Friday, January 26, 2007

நானும் குரு பதிவு போடறேன்! (கொஞ்சம் லேட்டா)

நம்ம மக்கள்ஸ் எல்லாரும் குரு பதிவு போடறாங்களே, நாமளும் போட்டா என்னான்னு ரொம்ப நாளாவே ஒரு யோசனை. அதுல பாருங்க நம்ம ஊரில் ஹிந்தியில்தான் குரு வந்தது. தமிழில் வரலை. அம்புட்டுப் பணம் குடுத்து ஹிந்தியில் பாக்கணுமா, அப்படிப் பார்த்தா நமக்கு வலையுலகில் என்ன முத்திரை குத்துவாங்கன்னு யோசிச்சுக்கிட்டே பாக்காம விட்டாச்சு. ஆனாலும் இந்த பதிவு போடற ஆசை மட்டும் போகவே இல்லை. அதுக்கு ஏத்தா மாதிரி ஒரு சான்ஸ் கிடைச்சுது. விடுவோமா? அதான் இந்த பதிவு!

வீட்டுலேர்ந்து நியூயார்க் நகரம் போகணுமுன்னா ரயிலில்தான் போகணும். அப்படிப் போகும் போது இலவசமா ரெண்டு மூணு செய்தித்தாள்கள் கிடைக்கும். பெரும்பாலும் உள்ளூர் செய்திகளே தாங்கி வரும். அதுவும் நம்ம ஊரில் இந்திய மக்கட்த்தொகை ரொம்ப ஜாஸ்தியா, அவங்களுக்கே ஒரு தனி செய்தித்தாள் வேற போட்டுட்டாங்க. அதுதான் DesiNJ.

நாம போன அன்னிக்கு அந்த செய்திதாளில் பார்த்த விஷயம் என்னன்னா...அட அதை நீங்களே பாருங்களேன்!



அதாவது குருவில் அமிதாப் நடிப்பைப் பார்த்து அபிஷேக்குக்கு ரொம்ப பெருமையாம். என்னடா இது நாம கேள்விப்பட்ட வரை அமிதாப் அந்த படத்தில் நடிக்கவே இல்லையேன்னு அந்த செய்தியை பூரா படிச்சா அமிதாப்புக்கும் அபிஷேக்குக்கும் கன்பூஸன் ஆகிட்டாங்க இந்த மக்கள். அதை நம்ம கும்பலுக்கு காமிச்சு சிரிச்சு அன்னைக்கு நம்ம கம்பார்ட்மெண்டையே ரெண்டு பண்ணிட்டோமில்ல. நீங்களும் இந்த வாரயிறுதியை ஒரு சிரிப்போட ஆரம்பியுங்க. Have a great FUNNY weekend!

அந்த செய்தித்தாளில் பார்த்த இன்னொரு விஷயம் இது. ஆனா போன செய்தியோட லட்சணத்தைப் பார்த்த பின் நம்பணுமா வேண்டாமான்னு தெரியலை. நீங்களே படிச்சி முடிவு பண்ணிக்குங்க.



அதாவுதுங்க பொதுவா ஒரு மொழிக்கு மேல பேசறவங்களுக்கு டிமெண்ஷியா என்ற நோய் தாக்கும் தருணம் லேட்டா ஆகுதாம். டிமெண்ஷியா என்றால் என்ன அப்படின்னு கேட்கறவங்களுக்கு அகராதி தரும் பொருள் - severe impairment or loss of intellectual capacity and personality integration, due to the loss of or damage to neurons in the brain. கொஞ்சம் புரியறா மாதிரி சொல்லணுமுன்னா Madness! அதாங்க சித்தம் இழந்து பயித்தியம் ஆகறது.

இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா முதல்செய்தியைத் தந்த ஆளுக்கு ஒரே ஒரு மொழிதான் பேசத் தெரியும்! (அட அது யாருடா அது? சைடில் வந்து நம்ம தமிழ் வலைப்பதிவர்கள் நிறையா பேருக்குக் கூட ஒரு மொழிதான் தெரியும் போல அப்படின்னு சவுண்ட் விடறது!)

Sunday, January 14, 2007

பொங்கல் போனஸ்

இன்றைக்குப் பொங்கல். எல்லோரும் பொங்கலிட்டு மகிழ்ந்திருக்கும் இந்த வேளை எனக்கு கொஞ்சம் கூடுதலாகவே இனிக்கிறது. வலையுலகில் பல காலம் படித்தும் பின்னூட்டம் அளித்தும் வந்திருந்தாலும் நான் பதிவுகள் எழுத வந்து ஒரு வருடம் ஆகிறது. ஆமாம் கடந்த ஆண்டு ஜனவரியில்தான் நான் என் வலைப்பூவைத் தொடங்கினேன்.

