருப்பரங்குன்றம் - நக்கீரர் திருமுருகாற்றுப்படை எழுதியது இங்குதான்.

திருச்செந்தூர் - குன்றில் அமையாமல் கடற்கரையில் அமையப் பெற்ற கோயில் என கூறப்பட்டாலும் இக்கோயிலின் கருவறை அமைந்த இடம் ஒரு சிறு குன்று.

திருவாவினன்குடி - பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த கோவில்தான் அறுபடை வீடுகளில் ஒன்று. அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாக புராணங்கள் கூறுகின்றன.

சுவாமிமலை - இங்கு கோயிலுக்கு செல்ல 60 படிக்கட்டுகள் உள்ளன. இவை பழைய தமிழ் முறைப்படி இருந்த 60 வருடங்களைக் குறிக்கின்றன.

திருத்தணி - முருகனே தனக்குப் பிடித்த மலையாக திருத்தணியை கூறியதாக கந்தபுராணம் கூறுகின்றது.

பழமுதிர்சோலை - சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம்.

2) விளையாட்டை எடுத்துக்கிட்டீங்கன்னா, பல விளையாட்டுகளில் இந்த எண் முக்கியமானதா இருக்கு. கிரிக்கெட்டில் ஆறு ரன்கள்தான் அதிகமாகப் பெறக்கூடியது. அதே போல் ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள். டென்னிஸில் ஒரு செட் முடிய ஆறு ஆட்டங்கள்தான் பொதுவாக ஜெயிக்க வேண்டும். அமெரிக்காவில் விளையாடும் ஃபுட்பாலில் டச்டவுண் செய்தால் ஆறு புள்ளிகள். ஆஸ்திரேலியாவில் விளையாடப்படும் ஒரு விதமான ஃபுட்பாலிலும் ஒரு கோல் அடித்தால் ஆறு புள்ளிகள். வாலிபாலில் ஒரு அணியில் ஆறு பேர்கள்தான் விளையாடுவார்கள். அதே கதைதான் ஐஸ் ஹாக்கியிலும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி என்ன ஆறுக்கும் விளையாட்டுக்கும் சம்பந்தம்? யாராவது கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.

3) இப்போ நமக்குப் பிடித்தமான ஒரு விஷயம் - சாப்பாடு! அறுசுவை விருந்து எனச் சொல்கிறோம். அந்த ஆறு சுவைகள் என்னன்னு கேட்டா தித்திப்பு, காரம், புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு அப்படின்னு ஒரு லிஸ்ட்டும் போடுவோம். ஆனா நம்ம ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில்லெல்லாம் ஒவ்வொரு சுவைக்கும் ஒரு சக்தி இருக்கிறதாவும் அதனால எல்லா விதமான சுவையையும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் ஆனால் அளவாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள். இந்த பலன்கள் என்னவென்று பார்ப்போமா?

துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

ஆனா நம்ம அலோபதி மருத்துவத்தில் இந்த மாதிரி இல்லை. இதைப் பற்றி அந்த துறை சார்ந்தவர்கள் கொஞ்சம் விவரமா சொல்லுங்க. எது சரி?

4) அடுத்ததா நம்ம மற்றொரு விருப்பமான விஷயமான சினிமாவுக்கு போகலாம். கெவின் பேக்கனின் ஆறு பாகைகள் (Six Degrees of Kevin Bacon ) அப்படின்னு ஒரு விளையாட்டு இருக்கு. இந்த கெவின் பேக்கன் ஒரு அமெரிக்க நடிகர். உலகத்தில் எந்த நடிகரை எடுத்துக் கொண்டாலும் அவருடன் இணைந்து நடித்தவர்களைச் சங்கிலியாகக் கொண்டு கெவின் வரை வர ஆறு இணைப்புகளே போதும் என்பதுதான் இந்த விளையாட்டு. உதாரணமாக நம்ம ரஜினியை எடுத்துக் கொண்டால் அவர் நடித்த கிஷன் கன்னேயா என்ற திரைப்படத்தில் உடன் நடித்தவர் சாயீத் ஜாப்ரி. இவர் டே ஆப் த சைரன்ஸ் என்ற படத்தில் ஜான் மொராய்ட்டிஸ் என்பவருடன் நடித்துள்ளார். ஜான், வேர் த ட்ரூத் லைஸ் என்ற படத்தில் கெவினுடன் நடித்துள்ளார். ஆகவே சூப்பர் ஸ்டாரின் கெவின் எண் 3. இதே போல் கமலை எடுத்துக்கொண்டால் அவர் இதே சாயீத்துடன் சாகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆகவே இவரின் கெவின் எண்ணும் 3. (அப்பாடா ரெண்டு பக்கமும் அடிக்க மாட்டாங்க). யாராக இருந்தாலும் ஆறு படிகளில் கெவினை அடைந்து விடலாமாம்.

இதற்காக வெர்ஜினியா பல்கலைகழகத்தில் ஒரு வலைப்பக்கம் அமைத்து இந்த விளையாட்டுக்காக வசதி செய்துள்ளார்கள். நீங்கள் விளையாடிப் பார்த்து யாருக்காவது ஆறு படிகளுக்கு மேல் வருகிறதா எனப் பாருங்களேன். (நம்ம புரட்சிக் கலைஞர் இந்த லிஸ்ட்டில் இல்லவேயில்லை. நீங்கள் அவர் பெயரைப் போட்டு விட்டு காணவில்லை என என்னை அடிக்க வராதீர்கள்.)

5) சினிமா பத்தி பேசும் போது மற்றொரு முக்கியமான விஷயம் ஞாபகத்துக்கு வருது. நம்ம தளபதி சிபி இருக்காரே. அவரோட ஃப்ரெண்டு (பின்ன என்ன வெறும் நட்புன்னுதானே அறிக்கை எல்லாம் விட்டுக்கறாங்க) நயன்தாராவிற்கு ஒரு கையில் ஆறு விரலாம். ஆனா அது வெளிய தெரியாத மாதிரி பாத்துக்கறாங்களாம். மெய்யாலுமாப்பா?

6) கடைசியா (உண்மையில் முதலிலேயே) ஆறு என எண்ணத் தொடங்கிய உடன் நினைவுக்கு வருவது சிக்ஸ் பேக் பியர்தான். அடிக்கிற வெயிலுக்கு அதுதான் சரிப்படும். வாங்கிட்டு வந்ததை கவனிக்கணும். அதனால இதோட ஆட்டம் க்ளோஸ்.

போறதுக்கு முன்னாடி நான் யாரையாவது ஆறு பேரைக் கூப்பிடணும். போன தடவை இந்த மாதிரி நாலு விளையாட்டு விளையாடும் போது கூப்பிட்ட நாலு பேரில் மூணு பேர் இப்ப எழுதவே காணும். அதனால வேண்டியவங்களைக் கூப்பிடவே பயமா இருக்கு. சரின்னு அந்த ஆறுமுகன் மேல பாரத்தைப் போட்டுவிட்டு கூப்பிடறேன். இதில் யாராவது ஏற்கனவே கூப்பிடப் பட்டிருந்தால் சொல்லுங்க. மாத்திடலாம்.

1. வெண்பா வாத்தி ஜீவா
2. வரலாற்று டீச்சர் துளசி
2.பாலர் கதை சொல்லும் பரஞ்சோதி
2. சங்கச் சிங்கம் ஜொள்ளுப்பாண்டி
3. டா கில்லி கோட் தந்த பெனாத்தலார்
3. செய்திகளைச் சூடாகத் தரும் ஆவி பறக்கும் இட்லிவடையார்
4. நம்ம ர.ம.செ.த, தேவு தம்பி
5. பமகவின் நிரந்தர தலை முகமூடியார் (உள்குத்து எல்லாம் இல்லாம சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு தலைவா.)
5. காமெடி ஸ்பெஷலிஸ்டாக உருவாகி வரும் கோவி.கண்ணன்
6. பெரியவர் ஹரிஹரன்ஸ் (இப்போவாவது மீண்டும் பதிவு போட ஆரம்பிக்கறாரான்னு பார்ப்போம்)

(சிலர் பல முறை அழைக்கப்பட்டு விட்டதால், அதே எண்களில் இன்னும் சிலர்.)

கஷ்டப்பட்டு எழுதியாச்சு. ஒரு 'ஆறு'தல் பரிசாவது தாங்கப்பா.

Friday, June 02, 2006

தரமாய் பதிவொன்று தா (வெ.வ.வா)

மதுமிதா அவர்கள், அவர் எடுத்துக் கொண்டிருக்கும் ஆராய்ச்சிக்காக வலைப்பதிவர்கள் அனைவரும் தங்களைப் பற்றிய விபரங்களையும், வலைப்பூவைத் தொடங்கிட தூண்டுதலாய் இருந்தது என்னவென்பதையும் ஒரு பதிவாய்ப் போட்டு, அதன் சுட்டியை அவருக்கு அனுப்புமாறு சொன்னார்கள். அதன்படி அநேகம் பேர் அனுப்பிவிட்ட நிலையில், இதோ என்னைப் பற்றிய விபரங்கள்.

வெறும் விபரங்களைப் பதிவாய் போட வேண்டாமே என யோசித்து அவர் கேட்டதையே ஒரு வெண்பாவாய் வடித்திருக்கிறேன். அதன் ஈற்றடிதான் 'தரமாய் பதிவொன்று தா'. இதை வைத்து சற்றே வேகம் குறைந்த வெண்பா வடிக்கலாம் வா தொடரை மீண்டும் துவங்குகிறேன். இந்த வாரத்தின் ஈற்றடியை வைத்து வெண்பா வடிக்கவே வாருங்களேன். முதலில் என் முயற்சி.

வலைஞரைக் கேட்டார் மதுமிதா வாகாய்
'சளைக்காமல் சொல்வாய் சரியாய் - வலைப்பூக்
குரமாகி வந்தவொரு உந்துத லென்ன?
தரமாய் பதிவொன்று தா'.

மதுமிதாவிற்காக என் விபரங்கள்.

வலைப்பதிவர் பெயர் : இலவசக்கொத்தனார்

வலைப்பூ பெயர் : இலவசம் தான் வேறென்ன?

சுட்டி(url) : http://elavasam.blogspot.com

ஊர் : எடிஸன், நியூ ஜெர்ஸி

நாடு : அமெரிக்கா

வலைப்பூ அறிமுகம் செய்தவர் : சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் அப்போதைய தலைவர், திரு. முத்துசாமி செல்வராஜ். இவர் வலைப்பூ வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் பெரும்பாலான பதிவுகளைப் படித்துவிடுவார். அவரின் மூலம் முதலில் அறிமுகமானது என் பள்ளி ஜூனியராக ஆகிப்போன டுபுக்குவின் வலைப்பூ . அதன் மூலம் அப்படியே தமிழ்மணத்தில் நுழைந்து, இப்பொழுது போதை தலைக்கேறி தமிழ்மணம் பக்கம் வராமல் இருக்க முடியாத நிலமை.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : ஜனவரி 10, 2006

இது எத்தனையாவது பதிவு : 27

இப்பதிவின் சுட்டி(url) : http://elavasam.blogspot.com/2006/06/blog-post.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள் : தமிழ் மறந்து போவது போல ஒரு உணர்வு. முதலில் மற்ற பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன். பின் பின்னூட்டங்கள் இடத் தொடங்கினேன். கடைசியில் நமக்கே நமக்கான்னு ஒரு வலைப்பூ.

சந்தித்த அனுபவங்கள் : ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு சந்திப்பும் ஒரு புது அனுபவம்தான். அதான் எந்த ஊருக்கு போனாலும் யாராவது வலைப்பதிவாளர்களைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறோமே.

பெற்ற நண்பர்கள் : எந்த ஊர்ப் போனாலும் பார்ப்பதற்கு நண்பர்கள். அதில் சிலர் பதிவுகளையும் தாண்டி நல்ல நண்பர்களாய் இருப்பது.

கற்றவை : முதலில் மனசு வெச்சா நம்மால எதுவும் முடியும் என்ற நம்பிக்கை. சீரியஸ் கட்டுரை, நகைச்சுவைக் கட்டுரை, வெண்பா என எல்லாமே கைப்பழக்கம்தான் என்ற புரிதல். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம் : புதிர், பயணக்கட்டுரை, வெண்பா, சமையற்குறிப்பு, சமயக்குறிப்புன்னு நினைச்சதை எழுத முடியுது. நம்ம பதிவில் எல்லாரும் ஆடுற பின்னூட்ட விளையாட்டைப் பத்திக் கேட்கவே வேண்டாம்.

