என் நண்பன் அவர் குடும்பத்துடன் இந்த வாரயிறுதியை எங்களுடன் கழிக்க வந்திருந்தார். அவரது பையனுக்கு மூன்றரை வயதாகிறது. என் பையனுக்கு ஐந்தரை வயது. இருவரும் நல்ல நண்பர்கள். வாய் ஓயாமல் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார்கள். இவர்களை வேடிக்கை பார்ப்பதே எங்களுக்கு ஒரு பொழுது போக்கு.
இன்று காலை இவர்களுள் ஒரு பலத்த வாக்குவாதம் நடந்தது போல் தோன்றியது. என்னவென்று சென்று பார்த்தால் இருவரும் அவரவர் தந்தையின் பெருமைகளைப் பேசிக் கொண்டு இருந்தார்கள். என் தந்தைதான் பலம் மிக்கவர், என் தந்தை செய்யும் வேலைதான் பெருசு என்றெல்லாம் பேசிக் கொண்டு இருந்தார்கள். இருவரும் தத்தம் தந்தைகளை ஒரு ஹீரோ அளவுக்கு உயர்த்திப் பேசியதும், தாங்கள் வளர்ந்த பின் தத்தம் தந்தைகளைப் போல் இருப்போம் எனச் சொன்னதும் கிட்டத்தட்ட ஒரு ஹீரோ வொர்ஷிப் அளவிற்கு இருந்தது.
இது எங்களிடையே ஒரு சுவாரசியமான பேச்சு ஒன்றைத் தொடங்கி வைத்தது. அதில் எழுந்த சில கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.
- அது எப்படி இவர்களுக்குத் தம் தந்தைதான் உயர்வானவர் என்ற எண்ணம் வருகிறது? தம் தந்தையரை விட்டுக் கொடுக்காமல் பேச வேண்டும் எனத் தோன்றுகிறது?
- இவர்கள் இருவரும் ஆண் பிள்ளைகளாக இருந்ததினால்தான் தந்தையரைப் பற்றிப் பேசினார்களா? இதுவே பெண் குழந்தைகளாக இருந்தால் தாய்மார்களைப் பற்றிப் பேசி இருப்பார்களா?
- முதலில் பெற்றோர், பின் பள்ளி ஆசிரியர், பின் திரைப்பட நாயகர்கள் என்று எப்பொழுதும் நமக்கு ஏன் இப்படி வழிபாட்டிற்கு யாரேனும் தேவைப் படுகிறது?
- இப்படி ஹீரோவாக இருப்பவர் சிறிய காலத்திற்குப் பின் மாறிக்கொண்டே இருப்பது ஏன்?
கேள்விகளை கேட்டாச்சு. 40க்கு எல்லாம் பயப்படாமா வந்து கருத்துக்களைச் சொல்லுங்கப்பா. இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு, உங்க இளமைக்கால ஹீரோக்கள் பத்தியும் சொல்லுங்க. தனிப் பதிவா போட்டா மறக்காம லிங்க் குடுங்க! :-D