ஒரு வருடமாக நாமும் எழுதிக் கொண்டு இருக்கிறோமே, நாம் எழுதுவதைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிந்து கொள்ள ஒரு ஆவல். யாரைக் கேட்பது என யோசித்துக் கொண்டே பழைய பதிவுகளைப் புரட்டினால், என் முதல் இடுகையின் முதல் பின்னூட்டம் அளித்து என்னை இந்த வலையுலகிற்கு வரவேற்றவர் நம் ஜிரா எனப் பார்த்தேன்.

சரிதான், முதன் முதலில் நம்மை வாழ்த்தி வரவேற்ற அவரையே நம் முதல் வருட அப்ரெய்சலைச் செய்யச் சொல்லலாம் எனக் கருதி அவரை அணுகினேன். என் வேண்டுகோளை மதித்து அவர் ஒரு பதிவாகவே எழுதி அனுப்பி வைத்தார். இதுவே எனது பொங்கல் போனஸ். எனக்காக பதிவு எழுதி, அதனை பொங்கல் பரிசாக எழுதி அனுப்பியதற்கு நன்றி ஜிரா.

அந்தப் பரிசினை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நீங்களும் உங்கள் மேலான கருத்துக்களைச் சொல்லி எனது நிறை குறைகளை சுட்டிக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இனி ஜிரா


ஜனவரி மாதம் பத்தாம் நாள் 2006ல் ஜனங்களுக்கு வரி போடும் அரசாங்கங்கள் உலகமெங்கும் இருக்கையில் இலவசமாக ஒரு வலைப்பூ பூத்தது. பூ இருந்தால் பழமும் இருக்கத்தானே வேண்டும். மாதுளையும் கூடக் கிடைத்தது. மாதுளை என்றால் இந்தியில் அனார். அதுவும் ஒன்று இரண்டு அல்ல. ஒரு கொத்து. அதாவது கொத்து அனார். அதாகப்பட்டது கொத்தனார். இலவசக் கொத்தனார்.

வரும் போதே வந்துட்டேன் வந்துட்டேன்னு இரண்டு தடவை சொல்லிக்கொண்டு வந்தார். ஏன் இரண்டு முறை? இலவசமாக ஒன்று கிடைக்கிறதென்றால் அந்தப் பொருளை ஒருமுறையா வாங்குவோம்? இரண்டாம் முறையும் வாங்குவோம் அல்லவா. அதனால்தான் இரண்டு முறை சொன்னார். அது அவரது பின்னவீனத்துவ கருத்தாய்வுத் திறனின் ஆழத்தின் உச்சத்தை விளங்கச் சொல்லும் வகையில் இருந்தது என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. அதனால்தான் அவரது பதிவில் முதல் பின்னூட்டமிட்ட வலைஞர் என்ற பெருமையை எனக்களித்துப் பெருமைப் படுத்தினார். (மயிலார் : கொத்சோட தலையெழுத்து. உருப்படியா யாராவது போட்டிருக்கக் கூடாது. பெருமையில இருக்குற பெக்கு பதிலா எ போட்டா சரியாயிருக்கும்.)

வந்ததுமே...இரண்டாவது பதிவில் "There is sex for money and there is sex for free. And sex for free costs more!" என்று நகைச்சுவையாக குறும்போடு சொன்னார். திடீர்னு என்னாச்சோ ஏதாச்சோ தெரியலை எவன்ன, மல்மல், வர்ளம்வர், குமழைடை, மனமத்தாப்பூசு-னு சொன்னாரு. என்னடான்னு கேட்டா ரீபஸ்சாம். (மயிலார்: ரீபஸ்னா? சுரங்கள்ள ஸ-பஸ்சுக்கும் க-பஸ்சுக்கும் நடுவுல வருமே அந்த ரீபஸ்சா?)

சொடக்குப் போடும் பழக்கம் நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. ஆனால் சூடோகு போடும் பழக்கம் நல்லதாம். ஏனென்றால் சூடோகு என்பது கணக்கு விளையாட்டு. அதை நன்றாக விளையாடினால் கூட ஒரு இலவசம் கிடைக்குமாம். அதுதான் நீண்ட ஆயுள். இத்தோடு சேர்த்து பத்துப் பதிவு கூட வந்திருக்காது. ஆனால் பின்னூட்டங்கள் மட்டும் 150, 350 என எகிறிக் குதித்தன. இது கயமைத்தனமா என்று போலீஸ் வைத்துப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யார் கண் பட்டதோ....அவருக்கும் வந்தது ஒரு சோதனை.

இப்படி ரீபஸ் பதிவுகளாகப் போட்டுக்கொண்டிருந்தவர் மைசூர் அரண்மனைக்குப் போனார். அங்கு சிவாவைச் சந்தித்தார். ஆமாம். கால்காரி சிவாவைத்தான். மைசூர் அரண்மனை கால்காரியில்தானே இருக்கிறது. மைசூர் போண்டோ கிடைக்கிறதோ இல்லையோ...காலிபிளவர் வறுவல் கிடைக்கும். (மயிலார்: திங்கிற பண்டம் எங்க எது கெடைக்கும்னு சரியாச் சொல்லீருவயே!)