இனி செய்ய நினைப்பவை : புதுசா என்ன? இப்படியே யாருக்கும் மனக்கஷ்டம் வராம பதிவெழுதிக்கிட்டுப் போகவேண்டியதுதான்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: சராசரி ஆசைகள் உள்ள ஒரு சராசரி மனிதன். அவ்வளவுதான். நம்மைப் பத்தி சில விஷயங்கள் சொன்ன பதிவு இது.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம் : இருக்கும் கொஞ்ச நாள் எல்லாரையும் அரவணைத்து சச்சரவு இல்லாமல் விட்டுக்கொடுத்துதான் செல்வோமே.

Monday, May 29, 2006

பசும்பழமும் ஜிகர்தண்டா சண்டையும்

கால்கரி பயணம் - முதல் பகுதி , இரண்டாம் பகுதி

சிவா வீட்டுக்குப் போயாச்சு. போன தடவை அவர் வீட்டைப் பற்றி எழுதும் போது ஒரு முக்கியமான ஆளைப் பத்தி எழுத மறந்துபோச்சு. அது அவரு வீட்டில் வளரும் கிளி. அவர்தான் தன்னைப் பற்றிய குறிப்பில் முன்பு தானொரு பறவை ரசிகர் எனக் கூறியிருந்தாரே. அதன் பெயர் நீமோவாம். அழகாய் சுப்பிரமணி, கல்யாணி எனத் தமிழ்ப் பெயர் வைக்காமல் ஏன் இப்படி எனச் செல்லமாய் கடிந்து கொண்டேன். நல்லா பேசுமாம். ஆனால் எங்கள் கொட்டத்தைக் கண்டு அன்று சற்றே அடங்கியேயிருந்தது. என் மகனைக் கண்டவுடன் மட்டும் குஷியாய்க் கத்தத் தொடங்கியது. தன்னைப் போல் ஒரு சிறிய உருவமாய் இருந்ததால் நட்பா அல்லது போட்டிக்கு வந்த மாதிரியான எண்ணமாவெனத் தெரியவில்லை.

அதற்கான அறை, விளையாட்டுச் சாமான், போர்வை என நன்றாக செட்டில் ஆகியிருந்தது. இவ்வகை கிளிகள் 25 வருடங்கள் வரை வாழுமாம். இதோ அவரின் புகைப்படம்.



நீமோவுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு பின் சிவாவின் வீட்டு முகப்பில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தோம். மலையேறிவிட்டு வந்தது களைப்பாக இருந்ததாலும், வெய்யிலின் கொடுமையால் நாக்கு வரண்டு போனதாலும் சிவாண்ணா தங்கள் ஊரின் லோக்கல் சரக்கான கோக்கனி (Kokanee) என்ற பியரை கொடுத்து உபசரித்தார். பின் தங்கக்கழுகு, அரசமீனவன் போல் அதன் பெயரையும் தமிழ்ப் படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார். கோக்கனி என்ற பெயரே தமிழ்தானே என்றவுடன் ஒரு மாதிரி என்னைப் பார்த்தவரிடம் கோக்கனி என்பதன் விளக்கம் பசும்பழம்தானே என்றேன். அவர் ரொம்ப ஓவாராகிவிட்டது என்று அதற்கு மேல் பசும்பழம் வேண்டாமெனக் கூறிவிட்டார். :-)

அடுத்தது சாப்பாடு. பாவம் அவங்க வீட்டம்மா. இவரு வேலைக்கெல்லாம் போக வேண்டாம் வரவங்களப் பார்த்தா நல்லா நாலு விதமா சாப்பிட்டு வளர்ந்தவங்க மாதிரி தெரியுது. அதனால நீ லீவைப் போட்டு நல்லா சமைன்னு சொல்லி இருப்பாரு போல. அவங்களும் வித விதமா சமைச்சு வெச்சிருந்தாங்க. நாங்க ஊரைச் சுற்றி வந்த பசியில் போட்டோ எல்லாம் எடுக்காம புகுந்து விளையாடிட்டோம். சாரி துளசியக்கா, அதையெல்லாம் உங்க கண்ணில் காமிக்க முடியாம ஆகிப்போச்சு. ஆனாலும் மெனு சொல்லறேன் நோட் பண்ணிக்குங்க - காஞ்சீவரம் இட்லி, சட்னி, வெஜிடெபிள் புலவ், ரெய்தா, அப்புறம் நமக்காக அவரு அடி வாங்கி குறிப்பு போட்ட சால்னா (வெஜிடேரியன் வெர்ஷன்). நாங்க எல்லாம் சைவம் என்பதாலும் அன்று அவங்களுக்கு சைவ வெள்ளியாய் ஆனதாலும் கோழி / முட்டை எதுவும் இல்லை. சாப்பாட்டை பற்றி ஒரு வரி. ஒரு வரிதான். நன்றாக வெட்டினோம். திருமதி சிவா அவர்களே, மீண்டும் ஒரு முறை நன்றி.

சாப்பிட்ட களைப்பு தீர இளைப்பாறிவிட்டு, (யோவ், எதுக்குத்தான் ரெஸ்ட் என ஒரு நியாயம் இல்லையா எனத் திட்டுவோர்க்கு. அதுக்கெல்லாம் கால்கரி போய் ஒரு கட்டு கட்டினால்தான்யா தெரியும்!) பிறகு அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஜிகர்தண்டா. அவ்வளவு நேரம் உப்புக்குச் சப்பாணியாய் ஆடிக்கொண்டிருந்த சிவாண்ணா வீறு கொண்டு எழுந்தார். சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் டேபிள் மீது தனக்கு தேவையான சாமான்களைப் பரப்பினார். எனக்கென்னவோ அவருக்கு இதற்கு முன் ஒரு வண்டியில் அடுக்கி வைத்த பிராக்டீஸ் இருந்த மாதிரி ஒரு பீலிங்!

முன்றைய தினம் ஊற வைத்த கடற்பாசியை கிளாஸில் விட்டு அதற்குமேல் நன்னாரி சர்பத்தையும் பாலையும் விட்டு கலக்கி ஜிகர்தண்டா செய்தார். அவரின் குறிப்பில் 'இன்னும் கொஞ்சம் சுவை வேண்டுமென்றால் இதற்கு மேல் வெண்ணிலா ஐஸ்கீரிம் அல்லது 33% விப்பிங் கீரிம் சேர்க்கலாம்' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்குத் தேவையில்லாமல் இப்படி செய்தது நன்றாகவே இருந்தது. என் மனைவியார் ஜிகர்தண்டா குடித்தது அதுவே முதல்முறை. அதனால் அவர் கடற்பாசி வெஜிடேரியந்தானே என கேட்டு உறுதி செய்து கொண்டார். நன்றாகவே இருந்தது என நான் கூறியவுடன், சிவாண்ணா ஒரு முறை காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார். அந்த வட்டக் கழுத்து டீ ஷர்ட்டில் அவர் அதை எப்படி செய்தாரோ தெரியவில்லை.

ஆனால் அவர் மனைவி 'இதெல்லாம் என்ன ஜிகர்தண்டா. பால்கோவா போடாத ஜிகர்தண்டாவெல்லாம் ஒரு ஜிகர்தண்டாவா?' என சவுண்ட் விட்டார். அட, இதைப் பற்றி அண்ணன் பதிவில் ஒன்றும் சொல்லவில்லையே எனக் காதைத் தீட்டிக்கொண்டேன். இவரும் விடாமல் அதெல்லாம் மேட்டுக்குடிகளின் பழக்கம், ஏழைத் தொழிலாளிகள் குடிப்பது இதைப் போன்ற ஜிகர்தண்டாதான் என வாதாட. நிலமை தமிழ்மணம் போல் மாறத் துவங்கியதால் நான் இது நன்றாக இருக்கிறது. அதுவும் நன்றாக இருக்கும் போலவே தோன்றுகிறது என ஒரு சாலமன் பாப்பையாத்தனமான தீர்ப்பைக் கொடுத்து தப்பித்துக் கொண்டேன். மதுரைக்காரய்ங்களா வந்து தீர்ப்பு சொல்லுங்க. இப்படி ஒரு சாப்பாடும் ஜிகர்தண்டாவும் குடித்த பின் நாங்கள் இருந்த நிலையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. நல்ல வேளை அதற்கு முன் அவரின் தோட்டத்தில் எடுத்த ஒரு படம் இருந்ததால் தப்பித்தேன். இதோ எங்கள் நிலை.



அதன்பின் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்களிடம் விடை பெற்றோம். சிவாண்ணா, ஒரு அருமையான மாலைப் பொழுதுக்கு ( சரி, சரி - அதற்கும் மூன்று பதிவெழுத மசாலா கொடுத்ததுக்கும்) நன்றி உங்களுக்கும் உங்கள் இல்லத்தாருக்கும். திரும்பி வரும் போது விமானப்பயணம் ஒரே கூத்து. அதை சொல்லணும்னா தனிப் பதிவுதான் போடணும். ஆனா அப்படி போட்டா உங்களில் நிறையா பேர் உதைக்க வருவீங்க என்பது தெரியும் என்பதால் ஒரே ஒரு வரி. பத்திரமாய் வந்து சேர்ந்தாச்சு. அவ்வளவுதான்.

Thursday, May 25, 2006

தமிழ்மணத் தாக்கமும் கவிப்பூ திறனாய்வும்

கால்கரி பயணம் பற்றிய முதல் பதிவு

நாங்கள் உணவருந்தச் சென்ற இடம் கால்கரியில் உள்ள மைசூர் பாலஸ் என்ற உணவு விடுதி. உள்ளே சென்று அமர்ந்ததும் அவர்கள் தந்த உணவுப் பட்டியலில் அவர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு இருந்தது. அதில் முதல் வரி - "Welcome to Mysore Palace, the South Indian Chettinadu restaurant".



வித்தியாசமானதொரு கூட்டணியாகத் தெரிகிறதா? சற்றே சிந்தித்தால் கூட்டணி என்றவுடன் நினைவுக்கு வருவது அரசியல்தான். அதிலும் மைசூர் என்றவுடன் நினைவுக்கு வருபவர் யாரென்று தெரியாதா? அதே போல் செட்டிநாட்டின் அரசியல் முகம் நமது நிதியமைச்சர்தானே. சரிதான். மற்ற கட்சிகளும் இருக்கிறதா எனப் பார்த்தால் அங்கு உதயசூரியனுக்கு இடமே இல்லை. அவர்கள்தான் இல்லை தமிழ்க்குடிதாங்கி அவர்களின் சின்னமாம் மாம்பழமாவது இருக்கிறதா எனப் பரிமாறுபவரை அழைத்துக் கேட்டால் அதுவும் இல்லை. ஆக முன்னேறிய வருக்கமான பார்ப்பனர்களும் செட்டியார்களும் இடம் பெற்று இருக்கும் அந்த விடுதியிலே ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் போனதேன்? இது அம்மக்களுக்கு எதிரான திட்டமிட்ட சதியல்லவா? இச்சதிக்கு துணை போகும் அவ்விடுதியின் உரிமையாளர்களுக்கு என்ன முத்திரை குத்த வேண்டுமென நமக்குத் தெரியாதா?

ஒண்ணுமில்லைங்க. இப்போ வரும் தமிழ்மணப் பதிவுகள் எல்லாம் படிச்சு, இப்படித்தான் யோசிக்கத் தோணுது. நான் மாம்பழம் இருக்கான்னு கேட்ட போது என்னை ஒரு மாதிரி பார்த்த சிவா, நான் ஏன் கேட்டேன் என விளக்கியதும் பார்த்த பார்வை இருக்கிறதே. செம காமெடி போங்க. உண்மையை சொல்லுங்க, மைசூர் அரண்மனை என பெயர் வைத்துக் கொண்டு செட்டிநாடு உணவகம் எனச் சொன்னா நல்லாவா இருக்கு? ஆனா உண்மையாகவே அந்த விடுதி மேல கோபம்தாங்க. பின்ன என்ன, தங்கக்கழுகும் இல்லை, மீன்கொத்தியும் இல்லை. சரி நம்ம சரக்குதான் இல்லை, உள்ளூர் சரக்காவது இருக்கான்னு பார்த்தா அதுவும் இல்லை. கடைசியாக அவங்களே முடிவு செய்து தண்ணீரைப் போல இருக்கும் ஹெய்னிகன் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

அந்த உணவுப் பட்டியலின் முதல் பக்கத்தைத் தாண்டிச் சென்றால் அடுத்தது Appetizers எனும் துவக்க உணவுகளின் விபரம். அதில் முதலாவதாக இருந்தது கவிப்பூ வறுவல். கவிதை எழுதினால்தான் அதைப் பிய்த்து பொரித்து எடுக்கிறார்கள் என்றால் இங்கு உண்மையாகவே அதனை வறுத்து கொடுக்கிறார்களே என ஆச்சரியப்பட்டு, அது என்ன என விசாரித்தால் அது காலிஃபிளவர் ஃபிரையாம். காலிஃபிளவரருக்கு கவிப்பூ என கவித்துவமான பெயர் சூட்டிய மகான் யாருன்னு தெரியலை. ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்தால் எங்களுக்கு தமிழில் என்ன சொல்லுவோம் என ஞாபகத்திற்கு வரவில்லை. எனக்கு தெரிந்து பூக்கோஸ் (முட்டைக்கோஸ் போல) எனச் சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கேன். ஆக, கால்கரி சென்றதனால் நானும் சிவாண்ணாவும் காலிஃபிளவருக்கு தமிழ் பெயர் அறிந்து கொண்டோம். இதையும் சிவாண்ணா அவர் பதிவில் என் வருகையால் கிடத்த புதையல் லிஸ்டில் சேர்க்க வேண்டும்.