பெண்பா எல்லாம் என்பா என்று வெண்பா வடிக்கும் கூட்டத்திற்கு நடுவில் தன்பா எல்லாம் நிறத்திலும் வெண்பா என்று கொத்தனார் எழுதத் தொடங்கினார். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமென்று பலபா ஏற்கனவே எழுதப்பட்ட நிலையில் கண்பார் குமரனை வைத்து நண்பார் எனப் புகழ்ந்து ஒரு தண்பா எழுதினார். இதற்குக் கிடைத்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 134. ஜீவ்ஸோடு சேர்ந்து கொண்டு இயன்ற அளவில் இனிய தமிழில் என்று வெண்பாக்களாக எழுதித் தள்ளினார். (மயிலார்: எழுத்து விளையாட்டாக்கும்? நெனப்புதான் பொழப்பக் கெடக்குது! ஒழுங்கா எழுதுனாலே ஒன்னும் புரியாது. இது மட்டும் யாருக்காவது முழுசா சரியாப் புரிஞ்சிருச்சு...அவங்களுக்கு பரிசு ஒரு மயிலிறகு!)

பரோட்டா பரோட்டா நான் குத்தும் பரோட்டா.......என்று ஏ.ஆர்.ரகுமான் ஒரு பாட்டு போட்டிருக்கிறார். கொத்தனாரோ பதிவு போட்டிருக்கிறார். முட்டை பரோட்டா குத்தியதை அழகாகச் சொல்லி அவர் அள்ளிய பின்னூட்டங்களின் எண்ணிக்கை முன்னூற்றுக்கு இருபத்தைந்து குறைவு. அத்தோடு விட்டாரா? தண்ணியப் போட்டா சந்தோஷம் பிறக்கும்...தள்ளாடி நடந்தா உல்லாசம் கிடைக்கும்....ஓ பார்வதீன்னு கமல் ஒரு படத்தில் பாடுவாரே...அந்த அளவிற்கு ஒரு பதிவு. அதைப் படித்தவர்கள் எல்லாம் நம்ம சிங்காரிச் சரக்கு நல்ல சரக்கு என்று பாடிப் புலம்பியதாகத் தகவல். தகவல் மட்டுமே.

இப்படிப் பதிவுகளாகப் போட்டுக் கொண்டு பின்னூட்டங்களை மொத்தக் குத்தகைக்கு எடுத்திருந்த கொத்தனாரின் வாழ்விலும் திருப்பம் வந்தது. பக்கிப் பசங்க என்று அனைவராலும் அன்போடும் பண்போடும் குணத்தோடு மணத்தோடு நிறத்தோடு திடத்தோடும் அழைக்கப்படும் விக்கிப் பசங்க என்ற குழும வலைப்பதிவில் அவர் மாட்டிக் கொண்டார். அதிலிருந்து அவர் அறிவாளி போலக் காட்டிக் கொள்ளப்பட வேண்டிய நிலை வந்தது. அதற்கெல்லாம் அசரவில்லை கொத்தனார். ஏமாந்தவர்களைச் சேர்த்துக் கொண்டார். கூட்டத்தோடு கோவிந்தா போட்டு விக்கிப்பசங்களை ஊரறியச் செய்தார். பின்னூட்ட நாயகிக்கு அடுத்த வாரிசு என்று பிரகடணம் செய்தார். அதை இன்றும் மறுப்பார் இல்லை. இதுதான் இலவசக் கொத்தனாரின் ஓராண்டுக்குள் நிகழ்ந்த மாபெரும் இமாலயச் சோதனை...சீச்சீ சாதனை. அவரை வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோம். (மயிலார்: வாழ்த்துவோம். வாழ்த்துவோம். இதுக்குத்தான் நம்மளக் கூப்புடுறாங்க)

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, January 07, 2007

ஈழ நண்பர்களுக்கு ஒரு கேள்வி

முதலில் டிஸ்கி. (இது போடாமல் கேள்விகள் கேட்க முடியவில்லையே, என்ன செய்வது.)

உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான் கேட்கிறேன். யாரையும் கேலி செய்ய வேண்டும் என்பதோ அல்லது புண்படுத்த வேண்டும் என்பதோ இப்பதிவின் நோக்கமல்ல.
டிஸ்கி முடிந்து விட்டது. இனி விஷயத்திற்குப் போகலாமா?

தமிழகத்தில் பேசப்படும் தமிழுக்கும் ஈழத்தின் பேசப்படும் தமிழுக்கும் சில வேறுபாடுகள் இருந்து வருவது நமக்குத் தெரிந்ததுதான். ஈழத் தமிழில் இன்று தமிழகத்தில் பாவிக்கப்படாத சொற்கள் பல இருக்கின்றன. நம் நண்பர்களின் பதிவுகளைப் படித்துப் படித்து அவைகளில் பல நமக்கு பழகியும் விட்டன. உதாரணமாக கதைக்கலாம் என்றால் பேசலாம் என்பது போல்.

சில சொற்கள் சற்றே உருமாறி இருந்தாலும் படிக்கும் பொழுது அவற்றின் பொருள் எளிதாக விளங்கி விடுகிறது. உதாரணமாக எண்டெல்லாம் (என்றெல்லாம்), இண்டைக்கு (இன்றைக்கு).

ஆனால் எனக்கு ஒரு வகையான மாற்றங்கள் மட்டும் ஏன் இப்படி மாறுகிறது என்பது புரிவதேயில்லை. அது ஆங்கிலத்தில் 'T' என்ற எழுத்து வரும் சொற்களை ஈழத் தமிழில் எழுதும் பொழுது நிகழும் மாற்றம்தான் அது. உதாரணத்திற்கு Toronto என்ற கனேடிய நகரின் பெயர் தமிழில் எழுதும் பொழுது 'ரொறன்ரோ' என எழுதுகிறார்கள். டொராண்டோ என எழுதினால் எளிதாகப் படிக்க முடிகிறதே. அதே போல் Beta 'பேற்றா' ஆனது. டிவி என்பது கூட 'றீவி' என ஆகிறது. நான் பார்த்த வரையில் கிட்டத்தட்ட எல்லா 'T'க்களும் இப்படி 'றீ'க்களாகவே எழுதப்படுகின்றன.

இனி கேள்விகள்

  1. இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன?
  2. பேசும் பொழுது இவ்வார்த்தைகளை எப்படி உச்சரிக்கிறார்கள். நம்ம உதாரணம் டொராண்டோவாகவே இருக்கிறதா அல்லது ரொ றன்ரோ என்றே உச்சரிக்கவும் படுகின்றதா?
  3. எல்லா 'T'க்களும் இப்படி 'றீ'க்களாகவே எழுதப்படுகின்றனவா? அல்லது இவ்விதிக்கு எதேனும் மீறல்கள் இருக்கின்றனவா?
  4. 'T' என்ற எழுத்து மட்டும்தான் மாறுகிறதா அல்லது 'D' என்ற எழுத்தும் இப்படி மாறுகிறதா?
  5. 'T' தவிர வேறேனும் எழுத்துக்களும் இவ்வாறு மாறுகின்றனவா? (BBCயை றீபிசி எனப் படித்ததாக ஒரு ஞாபகம். இது சரியாக இருந்தால் இது இன்னமும் குழப்பமான ஒரு விஷயம்.)
இது எனக்கு மட்டும் உண்டான கேள்விகள் இல்லை என்பது சில நண்பர்களின் பதிவுகளில் வரும் பின்னூட்டங்கள் மூலம் அறிய முடிகிறது. ஈழ நண்பர்கள் தயவு செய்து விளக்கங்கள் தருவீர்களா? தாங்கள் இங்கு தரும் விளக்கங்கள் மூலம் எனக்கு மட்டுமல்லாது மேலும் பலருக்கு ஒரு புரிதல் ஏற்படுமென்பது திண்ணம்.

Monday, January 01, 2007

மருதகாரய்ங்க காலரைத் தூக்கி விட்டுக்குங்கடே

இன்னைக்கு காலையில் இணையத்தில் செய்திகளைப் படிக்கும் போது கண்ணில் பட்ட தகவல் இது. பாரம்பரியம் மிக்க பி.பி.சி. ஒலிபரப்பு நிறுவனத்தின் தலைமை பொறுப்பைத் தற்காலிகமா ஏற்றுக் கொண்டிருப்பவர் டாக்டர். சித்ரா பரூச்சா என்ற பெண்மணியாம். இதுவரைத் தலைமைப் பொறுப்பில் இருந்த மைக்கேல் கிரேட் என்பவர் இங்கிருந்து விலகி போட்டி நிறுவனமான ஐ.டிவிக்கு சென்றுவிட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை சித்ரா நிரப்புவார்.



இது வரை பி.பி.சி. நிறுவனத்தின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வந்த போர்ட் ஆப் கவர்னர்ஸ் என்ற குழு கலைக்கப்பட்டு அந்த பொறுப்பு பி.பி.சி. ட்ரஸ்ட் என்னும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ட்ரஸ்டின் தலைமைப் பதவிக்குத்தான் சித்ரா தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார். இது வரை இந்த ட்ரஸ்டின் உபத் தலைவராக பதவி வகித்து வந்தார். ஒரு முழு நேர செயல்தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இவர் இந்தப் பதவியை வகிப்பார்.

1972 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த இவர் 1996 ஆம் ஆண்டு வரை மருத்துவத் துறையில் பல்வேறு பதவிகளை வகித்தார். அதன் பின் ஊடகங்களின் பால் தன் கவனத்தைத் திருப்பி அதிலும் பல பதவிகளை வகித்தவர். பெப்ஸி இந்திரா நூயியைத் தொடர்ந்து ஒரு மிக பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்க இருக்கும் இந்தியப் பெண் சித்ராவிற்கு நம் வாழ்த்துக்கள்.