இதற்குப் பின் விசேஷமாக எந்த நிகழ்வும் இல்லாமல் அன்றைய இரவுணவு முடிந்தது. துளசியக்கா, அங்கு ஒரு மிகப்பெரிய யானை சிற்பமொன்று வைத்திருந்தார்கள். பார்த்தவுடன் உங்கள் ஞாபகம்தான் வந்தது! அதை எப்படி கொண்டு வந்திருப்பார்கள் என்பது என் மனைவிக்கு மிகப் பெரிய கேள்வியாய் இருந்தது. அதிகப்பிரசங்கித்தனமாக பதில் ஏதும் சொல்லாததால் என் தலை தப்பியது. அந்தப் படம் உங்களுக்குத் தனி மடலில் அனுப்பறேன்.

அடுத்த நாள், நாங்கள் திட்டமிட்டபடி பான்ஃப் சென்று வந்தோம். அது Rocky Mountains என அழைக்கப்படும் மலைத்தொடரில் இருந்தது. குளிராக இருக்கும், மழை வருமெனவெல்லாம் பயமுறுத்தினார்கள், ஆனால் நாங்கள் சென்ற அன்று வெயில் காய்ந்தது. ஒரு மலை மீது ஏற Gondola எனும் கம்பி வழி செல்லும் இழுவண்டி ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதை போன்ற வண்டிகளில் நாங்கள் இந்தியாவிலும் மலம்புழா மற்றும் ஹரித்துவாரில் போய் இருக்கிறோம். குஜராத்திலும் ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். அம்மலையில் Sulphur Springs என அழைக்கப்படும் சுனைகள் இருக்கின்றன. வருடமுழுவதும் அங்கு சூடான நீர் வருமாம். அதில் குளித்தால் உடம்புக்கு நல்லதாம். இங்கு எடுத்த படங்களை வேறொரு நாள் பதிவில் போடுகிறேன். (அதாவது எழுத சரக்கு இல்லாமல் போனா படங்காட்டறேன்!)

மலையிலிருந்து கீழே இறங்கி நேராக சிவாண்ணா வீட்டுக்கு போனோம். அங்க என்ன நடந்தது? ஜிகர்தண்டா கொடுத்தாரா? இதெல்லாம் அடுத்த பதிவில். :)

Sunday, May 21, 2006

கால்கரியில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு

நள்ளிரவு நேரம். கால்கரி வந்து இறங்கியாகி விட்டது. மடியில் கனமிருப்பதால் வழியில் பயமாய் இருக்கிறது. விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் எங்களையே பார்ப்பது போல ஒரு உணர்வு. திருட்டு முழியால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என நம்மை நாமே காட்டிக்கொடுத்து விடப் போகிறோமோ என ஒரு பயம். சகஜமாய் பேசிக் கொண்டிருப்பது போல் நடித்தாலும் நெற்றியில் வழிந்து வரும் வேர்வை வெய்யிலினால் இல்லை என்ற உண்மை சுட்டுக் கொண்டே இருக்கிறது. சுங்க சோதனை சாவடிகளைத் தாண்டும் போது இதயத் துடிப்பால் உடம்பு முழுவதும் நடுங்குவது போல் ஒரு உணர்வு. அங்குள்ள ஊழியர் 'தங்கள் வருகை நல்லபடியாக அமையட்டும்' என ஒரு புன்னகையுடன் வாழ்த்தி வரவேற்றது கூட மனதில் படாமல் வெளியே ஓடி வந்து வாடகைக் காருக்கு நிற்கும் பொழுது மெல்ல இதமாய் வருடிச் சென்ற குளிர்ந்த காற்றுதான் எங்களை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தது. நாங்கள் கால்கரிக்குள் நுழைந்து விட்டோம். அதுவும் சிவாவிற்காக கடத்திக் கொண்டு வந்த பொருட்களுடன், யாரிடமும் மாட்டாமல்! இனி நிம்மதியாக விடுதிக்கு சென்று உறங்கலாம்.

யப்பா, கிரைம் நாவல் எழுதற பார்ட்டிங்களா, இப்படி நாலு வரி எழுதறதுக்கு முன்னமே முட்டுது. உங்களுக்கெல்லாம் ஒரு பெரிய கும்பிடு. ஆக மொத்தம் சொல்ல வந்தது என்னன்னா, கால்கரி போயி சேர்ந்தாச்சு. ஒரு பிராபளமும் இல்லை. அய்யா கார்த்திக் அவர்களே, நான் பார்த்த வரை அங்க ஒரு நாயும் இல்லை, நாங்களும் நாய் படாத பாடு படலை. ஆகவே வாங்கி வெச்ச 100 ஊசியையும் வேஸ்ட் பண்ணாம நீங்களே அலகு குத்திக்குங்க.

அடுத்த நாள் மாலை ஒரு போன் போட்டு சிவாவை ஹோட்டல் ரூமுக்கு வரச் சொல்லியாச்சு. அவரும் வேலை நேரம் வரை அலுவலகத்தில் இருந்துவிட்டு அப்புறமா வந்தார். முதலில் ஒரு சிறு அதிர்ச்சி. கோபால் பல்பொடி மற்றும் தமிழ்மணத்தில் அடிக்கடி கூறுவது போலிகளைக் கண்டு ஏமாறாதீர். அதுபோல இன்னும் ஒன்று - போட்டோக்களைக் கண்டு ஏமாறாதீர். அவர், தான் எழுதும் அரபி அனுபவங்களுக்குத் தோதாக இருப்பதால் ஒரு பழைய பஞ்சத்தில் அடிபட்ட போட்டோவைப் போட்டுக்கொண்டு திரிகிறார். ஆள் அப்படி இல்லவே இல்லை. இருந்தாலும் வந்தவர்தான் சிவாண்ணா என நம்பிக்கொண்டு அவரை குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்துவிட்டு என்ன செய்யலாம் என ஒரு சதியாலோசனையில் ஈடுபட்டோம். கடைசியில் அன்று அவருடன் அவரது வீட்டிற்குச் சென்று, பின் அவர் குடும்பத்துடன் வெளியில் சாப்பிடச் செல்வது என முடிவானது.

அவரது இல்லத்திற்கு சென்று அவரது மனைவி மக்களுடன் அறிமுகம் செய்து கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு வலைப்பூக்கள் பக்கம் திரும்பும் போதெல்லாம் மனைவியர் இருவரும் கடுப்பாக பார்க்க, ஆஹா, எல்லார் வீட்டிலும் நிலமை இதுதான் போலிருக்கிறது என சிரித்துக் கொண்டோம். வாரயிறுதியில் செய்யும் வேலைகள் பற்றி பேசும்போது இளவேனிற்காலம் வந்துவிட்டதால் வீட்டைச் சுற்றி இருக்கும் புல்வெளியைக் கொத்தவேண்டுமென கூறினார். சரி, இதுதான் நம் துறையாயிற்றே என இலவச ஆலோசனைகள் சிலவற்றைக் கூறினேன். இலவசமானதால் சிவா சரியாக காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவர் பதிவிலும் சற்று மாற்றி எழுதிவிட்டார். சரியான ஆலோசனைக்கு அணுகவேண்டிய முகவரி - elavasam.blogspot.com. (ஆமாங்க, இந்த மாதிரி எல்லாம் பொடி வைக்கலைன்னா பின்னூட்டம் வாங்கறது எப்படி?)

பிறகு அடுத்த நாள் என்ன செய்யாலாம் என அவரைக் கேட்டு பான்ஃப் (Banff) எனும் மலைவாசஸ்தலத்துக்குப் போய் வரலாம் என முடிவு செய்தோம். ஆனால் கால்கரி மொத்தத்திலும் ஒரு வாடகை கார் கூட கிடைக்கவில்லை. திங்களன்றும் விடுமுறையாம் அதனால் தீர்ந்துவிட்டதாம். சரியென்று ஒரு பேருந்தில், (அட, சரிங்க. உண்மையைச் சொல்லறேன். சொகுசுப் பேருந்துதான்.) முன்பதிவு செய்துவிட்டு சாப்பிடக் கிளம்பினோம்.

அங்கு சென்றால் இரு வேறு உணர்வுகள். திராவிட பாரம்பரியத்தை திட்டமிட்டு புறக்கணிக்கும் ஒரு வேண்டத்தகாத சதி உலகெங்கும் நடப்பது நாமனைவரும் அறிந்ததே. அது கால்கரியிலும் வேரூன்றியிருப்பதை அறிந்த போது என் மனம் சொல்லெண்ணாத் துயருற்றது. அதே சமயத்தில் தமிழ் வளர்ப்பதில் கால்கரி யாருக்கும் சளைக்கவில்லை என அறிந்த போது என் மனம் ஆனந்தக் கூத்தாடியது. இவைகள் பற்றி அடுத்த பதிவில்.

பி.கு. : இக்கட்டுரையின் தலைப்பு திரு.மாயவரத்தான் அவர்களுக்கு சமர்ப்பணம்.

Sunday, May 07, 2006

கொத்ஸு பரோட்டா

என்னடா இவன் இப்படி ஒரு பதிவு போடறானேன்னு பார்க்காதீங்க. இதுக்கு பின்னாடி இருக்கற காரணங்களை முதல்ல சொல்லறேன். ஆபிஸில் ரொம்ப வேலை, எழுதறத விடுங்க தமிழ்மணம் பக்கம் வந்து படிக்கக்கூட முடியலை. அதனால பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. நம்ம ரசிகர்கள் எல்லாம் வேற என்ன ஆச்சு, என்ன ஆச்சுன்னு மெயிலும் போனுமா ஒரே அன்புத் தொல்லை. அது மட்டுமில்லாம இந்த தேர்தல் ஜுரத்தில் வேற எந்த பதிவு போட்டாலும் எடுபட மாட்டேங்குது. இதெல்லாம் விட்டா வீட்டுல வேற ஒரு வேலையும் பண்ணறது இல்லைன்னு கம்பிளெய்ண்ட். பதிவு எழுதறதா அல்லது வீட்டு வேலை பாக்கறதா? நீங்களே சொல்லுங்க.

சென்ற வாரம் ஒரு நாள் சப்பாத்தியும் சாதமும் அலுத்துப் போச்சு. வேறேதாவது செய்யலாமே என சொல்லப்போக, வந்தது வினை. நீங்களே செய்யுங்களேன் என சீறிப் பாய்ந்தது ஒரு ஏவுகணை. நுணலும் தன் வாயால் கெடும் (சிலேடை எல்லாம் இருக்குங்க) என நொந்துகொண்டே என்ன செய்வது என யோசித்து பிரிட்ஜை குடையும்போது முன்பு வாங்கி வைத்திருந்த குளிருறைக்கப்பட்ட (அதாங்க frozen) பரோட்டா பாக்கெட் ஒன்று கண்ணில் பட்டது. சரிதான் இதை வைத்து எதாவது செய்யலாம் என முடிவு பண்ணி கையில் கிடைத்தவையெல்லாம் போட்டு செய்த பதார்த்தம்தான் கொத்ஸு பரோட்டா. நாங்க சாப்பிட்டோம் நல்லா இருந்தது, பக்கத்து வீட்டு நண்பர் கோபி வேற வந்து சூப்பரா இருக்குன்னு உசுப்பேத்தி விட்டுட்டார். ஆகவே மக்களே உங்களுக்காகவே கொத்ஸு பரோட்டா செய்முறை. நல்லா இருந்தா இங்க வந்து சொல்லுங்க, நல்லா வரலைன்னா உங்களுக்கு செய்யத் தெரியலை. என்கிட்ட மீண்டும் எப்படி செய்யணும்ன்னு கேளுங்க. சொல்லித்தரேன்.

முதல்ல என்ன வேணும்ன்னு ஒரு லிஸ்ட் போடுவோமா?