இதுக்கு நம்ம மருதக்காரய்ங்க ஏன் காலரத் தூக்கி விடணமுன்னு கேட்கறீங்களா? சித்ரா நம்ம மருத பொண்ணுங்க!

இது பற்றிய செய்திக் குறிப்பு 1, செய்திக் குறிப்பு 2

Friday, December 22, 2006

Bye! Bye! Brothers and Sisters!!

ஆமாங்க, இனி எழுதறது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன். அதனாலதான் நிறுத்தறதுக்கு முன்னாடி பை பை அப்படின்னு சொல்லிட்டுப் போகத்தான் இந்த பதிவு. டிசம்பர் மாதக் கடைசிக்கு வந்தாச்சு. உலகம் பூரா விடுமுறைக் கொண்டாட்டங்கள் நடக்கிறது. எல்லாரும் எல்லாருக்கும் பரிசுகள் தந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கிற ஒரு நேரமாத்தான் இருக்கு. எங்க எங்கேயோ இருக்கும் உங்களுக்கு எல்லாம் நான் என்ன பரிசு தந்து சந்தோஷப் படுத்த. அதான் இப்படியாவது ஒரு நிம்மதியைத் தரலாமே!! என்ன சந்தோஷம்தானே!

எல்லோருக்கும் எனது கிருத்துமஸ், விடுமுறை மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லோரும் நல்ல நிம்மதியா சந்தோஷமா (என் தொல்லையில்லாமல்) இந்த விடுமுறைகளைக் கொண்டாடுங்க.



ஏன்னா ஜனவரி முதல் வாரத்தில் இருந்து திரும்பி வந்திருவோமில்ல!

ஒண்ணுமில்லை மக்கள்ஸ். பையனுக்கு ஸ்கூல் லீவு. அதனால ஒரு வாரம் வெளியூர் பயணம். போற இடத்தில் இந்த மாதிரி 24 மணி நேரமும் தமிழ்மணமே கதின்னு இருந்தா தனியாத்தான் திரும்பி வரணும். அதனால லீவு சொல்லிட்டுப் போகத்தான் பதிவு. இப்போ பை பை சொல்லிட்டு போற சீசனா, அதான் இப்படி.

ஆனா அந்த வாழ்த்துக்கள் மட்டும் உண்மைங்க!

மீண்டும் உங்கள் கழுத்தை அறுக்கும் வரை விடை பெறுவது, உங்கள் அன்பு...

இ.கொ. (இ.கொ., இ.கொ., இ.கொ.... அட எக்கோ எபெக்ட்டுங்க)

Thursday, November 30, 2006

நியூசிலாந்தில் டீச்சர்கள் அட்டகாசம்!!

இது நியாயப் படி துளசி டீச்சர் போட வேண்டிய பதிவு. அவங்க கண்ணுல இந்த செய்தி எப்படி மிஸ் ஆச்சோ தெரியலை. அதனால கிடைச்சுது சான்ஸுன்னு நான் ஒரு பதிவு போட்டாச்சு. தலைப்புக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது சும்மா ஓரு கவர்ச்சிக்காக வைத்தது. அதனால் அதற்கும் இந்த பதிவுக்கும் தொடர்பு எதையும் தேட வேண்டாம்! :-D

விஷயம் என்னன்னா, நம்ம பசங்க குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பும் போது வார்த்தைகளை குறுக்கி தட்டெழுதி அனுப்பறாங்க இல்லையா? அதாவது Text Message என்பதையே Txt Msg என்றோ, See You என்பதை CU என்றோ தட்டெழுதுகிறார்களே. இது போல குறுக்கப்பட்ட வார்த்தைகள் மூலமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு Text Speak என்று பெயர்.

தற்பொழுது நியூசிலாந்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் தேர்வுகள் எழுதும் பொழுது இது போன்ற குறுக்கப்பட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தலாம் என அங்குள்ள தேர்வாணையக் குழு ஒரு ஆலோசனை வழங்கியுள்ளது. வழக்கம் போலவே இதனை ஆதரித்தும் எதிர்த்தும் பல குரல்கள் எழுந்துள்ளன.

இது பற்றி சி.என்.என் வலைத்தளத்தில் வந்திருக்கும் செய்திக்கான சுட்டி இது. ஒரு முறை படித்து விடுங்கள். எனக்கு மிகவும் பிடித்தது, செய்தியின் கடைசியில் இது பற்றி, நம் சக வலைப்பதிவாளர்(!) பில் ஸ்டீவென்ஸ் சொல்லி இருக்கும் கமெண்டுகள்தான் - Internet blogger Phil Stevens was not amused by the announcement. "nzqa[New Zealand Qualifications Authority]: u mst b joking," Stevens wrote. "or r u smoking sumthg?"! :-D

எனக்கு இரண்டு கேள்விகள். வழக்கம் போல எல்லாரும் வந்து உங்க கருத்தைச் சொல்லுங்க பார்க்கலாம்.

  1. தேர்வாணையத்தின் இந்த நடவடிக்கையில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?
  2. தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி உண்டா? அதில் இது போல குறுக்கி எழுதப்படும் வார்த்தைகள் உண்டா?

Wednesday, November 29, 2006

கேள்வியின் நாயகர்களே....

நம்ம விக்கி பதிவில் கேள்வியின் நாயகனே அப்படின்னு ஒரு பதிவு போட்டோம். என்ன காரணத்துனாலயோ தமிழ்மணத்துல வரலை. அதுல பின்னூட்டம் போட்டாக்கூட முகப்பில் வர மாட்டேங்குது. அதனால இந்த பதிவு ஒரு ரிபீட். விக்கி பசங்க பக்கத்தில் இருக்கும் பெரிய கேள்விக்குறியைச் சொடுக்கினால் இந்த பதிவுக்கு கொண்டு செல்லும். எல்லாம் ஒரு நடை வந்திடுங்க. இனி அந்த பதிவு. இதுக்கு அப்புறம் எழுதினது எல்லாம் விக்கி பதிவுல இருந்து கட் பேஸ்ட். அதனால கேள்விகளை அங்க கேளுங்க. இங்க இல்லை.

நம்ம மக்கள்ஸ் கிட்ட கேள்வி கேட்கலாம் அப்படின்னு ஒரு வார்த்தைதான் சொன்னோம். கேள்வி கேட்க நம்ம மக்களுக்கு சொல்லிக் கொடுக்கணுமா? சும்மா தூள் கிளப்பிட்டாங்க. கேள்விங்களை மெயிலில் அனுப்புங்கன்னு சொன்னா, அத விட்டுட்டு பின்னூட்டமா போடறாங்க, பதிவா போடறாங்க. யாரு என்ன கேள்வி கேட்டாங்கன்னு ஒரே கன்பியூஷன். என்ன கேள்வி எல்லாம் வந்திருக்கு, எதுக்கு பதில் சொல்லியாச்சு, பதில் சொல்லாத கேள்விகளை எப்படி விக்கி பசங்களுக்குள் பாகம் பிரிப்பது என எங்களுக்கே பல கேள்விகள்!!

அது மட்டுமில்லாம, ஒரு கேள்வி ஏற்கனவே யாராவது கேட்டாச்சா இல்லையான்னு தெரியலை, அப்படின்னு வேற ஒரு கம்பிளைண்ட். சரி, இதுக்கெல்லாம் ஒரு வழி செய்யலாமுன்னுதான் இந்த பதிவு.

இதுதான் கேள்விகள் கேட்கும் பதிவு. அதாவது கேள்வி கேட்கறவங்க, இந்த் பதிவுக்கு வந்து கேள்வியை பின்னூட்டம் மூலமா கேட்கணும். நாங்களும் பதில் போட்ட உடனே, அந்த கேள்வி வந்த பின்னூட்டத்தை எடிட் செய்து, பதிலுக்கான உரலைச் சேர்த்திடுவோம்.

கேள்விகளைத் தனிப் பதிவாகக் கேட்டு பதிவு எண்ணிக்கையை ஏற்றிக் கொள்ளும் அன்பர்கள், இங்கு வந்து அந்த பதிவின் உரலையாவது பின்னூட்டமாய் இடுங்கள். அவ்வாறு செய்யும் பொழுது ஒரு பதிவில் முடிந்த மட்டும் ஒரு கேள்வியைக் கேளுங்கள். எங்களுக்குள் பிரித்துக் கொள்ளவும், பதில் அளிக்கவும் அது எளிதாக இருக்கும்.

இந்த பதிவுக்கான சுட்டி விக்கி வலைத்தளத்தில் தனியாக தெரியும். அந்த சுட்டி மூலம் இங்கு வந்தால், இது வரை கேட்கப் பட்ட கேள்விகள், பதிலளிக்கப்பட்ட கேள்விகள், அதற்குண்டான உரல்கள் என எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கும்.

என்ன அன்பர்களே, இந்த ஆலோசனை சரிதானே? இனி என்ன? ஸ்டார்ட் தி மியூஜிக்!

Tuesday, November 28, 2006

விரைவில் தமிழ்மணத்திலும் 33% ஒதுக்கீடு???

இந்தியாவில் இருக்கும் வலைப்பதிவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களே! அதுவும் சும்மா 51 சதவிகிதம் 60 சதவிகிதம் எல்லாம் இல்லை. இந்திய வலைப்பதிவர்களில் 76% ஆண்களாம். இதை நான் சொல்லலைங்க. ஆனானப்பட்ட பில் கேட்ஸ் கம்பெனி வெளியிட்டு இருக்கும் ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் தெரிய வந்திருக்கும் புள்ளி விபரம் இது. (அவங்களை நம்பாதவங்க நம்ம தமிழ்மண நட்சத்திரங்களில் பெண்களின் எண்ணிக்கை அப்படின்னு ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணிப் பார்த்துக்குங்க. :) )

இன்னும் சில புள்ளி விபரங்கள் பார்க்கலாமா?