  • Frozen பரோட்டா - 1 பாக்கெட்.
(இது கிடைக்காதவங்க பக்கத்து ஹோட்டலில் வாங்கிட்டு வந்திருங்க. அப்படி நாந்தான் பண்ணுவேன்னு அடம் பிடிக்கறவங்க எப்படி செய்யணும்னு இணையத்தில் தேடிப் பார்த்து பண்ணிக்குங்க.)
  • வெங்காயம் - 2 (கொஞ்சம் பெரிய சைஸ்)
  • தக்காளி - 1 (இதுவும் பெருசுதான்)
  • முட்டை - 3 (சைவப் பார்ட்டிகள் இதை சாய்ஸில் விடவும்)
  • இஞ்சி / பூண்டு - சுவைக்கு ஏற்ப. (பேஸ்ட் கிடைத்தாலும் பரவாயில்லை.)
  • பச்சை மிளகாய் - 3
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி, மிளகுத்தூள் - ஒன்றொன்றும் 1/2 தேக்கரண்டி
  • கடுகு, உப்பு, பெருங்காயம், எண்ணை - தேவையான அளவு
சமைக்க கிளம்பறதுக்கு முன்னாடி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் எல்லாத்தையும் சின்ன சின்னதா நறுக்கி வச்சுக்கோங்க. முட்டையை உடைச்சு அடிச்சு வச்சுக்கோங்க. பரோட்டாவை சின்ன சின்னதாய் பிச்சு வச்சுக்கோங்க. இப்போ செய்முறை.

  • வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடிக்கவிடவும்.
  • பின் அதில் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • பின் வெங்காயத்தை போட்டு கிளறவும்.
  • அதன் மேல் மேற்கூறிய பொடிகள் அனைத்தையும் போடவும்.
  • வெங்காயம் வதங்கிய பின் பிய்த்து வைத்த பரோட்டாவையும் போட்டு கிளறவும்.
  • அதன் மேல் உடைத்து வைத்த முட்டையை விட்டு மேலும் கிளறவும்.
  • இவை நன்றாக வதங்கிய பின் தக்காளியை சேர்த்து கிளறவும்.
  • அவ்வளவுதான்! சூடா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்.
இதுக்கும் கொத்து பரோட்டாவிற்கும் என்ன வித்தியாசம், அது என்ன கொத்ஸு பரோட்டான்னு பேருன்னு கேட்கறவங்களே. கொத்து பரோட்டாவில் சால்னா விடணும் அது இல்லைன்னா செய்யறது கொத்து பரோட்டாவே இல்லைன்னு மதுரைக்காரய்ங்க வைவாய்ங்க. அதனாலதான் இந்த பேரு.

ஆங். சொல்ல மறந்துட்டேனே. தொட்டுக்க சில்லுன்னு kingfisher வாங்கி வச்சுக்குங்க மாமோவ்.

Monday, April 03, 2006

குன்றில் குமரனைக் காண் (வெ.வ.வா)

ஒரு பத்து பதினைந்து நாட்களாய் ரொம்ப வேலை. அதில் இரண்டு நாட்களுக்கு மினியாப்போலிஸும் மூன்று நாட்களுக்கு லண்டன் பயணமும் வேறு அடுத்தடுத்து. பயணக் கட்டுரைன்னு நம்ம ரசிகர்கள் எல்லாம் ஒரேடியா தொல்லை. (எழுதிட கிழிதிடப் போற என்று அன்பான வேண்டுகோள் வைத்தவர்கள்தான் அதிகம். ஹிஹி.) ஆனா வெறும் வேலை சம்பந்தப்பட்ட விஜயமாகிப் போனதுனால சுவாரசியமா ஒண்ணும் இல்லை. இருந்தாலும் கொஞ்சம் எழுதலாமேன்னுதான் இந்தப் பதிவு.

முதலில் உள்நாட்டு விசிட். மினியாப்போலிஸில் இரு நாட்களுக்கு வேலை என முடிவானதும் நம்ம குமரனைக் கூப்பிட்டு 'உங்க ஊர் பக்கம் வரேன்யா. நாம சந்திக்கலாம்' அப்படின்னு சொன்னேன். அவரும் பெருசா 'வாங்க வாங்க எப்ப வரீங்க?'ன்னு கேட்டாரு. ஆளு யாஹூ சாட் பண்ணும்போதே அப்பப்போ அப்ஸ்காண்ட் ஆயிடுவாரே, அவருக்கு முன்னமே விஷயத்தை சொல்லிட்டா பார்ட்டி 'ஐயாம் தி எஸ்கேப்'ன்னு காணாம போயிடுவாரேன்னு யோசிக்காம நானும் வந்து போகிற தேதியை சொல்லிட்டேன். குமரனும் கரெக்ட்டா நான் குடும்பத்தோட லாஸ் வேகஸ், லாஸ் ஏஞ்சலஸ், லாஸ்(ட்டா) டிஸ்னிலேண்ட் என ஒரு டூர் போறேனே அப்படின்னு சொல்லிட்டாரு. சொன்னா மாதிரி காணாமலும் போயிட்டாரு. குமரன், சும்மா டமாஸுக்கு. நீங்க வேற கோச்சுக்காதீங்க. ஸ்மைலி எல்லாம் போட்டுடறேன். :) :) :)

ஆக மொத்தம் விசேஷமாய் அந்த ஊரில் ஒண்ணும் பண்ணலை. நம்ம சிவ புராணம் சிவாவுக்கு மட்டும் போன் பண்ணி பேசினேன். அவர் பேசி கேட்கும்போதே 'அமெரிக்க கண்டமிது ஆனாலுமே, நெல்லைத் தமிழ் வந்து பாயுமே காதினிலே'ன்னு மனசுக்குள்ள ஒரு கும்மாளம், கொண்டாட்டம். எங்கேயோ ஒரு இடத்தில வந்து நம்ம ஊரு பாஷையை கேட்கறதுன்னா சும்மாவா? என்ன மக்கா, நாம சரியாத்தானே சொல்லுதோம். அவரைப் பார்க்கத்தான் முடியாம போயிருச்சு. இவ்வளவுக்கும் அவர் ஆபீஸ் பக்கம் இருக்கற ஒரு பில்டிங்கில்தான் இருந்திருக்கிறேன். அடுத்த முறை கட்டாயம் போய் பார்க்க வேண்டும்.

இந்த ஜீவா வெண்பா வடிக்கலாம் வான்னு கூப்பிட்டாலும் கூப்பிட்டார். இப்போ கிட்டத்தட்ட ஒரு பயித்தியம் பிடிக்கற லெவலுக்கு அடிக்ட்டாயாச்சு. இந்த பதிவையே வெண்பாவா எழுதலாமான்னு யோசிக்கற நிலமைக்கு கொண்டு போய் விட்டுட்டாரு. இப்படி ஆரம்பிச்சு விட்டுட்டு அவர் மட்டும் ஹாயா லீவு போட்டுட்டு போயிட்டார். ஈற்றடி இல்லாம இப்போ நமக்குத்தான் நமநமன்னு இருக்கு. நம்மளை மாதிரி ஒரு நாலு பேராவது இருக்க மாட்டாங்களா? அவங்களுக்கு ஒரு உதவியா இருக்கட்டுமேன்னு ஜீவா வர வரைக்கும் நம்ம இந்த வெண்பா வடிக்கலாம் வா விளையாட்டை இங்க வச்சுக்கலாம். ஜீவா, உங்க பதிவை ஹைஜாக் பண்ணறேன்னு தப்பா நினைக்காதீங்க. நீங்க வந்த உடனே ஹேண்டோவர் பண்ணிடறேன்.

இந்த பதிவுல குமரனை பார்க்க முடியாததை குறிக்கும் படியாக 'குன்றில் குமரனைக் காண்' என்ற ஈற்றடி கொண்டு விளையாடலாம். ஜிரா, குன்று குமரன்னு எல்லாம் எழுதியிருக்கேன், மரியாதையா வந்துருங்க. ஆமா. முதல்ல நம்ம போணி.

மலையில்லா மாநகர்மி னீயாப்போ லீஸில்
அலைந்தேன் குமரனைத் தேடி - வலைப்பதிவீர்!
சொன்னார்கள் காலத்தே சான்றோர் சரியாக
குன்றில் குமரனைக் காண்.

Thursday, March 30, 2006

Voipstunt - வெறும் ஸ்டண்ட்?

Voipstunt . இப்பொழுது இணையத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சேவை இது. கணினியிலிருந்து கிட்டத்தட்ட ஐம்பது நாடுகளில் உள்ள தொலைபேசிகளை இலவசமாக அழைக்க முடியும் என்பதுதான் இந்த சேவை. இந்த நாடுகளில் இந்தியர்கள் அனேகம் பேர் வசிக்கும் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் அடக்கமென்பதால் அதிக அளவில் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தளமாய் விளங்கி வருகிறது. நமது தமிழ் மணத்தில் கூட ஒரு நண்பர் இதைப் பற்றி எழுதியிருந்தார்.

உலகெங்கிலும் இலவச தொலைபேசி அழைப்புகள், 100% சதவிகிதம் இலவசம், என பெரிய எழுத்துகளில் விளம்பரம் செய்யப்படுகின்ற ஒரு தளம் இது. இவர்களின் முதற் பக்கத்திலேயே கிட்டத்தட்ட 10 இடங்களில் இலவசம், முற்றிலும் இலவசம் போன்ற வார்த்தைகள் வருமாறு அமைக்கப் பட்டுள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மையான ஒரு கூற்று என்பதைப் பார்ப்போம். இணையத்தில் இருக்கும் நண்பர்கள் மட்டுமின்றி பதிவிடப்பட்டிருக்கும் நாடுகளில் உள்ள தொலைபேசி எண்களை இலவசமாக அழைக்கலாம் என்னும் விளம்பரத்தின் கீழே பொடி எழுத்துகளில் தெரியப்பட்டிருக்கும் விதிமுறைகள் கீழ் வருமாறு.

'இத்தளத்தைத் தவறாக பயன்படுத்த இயலாமல் செய்வதற்காக இலவசமாக அழைக்கக்கூடிய வசதி ஒரு நிமிடத்திற்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. அதற்குமேல் இவ்வசதியை வேண்டுவோர், ஒரு நிலுவைத்தொகையை செலுத்தவேண்டும். இந்தத்தொகை நீங்கள் வெறும் இலவச சேவையை மட்டும் உபயோகிக்கும் வரையிலும், அதிகபட்சமாக 120 நாட்கள் வரையிலும் தொடப்படமாட்டாது.'

அதாவது 120 நாட்களுக்குப் பின் இத்தொகை அவர்களைச் சேர்ந்துவிடும். குறைந்த பட்சமாக 10 யூரோவாவது செலுத்தப்பட வேண்டும். ஆக மொத்தம், 120 நாட்கள் இந்த இலவச சேவையை உபயோகிக்க 10 யூரோ கொடுக்க வேண்டுமாம். ஆனால் இது இலவச சேவையாம். எப்படி இருக்கிறது பாருங்கள் இந்தக் கதை. இந்த மாதிரி தவறுதலாக வழி காட்டக்கூடிய விளம்பரங்களை எதிர்த்து யாரேனும் தட்டிக் கேட்க வேண்டாமோ? 'There is no such thing as free lunch' என்னும் கூற்றைத்தான் இத்தளம் மெய்ப்பிக்கின்றது.

இதை ஒட்டி நான் முன்னமே எழுதிய ஒரு பதிவையும் இப்பொழுது மீள்பதிவு செய்கிறேன்.

மொத்த ஆளுமை விலை

முன்பெல்லாம் வன்பொருள் வாங்கினால் பல்வேறு மென்பொருட்களை இலவசமாக தருவார்கள். இன்றைக்கோ நிலமை தலைகீழ். வன்பொருள் விலைகள் சடசடவென சரிய, மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதுவும் சில சமயம் சகாய விலையில் கிடைத்தாலும், upgrade செய்யும் பொழுது மூக்காலே அழ வேண்டியிருக்கிறது. ஜோசஃப் சாரை இது பற்றி விரிவாய் ஒரு பதிவு போட சொல்ல வேண்டியதுதான்.

மென்பொருள் என்றில்லை. ப்ரிண்டர்களை கிட்டதட்ட இலவசமாகவே கொடுத்து பின் அதற்கான கேபிள், மசி என்று கடனட்டையை நிரப்ப செய்யும் வியாபார யுக்திகள். இன்னும் சில தளங்களில், இலவசமாக உங்கள் புகைப்படத்தை அச்சிட்டு தருகிறோம், வெறும் தபால் கட்டணம் தந்தால் போதுமென விளம்பரம் செய்து பல மடங்கு கட்டணம் வசூல் செய்யும் வசூல்ராஜாக்கள். எங்களிடம் இரு வருட சேவைக்கு ஒப்பந்தம் செய்து கொண்டால், இலவசமாய் razrயும் rockrயும் தருவோம் எனச்சொல்லி அதிக விலை திட்டங்களை தலையில் கட்டும் தொ(ல்)லைபேசி நிறுவனங்கள்.