  • வலைப்பதிவுகளைப் படிப்பவர்களில் 42% உலக நிகழ்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் (பாவம் மக்கள்ஸ்!) 49% பொழுது போக்கிற்காகவும் (அடுத்தவன் சண்டை போட்டுக்கிறத பாக்கறது ஒரு பொழுது போக்கா?) படிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

  • வலையில் மேய்பவர்களில் 14% தொடர்ந்து வலைப்பூக்களில் பதிவுகள் இடுகிறார்கள். (அதுவே இந்த நிலமையின்னா மத்தவங்களும் எழுத ஆரம்பிச்சா என்ன ஆவறது?)

  • வலையில் மேய்பவர்களில் 39% பேருக்குத்தான் வலைப்பூக்கள் பற்றி தெரிந்து இருக்கிறதாம். (மத்த 61% எவ்வளவு புண்ணியம் செஞ்சு இருக்காங்க.)

  • வலைப்பதிவர்களில் 54% பேர் 25 -34 வயதுக்குள்ளாக இருப்பவர்களாகவும், 32% 25 வயதிற்குக் கீழாகவும், 15% 35 வயதிற்கு மேலாகவும் இருப்பதாகத் தெரிகிறது. (கூட்டினா 100 மேல வருதேன்னு என்னைத் திட்டாதீங்க. இது அவங்க சொன்னது.)

  • 87% வலைப்பதிவர்கள் வாரத்திற்கு ஐந்து மணி நேரம் வரை வலைப்பதிவுகளைப் பதிவதிலும் படிப்பதிலும் செலவிடுகின்றனராம். (நம்மள மாதிரி தமிழ்மண வியாதி பிடிச்சவங்களைப் பத்தி தெரியாது போல!)

  • பாதிக்கும் மேற்பட்ட வலைப்பூக்களை வாரத்திற்கு பத்து பேர் கூட வந்து படிப்பதில்லையாம். (கவர்ச்சிகரமான தலைப்பு வைக்கத் தெரியாமலோ, விவகாரமான விஷயங்களைப் பத்தி எழுதாமலோ இருந்தா எவன் வருவான்.)

  • தொழிலதிபர்களால் எழுதப்படும் வலைப்பூக்களுக்குத்தான் நல்ல வரவேற்பாம். (மா.சிவக்குமார் ஞாபகம் வருதா?)

  • அரசியல்வாதிகளால் எழுதப்படும் பதிவுகளை 24% பேர் தொடர்ந்து படிக்கிறார்களாம். (நம்ம ஊர் கரை வேட்டிங்க யாராவது வலைப்பூவில் எழுதி தமிழைப் பாதுகாக்கறாங்களா?)

இது பத்தின ரீடிப் செய்தி இங்க, ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி இங்க.



Thursday, November 16, 2006

எப்படி இருந்த கைப்பு இப்படி ஆகிட்டியேப்பா!!!

இந்த வாரம் அலுவல் காரணமாக ஜெர்மனி செல்ல வேண்டி வந்தது. போகும் பொழுது லுப்தான்ஸா விமானமொன்றில் சென்றேன். அதிலிருந்த புத்தகத்தில் அவர்கள் விமானங்களில் காண்பிக்கப் படும் திரைப்படங்கள் பற்றிய விபரங்களும் அவை பற்றிய ஒரு சிறு குறிப்பும் காணப்பட்டது.

சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களில் இந்த மாதம் காண்பிக்கப் படும் திரைப்படம் நம் கைப்பு ஸ்பெஷலான இம்சை அரசன் 23ஆம் புலிக்கேசி. அட அயல்நாட்டு விமானங்களில் கூட நம்ம கைப்பு புகழ் கொடி கட்டிப் பறக்கிறதே என ஒரு மகிழ்ச்சியோடு, ரொம்ப ஆர்வமாய் அதன் கதைச்சுருக்கத்தைப் படித்தேன். நீங்களும் அந்த கொடுமையை அனுபவியுங்கள்.




படத்தை சொடுக்குங்கள். கொஞ்சம் பெரிதாகத் தெரியும்.

என்ன படித்தீர்களா? தாங்க முடிந்ததா? எழுத்துப் பிழைகளை விட்டுத் தள்ளுங்கள். சொல்லி இருக்கும் கதையைப் பாருங்கள். நம்ம இம்சை அரசனுக்கு வாய் பேச வராதாம். ஊமையாம். படம் பார்த்த அனைவரும் வந்து கொஞ்சம் பதில் சொல்லுங்கள், இது நான் பார்த்த இம்சை அரசன் படத்தின் கதைதானா அல்லது இரண்டாம் பாகம் எதாவது வந்துவிட்டதா?