இங்கு இதெல்லாம் போதாதென்று mail in rebate என்று ஒரு கொடுமை. (இதற்கு தனிப்பதிவுதான் போடவேண்டும்.)

எதற்காக இதெல்லாம் சொல்கிறேன் என்றால், இலவசமாய் கிடைக்கிறது, சகாய விலையில் கிடைக்கிறது என்று எதையாவது வாங்கிவிட்டு அதற்கு தீனி போட்டு கட்டுப்படியாகாமல் கஷ்டப்படாதீர்கள்.

ரொம்ப சீரியஸாய் போச்சோ? வீட்டில் உள்ள (இலவசமாய் கிடைத்த) பிரிண்டரில் மசி தீர்ந்துவிட்டது. புதிய மசி தோட்டாவிற்கு (cartridge என்றால் தோட்டா தானுங்களே) கொடுத்த விலையை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போலிருந்தது. அதான். :)

இதற்கு பின் இன்றைய இலவசமாய் ஒரு நகைச்சுவை துணுக்கு. சற்றே அசைவ வகை. ஆகவே பிடிக்காதோர் மன்னித்துவிட்டு அடுத்த பதிவிற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை ஆங்கிலத்திலே சொல்வது சற்றே எளிதாக இருக்கிறது. ஆகவே மற்றுமோர் மன்னிப்பு.

"There is sex for money and there is sex for free. And sex for free costs more!"

புரிந்ததா. இதைத்தான் TCO - Total Cost of Ownership (தமிழிலே என்னங்க?) என்று குறிப்பிடுகின்றனரோ.

Monday, March 13, 2006

கணக்கொன்று போட்டேன்

அலுவலகத்தில் பணி கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதனால் புதிதாகப் பெரிய பதிவொன்றும் போட முடியவில்லை. ஆனாலும் நண்பர்கள் வருகை இருப்பதை StatCounter மூலம் பார்க்கிறேன். அவர்கள் ஆவலுக்காக ஒரு சிறிய புதிர்.

பி.பி.சி.யில் பாட்டொன்று கேட்டேன் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. அந்நிகழ்ச்சியை நடத்துபவர், 'பாட்டொன்று கேட்டேன்' என்று மிக அழகாக சொல்லுவார். அதைப் கேட்டதிலிருந்து அதைப்போலவே ஒரு தலைப்பு வைக்க ஆசை. வைத்தாகிவிட்டது. அவர் சொல்வதைப் போலவே ராகமாய் படித்துக் கொள்ளுங்கள்.

நண்பர் பாலராஜன்கீதா அவர்கள் தனிமடலில் இப்புதிரினை அனுப்பி, வேண்டுமென்றால் பதிவிலும் போட்டுக்கொள்ளுங்கள் என அனுமதியும் தந்தார். நன்றி நண்பரே.

நான் போட அதிக சமயம் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், நன்றாக இருந்ததால் பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணம். நீங்களும் முயன்று பாருங்களேன். பதிலை மட்டும் தராமல் போட்ட விதத்தையும் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

வழக்கம்போல் விடைகள் உடனடியாகப் பதிவிலிடப்படா. சரியா தவறா என்ற எனது பதிலே பதிவிலிடப்படும். இப்பொழுது புதிர்.

அ + ஆ = இ
ஈ - உ = ஊ
எ = ஏ X ஐ

இங்கு அ முதல் ஐ வரையான எழுத்துகளுக்கு 1லிருந்து 9 வரையான எண்களைப் பொருத்த வேண்டும். ஒரு எழுத்துக்கு ஒரு எண்தான் வரும். எல்லா எண்களும் ஒரு முறை வர வேண்டும். பொருத்திய பின் மேலிருக்கும் சமன்பாடுகள் சரியாக வருமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அது மட்டுமல்லாது இ / ஊ = ஐ என்ற சமன்பாடும் சரியாக வரவேண்டும்.

எங்கே முயலுங்களேன். மறக்காமல் போட்ட விதத்தையும் சொல்லுங்கள்.

Sunday, March 05, 2006

ஒரு வாரமாய் பௌர்ணமி

இப்படித்தான் சொல்லத் தோணுது. பின்ன நம்ம நிலா இந்த வாரம் பூரா இப்படி ஒளி வீசும்போது பௌர்ணமி இல்லாம என்னவாம். வாழ்த்துக்கள் நிலா.

படமெடுத்து போடறாங்க, சந்தோஷமா எப்படி இருக்குக்கறதுன்னு சொல்லறாங்க, கல்கியில வந்த கதையை எடுத்து போடறாங்க, என்னென்னவோ பண்ணறாங்க. அதுல நமக்கு தெரிஞ்சது இந்த போட்டிதான். பூப்பறித்த அனுபவம்ன்னு அவங்க சொல்லிட்டாங்க. ஒரு போட்டியாளனா, சில சமயம் பார்வையாளனா நான் என்ன செஞ்சேன், திரைக்குப் பின் என்ன நடந்தது, எப்படி உணர்ந்தேன்னு சொல்லலாமேன்னுதான் இந்த பதிவு.

போட்டிக்கு முன்னால்

நம்ம நடத்துற புதிர்ப் போட்டிகளினால நிலாவைத் தெரியும். தெரியும்ன்னா என்ன, ஒரு சக பதிவர் என்ற முறையில் தெரியும் அவ்வளவுதான். இவங்ககிட்ட இருந்து ஒரு தனி மடல் வருது. நான் ஒரு போட்டி வைக்கப் போறேன், கலந்துக்கறீங்களான்னு. என்னடா இது, நமக்கு போட்டியா, இல்லை நமக்கே போட்டியான்னு ஒரு சந்தேகம். ரெண்டு, மூணு தடவை படிச்சு பாத்துட்டுதான் நான் ரெடி, நீங்க ரெடியான்னு பதில் போட்டேன். அமெரிக்காவில் இன்னும் ஒரு ஆளு வேணுமேன்னு திரும்பி வந்தாங்க. நம்ம இன்னொரு பிளாக்கர் ஐ.டி. பதிவு செஞ்சு டபுள் ஆக்சன் குடுக்கலாமான்னு ஒரு ஐடியா. அப்புறம் சரின்னு நம்ம கௌசிகனை இழுத்துவிட்டாச்சு.

அப்புறம் நமக்கு தோழர், நம்ம கைப்புன்னு சொன்னாங்க. சரி, காமெடி கிளப் அப்படின்னு அணிக்கு பேர் வச்சுக்கலாமேன்னு மனக்கோட்டை எல்லாம் கட்டி அவருக்கு மெயில் போட்டா ஆளு அப்பீட்டு. என்ன ஆனாருனே தெரியலை. நிலா நம்ம கிட்டயே வந்து இந்தியாவில் சப்ஸ்டிட்யூட் ஒரு ஆளைப் பிடிங்கன்னு சொன்னாங்க. சரின்னு அதுக்கும் நமக்கு புதிர் போட உதவர பெரியவர் பேரை சொல்லியாச்சு. சொல்லி இந்த பக்கம் திரும்பினா அடுத்த மெயில். ஜிரா விளையாட முடியாதுன்னு சொல்லிட்டார், அதனால அவர் இடத்திற்கு ஹரிஹரன்ஸை தள்ளியாச்சு. இன்னும் ஒரு ஆளைப் பிடியுங்கன்னு. எனக்கு ஒரு சந்தேகம். இப்படி ஆள் பிடிக்கிற திறமையை சோதிக்கத்தான் போட்டியோன்னு. (இது ஆறாம் சுற்றில் உண்மையாச்சு. அது பத்தி அப்புறம்.) நானும் சளைக்காம நம்ம பதிவுக்கு வரவங்களுக்கு மெயில் அனுப்பி பார்த்தா அவங்க எல்லரும் இந்தியாவிற்கு வெளில இருக்காங்க. (இதுல ஒருத்தரை நம்ம ரசிகர் மன்ற தலைவின்னு (ர.ம.த.) எல்லாம் எழுதிட்டாங்க. அதெல்லாம் இல்லைங்க. நீங்க மன்னிச்சு விட்டுருங்க. உங்களுக்கு ஓக்கேன்னா சொல்லுங்க. உங்க பேரைச் சொல்லறேன்.) ஆக மொத்தம் ரெண்டு பக்கமும் கமிஷன் வாங்கியிருந்தா இந்நேரம் கொஞ்சம் பணம் பண்ணியிருக்கலாம். ஹூம்.

கடைசில நமக்குத் தோழர் குமரன்னு முடிவாச்சு. நீங்க ரெண்டு பேருமே அமெரிக்காவில் இருக்கறதுனால உங்களுக்கு கொஞ்சம் பலகீனம்தான், சமாளிங்கன்னு வேற நிலா சொல்லிட்டாங்க. சரிதான் ஆடிப் பார்த்திட வேண்டியதுதான் என களத்தில் இறங்கியாகிவிட்டது. இதுக்கு நடுவிலே, நம்ம 4X4 பதிவுல இந்த போட்டியை பத்தி சொல்லப் போக, நீ எப்படி சொல்லலாம்ன்னு சண்டை வேற போட்டாங்க இந்த நிலா. இதற்கு வேற ஒரு KSKV (அதாங்க கதவை சாத்தி கால்ல விழறது) பண்ண வேண்டியதாப் போச்சு.

போட்டி
ஆறு சுற்று. எல்லாவற்றிலேயும் நல்லா செய்தாதான் வெற்றி. இவ்வளவுதான் தெரியும். இந்த ஆழமான அறிவோட போட்டியில இறங்கியாச்சு. ஒவ்வொரு ரவுண்டா பாக்கலாம்.

சுற்று 1
போட்டியன்று அமெரிக்க காலை. கண்விழித்தால் சுற்று 1-க்கான கேள்விகள் வந்திருந்தது. மொத்தம் 5 கேள்விகள். அதில் மூன்றுக்கு பதில் வேற சொல்லி முடித்துவிட்டார்கள். சரிதான் நமக்கு இந்த போட்டி சரிவரப் போவதில்லை என்றே முடிவு கட்டியாகிவிட்டது. பின் குமரனுடம் ஆலோசித்து இரண்டு தவறான விடைகளுக்குப் பின் ஒரு சரியான விடையை சொல்லியாகி விட்டது. நம்ம ர.ம.த (இப்போதைக்கு இப்படி சொல்லறேன், அவங்க பேர் போட அனுமதி தந்தாங்கனா அவங்க பேரைத்தான் படிக்கணும். ஓக்கே.) வேற தனிமடலில் விடையை சொல்லிப் போட சொன்னார்கள். மீதமிருந்த கேள்விக்கு விடையை தேடி நம்ம நண்பர் குழாமை முடுக்கி விட்டேன். ஐந்தே நிமிடங்களில் விடை வந்தது. ஆனால் நான் பார்க்காமல் விட்டுவிட்டேன். பார்த்து போடுவதற்குள் கௌசிகன் முந்தி விட்டார். மன்னியுங்கள் பதில் தந்த நண்பரே. ஆகவே கிடைத்தது 10 புள்ளிகள். விட்டது 40.

சுற்று 2
தலைவரை பத்தி பேசி உசுப்பேற்றி விட்டார்கள் நிலா. உடன் நண்பர்கள் குழாமுடன் ஆலேசனை. நல்லதாக ரெண்டு ஐடியாக்கள் கிடைக்க, அதை செய்வதற்குள் செல்வன் அதை ஒட்டியே ஒரு விளம்பரம் போட, மீண்டும் வரைபலகைக்கு. இந்த சுற்றுக்கு நேரம் இருக்கிறதே. பிறகு வரலாம் என்று விட்டோம். நடுவில், வந்தேண்டா பால்க்காரனை உல்டா செய்து குமரனுக்கு அனுப்பினேன். அவர் நமது தமிழை சரி செய்து, அவர் பங்குக்கு வார்த்தைகளைப்போட்டு விட்டு இதனை அனுப்பி விடலாம் அல்லது முதலில் ஆன மாதிரி வேறு யாராவது இதைப்போல் செய்துவிடப்போகிறார்கள் என சொன்னார். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. இது மிக அருமையாய் வந்திருக்கிறது என நாங்களே பாராட்டிக் கொண்டு அனுப்பி விட்டோம். அதன் பிறகு நண்பர்கள் திட்டியதை அச்சிலேற்ற முடியாது. விட்டு விடுவோம். நல்ல வேளை இம்முடிவு வரும் பொழுது எங்கள் அணி வலுவான நிலையில் இருந்ததால் தப்பித்தோம்.

சுற்று 3
இது கொஞ்சம் சுலபமாகவே இருந்தது. குமரனும் நானும் பேசி பதிலை அனுப்பி விட்டோம். நமது ர.ம.தவும் விடை சரியானதுதான் என உறுதி செய்தார். கூடவே மேலும் இரு விடைகளையும் போட்டோம். சிக்கலில்லாத சுற்று. குமரன் சொன்னது போல் இந்த சுற்று தான் எங்கள் தன்னம்பிக்கையை மீட்ட சுற்று. நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்தது கலந்து பேசிக்கொள்ள உதவியாய் இருந்தது. இச்சுற்றின் பின்னூட்டத்தில்தான் ர.ம.தவிற்கு அப்பட்டம் கிடைத்தது! இச்சுற்றின் இறுதியில் நாங்கள் மல்லிகை அணியுடன் கூட்டாக இரண்டாமிடத்தில் இருந்தோம்.

சுற்று 4
மீண்டும் 5 கேள்விகள் இந்திய பகல் நேரத்தில். ஆனால் சுற்று ஒன்றின் அனுபவம் காரணமாக அதிகாலையிலேயே எழுந்தாயிற்று. அதற்குள் தேவ் இரு பதில்களைப் போட்டு இருந்தார். நானும் கஷ்டப்பட்டு ஒரு பதிலைப் போட்டேன். மீதம் இருந்தது இரு கேள்விகள். என்ன தேடியும் விடைகள் கிடைக்கவில்லை. குமரன் நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு தனிமடல் அனுப்பி விடைகளை வாங்குகிறேன் என்றார். வாங்கியும் விட்டார். அதில் இவரைத் தவிர வேறு யாருமே மெயில் அனுப்பவில்லை என்று இருவரும் சொன்னதுதான் இவரின் முயற்சிக்கு சர்டிபிகேட். நிலா சொல்வது போல் இதுதான் இனிஷியேட்டிவ். பலருக்கும் இந்த சுற்று பிடிக்கவில்லை. ஆனால் நிலாவின் கருத்துகளை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆக மொத்தம் எங்களுக்கு 30 மதிப்பெண்கள். முக்கியமாக முதலிடத்தில் இருந்த சாமந்தியினருக்கு எதுவுமில்லை. இப்பதிவின் பின்னூட்டங்களை கட்டாயம் படியுங்கள். குமரனும் நானும் ஆடிய பிள்ளையார், முருகன் விளையாட்டு எனக்குப் பிடித்தது.

சுற்று 5
அணியினர் இருவரும் கலந்தாலோசித்தால் மட்டுமே பதில் கூற முடியும் என்பதான கேள்விகள். நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்ததால் மிகச் சுலபமாக முடித்துவிட்டோம். விதிமுறைகளை சரியாகப் படிக்காததால் ஒரு 5 புள்ளிகள் கோட்டை விட்டேன். குமரனின் பெருந்தன்மை என்னை திட்டவில்லை. அது மட்டுமில்லை இப்பதிவின் பின்னூட்டத்தில் 'இங்கேயும் கொஞ்சம் அவசரப்பட்டு 5 புள்ளிகளைத் தவறவிட்டுட்டோம். ' என எழுதி என் தவறில் அவரும் பங்கெடுத்துக்கொண்டார். Hats Off Kumaran. இருந்தாலும், இச்சுற்றின் முடிவில் நாங்கள் முன்னணியில்.

சுற்று 6
இதுதாங்க நம்ம சுற்று. 5-ம் சுற்று வரும் போழுதே இதுவும் வந்துவிட்டது. ஆனால் அதைப் போடும் மும்முரத்தில் இதை கவனிக்கவில்லை. ஐந்தாம் சுற்றை முடித்துவிட்டு பார்த்தால் ஒரு வோட்டு கூட விழவில்லை. நிலா வேறு பிரச்சாரம் செய்யலாம் என்று முடுக்கிவிட்டார். என்ன செய்வது என்று ஆலோசனை. குமரனுக்கு அதிகம் பேரைத்தெரியுமென்பதால் அவர் வீடு வீடாகச் சென்று வோட்டு கேட்பது என்றும், நான் பதிவு போட்டு பொது மக்களை அழைப்பது என்றும் முடிவானது. நண்பர்களையும் வோட்டு சேகரிக்க அழைத்தோம். இந்த உத்தி சரியாக வேலை செய்ததால் மற்ற அணியினராலும் காப்பியடிக்கப்பட்டது.

அது மட்டுமில்லாமல் இரண்டாம் சுற்றின் முடிவுகள் தெரியாததால், இரண்டாமிடத்திலிருந்த சாமந்தியை விட குறைந்தபட்சம் 25 வாக்குள் பெற்றால் போட்டியை வென்றுவிடலாம் என கணக்கிட்டு, இதுதான் நமது இலக்கு என செயல்பட ஆரம்பித்தோம். நான்காம் சுற்றில் உதவிய சிவாவும், மதியும் முதலிரண்டு வோட்டுக்களை பதிய இச்சுற்று எங்களுக்கு சாதகமாகவே தொடங்கியது. செல்லக்கூடிய வோட்டுகளில் முதல் 20 வோட்டுகள் எங்களுக்கு விழுந்தது ஆச்சரியம்தான். சாமந்தியினரை விட 22 வாக்குள் மட்டுமே அதிகம் பெற முடிந்தாலும், (எங்கள் இலக்கு 25) இச்சுற்று எங்களுக்கு மகத்தான வெற்றி என்பதில் சந்தேகமில்லை. நிலா சொல்லியது போல் உழைப்பில்லாமல் இவ்வெற்றி வந்திருக்க வாய்ப்பேயில்லை. இதில் குமரனின் பங்கு அதிகம். சாமந்தியினர் இருவரும் வலையுலகிற்கு புதிது என்பதால் அவர்களுக்கு அதிகம் பேரைத்தெரியாமல் போனது அவர்களின் பலவீனமாய் ஆனது. எங்களுக்கு பெரும் பின்னடைவைத் தந்த இரண்டாம் சுற்றிற்கு மாற்றாக அமைந்தது இச்சுற்று.

வெற்றி! வெற்றி! இப்படியாக போட்டியை வென்றாகியாயிற்று.

போட்டிக்கு பின்

இதுவே பெரிய பதிவாய் போனதால் ஒரு வரி செய்திகள் வடிவத்தில்.

முதலாவது, இந்த போட்டியை, நினைத்து, நடத்தி, வெற்றிகண்ட நிலாவிற்கு பாராட்டுகள். கூடவே நம்ம குமரனுக்கும், வோட்டு போட்ட மக்கள்களுக்கும், உதவிய நண்பர்களுக்கும் எனது நன்றி. (ஆமாம் இப்பதான் பார்த்தேன். உங்க அறிமுக பதிவுல 'தமிழ்மணம் கொஞ்ச நாளா டல் அடிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்.'ன்னு எழுதியிருக்கீங்களே நிலா, நாங்க போட்டி எல்லாம் நடத்தி, பின்னூட்ட சாதனையெல்லாம் பண்ணினது உங்க கண்ணில் படலையா?)

நல்ல நண்பர்களின் அறிமுகம். முக்கியமாக தருமி அய்யா. (ஆமாம் அய்யாதான், தருமி அய்யா!). அது மட்டுமில்லாது தெரியாத பலருக்கு நம்மை தெரிய வைத்த ஒரு சந்தர்ப்பம்.

நாங்கள் இருவருமே அமெரிக்காவில் இருந்த ஒரு பலகீனத்தை பலமாய் மாற்றி வெற்றி கண்டதில் கொஞ்சம் கூடுதல் பெருமை.

நமக்கும் புதிர்கள் அல்லாத சில வேலைகளைச் செய்ய முடியும் எனக்கண்டது ஆச்சரியம்தான். இதனால் புதிர்களிலிருந்து கொஞ்சம் விலகி வேறு பதிவுகளும் போடலாமென ஒரு ஐடியா. என்ன சொல்லறீங்க?

வீட்டில் இரு நாட்கள் ஒன்றும் செய்யாமல் இருந்ததற்கு பரிகாரமாக, நிலா பரிசாக தரும் DVDயை துணைவியாருக்கு பிடித்ததாய் தேர்ந்தெடுக்கச் சொல்லி ஒரு மாதிரி சரிகட்டிவிட்டேன். (அய்யய்யோ, நமக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு சொல்லிட்டேனே)

நிலா, தருமி, தேவ் எல்லாரும் சேர்ந்து இ.கோ., மேஸ்திரி, கொளுத்து என்றெல்லாம் அழைக்கப்பட்ட நம்மை கொத்ஸ் ஆக்கிவிட்டார்கள். இப்படியே போய் தக்காளி கொத்ஸு, கத்திரிக்காய் கொத்ஸு என மாறி, கடைசியில் யோவ் தக்காளி, என்ன குண்டு கத்திரிக்காய் என்றெல்லாம் அழைக்கப்படாமல் இருந்தால் சரி. :)

நாம் ரெகமெண்ட் செய்த கௌசிகனும், ஹரிஹரன்ஸும் நன்றாக விளையாடி மானத்தை காப்பாற்றி விட்டார்கள். வாழ்த்துக்கள் நண்பர்களே.

இரண்டு நாட்களாக, இந்த போட்டியினால் செய்யாமல் விட்ட பணிகளை செய்ய வேண்டி வந்ததாலும், தூங்காமல் இழந்த தூக்கத்தை ஈடுகட்ட வேண்டியிருந்ததாலும், இப்பதிவு கொஞ்சம் லேட். மன்னிச்சுக்கோங்க. மறக்காம நிறையா பின்னூட்டம் போடுங்க. ஓக்கேவா?

Tuesday, February 28, 2006

உடன்பிறப்பிற்கு ஒரு கடிதம்

உடன்பிறப்பே,

கழக வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு போர் தொடங்கியிருக்கிறது. நாம் புதிர்தானே போட்டுவிடலாம் என்று எண்ணியிருக்க 'பூப்பறிக்க வருகிறோம்' போட்டி இப்பொழுது நமது தமிழின பெருமையை உலுக்கிப்பார்க்கும் ஒரு போராய் மாறிவிட்டது. வால் நீட்டும் பகைப்படை நடுங்க வேண்டுமானால், நாம் பண்பாடு குறையாமல் சீறிக்காட்டவேண்டும். என்ன இது, ஒரு இணையப்போட்டிதானே என்று மந்தமாய் இருந்துவிடுவாயோ என்ற ஐயப்பாட்டுடனே இக்கடிதத்தைத் தொடங்குகிறேன்.

வெண்முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதியாம் நம் நிலா அவர்கள் இணையத்தின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்கும் வகையில் ஒரு போட்டியை அறிவித்துவிட்டார். இதில் நம் அணியினர் பெரும் வெற்றியைப் பெற்று, இணைய வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டித்தான் நான் மீண்டும் மீண்டும் கடிதமெழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டிய பணி எளிதானதுதான். நாளைக் காலை (மார்ச் முதலாம் நாள்) இந்திய நேரப்படி காலை மூன்று மணிக்குள் உங்கள் பொன்னான வாக்குகளை நம் ரோஜா அணியினருக்கு அளித்து, http://nilaraj.blogspot.com/2006/02/6_28.html என்ற தளத்திற்கு சென்று பின்னூட்டமிடு்.

இதோ கிளம்பிற்று காண் தமிழ் சிங்கக்கூட்டம்,
கிழித்தெறிய தேடுது காண் பகைக்கூட்டத்தை,
மனம் பெரிய இணையத்தில் ரோஜாக்கள் அல்லார்
வால் நீட்டினால் சீறிடும் பாம்பாய்
செயலில் காட்டிடும் பணியாய்
செறுமுனைக்கு அஞ்சா இளைஞர் அணியாய்
செம்மாந்து கிளம்பிடு

கண்மணிகளாம் உடன்பிறப்புகாள்
இப்போதே இப்பயணம் தயாராகட்டும்
பின்னூட்டம் இட்டிடுவோம்
பகைவரை முட்டிடுவோம்.

Monday, February 27, 2006

பூப்பறிக்க வருகிறோம் சுற்று 2

இதுதான் எங்கள் விளம்பரம் - பாண்டி நாட்டு தங்கம்ஸ்.

விளம்பரம் என்றாலே, பாட்டும் ஆட்டமும் வேணும். அது துணிமணியா இருந்தாலும் சரி, பல்பொடியா இருந்தாலும் சரி. சினிமா விளம்பரம் அது இல்லாம முடியுமா? அதனால பாட்டு வேணும்ன்னு முடிவாச்சு.

தமிழ் தெரியாத குழந்தைகளும் ஆடுவது ரஜினி பாட்டுக்குதான். அதனால் அவர் பட விளம்பரத்தில் அவர் பாட்டு வருவதுதானே முறை. ரஜினிக்கு மிக பொருத்தமான பாட்டு என்று பார்த்தால், நம்ம வந்தேண்டா பால்காரன் பாட்டுதான். அதனால் அதையே கொஞ்சம் ரெடி பண்ணி, ரஜினி டான்ஸோட அனுப்பறதுன்னு முடிவு பண்ணியாச்சு. இப்போ பாட்டு. (பேக்கிரவுண்ட் இசைக்கு இங்க போய் கிளிக் பண்ணிக்கோங்க.)