மன்னா என அழைப்பவர்களை என்னா என ஒரு திமிரோடு கேட்ட கைப்புவை, கன்னாப்பின்னாவென கேள்வி கேட்டு காவலாளிகளை மடக்கிய இம்சையரசனை இப்படி பேசா மடந்தையாக்கிவிட்டார்களே! ஐயகோ இஃது என்ன கொடுமை! Dumb Child என்ற பதத்தை வாய்பேசாதவன் என மொழிபெயர்த்த அந்த மகானுபாவனை என்னவென்று சொல்லுவது? என்ன தண்டனை கொடுக்கலாம்? உங்கள் ஐடியாக்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

இந்த லட்சணத்தில் ஆங்கில சப்டைட்டில் வேறு இருக்கிறதாம். யாராவது சென்னையில் இருந்து லுப்தான்ஸாவில் வந்தீர்களானால் மறக்காமல் இந்த படத்தை சப்டைட்டில்களோடு பார்த்திவிட்டு அதைப் பற்றி எழுதுங்கள்.

Saturday, October 28, 2006

விக்கி பசங்க நாங்க....

புதுசா ஒரு வலைப்பூ ஒண்ணு மலர்ந்திருக்கு. அதுதான் இந்த விக்கி பசங்க. நீங்க பாத்தீங்களா? பாத்த சிலவங்க மனசுல ஓடுன கேள்விகளை இங்க போட்டு இருக்கேன் பாருங்க.

என்னடா இந்த பசங்க கொத்துன பரோட்டாவையே மேல மேல கொத்தியிருக்காங்க. அடுத்து வந்த பாஸ்டாவும் பழசுதான். என்ன மேட்டர் தெரியலையே. ஒரு வேளை சமையற் குறிப்பு போடத்தான் இந்த வலைப்பதிவா? ஆனா அடுத்து வந்த ஆரஞ்சு ஜூஸ் மேட்டரில் ஆளைக் கவுத்துட்டாங்களே. என்ன இது என சிலர்.

என்னடா இந்த பசங்க. ஒருத்தன் தொந்தரவே தாங்க முடியலையே. நாலஞ்சு பேர் வேற சேர்ந்துக்கிட்டாங்க. என்ன அக்குறும்பு பண்ணப் போறாங்களோ தெரியலையேன்னு இன்னும் சில பேர்.

அடடா, இவனுங்க ஆளுக்கு ஓண்ணு ரெண்டு வலைப்பூக்களை வெச்சிக்கிட்டு பி.க. பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இப்ப இந்த வலைப்பூ வந்தாலும் வந்தது. தமிழ்மண முகப்பு பூரா வைரஸ் மாதிரி இவனுங்க பேர்தான் தெரியுது, இது என்ன மேட்டர்? இதுக்கு எதாவது போலீஸ்கார் தயார் பண்ணி அனுப்பலாமா என மேலும் சிலர்.

என்னமோ திட்டத்தோடத்தான் வந்திருக்காங்க. ஆனா விஷயம் என்னான்னு பிடிபடலையேன்னு சில பேர்.அதுல சில பேருக்கு விஷயம் பிடிபடாமலேயே, இந்த கூட்டணி நல்ல ஸ்ட்ராங்கா தெரியுதே, நாமளும் சேர்ந்துக்கலாமான்னு ஒரு யோசனை.

போட்ட மூணு பதிவும் பழைய மேட்டர். மீள்பதிவுக்கு தனியா ஒரு வலைப்பூவே ஆரம்பிச்சிட்டானுங்களா? இல்லை இது இந்த பதிவை தமிழ்மணத்தில் சேர்ப்பதற்காக செய்த கட் பேஸ்ட் வேலையா? ஒண்ணுமே புரியலையே அப்படின்னு மண்டையை உடைச்சிக்கற சில பேர்.

இந்த வாலிபர்கள் சேர்ந்ததுனால பசங்கன்னு பேரு சரி. அது என்ன முன்னால விக்கி அப்படின்னு ஒரு பேரு அப்படின்னு யோசிக்கிறவங்க ஒரு பக்கம். என்னதான் நடக்குது பார்த்திடலாமுன்னு ஒரு முடிவோட அடிக்கடி வந்து ஆஜர் குடுத்துட்டு போற நண்பர்கள் குழாம் ஒண்ணு.

இவங்க எல்லாருக்கும் நான் சொல்லப் போற பதில் ஒண்ணுதான். விஷயம் இருக்கு. உங்களுக்கு கட்டாயம் சொல்லத்தான் போறோம். என்ன இன்னும் ஒரு நாள், ஒரே ஒரு நாள் வெயிட் பண்ணுங்க. திங்கள்கிழமை விக்கிப்பையன் உங்களுக்கு எல்லாம் ஒரு சேதி தருவான். அதனால அன்னிக்கு அங்க வந்து என்னான்னு கேட்டுக்கிட்டு போங்க.

அதுவரைக்கும் சும்மா இருக்க வேண்டாம். இருக்கற மூணு பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்டுக்கிட்டே இருங்க. என்ன? :-D

ராமநாதன் வலைப்பூவில் இது சம்பந்தப்பட்ட பதிவு இது.