வந்தேண்டா ஜுலாவிக்கு,
அட நான்
சிவாஜி பத்தி பாட போறேன்
புது பாட்டு கட்டி ஆட போறேன்
(வந்தேண்டா)

எங்களுக்கு ஷூட்டிங்குக்கு
நல்லதொரு இடம்வேணும் தம்பி
அதுக்காத்தான் ஜூலாவிக்கு
வந்தோமே உங்களையே நம்பி
(வந்தேண்டா )

நியூஸிலாந்து சுவிட்சர்லாந்து எல்லாமே போயிருக்கேன்
டூயட்டுக்கு தான்னாகுமப்பா
இங்லாந்தில் அயர்லாந்தில் ஷூட்டிங்கில் நானிருந்தா
கூட்டம்தான் சேருதப்பா
(நியூஸிலாந்து)

பாட்ஷா படம்தான் வரலாறு
படையப்பா சொல்றேன் நீ பாரு
சிவாஜி படத்தை எதிர் பாரு
க்ளைமேக்ஸ் சீன்தான் வெகுஜோரு

நீ அனுமதி இன்னும் கொடுக்கலையே
படபிடிப்பு இன்னும் முடிக்கலையே
(வந்தேண்டா)

தந்தனா தந்தனா தந்தனானா
தந்தனா தந்தனா தந்தனானா

ஜூலாவில் லொக்கேஷன் எல்லாமே பாத்தாச்சு
ரொம்பவும்தான் சூப்பருங்க
பகலெல்லாம் பனியாச்சு, இரவெல்லாம் நிலவாச்சு
ஷூட்டிங்குக்கு சூப்பருங்க
(ஜூலாவில்)

டூயட் எல்லாம் நான் பாட
ஜூலா தேவதைங்க தேவைதானுங்க
சண்டை எல்லாம் நான் போட
உங்கூரு மலைங்க தோதாச்சுங்க

இப்போ வேணும் உங்க அனுமதிதான்
அதை தந்தா கொடுப்போம் வெகுமதிதான்
(வந்தேண்டா)
(வந்தேண்டா)

இந்த பாட்டையும் ஆட்டத்தையும் பார்த்தா ஷூட்டிங்குக்கு அனுமதி என்ன, ஜூலாவிக்கே முதல்வரா ஆக்கிடுவாங்க. என்ன சொல்லறீங்க?

Friday, February 24, 2006

புதிரா? புனிதமா? - விடைகள்

புதிரா? புனிதமா? - இதை பட்டிமன்ற தலைப்பா வெச்சிருந்தா சாலமன் பாப்பய்யா (ஓ! இப்போ இவரை பத்தி பேசக்கூடாதோ) கூட தேவையே இல்லாம புதிரே அப்படின்னு ஏகோபித்த முடிவா இருந்திருக்கும். இப்படி அமோக வரவேற்பைக் கொடுத்த மக்களுக்கு நம் நன்றி. சும்மா 200 பின்னூட்டங்களுக்கு மேல் போட்டுத்தள்ளிய நண்பர்களுக்கு நன்றியோ நன்றி. இவ்வளவுக்கும் தொடர்ந்து புதிர்களை விடுவிக்க முயன்றதென்னவோ பத்து பேர்கள் கூட இல்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஜெயஸ்ரீ, கோ.இராகவன், சதீஷ், மதுமிதா, பெனாத்தல் சுரேஷ், கௌசிகன், பாலராஜன்கீதா - அவ்வளவுதான். அடிக்கடி வரும் பெரியவர் ஹரிஹரன்ஸ், சின்னவன், கைப்புள்ள, தியாக், சீமாச்சு போன்றவர்களைக் காணவே காணோம். என்ன விஷயமோ தெரியவில்லை.

இந்த விடைகளைப் போடாமல் சரியா தவறா என்று மட்டும் சொல்வது அனைவரையும் எல்லா புதிர்களையும் ஆர்வத்தோட போட வச்சுது. அதனால் இனி வரும் புதிர் பதிவுகளிலேயும் இந்த டெக்னிக் தொடரும். என்ன எனக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தி. நம்ம பொதுஜனத்திற்காக இது கூடவா செய்ய மாட்டோம்.:)

ரீபஸ் போட்டு போரடிக்கிற மாதிரி ஒரு எண்ணம். அடுத்தது வேற மாதிரி புதிர் போடலாமா இல்லை புதிர்களை விட்டு விலகி வேற எதாவது போடலாமான்னு ஒரு யோசனை. நீங்க என்ன சொல்லறீங்க? உங்க ஐடியாவை சொல்லுங்க.

விடைகளைப் பார்ப்போமா


1. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் - பணக்கார குடும்பம்
2. பராத்திரிகல் - பகலில் ஒரு இரவு
3. கள்ளா - திருட்டுப்பயலே
4. சிஅருணாச்சலம்தம்பரம் - சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
5 .உனக்கு பா எனக்கு க - பாகப்பிரிவினை
6. மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் போகும்போது - இரயில் பயணங்களில்
7. எவரெஸ்ட், கன்சன்ஜங்கா, கே-2, லோட்சே, மக்காலு, சோ ஓயு, தவுளகிரி - ஏழுமலை
8. ரோஜா, செம்பருத்தி, வெள்ளை ரோஜா, சிகப்பு ரோஜாக்கள் - வண்ண வண்ண பூக்கள்
9. ஆகாயம் - நீல வானம்
10. சீதா இராமன் / இராதா கிருஷ்ணன் - ஜோடி / ஜோடிப் பொருத்தம்
11. மநீனம் - இதயத்தில் நீ
12. செல்பொன்னிவன் - மணிபிரவாளம் - பொன்னியின் செல்வன்

அப்புறம் அந்தக் கடைசி குறிப்பு

ஆவோ - இந்திரா

சில கருத்துகள்

  • முதல் குறிப்பிற்கு ஒரு வீடு இரு வாசல் அப்படின்னு நிறைய பேர் சொன்னாங்க. கேட்ஸ் என்றால் வாசல்கள்தானேன்னு விளக்கம் வேற. ஆனா படம் பேரு ஒரு வீடு இரு வாசல்கள் இல்லையே. அதனால இந்த பதிலை ஒத்துக்கொள்ளவில்லை.
  • திருட்டுப்பயலே ரிலீஸ் ஆகாததுனால ரொம்ப பேருக்கு தெரியலை. அந்த படம் ப்ரொடியூசர் நம்மளை தனியா கவனிக்கணும். கடைசியா பச்சோந்திதான் விடையை அவுட் பண்ணிட்டாரு.
  • பாகபிரிவினை குறிப்புதான் பெஸ்ட் அப்படின்னு அதிகம் பேர் சொன்னாங்க.
  • ஏழுமலை. இந்த குறிப்பை ஏழாவதாக வைத்ததும், உலகின் ஏழு உயரமான சிகரங்களை வரிசை படுத்தியதும் நான் செய்த சிறு நகாசு வேலைகள். உன்னிப்பாக இதையும் பார்த்து கண்டு பிடித்து விட்டார்கள் நம் மக்கள். அவர்களுக்கு ஒரு சபாஷ்.
  • அதே போல் எட்டாவது குறிப்பில் உள்ள மலர்கள் எல்லாமே வேறு திரைப்பட பெயர்கள். இதையும் கௌசிகன் கண்டுகொண்டார்.
  • பத்தாவது குறிப்பில் ஒரு பெண் பெயரும், ஒரு ஆண் பெயரும் கலந்து, வருவதும் ஒரு ஆணின் பெயராக கொடுத்ததில் பலபேர் வழி தவறிவிட்டனர்.

Thursday, February 23, 2006

நான் பிடிச்ச நான்கு ஆட்கள்

ஏதோ ஓரமாய் இருந்த நம்மையும் இந்த விளையாட்டுக்கு இழுத்துவிட்டுடாரு நம்ம வைத்தியர் .

நம்மளும் சும்மா இல்லாம ''ஏதோ நானுண்டு, என் புதிருண்டு, எனக்கான 100 சொச்சம் பின்னூட்டமுண்டு (நேரம்டா சாமின்னு நீங்க சொல்லறது கேக்குது) நானும் போய் போடற பின்னூட்டங்களும் உண்டுன்னு இருந்த என்னப் போய் இப்படியெல்லாம்.....சரி சரி போட்டுருவோம். :)" ன்னு பின்னூட்டம் போட்டாச்சு.

ஜாலியா எழுதலாம்ன்னு போய் இப்போ கொஞ்சம் சீரியஸாவே போன நம்ம லிஸ்ட்.

நானிருந்த நாலு ஊர்கள்
1. கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டம்
சென்னையில் பிறந்தாலும் சில நாட்களிலே அழைத்து வரப்பட்டு வளர்ந்த இடம். அப்பளத்திற்கு பெயர் போன ஊர். இப்பொழுது சினிமா ஷூட்டிங் பிரதான தொழிலாய் தெரிகிறது. நம் கிராம அனுபவங்களின் நிலைகளன்.
2. சென்னை மாநகரம்
பதின்ம வயதுகளில் மீண்டும் பிறந்த இடத்திற்கே வருகை. இதனால் நகர வாழ்க்கையின் சுவைகளையும் மிஸ் பண்ணவில்லை. நமக்கும் இங்கே ஒரு 50 லிஸ்ட் இருக்கே.
3. கோவை மாநகரம்
வேலை நிமித்தம். குடும்பத்துடன் இல்லாமல் எனது தனியான வாழ்க்கையை ஆரம்பித்த இடம். பின் திருமணமாகி தனியை விட்டுவிட்டு வாழ்க்கையை மட்டும் தொடர்ந்த ஊரும்கூட.
4. பெங்களூரு மாநகரம்
வங்கி வேலையை விட்டுவிட்டு மென்பொருளாளனாய் மாறிய இடம். என் மகன் பிறந்த இடம், எங்கள் அரண்மணை (சிறியதாகவே இருந்தாலும்) இருக்கும் இடம் என பல ஒட்டுதல்கள். இப்பொழுது அமெரிக்கவாசியாய் இருந்தாலும், சொல்வதற்கு விசேடமாய் எதுவுமில்லை.

செல்ல விரும்பும் நாலு இடங்கள்
1. பாரிஸ்
பல இடங்கள் போயிருந்தாலும், இதுவரை விமான நிலையம் வரைதான் இங்கு போக முடிந்தது. குடும்பத்துடன் விடுமுறைக்கு செல்ல மிகவும் ஆவலுடன் இருக்கும் ஓர் இடம்.
2. சிருங்கேரி, கர்நாடகா
மிக அமைதியான இடம். பல முறை சென்றிருக்கிறேன். ஆனாலும் சலிப்பைத் தராத இடம். சென்று வந்தவுடன் மனது லேசாகிவிடுவதென்னவோ நிஜம்.
3. ஆஸ்திரேலியா / நியூஸிலாந்து
ரொம்ப அல்பத்தனமான காரணம். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களிலும் கால் பதித்தாகிவிட்டது. அதனால் இங்கும் சென்றால் மக்கள் வாழும் அனைத்து கண்டங்களும் சென்றாகிவிட்டது என்ற ஒரு ஆசைக்காக.
4. ந்கோரோந்கோரோ தேசீயப் பூங்கா
ஒரு எரிமலையின் சிகரத்தில் அமைந்துள்ள இடம். வன விலங்குகளைக் காண இதைவிட சரியான இடம் இல்லை என்பது பொதுவான கருத்து. ஒரு முறையேனும் செல்ல வேண்டும்.

சென்று வியந்த நாலு இடங்கள்
1. ஐஸ்லாந்து
தீயும் பனியும் சேர்ந்திருக்கும் இடம். இயற்கை அழகை சொல்லி மாளாது. நடுங்கும் குளிரில் வென்னீர் ஊற்றுகளில் குளித்த அனுபவம் புதிது.
2. நயாகரா நீர்வீழ்ச்சி
அருகில் செல்ல செல்ல, நம்மை ஆவென்று பார்க்க வைக்கும் கம்பீரம். அனுபவித்தால் மட்டுமே தெரியும்.
3. கென்யா நாட்டின் சமவெளிக் காடுகள்
இயற்கையான சூழ்நிலையில் வனவிலங்குகளைக் காண முடிந்த அனுபவம். கைக்கெட்டும் தூரத்தில் சிங்கங்கள், காட்டானைகள், காண்டாமிருகங்கள் என மிரட்டிய அனுபவம்.
4. எகிப்திய பிரமிட்டுகள்
பண்டை காலத்தின் சுவடுகள். அதை பற்றிய கதையை சொல்லிய லேசர் ஷோ. மிகப்பெரிய நேஷனல் அருங்காட்சியகம். அதிலுள்ள பொருட்களை பார்த்தால், நமது பாரம்பரியத்துடனான தொடர்பு புரிகிறது. ஒரு வாரம் இருந்தும் கூட முழுதும் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடனே வந்த இடம்.

நமது நாட்டிலும் பல இடங்களை பார்த்து இருக்கிறேன். ஆனால், இந்த இடங்களைப் பற்றி எழுதியது குறைவு என்பதால்தான் இப்படி. மற்றபடி, தாய் நாட்டின் பெருமை பற்றி அறியாதவன் என்றெல்லாம் முத்திரை குத்திவிடாதீர்கள்.

பிடித்த நான்கு உணவு வகைகள்
1. தென்னிந்திய உணவு
2. மெக்ஸிகன் உணவு
3. தாய்லாந்து உணவு
4. இந்தோ சைனீஸ் உணவு

பின்ன என்னங்க. நம்மளைப்போய் நாலே நாலு உணவு வகைகளை சொல்லச் சொன்னா எப்படி. எதைப் போட்டாலும் சாப்பிடும் நமக்கு அதெல்லாம் சரி வராது. என்ன, முன்பெல்லாம் அசைவது, அசையாதது என்று எல்லாவற்றையும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது (கொன்றிருந்தது) போய் இப்பொழுது மரக்கறியாளனாய் மாறி விட்டேன்.

நமக்கு பிடித்த நாலு கலைஞர்கள்
1. கமலஹாசன்
சமீபத்தில் இவரைப் பற்றி எல்லாருமே ரொம்ப பேசியாச்சு. தேவர்மகன், குணா, மை.ம.கா.ராஜன், சதி லீலாவதி. ரஜினியையும் பிடிக்கும்.
2. டி.எம்.கிருஷ்ணா
சமீப காலமாய் கேட்க ஆரம்பித்திருக்கும் கர்நாடக சங்கீதத்தில் நமக்கு மிகவும் பிடித்தவர். சஞ்சயையும் பிடிக்கும்.
3. இளையராஜா
நம்ம மொட்டை. இதுக்கு மேல என்ன சொல்ல. அவ்வளவுதான். இசை மட்டுமல்ல. அவர் குரலுக்கும்.
4. ஜெப்ரி ஆர்ச்சர்
அருமையாய் கதை எழுதுவார். படிக்கப் பிடிக்கும். தமிழில் சாண்டில்யன்.

சொல்லாத நான்கு
1. பார்த்த வேலைகள்
இன்னும் நாலு ஆகலையே. ஆனா பார்த்ததை வேற இடத்தில் சொல்லியாச்சு.
2. பிடித்த படங்கள்
இதையும் சைடிலேயே சொல்லியாச்சு
3. பிடித்த டீவீ நிகழ்ச்சிகள்
ரொம்ப டீவீ பார்ப்பதில்லை
4. அட போதுமப்பா

அழைக்க விரும்பும் நால்வர்
1. ஹரிஹரன்ஸ்
நம்ம பெரியவர். எனக்கு எல்லா விதங்களிலும் வழிகாட்டி. இப்போ பதிவு வேற போட ஆரம்பிச்சுட்டார்.
2. கௌசிகன்
இவர் அதிகம் எழுதாதது எனக்கு ரொம்ப வருத்தம்.
3. சின்னவன்
இவர் குசும்பு நமக்கு பிடிக்கும். ஆனால் கொஞ்ச நாளாய் ஆளைக்காணும்.
4. நிலா
நிறைய நல்லா பண்ணறாங்க. இப்போ போட்டி எல்லாம் வேறே போட்டிருக்காங்க. அதான். ஹிஹி.

Friday, February 17, 2006

புதிரா? புனிதமா?

ரீபஸ் போடவேண்டாம் வேறு எதாவது எழுதுவோம் என்று நினைத்து எழுத உட்கார்ந்தேன். எல்லோரும் பக்தி சம்பந்தப்பட்டு எதாவது எழுதுகிறார்களே, நாமும் அதைப்போல செய்தாலென்ன என்று ஒரு நினைப்பு. அதெல்லாம் நமக்கு வருமா? அல்லது நமக்கு தெரிந்த புதிரையே போட்டுவிடலாமா என்று ஒரு தயக்கம். அதுதான் புதிரா? புனிதமா?

கடைசியில் இன்னுமொரு முறை புதிரே போட்டுவிடலாம் என முடிவு செய்ததால், மீண்டும் ஒரு புதிர் பதிவு. விதிமுறைகள் முந்தய பதிவிலிருந்து.

//என்னுடைய பகல் வேளையில் புதிரைப் போட்டால் கைபுள்ள கோபிக்கிறார். அவருக்காக என்னுடைய இரவுப் பொழுதில் போட்டால் சின்னவன் கோபிக்கிறார். இந்த குட்டிப் பசங்க தொந்தரவு தாங்க முடியலைங்க. ஆகையால் இன்னுமொரு விதிமுறை மாற்றம். உங்களிடமிருந்து வரும் பின்னூட்டங்கள் உடனடியாக பதிவு செய்யப்படமாட்டா. அதனைப் படித்து உங்கள் விடைகள் சரியா தவறா என்று நானிடும் பின்னூட்டங்கள் மட்டுமே உடனடியாக வரும். இதன் மூலம் சற்றே நேரம் கழித்து வருபவர்களும் விடைகளைத் தெரிந்து கொள்ளாமல் விடைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்ய ஏதுவாகும். ஓரளவு விடைகள் வந்தவுடன் அனைத்து பின்னூட்டங்களும் பதிவு செய்யப்படும். அவைகள் வரப்பெற்ற முறையிலே வெளியாகும் என்பதால் முதலில் போட்டவரின் பின்னூட்டமே முதலில் வரும். கவலை வேண்டாம்.

முக்கியம். இவ்விதி மாற்றம், பதில்களைக் கொண்ட பின்னூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். கேலியாகவும், கிண்டலாகவும், வம்படிக்கும் நோக்கிலும் அளிக்கப்படும் பின்னூட்டங்கள் உடனடியாக வெளியிடப்படும். ஆகவே இவைகளை தனி பின்னூட்டங்களாக போடுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். (குமரன், வைத்தியர் - அதிக பின்னூட்டங்களுக்கு மேலும் ஒரு விதி!)

இந்த மட்டுறுத்தல் போடத்தான் வேண்டியிருக்கிறது, அதை சரியாக உபயோகப்படுத்திக் கொள்வோமே. சரி, புதிருக்குப் போவோமா?//

1. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ்
2. பராத்திரிகல்
3. கள்ளா
4. சிஅருணாச்சலம்தம்பரம்
5 .உனக்கு பா எனக்கு க
6. மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் போகும்போது
7. எவரெஸ்ட், கன்சன்ஜங்கா, கே-2, லோட்சே, மக்காலு, சோ ஓயு, தவுளகிரி
8. ரோஜா, செம்பருத்தி, வெள்ளை ரோஜா, சிகப்பு ரோஜாக்கள்
9. ஆகாயம்
10. சீதா இராமன் / இராதா கிருஷ்ணன்
11. மநீனம்
12. செல்பொன்னிவன் - மணிபிரவாளம்

அதெல்லாம் போட்டவங்க, இதை முயன்று பாருங்க. இது செம கடி. போட்ட பின் அடிக்கெல்லாம் கூடாது.

ஆவோ

Tuesday, February 14, 2006

ஏனிந்த சோதனை?

என்னடா இவன் வந்து பத்து பதிவு கூட போடலை அதுக்குள்ள ஒரு பதிவுக்கு 350+ பின்னூட்டம், இன்னுமொரு பதிவு 150+ பின்னூட்டம் வாங்கி ஓடுது. என்னடா இதுன்னு யார் யார் வயிறு எரிஞ்சாங்களோ தெரியல. அல்லது பிளாக்கரிலேயே இந்த அளவு பின்னூட்டம் வந்தது இல்லை. அதனால நம்ம பதிவு ஒரு Stress Testஆ போயி, அதுல பிளாக்கர் பெயில்லாச்சான்னு தெரியலை. :)

ஆனா நல்லா போயிகிட்டிருந்த பதிவுக்கு வந்ததய்யா சோதனை. திடீரென பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் வெளிவருவது நின்று போயிற்று. பின்னர் இந்த பதிவிற்கு இருந்த தனிப்பக்கம் இயங்காமல் போயிற்று. இதனால் நம்மிடமிருந்த வெளியிடப்படாத பின்னூட்டங்கள் காணாமல் போயின.

நண்பர்கள் என்னென்னவோ செய்து பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. பதிவை எடுத்துவிட்டு பல முறை மீள்பதிவுகள் போட வேண்டியதாயிற்று. இரண்டு நாட்கள் தண்ணி காட்டிவிட்டு இன்றுதான் ஒரு நிலமைக்கு வந்திருக்கிறது.

இதானால் அசௌகரியத்திற்கு ஆளான அனைவருக்கும் எனது வருத்தங்கள். இது எனது கட்டுப்பாட்டை மீறிய ஒரு விஷயம். ஒன்றுமே செய்ய முடியவில்லை. இனி இது போல் நடக்காமலிருக்க வேண்டிக்கொள்வோம்.

ஜெயஸ்ரீ, சதீஷ், மீட்டிங்கை கட் அடித்து வந்த தியாக், கைப்பு எல்லாம் நல்ல சூப்பரா பதில் போட்டுக்கிட்டு இருந்த நேரம் இந்த மாதிரி ஆகி போச்சு. அவங்க போட்ட எல்லா பின்னூட்டத்தையும் போட முடியாம போச்சு. மன்னிச்சுக்குங்க.

ஞான்ஸு, ஒருத்தரு சொன்னா மாதிரி 'அரிசி மாவால கோலம் கோலம் போடலாம், ஆனா கோல மாவால அரிசி போட முடியுமா?' அந்த மாதிரி கொத்தனாரால வீடு கட்டலாம் ஆனா பிளாக்கர் கட்ட முடியுமா? 'தண்ணில கப்பல் போனா ஜாலி, கப்பல்ல தண்ணி போனா காலி' அது மாதிரி பிளாக்கருல நாம ஆடினா ஜாலி ஆனா நம்ம பிளாக்கரே ஆடினா காலி. இதெல்லாம் நல்லா புரிஞ்சுகிட்டேன்.

ஹரிஹரன்ஸ், நீங்கள் சொன்னது "இதோ இன்றிருக்கிறோம், நாளை மறைவோமென்றியற்கையின் நியதியை எடுத்துக்காட்டுகிறதோ, இந்த பின்னோட்டத்தின் கதி?". அது சரிதான். நாம் யாவரும் நிலையில்லை என்று சொல்ல விரும்பிய ஆண்டவனின் திருவிளையாடல்தான் இது என்று நினைக்கத் தோன்றுகிறது. (ரொம்ப பக்திப் பதிவுகள் படிக்கிற எஃபெக்ட்டா?)

அடுத்த பதிவு ரீபஸ்கள் இல்லைன்னு சொல்லியிருந்தேன். ஆனா போன ஆட்டம் ஒரு திருப்தியை தரல. அதனால மீண்டும் ரீபஸ் வந்தா ஆச்சரியப்படாதீங்க. போன தடவை விடைகளைப் போடாமல் சரியா தவறா என்று மட்டுமே போட்ட விதம் ஓக்கேவா? உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்.

இப்போ போன பதிவு புதிர்களோட விடைகள். எதாவது சந்தேகம் இருந்தாலோ அல்லது உங்க கருத்தையோ ஒரு பின்னூட்டமா தட்டி விடுங்க.

உலேரியி - உயிரிலே கலந்தது
ரோஜா தாமரை - இரு மலர்கள்
விளக்கு - பச்சை விளக்கு
மகோவில்னம - நெஞ்சில் ஓர் ஆலயம்
நியாயம் அன்பு - நீதிக்குப் பின் பாசம்
ம - முதல் மரியாதை (ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்களே)டாக்டர் - நான் வாழவைப்பேன் (இதுக்கும்தான்)மதுரை பொன் - பாண்டி நாட்டு தங்கம்
பிராமி ந் தாதி - வண்ணத் தமிழ் பாட்டு (செந்தமிழ்ப்பாட்டு இல்லைங்க)
ஏழ்மை - வறுமையின் நிறம் சிகப்பு
பருத்தி - செம்பருத்தி
ஒற்றை சிங்கம் - தனிக் காட்டு ராஜா
ரெண்டு டஜன் காரட் - சொக்கத் தங்கம்
போர்ட்டர் - சுமைதாங்கி / தூக்குத்தூக்கி
ரெட் ரோஸ், வொயிட் ரோஸ், டேபிள் ரோஸ் - த்ரீ ரோஸஸ்